என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தரவரிசை
மதிமாறன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், வர்ஷா பொல்லம்மா, டி.ஜி.குணாநிதி நடிப்பில் வெளியாகி இருக்கும் செல்ஃபி படத்தின் விமர்சனம்.
நாயகன் ஜி.வி.பிரகாஷ், தந்தை வாகை சந்திரசேகர் கட்டாயத்தின் பெயரில் ஊரிலிருந்து சென்னைக்கு வந்து விருப்பமில்லாமல் இன்ஜினீயரிங் படிக்கிறார். படிக்கும் போதே பணம் சம்பாதிக்க ஆசைப்படும் ஜி.வி.பிரகாஷ், கல்லூரியில் மாணவர்களை சேர்த்துவிடும் புரோக்கர் வேலை பார்க்கிறார். முதலில் சிறியதாக சம்பாதிக்கும் ஜி.வி.பிரகாஷ், பின்னர் பெரிய லாபத்திற்கு ஆசைப்பட்டு சிக்கலில் மாட்டிக் கொள்கிறார்.
இறுதியில் ஜி.வி.பிரகாஷ் சிக்கலில் இருந்து விடுபட்டாரா? இல்லையா? சிக்கலை எப்படி சமாளித்தார்? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தில் நாயகனாக நடித்திருக்கும் ஜி.வி.பிரகாஷ், கல்லூரி மாணவனாக கனல் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருக்கிறார். நட்பு, அப்பா பாசம், காதல், சண்டைக்காட்சி, என நடிப்பில் பளிச்சிடுகிறார். குறிப்பாக அப்பா வாகை சந்திரசேகரிடம் கோபித்துக் கொள்வது.. பின்னர் அவரைப் பற்றி தெரிந்தவுடன் வருந்துவது என நடிப்பில் கவனிக்க வைத்திருக்கிறார். இறந்து போன நண்பனின் அம்மாவிடம் கலங்கிப்போய் நிற்கும்போதும், கோபத்தைக் காட்டும் போதும் கைதட்டல் பெற்றிருக்கிறார்.
கல்லூரியில் இடம் வாங்கித்தரும் தரகராக ரவி வர்மா கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் கவுதம் மேனன். அசத்தலான வில்லன் வேடத்தில் ஆர்ப்பாட்டம் இல்லாமல் நடித்திருக்கிறார். நாயகி வர்ஷா பொல்லம்மா ஜி.வி.பிரகாஷுக்கு உறுதுணையாக நடித்து கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். ஜி.வி.பிரகாஷின் நண்பராக வரும் டி.ஜி.குணாநிதி, நடிப்பில் கண்கலங்க வைத்திருக்கிறார். இவருக்கு முதல் படமே சிறப்பான அறிமுகம்.
கல்லூரி அதிபராக ஈஸ்வரமூர்த்தி கதாபாத்திரத்தில் சங்கிலி முருகன் நல்ல தேர்வு. தந்தையாக வரும் வாகை சந்திரசேகர் அனுபவ நடிப்பை கொடுத்திருக்கிறார். குணாநிதியின் தாயாக நடித்திருக்கும் ஸ்ரீஜா யதார்த்த நடிப்பை கொடுத்து மனதில் பதிந்திருக்கிறார். தங்கதுரை, சாம் பால் ஆகியோரின் நடிப்பு திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது.
தனியார் கல்லூரிகளில் சீட் பெறுவதற்குத் தரகர்கள் மூலம் நடக்கும் விஷயங்களை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது செல்ஃபி படம். சமூகத்தில் நடந்து கொண்டிருக்கும் முறைகேடுகளை தைரியமாக சொல்லியிருக்கும் மதி மாறனுக்கு பாராட்டுகள். தெளிவான திரைக்கதை அடுத்து என்ன நடக்கும் என்று யூகிக்க முடியாத காட்சிகள் என்று கட்டிப்போடுகிறார் இயக்குனர் மதி. பின்னணி இசை ஜி.வி.பிரகாஷ்குமார். விஷ்ணு ரங்கசாமியின் ஒளிப்பதிவு காட்சிகளைப் பதிய வைக்கிறது.
ஜி.வி.பிரகாஷின் இசையில் பாடல்கள் பெரிய அளவு எடுபடவில்லை என்றாலும் பின்னணி இசை காட்சிகளின் விறுவிறுப்புக்கு கைகொடுத்திருக்கிறது. விஷ்ணு ரங்கசாமியின் ஒளிப்பதிவு கதைக்கு ஏற்ப பயணித்திருப்பதோடு, ஆக்ஷன் காட்சிகளை படமாக்கிய விதம் மிரட்டலாக உள்ளது. தெளிவான திரைக்கதை அடுத்து என்ன நடக்கும் என்று யூகிக்க முடியாத காட்சிகள் என்று கட்டிப்போடுகிறார் இயக்குனர் மதி. போலியான பெற்றோர்கள் காட்சி நல்ல திருப்பமாக அமைந்திருக்கிறது. கதாபாத்திரங்களிடையே சிறப்பாக வேலை வாங்கி இருக்கிறார் மதிமாறன்.
ஜி.வி.பிரகாஷின் பின்னணி இசை படத்திற்கு பெரிய பலம். அதுபோல் போஸ்மேன் என்ற பாடல் ரசிக்க வைக்கிறது. விஷ்ணு ரங்கசாமியின் நேர்த்தியான ஒளிப்பதிவு சிறப்பு.
