search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    தோல் வியாதியை குணமாக்கும் சித்தேசுவரர் கோவில்
    X

    தோல் வியாதியை குணமாக்கும் சித்தேசுவரர் கோவில்

    சேலம் இளம்பிள்ளை அருகே அமைந்துள்ளது, கஞ்சமலை சித்தேசுவரர் கோவில். தோல் வியாதியால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த கோவிலுக்கு வந்து, வழிபாடு செய்தால் குணமாகும் என்பது ஐதீகம்.
    சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே அமைந்துள்ளது, கஞ்சமலை சித்தேசுவரர் கோவில். இந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்களது குறைகளை தெரிவித்தால், அது நியாயமான கோரிக்கையாக இருந்தால், அதனை சித்தேசுவரசாமி நிவர்த்தி செய்வதாகவும், நோய்களை தீர்ப்பதாகவும் பக்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். இதனால் கோவிலுக்கு தினமும் பல்வேறு இடங்களில் இருந்து பக்தர்கள் வந்து செல்கிறார்கள்.

    கோவிலில் மாதந்தோறும் அமாவாசை நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். இந்த நாளில் சித்தேசுவர சாமியை தரிசித்தால் நல்லது என்பதால் கூட்டம் அதிகமாக காணப்படும். ஆண்டுதோறும் சித்திரை மாதம் 3-வது செவ்வாய்க்கிழமை கோவிலில் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

    சித்தேசுவரர் கோவிலை சுற்றி 7 தீர்த்தக்குளங்கள் உள்ளன. கோவிலுக்கு வரும் பக்தர்கள் இந்த குளங்களில் புனித நீராடி விட்டு, சாமியை தரிசனம் செய்வது வழக்கம். கோவில் வளாகத்துக்குள் காந்த தீர்த்தக்குளம் உள்ளது. தோல் வியாதியால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த கோவிலுக்கு வந்து, உப்பு, மிளகு, வெல்லம் ஆகியவற்றை தலையை சுற்றியும், பாதிக்கப்பட்ட தோல் பகுதியையும் சுற்றி, இந்த காந்த குளத்தில் போட்டால், தோல் வியாதி குணமாகும் என்பது ஐதீகம். மேலும் உப்பு, வெல்லம் போன்றவை தண்ணீரில் கரைவது போன்று கஷ்டங்களும் கரைந்து விடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    கோவிலுக்கு அருகில் பொன்னி என்கிற ஒரு ஓடை ஓடுகிறது. இதன் அருகில் தான் தீர்த்தக்குளங்கள் உள்ளன. கஞ்சமலையில் ஏராளமான மூலிகை செடிகள் உள்ளதால், மலைப்பகுதியில் இருந்து வரும் தண்ணீர் ஓடை வழியாக தீர்த்தக்குளங்களுக்கு வருகிறது. இதனால் மூலிகை கலந்த தண்ணீரில் குளிப்பதால் நோய்கள் குணமாவதாகவும் பக்தர்கள் கூறுகிறார்கள்.

    சேலம் பழைய பஸ் நிலையத்தில் இருந்து 15 கிலோமீட்டர் தூரத்தில் சித்தர்கோவில் அமைந்துள்ளது. மேலும் 15 நிமிடங்களுக்கு ஒருமுறை இந்த கோவிலுக்கு பஸ் இயக்கப்படுகிறது. அதாவது இளம்பிள்ளை செல்லும் அனைத்து டவுன் பஸ்களும் சித்தேசுவரர் கோவில் வழியாக தான் செல்கின்றன. 
    Next Story
    ×