search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    இயேசுவின் நண்பனாக வாழ முற்படுவோம்
    X

    இயேசுவின் நண்பனாக வாழ முற்படுவோம்

    இயேசுவை நம் வாழ்வில் நாம் அனுமதிக்கும் போது நிச்சயமாக அவர் போதுமான பலத்தை நமக்கு தருவார். னைத்து துயரங்களில் இருந்தும் நம்மை விடுவிப்பார்.
    நற்செய்தியில் இயேசுவை அன்பு செய்து அவரை பின்பற்றியது, பெத்தானியாவில் இருந்த மரியா, மார்த்தா, லாசர் என்பவர்களின் குடும்பம். இவர்கள் இயேசுவின் சீடர்களாக, நண்பர்களாக விளங்கினார்கள். ஆண்டவரே, உன் நண்பர் லாசர் நோயுற்று இருக்கின்றார் என்று இயேசுவுக்கு செய்தி மட்டுமே அனுப்பப்பட்டது. இயேசு அவர்களை அன்பு செய்ததால், நட்போடு பெத்தானியாவுக்கு சென்றார். ஆனால் அதற்குள் லாசர் இறந்து நான்கு நாள் ஆயிற்று.

    இயேசுவை கண்ட லாசரின் சகோதரிகள் அழுது புலம்பினார்கள். அவர்களின் துயரத்துக்கு செவி சாய்த்து, அவர்களோடு அழுது, துக்கத்தில் தோள் கொடுத்து, உள்ளம் குமுறி நொந்தார் இயேசு. இதுதான் அவருடைய அன்பு. இறைத்தந்தையால் நாம் வாழ்வு பெற அனுப்பப்பட்ட ஆண்டவர், நமக்கு செவிசாய்த்தார். நாம் விடுதலை பெற நமக்காக கண்ணீர் சிந்தினார். நம் பாவங்களுக்காக அவர் காயப்பட்டார்.

    இயேசுவின் நண்பனாக இருக்க, லாசர்களாக, நெருக்கமானவர்களாக நம்முடைய செயல்பாடுகள் மாற வேண்டும். லாசரின் கல்லறை கல்லை அப்புறப்படுத்தி, அவரை உயிர்த்தெழ செய்தார் இயேசு. ஆனால் நாம் கோபம், ஆணவம், பொறாமை உள்பட பல்வேறு காரணங்களால் பலருக்கு கல்லறை கட்டி, அவர்கள் வாழ்வை இழக்க காரணமாக இருக்கின்றோம்.

    இயேசுவை நம் வாழ்வில் நாம் அனுமதிக்கும் போது நிச்சயமாக அவர் போதுமான பலத்தை நமக்கு தருவார். அத்துடன் பலருக்கு நாம் கட்டிய கல்லறைகளின் கல்லை அப்புறப்படுத்த துணை புரிவார். அனைத்து துயரங்களில் இருந்தும் நம்மை விடுவிப்பார். எனவே, இத்தவக்காலத்தில் மட்டுமல்ல என்றுமே இயேசுவின் நண்பனாக வாழ நாம் முற்படுவோம்.

    அருட்பணி. அ.ஜோசப் செல்வராஜ், முதன்மை செயலாளர்,

    திண்டுக்கல் மறைமாவட்டம்.  
    Next Story
    ×