மொத்தத்தில் ‘செல்ஃபி’ கல்வி மாஃபியா.
ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் ராம்சரண் அஜய் தேவ்கன் ஆலியா பட் நடிப்பில் வெளியாகியிருக்கும் ஆர்.ஆர்.ஆர் படத்தின் விமர்சனம்.
1900 ஆண்டுகளில் ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆண்டு வரும் போது, பழங்குடியின மக்களில் ஒரு சிறுமியை ஆங்கிலேயர்கள் அரண்மனைக்கு அழைத்து வருகின்றனர். அந்த சிறுமியை மீட்பதற்காக பழங்குடியின மக்களில் ஒருவரான ஜூனியர் என்டிஆர் திட்டம் போடுகிறார்.
அதே சமயம் ஆங்கிலேயர்கள் படையில் போலீஸ் அதிகாரியாக இருக்கும் ராம் சரண், தனக்கான அங்கீகாரம் கிடைக்காமல் இருக்கிறார். இந்நிலையில், ஜூனியர் என்டிஆர் சிறுமியை மீட்க வந்திருப்பதை அறிந்துக் கொண்ட ஆங்கிலேயர்கள், அவரை பிடித்து கொடுப்பவர்களுக்கு சிறப்பு அதிகாரி பதவி கிடைக்கும் என்று அறிவிக்கிறார்கள்.
இதனால், ஜூனியர் என்டிஆரை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்குகிறார் ராம் சரண். இதற்கிடையில் ஒருவரை ஒருவர் தெரிந்துக் கொள்ளாமல் ராம் சரணும் ஜூனியர் என்டிஆரும் நட்பாகிறார்கள். இறுதியில் ஜூனியர் என்டிஆர் ஆங்கிலேயர்களை எதிர்த்து சிறுமியை மீட்டாரா? ஜூனியர் என்டிஆரை, ராம் சரண் தடுத்தாரா? இவர்களின் நட்பு என்ன ஆனது? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தில் ராம் சரணும் ஜூனியர் என்டிஆரும் போட்டி போட்டு நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். பழங்குடியினர் கதாபாத்திரத்திற்கு ஜூனியர் என்டிஆர் கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். தண்டனை பெறும் காட்சியில் மனதை உழுக்க வைக்கிறார். அதுபோல் மிடுக்கான போலீஸ் அதிகாரியாக நடித்து அசத்தி இருக்கிறார் ராம் சரண். காதல், தந்தைக்கு கொடுத்த சத்தியம், லட்சியம் என்று நடிப்பில் பளிச்சிடுகிறார்.
பிற்பாதியில் வரும் அஜய் தேவ்கன் போராளியாக மனதில் நிற்கிறார். ஸ்ரேயாவிற்கு பெரியதாக வேலை இல்லை. ஆலியா பட், ராம் சரண் காதலியாக வந்து கவர்ந்து இருக்கிறார். கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார் சமுத்திரக்கனி.
பாகுபலி படத்தின் பிரம்மாண்டத்திற்கு பிறகு இப்படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் ராஜமவுலி. அதே அளவு பிரம்மாண்ட ஆக்ஷன் காட்சிகள் கொடுத்து படத்தை இயக்கி இருக்கிறார். கதாபாத்திரங்களிடையே திறமையாக வேலை வாங்கி இருக்கிறார். சிறிய கதையை வைத்து அதில் சுதந்திர போராட்ட திரைக்கதை அமைத்து கொடுத்திருக்கிறார். பல காட்சிகளை பிரமாண்டமாக கொடுத்து ரசிக்க வைத்திருக்கிறார். லாஜிக் மீறல்கள் இருந்தாலும் பெரியதாக தெரியவில்லை. படத்தின் நீளத்தை குறைத்திருக்கலாம்.
கீரவாணி இசையில் பாடல்கள் அனைத்தும் தாளம் போட வைத்திருக்கிறது. செந்தில்குமாரின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலம். பல காட்சிகள் பிரமாண்டமாக தெரிய உதவியிருக்கிறார். குறிப்பாக பாடல் காட்சிகளில் இடம் பெறும் நடனங்கள் ரசிக்க வைக்கிறது. இறுதியாக வரும் பாடலில் சுதந்திர போராட்ட தியாகிகளை நினைவு கூர்ந்து இருப்பது சிறப்பு.
மொத்தத்தில் 'ஆர்.ஆர்.ஆர்' பிரம்மாண்டம்.
எழில் இயக்கத்தில் பார்த்திபன், கவுதம் கார்த்திக், சாய் பிரியா நடிப்பில் வெளியாகி இருக்கும் யுத்த சத்தம் படத்தின் விமர்சனம்.
சென்னையில் உள்ள ஒரு காவல் நிலையத்தின் வாசலில் ஒரு இளம் பெண் கொலை செய்யப்படுகிறார். இந்த கொலை நடந்ததிற்கான காரணத்தை கண்டுபிடிக்க பார்த்திபன் களமிறங்குகிறார். நீண்ட தேடுதலுக்கு பிறகு அந்தப் பெண்ணின் காதலனான கவுதம் கார்த்திக் மீது அவருக்கு சந்தேகம் ஏற்படுகிறது.
