search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    ஆதி சங்கரரால் இயற்றப்பட்ட நிர்வாணஷட்கம்
    X

    ஆதி சங்கரரால் இயற்றப்பட்ட நிர்வாணஷட்கம்

    • நிர்வாணஷட்கம் என்பது ஆதிசங்கரரால் இயற்றப்பட்ட ஆறு சுலோகங்களின் தொகுப்பாகும்.
    • இது ஆத்மஷட்கம் என்ற பெயராலும் அறியப்படுகிறது.

    நிர்வாணஷட்கம் என்பது ஆதிசங்கரரால் இயற்றப்பட்ட ஆறு சுலோகங்களின் தொகுப்பாகும்.

    இது ஆத்மஷட்கம் என்ற பெயராலும் அறியப்படுகிறது. ஆதிசங்கரர் துறவறம் மேற்கொண்டு குருவை தேடிக் கொண்டிருந்த பொழுது, ஆச்சாரியார் கோவிந்த பகவத்பாதரை சந்தித்தார்.

    கோவிந்த பகவத்பாதர் ஆதிசங்கரரிடம் யாரென வினவ, அதற்கு விடையாக ஆதிசங்கரர் இந்த ஆறு பாடல்களை பாடியதாக ஒரு கருத்து நிலவுகிறது.

    இப்பாடல்களில் சிவ வழிபாட்டின் பெருமையை கூறியும், வேதம், வேள்வி, மதம் ஆகியற்றை மறுத்து சிவனே ஆனந்த மயமானவன் என்றும் ஆதிசங்கரர் கூறுகிறார்.

    ஆறு பாடல்களையும் சிதானந்த ரூப: சிவோஹம் சிவோஹம் என்ற ஒரு வரியாலேயே முடிக்கிறார்.

    பாடல்கள்

    1. மனம் புத்தி ஆணவச் சித்தங்கள் இல்லை; இரு

    கண்ணில்லை; செவி, நாக்கு நாசியும் இல்லை;

    வானில்லை மண்ணில்லை; வளி ஒளியும் இல்லை;

    சிதானந்த ரூபம்; சிவோஹம்! சிவோஹம்!

    2. உயிர் மூச்சு மில்லை; ஐங் காற்றும் இல்லை;

    எழு தாதும் இல்லை; ஐம் போர்வை இல்லை;

    கை கால்கள் இல்லை; சினை வினையும் இல்லை;

    சிதானந்த ரூபம்; சிவோஹம்! சிவோஹம்!

    3. வெறுப்பில்லை விருப்பில்லை; மையல் பற்றில்லை;

    சிறு கர்வம் இல்லை; அழுக்காறும் இல்லை;

    அறம் பொருள் நல்லின்ப, வீடு பேறில்லை;

    சிதானந்த ரூபம்; சிவோஹம்! சிவோஹம்!

    4. வினை வேட்கை இன்பங்கள், துன்பங்கள் இல்லை;

    மறை வேத தீர்த்தங்கள், வேள்விகள் இல்லை;

    உணவில்லை, உணவாக்கி உண்பவரும் இல்லை!

    சிதானந்த ரூபம்; சிவோஹம்! சிவோஹம்!

    5. மரணங்கள் ஐயங்கள், உயர்வு தாழ்வில்லை;

    தந்தை தாயில்லை; தரும் பிறப்பில்லை;

    உற்றார்கள் சுற்றார்கள், குரு சீடர் இல்லை;

    சிதானந்த ரூபம்; சிவோஹம்! சிவோஹம்!

    6. மாற்றங்கள் இல்லை; பல தோற்றங்கள் இல்லை;

    எங்கெங்கும் எல்லாமும், எதனுள்ளும் இவனே;

    தளையில்லை; தடையில்லை; வீடுபேறில்லை;

    சிதானந்த ரூபம்; சிவோஹம்! சிவோஹம்!

    Next Story
    ×