search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    பிரத்தியங்கிரா தேவி 15
    X

    பிரத்தியங்கிரா தேவி 15

    • சத்ருக்களே இல்லாத ‘நிஷிக்ரோதா’ அவள். கோபத்தை நாசம் செய்யும் ‘குரோத சமனீ’
    • அவள் மங்களத்தைத் தரும் ஆனந்த சொரூபிணி.

    1. விசுவாமித்ரர் ராமருக்கு உபதேசித்த மந்திரத்தின் பெயர் விபரீத பிரத்தியங்கிரா. இந்த மந்திரத்தை உச்சரித்துதான் தாடகை, மாரீசன் சுபாகு ஆகிய அரக்கர்களை அடக்கினார் ராமர்.

    2. அய்யாவாடி ஸ்ரீபிரத்யங்கிரா தேவி ஆலயத்தை ஒட்டி அகஸ்தீஸ்வரர் ஆலயம் அமைந்திருக்கிறது. இங்குள்ள அகஸ்தீஸ்வரரை வழிபட்ட அகத்தியர் அன்னை பிரத்யங்கிராதேவியையும் வழிபட்டிருக்கிறார். அவள் மீது பாடல்களும் இயற்றி இருக்கிறார்.

    3. ஸ்ரீபிரத்யங்கிராதேவியை புலிப்பாணி, போகர் போன்ற சித்தர்களும் வணங்கி, அவளை தங்களின் பாடல்களில் வைத்திருக்கிறார்கள்.

    4. பார்வதி தேவி, சக்தியன்னை, தன் இரு சக்தியினால் சூலினி துர்கா, பிரத்தியங்கிரா என்ற இரு சக்திகளை சரபருக்கு அளித்தபடியால் 'ஆதிசக்தி வரபிரதாய நம' என்றும் 'காளி துர்க்கா சமேத சரபேஸ்வராய நம' என்றும் புகழப்படுகிறார்கள்.

    5. ஒருவர் மீது பில்லி, சூனியம், ஏவல் போன்ற தீய சக்திகள் பிரயோகிக்கப்படும் பொழுது அத்தீய சக்திகளில் இருந்து அவரைக் காப்பாற்ற, அந்தத் தீய சக்தியை ஏவினவரையே அழிப்பதற்கு ஒரு பெண்ணாகிய மகாசக்தி பிரம்ம தேவனால் சிருஷ்டிக்கப் படுகிறாள். அந்த சக்தி அதர்வண பத்ரகாளி என்று அழைக்கப்படுகிறாள். அங்கிரஸ், பிரத்தியங்கிரஸ் என்ற மகரிஷிகள் அவளது மந்திரங்களை உருவாக்கி யதையடுத்து அதர்வண பத்ரகாளிக்கு பிரத்தியங்கிரா என்ற பெயர் வந்தது.

    6. சிங்கமும், சிங்கத்தின் வலிமை, கால பைரவரின் துணைவி, சூலம், கபாலம், ஆயிரம் பற்களையுடைய பெரிய குகை போன்ற வாயை உடைய முகம், ரத்த வண்ண மூன்று கண்களை உடையவள். இளம் பிறைச் சந்திரன் பிரகாசிக்கும் மகுடத்தை அணிந்தவள். இவை அவளது வடிவங்கள்.

    7. எங்கும் வியாபித்திருப்பதைக் குறிக்கும் ஆயிரம் தலைகளும் இரண்டாயிரம் கைகளும் உடைய 'விஸ்வரூபி' என்று அவள் வர்ணிக்கப்படுவதுண்டு.

    8. சத்ருக்களே இல்லாத 'நிஷிக்ரோதா' அவள். கோபத்தை நாசம் செய்யும் 'குரோத சமனீ' அவள் மங்களத்தைத் தரும் ஆனந்த சொரூபிணி.

    9. 'பஞ்சாக்னி மத்தியிலிருந்து தவம் புரிந்து ஈசனிடமிருந்து பல வரங்களைப் பெற்ற அந்தகாசுரனை வதம் செய்ய ஈசனே அனுப்பிய பைரவருக்குத் துணையாக நின்ற பைரவி அவள். ஞானத்தை தரும் வித்யை. அவித்தை ரூபமாகி இருக்கும் ஞான ரூபிணி.

    10. பிரத்தியங்கிராவை லலிதா சகஸ்ர நாம ஸ்தோத்திரம் சர்வ வியாபியாக ஆயிரம் முகங்களும் ஆயிரம் பாதங்களும் உடையவள் என்று வர்ணிக்கிறது.

    11. உக்ரம் என்பதற்கு எதிரிகளை அழிக்கும் ஆற்றல் என்று பொருள் கொண்டு, பிரத்தியங்கிரா உக்ரபிரத்தியங்கிரா என்று பெயர் சூட்டப்படுகிறாள்.

    12. உக்ர பிரத்தியங்கிரா தஞ்சை மாவட்டம் நாச்சியார் கோவிலையடுத்த அய்யாவாடி (ஜவர்வாடி என்பதன் திரிபு) என்ற திருத்தலத்தைக் கோவிலில் கரிய வண்ணமுடையவளாய், சந்திரகலை சிரத்தில் பிரகாசிக்க, சூலம், பாசம், டமருகம் ஆகிய பல ஆயுதங்களை ஏந்திய பன்னிரண்டு கைகளுடன் சிம்ம வாகனமாக நான்கு சிங்கங்கள் அவள் முன்னே நிற்க, இடது காலை மடித்து வலது காலைத் தொங்கவிட்டு அமர்ந்து அருள் புரிகிறாள்.

    13. ஒரு சிம்ம முகத்துடன் சிங்க வாகனத்தில் நெல்லை மாவட்டத்து திருக்குற்றாலத்தில் உள்ள சித்தேஸ்வரி பீடமாக விளங்கும் மவுன சுவாமிகள் மடவளாகத்தில் தரை மட்டத்துக்கு கீழே அமைந்த கருவறையில் பிரத்தியங்கிரா தேவி பஞ்சலோக விக்ரகமாக அமர்ந்து அருள் புரிகிறாள்.

    14. சிதம்பரத்தில் உள்ள தில்லைக் காளியும், பிரத்தியங்கிராவாகிய பத்ரகாளியாவாள்.

    15. இவள் சிவ துவேஷங்களில் ஈடுபடுகிறவர்களை அழிக்கும் சக்தியாக விளங்குவதால் இவளை தியானிக்கும் எவரையும் யாருடைய துவேஷமும் ஒன்றும் செய்ய முடியாது என்பது கண்கூடு.

    Next Story
    ×