இறுதியில் கொலை நடந்ததிற்கான காரணம் என்ன? கொலையை செய்தது யார்? கொலைக்குக் காரணமானவர்களை பார்த்திபன் கண்டுபிடித்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.
கதையின் நாயகனாக வரும் பார்த்திபனின் நடிப்பு எதார்த்தமாக இருந்தாலும், வசனங்களில் சற்று வெறுப்பு தன்மை ஏற்படும் அளவிற்கு உள்ளது. போலீசாக வரும் பார்த்திபன் முகத்தில் தாடியுடன் இருப்பதால் படம் பார்ப்பவர்களுக்கு அந்த கதாப்பாத்திரம் போலீசாக உணரும் படி இல்லை.
இரண்டாம் கதாநாயகனாக வரும் கவுதம் கார்த்திக்கு இப்படத்தில் அதிக முக்கியத்துவம் இல்லை என்றாலும் நடிப்பு சிறப்பாகவே உள்ளது. கவுதம் கார்த்திக் ஜோடியாக சாய் பிரியா கொடுத்த வேலையை செய்திருக்கிறார்.
திரில்லர் கதையம்சம் கொண்ட இப்படத்தை சுவாரசியம் குறைவாக எடுத்திருக்கிறார் இயக்குனர் எழில். இவர் இதற்குமுன் இயக்கிய படங்களில் இருந்து விலகி இப்படத்தை இயக்கியிருப்பதால், ரசிகர்களுக்கு ஏமாற்றம் அடைந்திருக்கிறது. திரில்லர் படங்களுக்கு ஏற்ற விறுவிறுப்பும் சுறுசுறுப்பும் இப்படத்தில் இல்லை.
இமான் இசையில் பாடல்கள் சுமார் ரகம். பின்னணி இசையில் ஓரளவிற்கு ஸ்கோர் செய்திருக்கிறார். ஒளிப்பதிவாளர் ஆர்.பி.குருதேவ் தன் பணியை சிறப்பாக செய்து முடித்துள்ளார்.
மொத்தத்தில் ‘யுத்த சத்தம்’ மவுனம்.
சேத்தன் குமார் இயக்கத்தில் புனித் ராஜ்குமார், பிரியா ஆனந்த் நடிப்பில் வெளியாகி இருக்கும் ஜேம்ஸ் படத்தின் விமர்சனம்.
பணத்தையும் அதிகாரத்தையும் அரசாங்கத்தையும் தனக்குள் வைத்திருக்கும் அண்டர் வேர்ல்டு டான்கள் சரத்குமார், ஶ்ரீகாந்த், ஆதித்ய மேனன், முகேஷ் ரிஷி ஆகியோர் அவரவர்களுக்குள் ஒரு எல்லை வகுத்துக்கொண்டு க்ரைம் சின்டிகேட்களை நடத்தி வருகிறார்கள்.
இவர்களுக்குள் பிரச்னை வர, இவர்கள் ஆட்களை அவர்கள் கொல்வது, அதற்கு அவர்கள் பழி வாங்குவது என பிரச்சனை வலுக்கிறது. இதனிடையில் அப்பாவைக் கொன்றவர்களை பழிவாங்கத் துடிக்கிறார் ஶ்ரீகாந்த்.
பழிவாங்கலை விட பாதுகாப்பு முக்கியம் என்பதை உணர்ந்த ஶ்ரீகாந்த், தனியார் செக்யூரிட்டி நிறுவனம் ஒன்றை நடத்திவரும் புனித் ராஜ்குமாரை அழைக்கிறார். இறுதியில் தன் அப்பாவை கொன்றவர்களை ஶ்ரீகாந்த் பழி வாங்கினாரா? புனித் ராஜ்குமார், ஶ்ரீகாந்த்தை காப்பாற்றினாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தில் நாயகனாக நடித்திருக்கும் புனித் ராஜ்குமார், சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். ஆக்ஷன் காட்சிகளில் வெளுத்து வாங்கி இருக்கிறார். படம் எடுத்து முடிப்பதற்குள்ளாகவே அவர் இறந்துவிட்டதால், சில காட்சிகளில் கிராஃபிக்ஸ் மூலமும், கேமரா மாயாஜாலங்கள் மூலமும் அவருக்கு உயிர் கொடுக்க முயன்றிருக்கிறார்கள்.
புனித்தின் அண்ணன் சிவராஜ்குமார் படத்தில் சிறப்புக் கெளரவ தோற்றத்தில் வந்து போகிறார். ஶ்ரீகாந்த்தின் தங்கையாக வரும் பிரியா ஆனந்த்துக்கும், புனித்திற்கும் காம்பினேஷன் காட்சிகள் இருந்தாலும் ரொமான்ஸ், டூயட் சாங் போன்ற விஷயங்கள் இல்லை என்பது ஆறுதல். கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார் சரத்குமார்.
கமர்சியல் படங்களுக்கு உண்டான அனைத்து அம்சங்களை வைத்து படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் சேத்தன் குமார். சரண் ராஜின் இசையில் பாடல்கள் வேகத்தடை என்றாலும் அவரின் பின்னணி இசை, மாஸ் படங்களுக்கு ஏற்ற அதிரடி. சாமியின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம்.
