search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சிலுவையின் அடையாளங்கள்
    X

    சிலுவையின் அடையாளங்கள்

    சிலுவையைப்பற்றி தியானிக்கிறதான நம் வாழ்க்கையில் பாடுகளுக்கும், துன்பங்களுக்கும் அப்புறமாக வாழ்க்கையில் நிரந்தரமான நித்திய சந்தோஷத்தை தேவன் தந்து அருள்வாராக.
    சிலுவை, சீடராய் மாறுவதற்குரிய அடையாளம்; தன்னை பின்தொடர்ந்து வந்த திரளான ஜனங்களை பார்த்த ஏசு, தம்முடைய சீடர்களை நோக்கி, ஒருவன் என்னை பின்பற்றி வர விரும்பினால் அவன் தன்னைத்தான் வெறுத்து தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னை பின்பற்றக்கடவன். (மத்தேயு 16:24) தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னை பின்பற்றாதவன் எனக்கு பாத்திரன் அல்ல. (மத்தேயு 10:38)

    தன் சிலுவையை சுமந்து கொண்டு எனக்கு பின் செல்லாதவன் எனக்கு சீடனாய் இருக்க மாட்டான். (லூக்கா 14:27) பின்பு அவர் எல்லோரையும் நோக்கி, ஒருவன் என் பின்னே வர விரும்பினால் அவன் தன்னைத்தான் வெறுத்து தன் சிலுவையை அனுதினமும் எடுத்துக்கொண்டு என்னை பின்பற்றக்கடவன். (லூக்கா 9:23) மேற்கூறிய வேத வார்த்தைகள் எல்லாம் சீடராய் மாறுவதற்கான அடையாளமாக காணப்படுகிறது.

    சிலுவை-கீழ்படிதலின் தாழ்மையின் அடையாளம்; ஏசு கிறிஸ்து பிதாவினுடைய சமூகத்தில் சிலுவையின் மரணபரியந்தம் வரை தாழ்மையும், கீழ்படிதலும் உள்ளவராய் காணப்பட்டார். அவர் மனித ரூபமாய் காணப்பட்டு மரணபரியந்தம்- அதாவது சிலுவையின் மரண பரியந்தமும், கீழ்படிந்தவராகி தன்னைத்தானே தாழ்த்தினார். (பிலிப்பியர் 2:8).

    சிலுவை-சாத்தான் மேலுள்ள வெற்றியின் அடையாளம்; நமக்கு எதிராகவும், கட்டளைகளால் நமக்கு விரோதமாகவும், இருந்த கையெழுத்தை குலைத்து, அதை நடுவில் இல்லாதபடிக்கு எடுத்து சிலுவையின் மேல் ஆணியடித்து துரைத்தனங்களையும், அதிகாரங்களையும் உரிந்து கொண்டு வெளியரங்கமான கோலமாக்கி அவைகளின் மேல் சிலுவையில் வெற்றி சிறந்தார். (கொலோசெயர் 2:14,15) ஆதலால் கல்வாரி சிலுவை ஒவ்வொரு மனிதனுக்கும் சாத்தான் மேலுள்ள வெற்றியின் அடையாளமாய் காணப்படுகிறது.

    சிலுவை-பொறுமையின் அடையாளம்; ஏசு தமக்கு முன் வைத்திருந்த சந்தோஷத்தின் பொருட்டு அவமானத்தை எண்ணாமல் சிலுவையை சகித்து தேவனுடைய சிங்காசனத்தின் வலது பாரிசத்தில் வீற்றிருக்கிறார்.(எபிரெயர் 12:2) சிலுவையில் அறையப்பட்ட ஏசு கிறிஸ்து சொன்னதான 7 ஜீவ வார்த்தைகளும் இன்றைக்கும் அனேகருடைய வாழ்வில் ஆறுதலையும், ஆனந்தத்தையும், நித்திய நம்பிக்கையையும், வாழ்க்கையில் மறு ரூபத்தையும் தந்து கொண்டிருக்கிறது.

    அது மட்டுமின்றி ஏசு சிலுவையில் அறையப்படும் போது பின் வரப்போகின்ற சந்தோஷத்தைபற்றி நினைத்ததின் மூலமாக அவமானத்தையும், பாடுகளையும் நினைக்காமல் சிலுவையை பொறுமையாக சகித்தார். சிலுவையைப்பற்றி தியானிக்கிறதான நம் வாழ்க்கையில் பாடுகளுக்கும், துன்பங்களுக்கும் அப்புறமாக வாழ்க்கையில் நிரந்தரமான நித்திய சந்தோஷத்தை தேவன் தந்து அருள்வாராக.

    -பாதிரியார், ஜெய்சன் டி.தாமஸ்.
    Next Story
    ×