search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    முக்கிய பவுர்ணமி விரதங்களும் அவற்றின் சிறப்பும்
    X

    முக்கிய பவுர்ணமி விரதங்களும் அவற்றின் சிறப்பும்

    • ஒவ்வொரு மாதங்களிலும் வரும் ஒவ்வொரு பவுர்ணமியும் சிறப்புடையது.
    • இந்த வகையில் எந்த மாதத்தில் வரும் பவுர்ணமிக்கு எந்த கடவுளை வழிபாடு செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.

    ஒவ்வொரு மாதங்களிலும் வரும் ஒவ்வொரு பவுர்ணமியும் சிறப்புடையது. இந்த வகையில் எந்த மாதத்தில் வரும் பவுர்ணமிக்கு எந்த கடவுளை வழிபாடு செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.

    சித்ரா பவுர்ணமி: (சித்திரை) அனைவரின் செயல்களையும் பதிவு செய்யும் சித்ரகுப்தனின் பிறந்த நாள்.

    அவரை நினைப்பதன் மூலம் நம் கடந்த வருட செயல்பாட்டை நாமே மதிப்பிடும் தினம். மதுரையில் மிகு சிறப்பு.

    வைகாசி பவுர்ணமி: (விசாகம்) நல்லோரையும், நலிந்தோரையும் துன்புறுத்திய சூரனை அடக்கிட முருகன் அவதரித்த நாள். தீது அழிந்து, நன்மை நிலைக்கும் என்பதை உறுதிப்படுத்தும் தினம். திருச்செந்தூரின் தென்மேற்கே 30 கி.மீ. கடற்கரைத்தலமான உவரியில் மிகு சிறப்பு.

    ஆனிப் பவுர்ணமி : (மூலம்) தாயினும் மேலான இறைவனுக்கு தித்திக்கும் நல்கனிகளையெல்லாம் (குறிப்பாக மா, பலா, வாழை) படைக்கும் நாள். திருவையாற்றில் மிகு சிறப்பு.

    ஆடிப் பவுர்ணமி: (பூராடம்/உத்ராடம்) விஷ்ணு விரத வழிபாட்டுக்கு உகந்த நாள். காஞ்சியில் மிகு சிறப்பு.

    ஆவணிப் பவுர்ணமி: (அவிட்டம்) வட பாரதத்தில் ரக்ஷபந்தனம் என்று மிகக் கோலாகலமாக அனைவரிடையிலும் நல்லுறவை வளர்க்கும் திருநாள். கேரளத்தின் மிக மிக முக்கிய ஓணவிழா நாள்.

    புரட்டாசி பவுர்ணமி: (பூரட்டாதி/உத்ரட்டாதி) சிவசக்தியாக அருளும் உமாமகேஸ்வர விரத பூஜை நாள். வட நாட்டில் பிரபலம்.

    ஐப்பசி பவுர்ணமி: (அசுவதி) வடநாட்டில் லக்ஷ்மி விரதமும், தென்னாட்டில் சிவனுக்கு அன்னாபிஷேகமும் விஷேசம் கங்கை கொண்ட சோழபுரத்தில் மிகு சிறப்பு.

    கார்த்திகைப் பவுர்ணமி: (கார்த்திகை) பரம்பொருள் அளத்தற்கரியது என்பதை நமக்கு உணர்த்துவதற்காக மும்மூர்த்திகளும் சேர்ந்து திருவிளையாடல் நடத்திய நாள். நம்முடைய நிலை கருதி பெருஞ்சோதி அண்ணாமலையில் மலையாகி அருளுகிறது. திருவண்ணாமலையில் மிகு சிறப்பு.

    மார்கழிப் பவுர்ணமி: (திருவாதிரை) இக்காலம் பலரும் பணிப்பித்தராய் இருப்பது போல, முன்பும் சில முனிவர்கள் கர்மாவே பெரிது என்ற எண்ணியபோது, எல்லாவற்றையும் ஆட்டுவிப்பவராக இறைவன் நடராஜனாய் காட்சியளித்த திருநாள். சிதம்பரத்திலும், திரு உத்தர கோசமங்கையிலும் மிகு சிறப்பு.

    தைப் பவுர்ணமி: (பூசம்) மிகு சிறப்புடைய பூச நக்ஷத்ரத்தன்று பரம்பொருளுக்கு பெருவிழா நடத்தும் நாள். மதுரையிலும், பழனியிலும் மிகு சிறப்பு.

    மாசிப் பவுர்ணமி: (மகம்) ஒரு முறை படைப்பு துவங்கிய நாளில், அனைவரும் புனித நீராடி விரதமிருந்து பரமனை வழிபடும் நாள். தெற்கே கும்பகோணத்திலும், வடக்கே அலகாபாத்திலும் மிகு சிறப்பு.

    பங்குனிப் பவுர்ணமி: (உத்திரம்) இல்லறமே நல்லறம் என்று உணர்த்துவதற்காக, சிவன் உமையை மணக்கும் திருவிளையாடல் நிகழ்ந்த நாள். பழனியோடு, பல்லாயிரம் தலங்களிலும் சிறப்பு.

    Next Story
    ×