படம் முடியும்போது, அவர் குழந்தை நட்சத்திரமாக நடிக்கத் தொடங்கியது முதல் அவருடைய எல்லா படங்களின் பெயர்கள், பாடிய பாடல்கள், தயாரித்த படங்கள், அவர் செய்த சமூகப் பணிகள், பெற்று விருதுகள் ஆகியவற்றைத் திரையிட்டு அஞ்சலி செலுத்தியிருக்கிறது படக்குழு.
மொத்தத்தில் 'ஜேம்ஸ்' சிறந்தவன்.
மனோஜ் லியோனல் ஜாசன், ஷ்யாம் சுந்தர் இயக்கத்தில், கலையரசன், அஞ்சலி பாட்டீல் நடிப்பில் வெளியாகி இருக்கும் குதிரைவால் படத்தின் விமர்சனம்.
நாயகன் கலையரசன் தூக்கத்தில் இருந்து எழுந்திருக்கும் போது அவருக்கு பின்னால் வால் முளைத்து விடுகிறது. இதனால் பல இடங்களில் அவமானப்படும் கலையரசன், வால் முளைத்ததற்கான காரணத்தை தேடி அலைகிறார்.
இறுதியில் நாயகன் கலையரசன் வால் முளைத்ததற்கான காரணத்தை கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தில் நாயகனாக நடித்திருக்கும் கலையரசன், வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். நடிப்பிற்கு தீனி போடும் கதாபாத்திரம். அதை உணர்ந்து திறமையாக நடித்து இருக்கிறார். ஆரம்பம் முதல் இறுதி வரை உடல் மொழி மாறாமல் நடித்திருப்பது பாராட்டுக்குரியது.
நாயகியாக வரும் அஞ்சலி பாட்டீல் ஆர்ப்பாட்டம் இல்லாமல் ஆங்காங்கே நடிப்பில் பளிச்சிடுகிறார். சேத்தன், ஆனந்த்சாமி, செளமியா, மானசா, பரிதிவாலன், ஆறுமுகவேல், லட்சுமி பாட்டி, ஆதிரா பாண்டிலட்சுமி உள்ளிட்ட பலரின் நடிப்பு திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது.
தமிழ் சினிமாவில் புதிய முயற்சியாக குதிரைவால் படத்தை உருவாக்கி இருக்கிறார்கள் இயக்குனர்கள் மனோஜ் லியோனல் ஜாசன், ஷ்யாம் சுந்தர். இவர்களின் புதிய முயற்சி வரவேற்க தக்கவையாக இருந்தாலும், அனைத்து தரப்பு சினிமா ரசிகர்களையும் சென்றடையுமா என்பது சந்தேகம். இராஜேஷின் கதை, திரைக்கதை, வசனத்திற்கு ஏற்றார்போல் கடின உழைப்பை கொடுத்து படத்தை இயக்கி இருக்கிறார்கள். பார்ப்பவர்களுக்கு புதிய அனுபவத்தை படக்குழுவினர் கொடுத்திருக்கிறார்கள். கனவுக்கும் நனவுக்கும் இடையேயான பயணத்தை திரை சொல்லலில் எங்கேயும் சமரசம் இல்லாமல் காட்சிப்படுத்தி இருக்கின்றனர்.
கார்த்திக் முத்துக்குமாரின் ஒளிப்பதிவு, கிரிதரனின் படத்தொகுப்பு பணி ஆகியவை படத்திற்கு பலம். பிரதீப் குமார், மார்டின் விஸ்ஸர் ஆகியோரின் பின்னணி இசை மூலம் திரைக்கதையை அழகாக கடத்தி இருக்கிறார்கள்.
மொத்தத்தில் ‘குதிரைவால்’ புதிய அனுபவம்.
சந்திரா தங்கராஜ் இயக்கத்தில் கரு.பழனியப்பன், நிகிதா, நமோ நாராயணன், சவுந்தரராஜா நடிப்பில் வெளியாகி இருக்கும் கள்ளன் படத்தின் விமர்சனம்.
தேனி அருகே இருக்கும் ஊரில் வசிக்கும் கரு பழனியப்பன், காட்டுக்குள் இருக்கும் மிருகங்களை வேட்டையாடி பிழைப்பு நடத்தி வருகிறார். அரசாங்கம் காட்டு விலங்களை வேட்டையாட கூடாது என்று தடை போடுவதால், என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கும் கரு பழனியப்பன், கள்ள துப்பாக்கிகளை தயார் செய்து விற்கிறார்.
ஒருகட்டத்தில் அது பிரச்சனையாக மாறுவதால், திருட ஆரம்பிக்கிறார். திருட்டில் ஈடுபடும் போது, எதிர்பாராதவிதமாக கொலைகள் நடக்கிறது. போலீசிடம் இருந்து தப்பிக்கும் நிலையில், நாயகி நிகிதாவை சந்திக்கிறார் கரு பழனியப்பன். இவர்களுக்குள் காதல் மலர்கிறது.
இந்நிலையில் கரு பழனியப்பனை போலீஸ் கைது செய்கிறது. தூக்கு தண்டனை விதிக்கப்படும் நிலையில், கரு பழனியப்பன் ஜெயிலில் இருந்து தப்பிக்க முயற்சி செய்கிறார். இறுதியில் கரு பழனியப்பன் ஜெயிலில் இருந்து தப்பித்தாரா? காதலி நிகிதாவுடன் இணைந்து வாழ்ந்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தில் நாயகனாக நடித்திருக்கும் கரு.பழனியப்பன், முகபாவனைகள் ஏதும் இல்லாமல் நடித்திருக்கிறார். நாயகியாக வரும் நிகிதா கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். நமோ நாராயணின் நடிப்பு திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது. இரண்டாம் பாதியில் வரும் சவுந்தரராஜா, அலட்டல் இல்லாத நடிப்பை கொடுத்திருக்கிறார். மற்றொரு நாயகியாக வரும் மாயாவின் எதிர்பாராத நடிப்பு மிரள வைக்கிறது.
