search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    ஏகாதசி விரதத்தின் மகிமைகள்
    X

    ஏகாதசி விரதத்தின் மகிமைகள்

    • அன்று, பசுக்களுக்கு அகத்திக் கீரை தருவது மிகவும் புண்ணியமாகும்.
    • மகாவிஷ்ணு, லட்சுமி கடாட்சம் ஏற்பட்டு வறுமை நீங்கிச் செல்வம் சேரும். சகல ஐஸ்வர்யங்களும் கிட்டும்.

    கம்பம் என்ற நகரில் வைகானசன் என்ற அரசன் வாழ்ந்து வந்தான். ஒரு நாள், கனவில் அவனுடைய பெற்றோர்கள் நரகத்தில் இருப்பது போலவும், அதிலிருந்து தங்களை விடுவிக்குமாறு அவனிடம் அழுது முறையிடுவது போலவும் கண்டான்.

    இதற்கு ஏதாவது பரிகாரம் உடனே செய்ய வேண்டும் என வைகானசன் முடிவு செய்தான். காட்டில் கடும் தவம் புரிந்து வந்த முனிபுங்கர் என்ற முனிவரைச் சந்தித்து அவன் ஆலோசனைக் கேட்டான்.

    தன்னுடைய ஞானதிருஷ்டியால் உண்மையை அறிந்த முனிவர் வைகானசனிடம், "நீ, உன் மனைவி, குழந்தைகளுடன் ஏகாதசி விரதமிருந்து அதை உன் மூதாதையர்களுக்க அர்ப்பணம் செய்" என்று ஆலோசனை கூறினார்.

    அவனும், அவ்வாறே செய்ய, அதன் பலனாக, அவனுடைய பெற்றோர்கள் நரகத்திலிருந்து விடுபட்டு மைந்தனை வாழ்த்தி, சொர்க்கம் புகுந்தனர்.

    அதனால்தான், பெற்றோரை இழந்தவர்கள், இவ்விரதத்தை மேற்கொண்டு, அதன் பலனை அவர்களுக்கு அர்ப்பணிக்கின்றனர்.

    அமாவாசை யிலிருந்தும், பவுர்ணமியிலிருந்தும் பத்தாவது நாள் தசமி. அதற்கடுத்த நாள் ஏகாதசி. ஏகாதசிக்கு அடுத்த நாள் துவாதசி.

    ஏகாதசி விரதமிருப்பவர்கள், அதற்கு முன் தினமான தசமியன்று, ஒரு வேளை மட்டும் உணவு உட்கொண்டு, ஏகாதசியன்று முழுவதும் உண்ணாமல் விரதம் இருக்க வேண்டும்.

    ஏகாதசியன்று இறைவனுக்கு நைவேத்தியமாகப் படைத்த பிரசாதங்கள் கிடைத்தால் கூட சாப்பிடக்கூடாது என்று புராணங்கள் கூறுகின்றன.

    அதே போல, ஏகாதசி விரதம் இருப்பவரைப் பலவந்தப்படுத்தி உண்ணச் செய்பவன் நரகத்திற்குச் செல்வது உறுதி என்கின்றன.

    அதன்பின், ஏகாதசிக்கு மறுநாள் துவாதசியன்று, அதிகாலையில் எழுந்து நீராடி, இறைவனை வணங்கி துளசி தீர்த்தம் அருந்தி, சூரிய உதயத்திற்கு முன் பாரணை (விரதத்தை உணவு உட்கொண்டு முடித்து கொள்வது) செய்ய வேண்டும்.

    பாரணையில், அகத்திக்கீரை, நெல்லிக்காய், சுண்டைக்காய் போன்றவைகளுடன் நல்ல காய்கறிகளையும் சேர்த்து, உணவு சமைக்க வேண்டும். பாரணையை முடித்த பின், அன்று முழுவதும் உறங்கக் கூடாது.

    ஏகாதசியன்று, எக்காரணத்தைக் கொண்டும், துளசி இலையை பறிக்கக்கூடாது.

    எனவே, தேவையான துளசி இலையை, முன்தினமே பறித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

    இந்த விரதத்தை மேற்கொண்டு தேவர்களும், முனிவர்களும் திருமாலின் அருளைப் பெற்றனர். சகல சௌபாக்கியங்களோடு உடல் ஆரோக்கியமும் கிடைக்கும்.

    சிவபெருமானே பார்வதி தேவிக்கு இவ்விரதத்தின் மகிமை பற்றி கூறினார் எனில், கூறுவதற்கு வேறு சிறப்பு இல்லை.

    கிருஷ்ண பட்சத்தில் வரும் உற்பத்தி ஏகாதசியைப் போல, சுக்ல பட்சத்தில் வரும் மற்றொரு ஏகாதசி, "மோட்ச ஏகாதசி" என்றும் அழைப்பார்கள்.

    வைகுண்ட ஏகாதசியன்று விரதமிருந்தால் வைகுண்ட பதவி கிடைக்கும் என்பதும், அன்று இயற்கை மரணமடைந்தவர்கள் வைகுண்டம் செல்வார்கள் என்பதும் நம்பிக்கை.

    திருமால் ஆலயங்களிலும் வைணவ ஆலயங்களிலும் வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்க வாசல் எனப்படும் கதவுகள் திறக்கப்படும்.

    அதன் வழியாக ஆலயத்திற்குள் சென்று திருமாலை வழிபட வேண்டும்.

    திருமாலை வேண்டி இருக்கும் இவ்விரதத்தன்று, காலையில் எழுந்து நீராடிவிட்டு, திருமால் கோவிலுக்கோ அல்லது வீட்டிலேயோ திருமாலின் படத்தின் முன் அமர்ந்தோ, விஷ்ணு சகஸ்ரநாமம் சொல்லி வணங்க வேண்டும்.

    பின், ஏகாதசியன்று விரதமிருந்து, துவாதசியில் பாரணை செய்ய வேண்டும்.

    அன்று, பசுக்களுக்கு அகத்திக் கீரை தருவது மிகவும் புண்ணியமாகும்.

    மகாவிஷ்ணு, லட்சுமி கடாட்சம் ஏற்பட்டு வறுமை நீங்கிச் செல்வம் சேரும். சகல ஐஸ்வர்யங்களும் கிட்டும்.

    Next Story
    ×