search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    நம்மை செயல்படுத்தும் இறைத்திட்டம்
    X

    நம்மை செயல்படுத்தும் இறைத்திட்டம்

    இறைத்திட்டம் நம்மில் செயல்பட அனுமதித்து தந்தை கடவுளின் காக்கும் கரத்தில் நம்பிக்கை வைக்கும் போது எந்த தீங்கும் நம்மை அணுகாது. நம்புவோம்; வாழ்வு பெறுவோம்.
    காலம் காட்டும் கடிகாரத்தில், கடந்து செல்லும் நாட்களில் கடவுள் குறித்த நேரம் வரும்போதே காலச்செயல்கள் கனிகின்றன. ஆம், உருண்டோடும் கால ஓட்டத்தில் நாம் நகர்ந்து கொண்டிருக்கிறோம். மனிதனின் வாழ்க்கை பயணம் ஒவ்வொன்றும் இன்பம், துன்பம், வெற்றி, தோல்வி, வாழ்வு, சாவு என அனைத்தும் கடவுளின் துணையாலே, அவர் தீட்டிய திட்டத்தாலே நடக்கின்றன.

    “சிலர் இயேசுவை பிடிக்க விரும்பினர். ஆனால் யாரும் அவரைத்தொடவில்லை. (யோவான் 7:40-53) இது கடவுளின் திட்டம். மீட்புத்திட்டம். இவ்வுலகில் நிறைவேற, கடவுள் காலத்தை நகர்த்திட்ட திட்டம்.

    இயேசு இறையாட்சி பணிக்காக தன்னையே 30 ஆண்டுகள் தயாரித்த போது. தன் செபத்தால் தந்தையான கடவுளை நன்கு அறிந்திருந்தார். அனுபவித்திருந்தார். அவரது திட்டத்தை நன்கு உணர்ந்திருந்தார். அவரது பராமரிப்பில் முழு நம்பிக்கை கொண்டிருந்தார். அவரது சக்தியால் முழுவதும் நிரப்பப்பட்டிருந்தார்.

    அதனால் தான் யாரும் அவரை தொடவில்லை. அவர் தம் போதனையிலும் எந்தவொரு அச்சமில்லை; தயக்கமில்லை; சோர்வில்லை. அதிகாரத்தோடு போதித்தார். ஞானத்தோடு பரிந்துரைத்தார். இதற்கு மத்தியிலும், அவரது பணியில் ஆயிரம், ஆயிரம் தடைகள், எதிர்ப்பு குரல்கள். அனைத்திலும் கடவுளின் கரம் துணை நின்றது.

    “அவரின்றி ஓர் அணுவும் அசையாது என்ற வார்த்தைக்கேற்ப கடவுள் நினைக்கும் வரை, யாரும், யாருக்கும், எதையும், எப்போதும் செய்துவிட முடியாது.” “நான் உங்களை என் உள்ளங்கைகளில் பொறித்து வைத்துள்ளேன்” என்ற தந்தை கடவுளின் பராமரிப்பில் நம் மனதை பதிந்து, நம் வாழ்வில் இறைநம்பிக்கை என்னும் நங்கூரத்தை ஊன்றி விட்டால் போதும். வாழ்வு செழிப்பாகும்.

    இறைத்திட்டம் நம்மில் செயல்பட அனுமதித்து தந்தை கடவுளின் காக்கும் கரத்தில் நம்பிக்கை வைக்கும் போது எந்த தீங்கும் நம்மை அணுகாது. நம்புவோம்; வாழ்வு பெறுவோம்.

    அருட்சகோதரி. பாக்கியா, மரியின் ஊழியர் சபை, திண்டுக்கல். 
    Next Story
    ×