எண்பதுகளின் இறுதிக் காலகட்டத்தில் நடக்கிற மாதிரியான கதையை திரைக்கதையாக்கி இயக்கி இருக்கிறார் சந்திரா தங்கராஜ். கதாபாத்திரங்களிடையே திறமையாக வேலை வாங்கி இருக்கிறார். ஒரு சில இடங்களில் லாஜிக் மீறல்களை தவிர்த்து இருந்தால் கூடுதலாக ரசித்திருக்கலாம். இரண்டாம் பாதியில் வரும் திருப்பம் திரைக்கதையை சுவாரஸ்யமாக்கி இருக்கிறது.
கே இசையில் பாடல்கள் சுமார் ரகம். பின்னணி இசையை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது. எம்.எஸ்.பிரபு, கோபி ஜகதீஸ்வரன் ஆகியோரின் ஒளிப்பதிவு சிறப்பு.
மொத்தத்தில் ‘கள்ளன்’ ரசிக்கலாம்.
பிரித்வி ஆதித்யா இயக்கத்தில் ஆதி, ஆகான்ஷா சிங், கிரிஷா குருப் ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் கிளாப் படத்தின் விமர்சனம்.
தடகள வீரரான கதாநாயகன் (ஆதி) பல கனவுகளோடு பயணிக்கும் இளைஞன். எதிர்ப்பாராத விதமாக ஏற்படும் ஒரு விபத்தில் தனது காலையும், தனது தந்தை பிரகாஷ் ராஜையும் இழந்துவிடுகிறார். இதனால் தன்னுடைய கனவான தேசிய தடகள போட்டியில் பங்கேற்க முடியாமல் போய்விடுகிறது. தன்னுடைய கனவுகளை இழந்ததால் மன உளைச்சலில் வாழ்க்கையை வெறுக்கும் ஆதி, தான் காதலித்த கதாநாயகியை (ஆகான்ஷா சிங்) பிரிந்துவிட நினைக்கிறார். ஆனால், ஆதியின் மீது ஏற்பட்ட காதலால் அவரை பிரியமுடியாமல் உடனடியாக திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்து இருவரும் திருமணம் செய்து கொள்கிறார்கள்.
தான் அடைய முடியாத ஆசையை நிறைவேற்ற, தடகள வீரர்களை தேடுகிறார் ஆதி. இதனிடையே மதுரையில் உள்ள ஒரு பெண் (கிரிஷா குருப்) விளையாட்டு வீரரைப் பற்றி அறிந்து கொண்டு தன்னால் சாதிக்க முடியாததை, அந்த பெண் சாதித்து தேசிய சாம்பியனாக வேண்டும் என்று பயிற்சி அளிக்கிறார்.
இறுதியில் விளையாட்டு வீரர் ஆதியின் ஆசை நிறைவேறியதா? ஆதியின் ஆசையை தடுப்பவர்கள் யார்? தடுக்க காரணம் என்ன? என்பதே இப்படத்தின் மீதிக்கதை.
காலை இழந்த ஆதி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றுள்ளார். இயல்பான நடிப்பும், கதைக்கு தேவைப்படுகிற நடிப்பை எதார்த்தமாக வெளிப்படுத்தியுள்ளார். கதாநாயகியாக ஆகான்ஷா சிங் தன்னுடைய கதாப்பாத்திரத்தில் இயல்பாக நடித்துள்ளார். தடகள பெண்ணாக வரும் கிரிஷா குருப் அற்புதமான நடிப்பால் அனைவரையும் கவர்ந்துள்ளார். நாசர் மற்றும் பிரகாஷ் ராஜ் ஆகியோர் முதிர்ச்சியான நடிப்பை கொடுத்துள்ளனர்.
வழக்கமாக வரும் தமிழ் சினிமாவின் கதையாக இருந்தாலும் திரைக்கதை சற்று சுவாரசியாமக்கியுள்ளார் இயக்குனர் பிரித்வி ஆதித்யா. பல படங்களில் இடம்பெற்ற கதையம்சம் கொண்டுள்ளதால் கதையை தீர்மானித்துவிடும்படி அமைந்திருக்கிறது. இன்னும் கதையில் கவனம் செலுத்தியிருக்களாம் என்று மக்களின் கருத்தாகவுள்ளது.
படத்தின் ஒளிப்பதிவு நல்ல காட்சியமைப்பாக அமைத்துக் கொடுத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் பிரவின் குமார். விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம் என்பதால் இவரின் பணி கூடுதலாக கவனிக்கும் படி அமைந்துள்ளது.
இதுவரை பார்த்த இளையராஜாவின் இசையை போன்று இல்லை என்றாலும் இசை படத்திற்கு கூடுதல் பலமே. பின்னணி இசையின் மூலம் படத்தின் கதைகளத்தில் பயணிக்க வைத்திருக்கிறார் இளையாராஜா.
