search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    இறைமகன் இயேசுவின் ரத்தம்
    X

    இறைமகன் இயேசுவின் ரத்தம்

    தீமைக்கு நன்மை செய்யும் பாடத்தை சிலுவை கற்றுத் தருகிறது. இறைமகன் இயேசுவின் ரத்தம் பழிக்குப் பழி கேட்கும் ரத்தமல்ல, வாழ்வை நோக்கி நம் இதயத்தைத் திரும்பச் சொல்லும் ரத்தம்.
    முற்பிதாக்களில் ஒருவர் யாக்கோபு. அவர் தனது பிள்ளைகளில் ‘யோசேப்பு’ மீது அதிக பாசம் வைக்கிறார். அது மற்ற சகோதரர்களுக்குப் பிடிக்கவில்லை. ஒரு நாள் அவனைப் பிடித்து அடிமையாய் விற்று விட்டு, அவனுடைய ஆடையில் ஒரு விலங்கின் ரத்தத்தைப் பூசி தந்தையிடம் வருகின்றனர். ஏதோ காட்டு விலங்கு யோசேப்புவைக் கொன்று விட்டதாக கதை விடுகின்றனர். யாக்கோபு அதிர்ந்து போகிறார்.

    இங்கே ரத்தம் ஒரு பொய்யின் அடையாளமாய் இருக்கிறது. அந்த பொய் ஈடு கேட்கிறது. காலம் கடக்கிறது. யோசேப்பு எகிப்து நாட்டில் பெரிய அதிகாரியாகிறார். அவனுடைய சகோதரர்கள் உதவிக்காக அவரைத் தேடி வருகின்றனர். அவர் தான் தங்கள் சகோதரர் என்பது அவர்களுக்குத் தெரியாது.

    யோசேப்பு சட்டென கண்டுபிடித்து விடுகிறார். ஆனால் தெரியாதது போல் நடிக்கிறார்.

    ‘நீங்கள் ஒற்றர்கள்’ என சகோதரர்களை குற்றம் சாட்டுகிறார். மூன்று நாட்கள் சகோதரர்கள் சிறையில் வாடுகின்றனர். அவர்களுடைய மனசாட்சி விழித்தெழுகிறது. தனது சகோதரனுக்குச் செய்த துரோகம் தான் தங்களை விரட்டுகிறது என உணர்கின்றனர்

    அடிமையாய் எகிப்துக்கு வந்த யோசேப்பு நல்லவனாய் வாழ்ந்த ஒரே காரணத்துக்காக இரண்டு ஆண்டுகள் சிறையில் வாடினார். சகோதரர்கள் மூன்று நாட்கள் சிறையில் இருந்தார்கள். ‘உன் பாவம் உன்னை துரத்தி பிடிக்கும்’ எனும் விவிலிய சிந்தனை சகோதரர்கள் வாழ்வில் நடக்கிறது.

    “கசப்பானவற்றை எனக்கெதிராய் எழுதுகின்றீர்; என் இளமையின் குற்றங்களை எனக்கு உடைமையாக்குகின்றீர்” (யோபு 13:26) என யோபு நூல் கூறுகிறது. பாவத்தின் விளைவுகளிலிருந்து யாரும் தப்பி விட முடியாது.

    1. காலம் கடந்தும் வெளிப்பட்டு வருகின்ற பாவம்

    யோசேப்புக்கு எதிராக சகோதரர்கள் செய்த பாவம் சுமார் 20 ஆண்டுகளுக்குப் பின்பும் அவர்களைத் துரத்திப் பிடிக்கிறது.

    2. ரகசியமாய் நிகழ்த்தப்பட்டு வெளிப்பட்டு வரும் பாவம்

    ஆதி மனிதன் ஆதாமின் மகன் காயீன் தனது சகோதரன் ஆபேலைக் கொன்று விடுகிறார். வயல்வெளியில் யாருக்கும் தெரியாமல் நிகழ்த்தப்பட்ட பாவம் அது. ஆனால் அது இறைவன் முன்னால் வெட்ட வெளிச்சமாகிறது.

    3. தற்காலிக ஆசையை நிறைவேற்ற எழும் பாவம்.

