search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    தென்தாமரைகுளம் தூய பனிமய அன்னை ஆலய திருவிழா தொடங்கியது
    X

    தென்தாமரைகுளம் தூய பனிமய அன்னை ஆலய திருவிழா தொடங்கியது

    தென்தாமரைகுளம் தூய பனிமய அன்னை ஆலய பொன்விழா மற்றும் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    தென்தாமரைகுளத்தில் தூய பனிமய அன்னை ஆலயம் உள்ளது. இந்த ஆலய பொன்விழா மற்றும் திருவிழா கடந்த 27-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா வருகிற 5-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. திருவிழாவின் முதல் நாளில் மாலையில் ஜெபமாலை, புகழ்மாலை, புதிய பொன்விழா நுழைவு வாயில் மற்றும் மக்கள் வங்கி அர்ச்சித்தல் ஆகியவை நடந்தது. தொடர்ந்து கொடியேற்றம், ஆடம்பர கூட்டு திருப்பலி ஆகியவை நடைபெற்றன.

    நிகழ்ச்சியில் கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் தலைமை தாங்கினார். மணவிளை பங்குதந்தை ஹிலோசியஸ் மறையுரை நிகழ்த்தினார். திருப்பலியின் இறுதியில் ஆயர் நசரேன் பொன்விழா ஜூபிலி மலரை வெளியிட்டார். இரவு பொதுக்கூட்டம், கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    தொடர்ந்து வருகிற திருவிழா நாட்களில் ஜெபமாலை, புகழ்மாலை, கூட்டுதிருப்பலி, முதல் திருவிருந்து திருப்பலி, மறையுரை, பொதுக்கூட்டம், கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.

    வருகிற 4-ந் தேதி (வெள்ளிக்கிழமை) 9-ம் திருவிழா நடைபெறுகிறது. அன்று காலை 7 மணிக்கு திருமுழுக்கு திருப்பலி, மாலை 6 மணிக்கு ஜெபமாலை, புகழ்மாலை, சிறப்பு திருப்புகழ் மாலை, நற்கருணை ஆசீர், மறையுரை ஆகியவை நடைபெறும். இரவு 9.30 மணிக்கு தூய பனிமய அன்னையின் அலங்கார தேர்ப்பவனி நடைபெறுகிறது.

    திருவிழாவின் இறுதி நாளான 5-ந் தேதி காலை 8 மணிக்கு ஆடம்பர கூட்டுத்திருப்பலியில் அருட்பணியாளர் செல்லையன் தலைமை தாங்குகிறார். கோட்டார் மறைமாவட்ட குருகுல முதல்வர் சாலமோன் மறையுரை நிகழ்த்துகிறார். பிற்பகல் 3.30 மணிக்கு அலங்கார தேர்ப்பவனி, மாலை 6 மணிக்கு கொடியிறக்கம், நற்கருணை ஆசீர் ஆகியவை நடக்கிறது. இரவு 7 மணிக்கு பேராசிரியர் ஞானசம்பந்தனின் பட்டிமன்றம் நடைபெறும்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை பங்குபேரவை தலைவர் ராஜன், துணைத்தலைவர் ஜான்போஸ்கோ, செயலாளர் ரெஷ்மி, பொருளாளர் பிரிட்டோ ஜெயசிங், துணைச்செயலாளர் சகாய நிஷா மற்றும் பங்குமக்கள் செய்துள்ளனர்.
    Next Story
    ×