search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    பஞ்சபூதங்களின் மகிமையும் கார்த்திகை தீப வழிபாடும்
    X

    பஞ்சபூதங்களின் மகிமையும் கார்த்திகை தீப வழிபாடும்

    • இந்த தத்துவத்தின் அடிப்படையில் பஞ்ச பூதங்கள் ஒளி பெற்றுச் சிறப்படைய வேண்டும் என்பதற்கு ஐந்து முகவிளக்கும், தீபாராதனைகளும் காட்டப்படுகிறது.
    • பஞ்ச பூதங்களை பற்றித் தெளிவாகவும் நுட்பமாகவும் உணர்ந்த நமது பெரியோர்கள் ஒவ்வொரு பூதத்தின் பெயராலும் ஒரு தலத்தை ஏற்படுத்தி உள்ளனர்.

    மும்மூர்த்திகள் எனப்படுபவர்கள் பிரம்மா, விஷ்ணு, மகேஸ்வர் ஆவார்கள். படைத்தல், காத்தல், அழித்தல் என்பது முறையே இவர்களுடைய பொறுப்பாகும்.

    இவர்களில் மகேஸ்வரர் எனப்படும் சிவனாருக்கு இந்தியா முழுவதிலும் கோவில்கள் உள்ளன.

    இந்த உலகமானது நீர், நிலம், நெருப்பு, வாயு, ஆகாயம் எனும் ஐந்து பூதங்களால் உருவாக்கப்பட்டுள்ளது.

    இதனை அடிப்படையாகக் கொண்டு, சிவ வழிபாட்டில், இந்த ஐந்து பூதங்களையும் முன்னிறுத்தி, தனித்தனியாக ஐந்து இடங்களில் உள்ள கோவில்களில் ஐம்பூதங்களுக்கான வழிபாடு நடக்கிறது.

    இந்த ஐந்து சிவதலங்களையும் பஞ்சபூதங்கள் என்று அழைக்கிறார்கள்.

    பஞ்ச என்றால் ஐந்து என்று பொருள்படும். பூதம் என்றால் பொருள் அல்லது சக்தி என்பதாகும்.

    பஞ்ச பூதங்கள் என்றால், ஐந்து மூலசக்திகள் அல்லது ஐந்து அடிப்படை மூலாதாரங்களை குறிப்பதாகும். இவற்றில் ஒன்று குறைந்தாலும் உயிரினங்கள் வாழ முடியாது.

    ஆகவே அவற்றை இறைவனுக்கு இணையாக மதித்தனர் நம் முன்னோர்கள்.

    ஆகவே முத்தொழில் முதல்வனான சிவனுடைய தலத்தில் அந்த ஐம்பூதங்களையும் வணங்கி வழிபட்டனர்.

    இந்த தத்துவத்தின் அடிப்படையில் பஞ்ச பூதங்கள் ஒளி பெற்றுச் சிறப்படைய வேண்டும் என்பதற்கு ஐந்து முகவிளக்கும், தீபாராதனைகளும் காட்டப்படுகிறது.

    பஞ்ச பூதங்களை பற்றித் தெளிவாகவும் நுட்பமாகவும் உணர்ந்த நமது பெரியோர்கள் ஒவ்வொரு பூதத்தின் பெயராலும் ஒரு தலத்தை ஏற்படுத்தி உள்ளனர்.

    இந்த பஞ்சபூத தலங்களில் நெருப்புத் தலமான திருவண்ணாமலை மற்ற தலங்களை விட பல சிறப்புகளையும், தனித்துவங்களையும் கொண்டது.

    சம்பந்தர், அப்பர், மாணிக்கவாசகர் ஆகியோரது பாடல் பெற்ற தலமாகும். நினைத்தாலே முக்தி தரும் தலம்.

    சிவமும் சக்தியும் ஒன்றே என்பதை உணர்த்துவதற்காக அர்த்தநாரீஸ்வரராக வடிவம் எடுத்ததும், சிவராத்திரி விழா உருவானதுமான பெருமையை உடைய தலம் திருவண்ணாமலை.

    சிவன் கார்த்திகை மாத கிருத்திகை நட்சத்திரத்தில், திருமால், பிரம்மன் இருவருக்கும் அக்னி வடிவமாக காட்சி தந்தார்.

    இந்நாளிலேயே தீபத்திருநாள் கொண்டாடப்படுகிறது. மலையில் தீபம் ஏற்றப்பட்டதும் மக்கள், "அண்ணாமலையானுக்கு அரோகரா" என விண்அதிர முழக்கமிடுவார்கள்.

    Next Story
    ×