search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    டி20 உலகக்கோப்பை: ஆட்டத்தின் 5 திருப்புமுனைகள்
    X

    டி20 உலகக்கோப்பை: ஆட்டத்தின் 5 திருப்புமுனைகள்

    • பும்ரா 4 ஓவர் வீசி 18 ரன் கொடுத்து 2 விக்கெட் எடுத்தார். அவர் 2 பேரை போல்டாக்கிய விதம் மிகவும் அற்புதமானது.
    • வீராட்கோலியின் அரை சதம் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தது.

    20 ஓவர் உலக கோப்பையை இந்திய அணி கைப்பற்றும் என்று யாரும் எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள். ஏனென்றால் கிளாசனின் அதிரடி ஆட்டத்தால் இந்திய அணியின் ஐ.சி.சி. கோப்பை கனவு நசுங்கி விடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அக்ஷர் படேல் வீசிய 15-வது ஒவரில் கிளாசன் 2 சிக்சர், 2 பவுண்டரி அடித்தார். அந்த ஓவரில் 24 ரன் கிடைத்தது. இதனால் தென் ஆப்பிரிக்காவுக்கு 30 பந்தில் 30 ரன் தேவை என்ற எளிதான நிலை ஏற்பட்டது. கைவசம் 6 விக்கெட் இருந்தது.

    16-வது ஓவரில் பும்ரா 4 ரன்னே கொடுத்தார். இதனால் 24 பந்தில் 26 ரன் என்ற நிலை இருந்தது. ஹர்திக் பாண்ட்யா வீசிய 17-வது ஓவரில் திருப்புமுனை ஏற்பட்டது. அவர் முதல் பந்திலேயே கிளாசனை அவுட் செய்தார். அந்த ஓவரில் 4 ரன் மட்டுமே கொடுக்கப்பட்டது. பும்ரா 18-வது ஓவரில் 2 ரன்னே கொடுத்து 1 விக்கெட்டை கைப்பற்றினார். இதனால் கடைசி 2 ஓவரில் 20 ரன் தேவைப்பட்டது. அர்ஷ்தீப்சிங் 19-வது ஓவரில் 4 ரன்னே கொடுத்தார். கடைசி ஓவரில் தென்ஆப்பிரிக்கா வெற்றிக்கு 16 ரன் தேவைப்பட்டது. ஹர்திக் பாண்ட்யா கடைசி ஓவரை வீசினார்.

    முதல் பந்தில் மில்லர் பந்தை சிக்சருக்கு தூக்கி அடித்தார். எல்லையில் நின்ற சூர்யகுமார் யாதவ் மிகவும் அற்புதமாககேட்ச் பிடித்தார். இது ஆட்டத்தை இந்தியா பக்கம் கொண்டு வந்தது. ஹர்திக் பாண்ட்யா கடைசி ஓவரில் 8 ரன்னை கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தி வெற்றிக்கு காரணமாக திகழ்ந்தார். கடைசி கட்டத்தில் ஏற்பட்ட திருப்பத்தால் தென்ஆப்பிரிக்காவுக்கு செல்ல வேண்டிய 20 ஓவர் உலக கோப்பை இந்தியாவுக்கு கிடைத்தது.


    பரபரப்பான இறுதிப் போட்டியில் இந்தியா கோப்பையை வெல்ல காரணமாக இருந்து திருப்புமுனை ஏற்படுத்திய 5 வீரர்கள் வருமாறு:-

    பும்ராவின் மந்திர பந்துவீச்சு

    இந்தியா 2-வது முறையாக 20 ஓவர் உலக கோப்பையை வெல்ல பும்ராவின் மேட்ச் வின்னிங் பந்து வீச்சு உதவியாக இருந்தது. அவர் மீது கேப்டன் ரோகித் சர்மா வைத்த நம்பிக்கையை பொய்யாக்கவில்லை. 16-வது ஓவரில் வெறும் 4 ரன்களே கொடுத்த அவர் 18-வது ஓவரில் ஜான்சென் விக்கெட்டை கைப்பற்றி 2 ரன்னே விட்டு கொடுத்தார். பும்ரா 4 ஓவர் வீசி 18 ரன் கொடுத்து 2 விக்கெட் எடுத்தார். அவர் 2 பேரை போல்டாக்கிய விதம் மிகவும் அற்புதமானது.


    சூர்யகுமார் யாதவின் அற்புத கேட்ச்

    கடைசி ஓவரின் முதல் பந்தில் மில்லர் அடித்த பந்தை எல்லை கோட்டில் நின்ற சூர்யகுமார் யாதவ் மிகவும் அற்புதமாக கேட்ச் பிடித்தார். அவரது புத்தாலித்தனமான செயல்பாடு அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது. அந்த பந்தை பிடிக்காமல் இருந்தால் சிக்சருக்கு சென்று இருக்கும். சூர்யகுமார் யாதவின் அபாரமான கேட்ச் சமூக வலைதள பகிரப்பட்டு பாராட்டப்பட்டு வருகிறது.


    அக்ஷர் படேலின் ஆல்ரவுண்டு பங்களிப்பு

    அக்ஷர் படேல் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சாதித்தார். 31 பந்தில் 47 ரன் எடுத்தார். இந்திய அணி 34 ரன்னில் 3 விக்கெட்டை இழந்த போது களத்துக்கு வந்தார். அவர் கோலியுடன் இணைந்து 72 ரன் எடுத்தார். அவரது ஸ்கோரில் ஒரு பவுண்டரியும், 4 சிக்சர்களும் அடங்கும். பந்து வீச்சில் முக்கிய விக்கெட்டான ஸ்டப்சை அவுட் செய்தார்.


    வீராட்கோலியின் அரை சதம்

    வீராட்கோலியின் அரை சதம் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தது. அவர் 76 ரன்கள் (56 பந்து) எடுத்து மற்றொரு மேட்ச் வின்னிங் பேட்டிங்கை வெளிப்படுத்தினார். அக்ஷர் படேல், ஷிவம் துபேபுடன் இணைந்த அவரது ஆட்டம் மிகவும் முக்கியமானது.


    ஹர்திக்பாண்ட்யாவின் அபார பந்துவீச்சு

    சுழற்பந்து வீரர்கள் சாதிக்காத போது ஹர்திக் பாண்ட்யா அபாரமாக பந்துவீசி அனைவரது பாராட்டையும் பெற்றார். முக்கிய விக்கெட்டான கிளாசனை அவர் வீழ்த்தியது மிகப்பெரிய திருப்புமுனையாகும். கடைசி ஓவரில் மில்லர், ரபடா ஆகிய 2 விக்கெட்டை கைப்பற்றியது அடுத்த திருப்புமுனையாகும்.


    அவர் 3 ஓவர் வீசி 20 ரன் கொடுத்து 3 விக்கெட் கைப்பற்றினார். ஹர்திக் பாண்ட்யாவின் பந்து வீச்சு 17 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா 20 ஓவர் உலக கோப்பையை வெல்ல காரணமாக அமைந்தது.

    Next Story
    ×