மொத்தத்தில் ‘கிளாப்’ ரசிக்கலாம்.
கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் மாளவிகா மோகனன் நடிப்பில் வெளியாகியிருக்கும் மாறன் படத்தின் விமர்சனம்.
சிறுவயதில் தாய், தந்தையை இழந்த நாயகன் தனுஷ், தனது தங்கை ஸ்ம்ருதி வெங்கட்டுடன் தாய்மாமா ஆடுகளம் நரேன் அரவணைப்பில் வளர்கிறார். தனுஷின் தந்தை ராம்கி நேர்மையான பத்திரிகையாளராக இருப்பதால் ரவுடி கும்பலால் கொலை செய்யப்படுகிறார்.
தந்தையை போலவே நேர்மையான பத்திரியாளராக இருக்கிறார் தனுஷ். இந்நிலையில் அரசியல்வாதியாக இருக்கும் சமுத்திரக்கனி செய்யும் தவறுகளை கண்டுபிடித்து பத்திரிகையில் எழுதுகிறார். இதனால் கோபமடையும் சமுத்திரக்கனி தனுஷை பழிவாங்க நினைக்கிறார்.
இறுதியில் சமுத்திரக்கனி தனுஷை பழிவாங்கினாரா? சமுத்திரகனியிடம் இருந்து தனுஷ் தப்பித்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தில் நாயகனாக நடித்திருக்கும் தனுஷ், முதல் பாதியில் இளமை துள்ளலுடன் கெத்தானா நடிப்பையும், இரண்டாம் பாதியில் ஆர்ப்பாட்டம் இல்லாமல் சாதுவான நடிப்பையும் வெளிப்படுத்தி இருக்கிறார். குறிப்பாக தங்கை பாசத்தில் பளிச்சிடுகிறார்.
நாயகியாக வரும் மாளவிகா மாடர்ன் பெண்ணாக நடித்து ரசிகர்களை கவர முயற்சி செய்திருக்கிறார். தங்கையாக வரும் ஸ்ம்ருதி வெங்கட் துறுதுறு நடிப்பால் பளிச்சிடுகிறார். அரசியல்வாதி சமுத்திரக்கனி, தாய்மாமா ஆடுகளம் நரேன், தந்தை ராம்கி ஆகியோரின் நடிப்பு திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவியிருக்கிறது. சிறிது நேரமே வந்தாலும் கவனிக்க வைத்திருக்கிறார் அமீர்.
பத்திரிகையாளர்கள் வாழ்க்கையை மையமாக வைத்து படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் கார்த்திக் நரேன். அண்ணன், தங்கை பாசம், அப்பா, மகள் பாசம், திரில்லர் என கலந்து திரைக்கதை அமைத்து கொடுத்திருக்கிறார். ஆனால், திரைக்கதை சுவாரஸ்யம் இல்லாமல் பயணிப்பது பலவீனமாக அமைந்திருக்கிறது.
ஜி.வி.பிரகாஷ் இசையில் பொல்லாத உலகம் தாளம் போட வைக்கிறது. பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்த்து இருக்கிறது. விவேகானந்த் சந்தோஷம் ஒளிப்பதிவை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது.
மொத்தத்தில் 'மாறன்' பெரிய மாற்றம் இல்லை.
ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில் பிரபாஸ், பூஜா ஹெக்டே நடிப்பில் வெளியாகி இருக்கும் ராதே ஷ்யாம் படத்தின் விமர்சனம்.
கைரேகை நிபுணரான கதாநாயகன் (பிரபாஸ்) தன்னுடைய குடும்பத்துடன் ரோம் நகரில் வாழ்ந்து வருகிறார். கைரேகையை துள்ளியமாக கனித்து இவர் சொல்லும் விஷயங்கள் அப்படியே நடக்கிறது. தன் கைரேகையில் காதலுக்கான வாய்ப்பு இல்லாததால், காதல் வேண்டாம் என்று ஊர் சுற்றி திரியும் இளைஞனாகவும், பெண்களுடன் காதல் உறவுக்கொள்ளாமல் வெறும் சந்தோஷத்திற்காக சுற்றி திரியும் நபராகவும் காலத்தை கடத்தி வருகிறார்.
இந்நிலையில், மருத்துவராக இருக்கும் கதாநாயகி பூஜா ஹெக்டேவை சந்திக்கிறார் பிரபாஸ். இருவரும் பழகிவர எதிர்பாராதவிதமாக பூஜாவின் கைரேகையை பார்த்து அவரை பற்றி தெரிந்துக் கொள்கிறார். இவர்களின் பழக்கம் காதலாக மாறுகிறது. தன் வாழ்க்கையில் காதல் நடக்காது என்று நம்பி வந்த பிரபாஸுக்கு பூஜா ஹெக்டேவுடனான காதல் கைகூடியதா? இருவரும் ஒன்று சேர்ந்தார்களா? என்பதே படத்தின் மீதிக்கதை.
முழுக்க முழுக்க காதல் படம் என்பதால் பிரபாஸ் மற்றும் பூஜா ஹெக்டே இருவரும் அவர்களின் பங்களிப்பை சிறப்பாக வழங்கியுள்ளனர். கதைக்கு தேவையான விஷயங்களை உள்வாங்கிக் கொண்டு அதனை சரியாக இவர்களின் நடிப்பு மூலம் வெளிபடுத்தியுள்ளனர். இக்கதைக்கு சரியான தேர்வாக இருவரும் ஜொலிக்கிறார்கள். சத்யராஜ் அவருடைய முதிர்ச்சியான நடிப்பின் மூலம் கதைக்குள் ரசிகர்களை புகுத்திவிடுகிறார்.
