search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    என் மீது மிகுந்த அன்பு கொண்டவர் போண்டா மணி- விஜயகாந்த் இரங்கல்
    X

    என் மீது மிகுந்த அன்பு கொண்டவர் போண்டா மணி- விஜயகாந்த் இரங்கல்

    • நடிகர் போண்டா மணி சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டு கடந்த ஆண்டு சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் 2 மாதம் சிகிச்சை பெற்றார்.
    • பல்லாவரம் பொழிச்சலூர் வாடகை வீட்டில் வசித்தபடி சிகிச்சை பெற்று வந்த போண்டா மணி வறுமையில் வாழ்ந்து வந்தார்.

    கே.பாக்யராஜ் நடித்த பவுனு பவுனுதான் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமானவர் போண்டா மணி. வடிவேலு, கவுண்டமணி, விவேக் உள்பட பல நடிகர்களுடன் சேர்ந்து காமெடி கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். கோயம்புத்தூர் மாப்ளே, வின்னர், வசீகரா, ஏய், வேலாயுதம், என்னைப் பார் யோகம் வரும் உள்பட சுமார் 270 படங்களில் நடித்துள்ளார்.



    நடிகர் போண்டா மணி சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டு கடந்த ஆண்டு சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் 2 மாதம் சிகிச்சை பெற்றார். 2 சிறுநீரகமும் செயலிழந்த நிலையில் மாற்று சிறுநீரக அறுவை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையிலும், தனியார் மருத்துவமனையிலும் பதிவு செய்துள்ளார்.

    பல்லாவரம் பொழிச்சலூர் வாடகை வீட்டில் வசித்தபடி சிகிச்சை பெற்று வந்த போண்டா மணி வறுமையில் வாழ்ந்து வந்தார். அவருக்கு திரை பிரபலங்கள் பலர் உதவி செய்து வந்தனர். இதையடுத்து நடிகர் போண்டா மணி நேற்றிரவு 11 மணிக்கு வீட்டில் திடீரென மயக்கமடைந்தார். உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். போண்டாமணியின் மறைவுக்கு திரைப் பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.


    இந்நிலையில், போண்டா மணிக்கு இரங்கல் தெரிவித்து நடிகர் விஜயகாந்த் சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "பிரபல நகைச்சுவை நடிகர் போண்டா மணி உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியும் வேதனையுமடைந்தேன். என் மீது மிகுந்த அன்பும், நட்பும், மரியாதையும் கொண்ட நல்ல மனிதர்.

    அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், திரையுலகினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.


    Next Story
    ×