search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    மனிதனும் தெய்வம் ஆகலாம்
    X

    மனிதனும் தெய்வம் ஆகலாம்

    மன்னிப்பிற்கு எவ்வித தடையோ, எல்லையோ கிடையாது என்பதே இறை உண்மை. இதை உணர்கின்ற ஒவ்வொரு மனிதனும் தெய்வம் ஆகலாம்.
    1830-ம் ஆண்டு ஜார்ஜ் வில்சன் என்ற கொள்ளைக்காரன், அரசு ஊழியர் ஒருவரை கொலை செய்தான். இதற்காக அந்த கொள்ளைக்காரனுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் அவன் மேல் கருணை கொண்ட அன்றைய அமெரிக்க ஜனாதிபதி ஆன்ட்ரு ஜாக்சன், தனது சிறப்பு உரிமையை பயன்படுத்தி கொள்ளைக்காரனுக்கு மன்னிப்பு வழங்கினார்.

    இதனை ஏற்க மறுத்த அந்த கொள்ளைக்காரன், தன்னை தூக்கிலிடுமாறு அமெரிக்க உச்சநீதிமன்றத்துக்கு மனு அளித்தான். அந்த மனுவை பெற்றுக்கொண்ட உச்சநீதி மன்றத்தின் அன்றைய முதன்மை நீதிபதி, மன்னிப்பு என்பது ஒரு காகித துண்டு அல்ல. அதனுடைய மதிப்பை நிர்ணயிப்பது அதை ஏற்றுக்கொள்கிற நபரை பொறுத்தது. எனவே கொள்ளைக்காரன், மன்னிப்பை ஏற்கவில்லை, தூக்கிலிடுவதை மறுக்கவில்லை. எனவே ஜார்ஜ் வில்சனை தூக்கிலிடுங்கள் என்று கூறினார். அவனும் தூக்கிலிடப்பட்டான்.

    கிறிஸ்துவ மறையின் பண்புகளில் மன்னிப்பதும், மன்னிப்பை பெறுவதும் மிக அடிப்படையானது. இயேசு கிறிஸ்து சிலுவையில் தொங்கிய போது கடைசியாக, தனது தந்தையாகிய கடவுளைப்பார்த்து, ‘தந்தையே இவர்களை மன்னியும், இவர்கள் செய்வது இன்னதென்று அறியாமல் செய்கிறார்கள்‘ என்றார். இயேசு போதித்த போதனைகளும், அவருடைய செயல்பாடுகளும் இதற்கு ஒரு எடுத்துக்காட்டு.

    கிறிஸ்தவர்கள் தவக்காலத்தில் ஜெப, தவ, தர்ம நற்செயல்கள் செய்வதால் இறைவனிடம் இருந்து பாவமன்னிப்பையும், அதன் வழியாக புதிய நிலை வாழ்வையும் பெறுகிறார்கள். அதுபோன்று பாவமன்னிப்பை பெற வேண்டுமெனில், நீங்கள் ஒருவரை ஒருவர் மன்னிக்க வேண்டும் என்ற அன்பு கட்டளையை இயேசு விதித்தார். மேலும் ‘எங்களுக்கு தீமை செய்தவர்களை நாங்கள் மன்னித்தது போல, எங்கள் பாவங்களையும் மன்னியும்‘ என்று தன் சீடர்களுக்கு கற்றுக்கொடுத்த ஜெபத்திலும் எடுத்துரைத்தார்.

    எவரொருவர் இறைவனுடைய மன்னிப்பை மிக அழகாக உணர்கிறாரோ, அவ்வளவு தூரம் பிறருடைய குற்றங்களையும் அவரால் எளிதில் மன்னிக்க இயலும். இந்த உண்மை ‘கெட்ட ஊழியன்‘ என்ற கதை மூலமாக இயேசு விளக்கி உள்ளார். அந்த கதையின் முடிவில், நீங்கள் ஒருவரை ஒருவர் மன்னிக்காவிட்டால், விண்ணுலகில் இருக்கும் என் தந்தையும் உங்களை மன்னிக்க மாட்டார் என்று உரைத்தார். மன்னிப்பிற்கு எவ்வித தடையோ, எல்லையோ கிடையாது என்பதே இறை உண்மை. இதை உணர்கின்ற ஒவ்வொரு மனிதனும் தெய்வம் ஆகலாம்.

    அருட்பணி. ஜான்பிரகாசம், சேசு சபை, திண்டுக்கல். 
    Next Story
    ×