கதையின் தேர்வும் கதைக்கான திரைக்கதையும் சிறப்பாக வடிவமைத்துள்ளார் இயக்குனர் ராதா கிருஷ்ணகுமார். கடந்த காலத்தில் நடக்கும் கதை என்பதால் அதற்கான வடிவமைப்பை அழகாக படமாக்கியுள்ளார். இயக்குனரின் கதாப்பாத்திர தேர்வு கச்சிதமாக அமைந்துள்ளது.
மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவு படத்திற்கு கூடுதல் பலமளித்திருக்கிறார். சிறப்பான காட்சியமைப்பின் மூலம் கண்களுக்கு விருந்தளித்துள்ளார். ஒவ்வொரு காட்சியும் மனதில் பதியும்படி அற்புதமாக காட்சிப்படுத்தியுள்ளார். ஒளிப்பதிவின் மூலம் பார்வையாளர்களை அந்த இடத்திற்கே அழைத்துச் செல்லும் உணர்வை உருவாக்கியுள்ளார்.
தமனின் பின்னணி இசையும் ஜஸ்டின் பிரபாகரனின் பாடல்களும் படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்திருக்கிறது. படத்திற்கு ஏற்றவாறு அந்த கதைக்கு தேவைப்பட்டவாறு இசையை கச்சிதமாக உருவாக்கியுள்ளனர்.
மொத்தத்தில் ‘ராதே ஷ்யாம்’ பிரம்மாண்ட காதல்.
பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா, பிரியங்கா மோகன் நடிப்பில் வெளியாகி இருக்கும் எதற்கும் துணிந்தவன் படத்தின் விமர்சனம்.
தென்னாடு பகுதியில் வக்கீலாக இருக்கும் சூர்யா, தந்தை சத்யராஜ், தாய் சரண்யாவுடன் வாழ்ந்து வருகிறார். வடநாடு பகுதியில் மிகவும் செல்வாக்கு மிக்கவராக இருக்கிறார் வினய். தென்னாடு, வடநாடு ஊர்களுக்கு இடையே சில ஆண்டுகளாக பகை இருந்து வருகிறது.
இந்நிலையில் ஊரில் சில பெண்கள் கொலை மற்றும் தற்கொலை செய்யப்படுகிறார்கள். இதற்கான காரணத்தை கண்டுபிடிக்க சூர்யா தீவிரம் காட்டுகிறார். இதன் பின்னணியில் வினய் இருப்பது சூர்யாவிற்கு தெரிய வருகிறது.
இறுதியில் பெண்களை வினய் கொலை செய்ய காரணம் என்ன? வினய்க்கு சூர்யா தண்டனை வாங்கி கொடுத்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தில் கண்ணபிரான் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சூர்யா, காமெடி, நடனம், ரொமான்ஸ், சென்டிமென்ட், சண்டை என அனைத்திலும் ஸ்கோர் செய்திருக்கிறார். குறிப்பாக சண்டைக் காட்சிகளில் ஆக்ரோஷமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
நாயகியாக வரும் பிரியங்கா மோகன் வெகுளித்தனமாக நடித்து ரசிகர்களை கவர்ந்து இருக்கிறார். பிற்பாதியில் நடிப்பில் கவனிக்க வைத்திருக்கிறார். ஸ்டைலிஷ் வில்லனாக நடித்து அசத்தி இருக்கிறார் வினய். இவரது ஆர்ப்பாட்டம் இல்லாத நடிப்பு படத்திற்கு பெரிய பலம்.
பாசமான தாய், தந்தையாக சரண்யா பொன்வண்ணன், சத்யராஜ் நடித்திருக்கிறார்கள். தேவதர்ஷனி, சூரி, புகழ் ஆகியோர் பல இடங்களில் சிரிக்க வைத்திருக்கிறார்கள். பிரியங்கா மோகனின் தோழியாக வரும் திவ்யா துரைசாமி யதார்த்தமான நடிப்பை கொடுத்திருக்கிறார்.
பெண்களுக்கு நடக்கும் பாலியல் மிரட்டல்களை மையமாக வைத்து படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் பாண்டிராஜ். ஆண்களை எப்படி வளர்க்க வேண்டும், பெண்கள் எப்படி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று சொல்லிய இயக்குனருக்கு பாராட்டுகள். ரசிகர்கள் மட்டுமில்லாமல் குடும்பங்கள் ரசிக்கும்படி கொடுத்திருக்கிறார்.
இமான் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். இவரது பின்னணி இசை திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவியிருக்கிறது. ரத்தினவேலு ஒளிப்பதிவில் காட்சிகள் அனைத்தும் கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறது.
மொத்தத்தில் 'எதற்கும் துணிந்தவன்' துணிச்சலான வெற்றி.
மேட் ரீவ்ஸ் இயக்கத்தில் ராபர்ட் பேட்டின்சன் நடிப்பில் வெளியாகி இருக்கும் தி பேட்மேன் படத்தின் விமர்சனம்.