    கொஞ்சம் கூழுக்கு ஆசைப்பட்டு தனது தலைமகன் உரிமையை இளையவன் யாக்கோபுவுக்கு விற்று விடுகிறார் ஏசா. அது பாவமாய் மாறிவிட்டது.

    எபிரேயர் 12;16-17 வசனங்களில் இது, “ஏசாவைப்போல் உலகப் போக்கைப் பின்பற்றுபவராயும் இராதபடி கவனமாயிருங்கள். இந்த ஏசா, ஒரே ஒரு வேளை உணவுக்காகத் தம் தலைப்பேற்று உரிமையை விற்றுப் போட்டார். பின்னர் அவர் தமக்குரிய ஆசியை உரிமைப் பேறாக்கிக் கொள்ள விரும்பியும் அது அவருக்குக் கிடைக்கவில்லை” என குறிப்பிடப்பட்டுள்ளது.

    4. அழகாக புதைக்கப்பட்ட பின்னரும் வெளிப்பட்டு வருகிற பாவம்

    கடவுள் கொடுத்த கட்டளையை மீறி பொருட்களை அபகரித்துக் கொண்ட ஆக்கான் என்பவர் மீது கடவுளின் கோபம் எழுகிறது. மறைத்து வைத்த பொருட்கள் வெளிப்படுகின்றன. ஆக்கான் கொல்லப்படுகிறான். இதை யோசுவா 7-ம் அதிகாரம் விளக்குகிறது.

    பாவ உணர்வுகளும் அதனால் எழுகின்ற விளைவுகளும் மறைக்க முடியாதவை.

    பாலை நிலத்தில் நாற்பது ஆண்டுகள் அலைந்து திரிந்தனர் இஸ்ரயேல் மக்கள். ‘இதற்காகவா எங்களை இங்கே கொண்டு வந்தீர்கள்?’ என கடவுளுக்கும் மோசேக்கும் எதிராக அவர்கள் குரல் கொடுக்கின்றனர். கடவுள் கொள்ளி வாய் பிசாசுகளை அனுப்பி அவர்களைத் தண்டிக் கிறார். கடவுளுக்கு எதிராய் தாங்கள் செய்த பாவத்தை அவர்கள் உணர்கின்றனர். மன்னிப்பு வேண்டுகின்றனர்.

    தாவீது தனது திருப்பாடல்களில், (40:12) “எண்ணிறைந்த தீமைகள் எனைச் சூழ்ந்து கொண்டன” என தனது தவறை உணர்ந்து பாடுகிறார்.

    பாவம் மறைக்க முடியாதது. அது வெளிப்பட்டே தீரும். வெளிப்படும் போது அது பல விளைவுகளை ஏற்படுத்தும். முக்கியமாக அது கலக்கத்தை ஏற்படுத்தும், ஆத்மாவில் பாரத்தை ஏற்படுத்தும், துடிதுடிப்பை ஏற்படுத்தும் என்கிறது விவிலியம்.

    பாவத்துடனும், அது தருகின்ற விளைவுகளுடனும் நமது வாழ்க்கை முடிந்து விடக் கூடாது. அதைவிட்டு வெளியே வருகின்ற நிகழ்வுகளுடன் தொடரவேண்டும்.

    தன்னை நிராகரித்து, அடிமையாய் விற்ற சகோதரர்களைக் கட்டியணைத்து கண்ணீர் விட்டார் யோசேப்பு. இழந்த உறவுகள் இணைந்தன.

    தனக்கு எதிராக எழுந்தவர் நலம் பெற வேண்டுமென கடவுளிடம் விண்ணப்பம் செய்தார் மோசே. தீமைக்கு நன்மையை பதிலாய் செய்தார்.

    தன்னைக் கொல்லத் தேடிய சவுலையும் கொல்லாமல் விட்டு விட்டார் தாவீது.

    சிலுவை நமக்கு இதைத் தான் சொல்கிறது. தீமைக்கு நன்மை செய்யும் பாடத்தை சிலுவை கற்றுத் தருகிறது. இறைமகன் இயேசுவின் ரத்தம் பழிக்குப் பழி கேட்கும் ரத்தமல்ல, வாழ்வை நோக்கி நம் இதயத்தைத் திரும்பச் சொல்லும் ரத்தம். 
    Next Story
    ×