search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    பிரம்ம பதவிக்கு நிகரான அனைத்து சக்திகளையும் பெற்ற ஆஞ்சநேயர்
    X

    பிரம்ம பதவிக்கு நிகரான அனைத்து சக்திகளையும் பெற்ற ஆஞ்சநேயர்

    • இதன் பலனாக அனுமனுக்கு தெற்கு நோக்கி நரசிம்மர் தலை முளைத்தது.
    • நரசிம்மரின் முகம் பூதம், பிசாசு தொல்லைகளில் இருந்து மக்களை காப்பாற்றும்.

    ராமபிரானுக்காக பிரதிபலன் பாராமல் உழைத்த ஆஞ்சநேயருக்கு வைகுண்டத்தில் என்ன பதவி கொடுப்பது என்று ஒருமுறை ஆலோசனை நடந்தது.

    நீண்ட ஆய்வுக்கு பிறகு அனைவரும் ஒருமனதாக கடைசியில் வரப்போகும் யுகத்திற்கு, அவரை பிரம்மாவாக தேர்ந்து எடுக்கலாம் என்று முடிவு செய்தனர்.

    தேவர்களும் அதை ஏற்றுக் கொண்டனர்.

    பிறகு தேவர்கள் பூலோகம் வந்து பிரம்மனுக்குரிய சின்னங்¢களான சங்கு, சக்கரம், கிரீடம், குண்டலம் இவற்றை அனுமனிடம் அளித்தார்கள்.

    ஆனால் அனுமன் அதை ஏற்க மறுத்தார். "ராம நாமமே" எனக்கு மனநிறைவைத் தருகிறது. மேலும் எனக்கு பிரம்மாவின் வேலை என்ன என்பதே தெரியாதே! என்றார்.

    அப்போது மகாவிஷ்ணு தோன்றினார். "பிரம்மாவின் படைப்பு விந்தைகள் உனக்கே தெரியும். தெரியாததை நான் கிருஷ்ண அவதாரம் எடுக்கும் போது சொல்வேன்" என்று கூறி மறைந்தார்.

    கிருஷ்ண அவதாரத்தில் நடந்த பாரத போரில் கிருஷ்ணன் அர்ஜூனனுக்கு சாரதியாக இருந்து கீதா உபதேசம் செய்தார். அது அர்ஜூனனுக்கு மட்டுமல்ல. தேரில் கொடியாக இருந்த அனுமனுக்கும் தான்.

    பிரம்மாவாக ஆவதற்கு நான்கு சக்திகள் தேவை. அம்ருதம் எனப்படும் உயிருட்டும் சக்தி. விஷத்தை அடக்கும் சக்தி. நிலைநிறுத்தும் சக்தி. மற்றும் குரு மண்டலத்தில் அகர ஸ்தானம் வகிக்கும் சக்தி.

    இந்த நான்கு சக்திகளையும் பெற்றால் தான் பிரம்மா செய்யும் வேலைகளை செய்ய முடியும். இதை கருத்தில் கொண்டு தான், ஆஞ்சநேயர், நான் ராம நாமம் ஜபித்துக்கொண்டு இருக்கிறேன்.

    இதெல்லாம் எனக்கு வேண்டாம் என்று கூறினார்.

    ஆனாலும் மும்மூர்த்திகளும் கேட்கவில்லை.

    அதனால் அம்ருதம் வர்ஷிக்க ஸ்ரீ நரசிம்மத்தை குறித்து தவம் செய்தார்.

    இதன் பலனாக அனுமனுக்கு தெற்கு நோக்கி நரசிம்மர் தலை முளைத்தது.

    நரசிம்மரின் முகம் பூதம், பிசாசு தொல்லைகளில் இருந்து மக்களை காப்பாற்றும்.

    கருடனை குறித்து தவம் செய்தார். அதன் பயன் கருட முகம் கிழக்கு நோக்கி முளைத்தது.

    கருட முகம் பாம்பு போன்ற கொடிய விஷங்களில் இருந்து காப்பாற்றுகிறது.

    வராக மூர்த்தியை நோக்கி தவம் செய்யும் போது வடக்கு நோக்கி வராக முகம் முளைத்தது.

    வராக மூர்த்தியின் முகம் பக்தர்களுடைய உடல் பிணிகளை அகற்றும்.

    ஹயக்கீரிவரை நோக்கி தவம் செய்தார்.

    அதனால் அவரது முகம் மேல்புறம் தோன்றியது. ஹயக்கீரிவருடைய முகம் பக்தர்களுக்கு அஞ்ஞானத்தை போக்கி ஞானத்தை கொடுக்கக்கூடியது.

    இப்படி பிரம்ம பதவி தகுதிக்கு நிகரான அனைத்து சக்திகளும் ஆஞ்சநேயருக்கு கிடைத்தன.

    ஏற்கனவே சங்கு சக்கரம், அஷ்டதிக்பாலர்களின் சக்திகள், விஷ்ணு சக்தி, மூன்றாவது கண் எல்லாம் பெற்ற ஆஞ்சநேயருக்கு இந்த சக்திகள் மேலும் பலத்தைக் கொடுத்தன.

    இதனால் தான் ஆஞ்சநேயரை நாம் வணங்கும் போது புத்தி, பலம், புகழ் மன உறுதி, அஞ்சா நெஞ்சம், ஆரோக்கியம், விழிப்பு, வாக்கு வன்மை இத்தனையையும் நமக்கு தந்து ஆசீர்வதிப்பார் என்ற ஐதீகம் உள்ளது.

    Next Story
    ×