சூப்பர் ஹீரோவாக உருவாகி குற்றம் செய்பவர்களை கண்டு பிடிப்பவர் பேட்மேன். ஒரு சீரியல் கில்லர் தொடர்ச்சியாக முக்கிய நபர்களை கொலைசெய்கிறான். காவல்துறையினருக்கு சவால்விடும் வகையில் பொதுவெளியில் கொலைகளை செய்து அனைவரையும் அச்சுறுத்துகிறான். அக்கொலையின் போது சில புதிர்களை விட்டு செல்கிறான். பேட்மேன் சூப்பர் ஹீரோவாக மட்டுமில்லாமல் புலனாய்வு வல்லுனர் போன்று அவருக்கு கிடைத்த புதிர்களை வைத்து கண்டுபிடிக்க முயற்சிக்கிறார்.
இறுதியில் கொலையாளியை பேட்மேன் கண்டு பிடித்தாரா? அந்த நகரை காப்பாற்றினாரா? என்பதே இப்படத்தின் மீதிக்கதை.
வழக்கமான பேட்மேன் படங்கள் போல் இல்லாமல், கொலை நடக்கும் இடங்களுக்குச் செல்கிறார், விசாரிக்கிறார். ஒரே இடத்துக்குப் பல முறை செல்கிறார், விசாரிக்கிறார் எனக் கதையின் சம்பவங்களும், திரைக்கதை அமைப்பும் 'ஜோடியாக்', 'ட்ரூ டிடெக்டிவ்' பாணியை நினைவூட்டுகின்றன.
இயக்குனர் மேட் ரீவ்ஸ், இதுவரை இல்லாத சூப்பர் ஹீரோவை புலனாய்வு துறை பாணியில் காண்பித்து படத்தை சுவாரசியப்படுத்தியுள்ளார். திரைக்கதையின் மூலம் அனைவரின் கவனத்தையும் சிதறவிடாமல் படத்தினுள் தொடரவைத்திருக்கிறார்.
ராபர்ட் பேட்டின்சன் அவருடைய நடிப்பை இயல்பாக வெளிப்படுத்தியுள்ளார். இருந்தும் இக்கதைக்கு தேர்ந்ததுப்போல் இல்லை என்று ரசிகர்களின் முணுமுணுப்பாகவுள்ளது.
மொத்தத்தில் ‘தி பேட்மேன்’ சாகசம் குறைவு.
பிருந்தா இயக்கத்தில் துல்கர் சல்மான், அதிதி ராவ், காஜல் அகர்வால் நடிப்பில் வெளியாகி இருக்கும் ஹே சினாமிகா படத்தின் விமர்சனம்.
நாயகன் துல்கர் சல்மானும், நாயகி அதிதி ராவ்வும் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள். எப்போதும் பேசிக்கொண்டே இருக்கும் துல்கர் சல்மானின் குணம், அதிதியின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளைப் பாதிக்கிறது. இதனால், சைக்காலஜிஸ்ட்டான காஜல் அகர்வாலிடம், தனது கணவரை காதலிப்பது போல நடிக்கச் சொல்லி உதவி கேட்கிறார் அதிதி ராவ்.
துல்கர் காதலில் விழுந்தால் அதை காரணமாக வைத்து அவரைப் பிரிந்துவிட நினைக்கிறார் அதிதி. முதலில் தயங்கும் காஜல் அகர்வால், துல்கர் சல்மானை நெருங்க ஆரம்பிக்கிறார். இறுதியில், துல்கர் சல்மானை அதிதி ராவ் பிரிந்தாரா? காஜல் அகர்வால் துல்கர் சல்மானை காதலித்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தில் நாயகனாக நடித்து இருக்கும் துல்கர் சல்மான், பேசிக்கொண்டே இருக்கும் கதாபாத்திரத்தில் பேசியே ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். பேசுவது மட்டுமில்லாமல் கணவராக நடித்து இளம் பெண்களை ஏங்க வைத்திருக்கிறார்.
காற்று வெளியிடை, செக்கச் சிவந்த வானம் ஆகிய படங்களில் நடித்த அதிதி ராவ், இந்த படத்தில் இயல்பான நடிப்பை கொடுத்திருக்கிறார். ஒருசில பெண்களின் குணத்தை அப்படியே பிரதிபலிக்கும் ஒரு கதாபாத்திரம். அதை உணர்ந்து சரியாக நடித்து இருக்கிறார். சைக்காலஜிஸ்ட்டாக வரும் காஜல் அகர்வால், வழக்கம் போல் தன்னுடைய அழகால் ரசிகர்களை தன் வசப்படுத்தி இருக்கிறார்.
பல படங்களுக்கு நடன இயக்குனராக பணிபுரிந்த பிருந்தா மாஸ்டர், இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி இருக்கிறார். முதல் படம் என்று சொல்ல முடியாதளவிற்கு படத்தை இயக்கி இருக்கிறார். ஒரு சில குறைகள் படத்தில் இருந்தாலும் பெரிதாக தெரியவில்லை. மதன் கார்க்கியின் கதையும், திரைக்கதையும் படத்திற்கு பலம்.
கோவிந்த் வசந்தா இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசையில் அதிக ஸ்கோர் செய்திருக்கிறார். பிரீத்தா ஜெயராமன் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறது.
மொத்தத்தில் 'ஹே சினாமிகா' இளமை துள்ளல்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X