search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    பிரம்மத்தை உணர ஒரு உதாரணம்
    X

    பிரம்மத்தை உணர ஒரு உதாரணம்

    • பிறகு விளக்கைப் போட்டதும் தான் பார்த்தது பாம்பு அல்ல வெறும் கயிறு தான் என்று தெரிகிறது.
    • உடனே தெளிவு பிறக்கிறது. பயம் மறைந்து விடுகிறது.

    பிரம்மத்தை உணர ஒரு உதாரணம் பார்ப்போம். இருட்டில் கயிற்றைப் பார்த்து பாம்பு என்று எண்ணிக் கொள்வதாக வைத்துக் கொள்வோம். அதனால் பயம் நம்மை ஆட்கொள்கிறது.

    பயத்தினால் இதயம் படபடக்கிறது. வியர்க்கிறது. இன்னும் என்னென்னவோ உணர்வுகள் ஏற்படுகின்றன.

    பிறகு விளக்கைப் போட்டதும் தான் பார்த்தது பாம்பு அல்ல வெறும் கயிறு தான் என்று தெரிகிறது. உடனே தெளிவு பிறக்கிறது. பயம் மறைந்து விடுகிறது.

    பயத்தின் மூலமாய் ஏற்பட்ட உணர்வுகளும் மறைந்து விடுகின்றன.

    அது போல நாமும் அறியாமை இருட்டில் இருந்து கொண்டு நம் ஆத்மாவின் நிலையான தன்மையை மறந்து விட்டு நிலையற்ற கதாபாத்திரமாக நம்மைக் கண்டு படாதபாடு படுகிறோம்.

    அந்தப் பாத்திரத்திற்கு பாதிப்பு என்றால் ஆத்மாவுக்கே பாதிப்பு ஏற்பட்டு விட்டதாக நினைக்கிறோம்.

    அந்த நினைவாலேயே கஷ்டப்படுகிறோம். ஞானம் என்கிற வெளிச்சம் வரும் வரை நம் கஷ்டங்கள் தொடர்கின்றன.

    ஞான ஒளி வந்து விட்டாலோ உண்மை தெளிவாகிறது. மாயையை உண்மை என்று நம்பி ஏற்படும் அறியாமையினால் விளையும் துன்பங்கள் தாமாக நீங்கி விடுகின்றன.

    ஒரு காலிப் பானையை குளத்தில் மூழ்க வைத்தால் பானையின் உள்ளே இருக்கும் தண்ணீர் பானைத் தண்ணீர், வெளியே இருக்கும் தண்ணீர் குளத்துத் தண்ணீர் என்று சொல்லலாம் என்றாலும் உண்மையில் இரண்டும் ஒன்றே அல்லவா?

    பானை உடைந்தால் முன்பு கண்ட வேறுபாடும் இல்லாமல் போகிறது அல்லவா?

    பானைத் தண்ணீர் ஜீவாத்மா. குளத்துத் தண்ணீர் பரமாத்மாவாகிய பிரம்மம். உடல் என்ற கதாபாத்திரம் உடையும் போது மிஞ்சுவது நிலைத்திருக்கும் ஒன்றேயான பிரம்மம் தான்.

    Next Story
    ×