என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தோஷ பரிகாரங்கள்
மாசி மகம் தினத்தையொட்டி பக்தர்கள் புனித நீராடி வழிபாடு: 7 தலைமுறை தோஷம் போக்க முன்னோர்களுக்கு தர்ப்பணம்
- இந்த மாதம் முழுவதும் கடலாடும் மாதம் என்றும், தீர்த்தமாடும் மாதம் என்று கூறப்படுகிறது.
- மகம் நட்சத்திரத்தை பித்ருதேவா நட்சத்திரம் என்றும் அழைப்பார்கள்.
தமிழ் மாதங்களில் விசேஷமானதாக கருதப்படுவது மாசி மாதம் ஆகும். இந்த மாதம் முழுவதும் கடலாடும் மாதம் என்றும், தீர்த்தமாடும் மாதம் என்று கூறப்படுகிறது. அதன்படி இன்று மாசி மக தினமாகும். மகம் நட்சத்திரம் இன்று இரவு 9.30 மணி முதல் இன்று நள்ளிரவு 12.05 வரை நீடிக்கிறது.
மாசிமகம் அன்று சிவபெருமானையும், ஸ்ரீவிஷ்ணு பகவானையும், பித்ருக்களையும் வணங்கினால் 7 ஜென்ம தோஷங்கள் நீங்கி சகல நலன்களையும் பெற்று வளமான வாழ்க்கை அமையும் என்பது நம் பிக்கை. மகம் நட்சத்திரத்தை பித்ருதேவா நட்சத்திரம் என்றும் அழைப்பார்கள்.
சிவன், விஷ்ணு, முருகன் என முப்பெரும் தெய்வங்களுக்கு உகந்த இந்த நன்னாள், தோஷம் நீக்கும் புண்ணிய நாளாகவும் கருதப்படுகிறது. இந்த நாளில் புண்ணிய ஸ்தலங்களை தரிசிப்பதும், புண்ணிய நதிகள், தீர்த்தங்களில் நீராடுவதும் பாவங்களை போக்கும் என்பது ஐதீகம்.
மகம் நட்சத்திரத்தின் அதிதேவதை பித்ருக்கள். ஆகையால் அன்றைய தினம் பித்ருக்கள் வழிபாடு செய்ய முன்னோர்களின் ஆசி கிடைக்கும். கும்பகோணம், ராமேஸ்வரம் போன்ற இடங்களில் தர்ப்பணம், பிதுர் கடன் செய்வது நன்மை தரும்.
அந்த வகையில் திருச்சி ஸ்ரீரங்கம் மற்றும் அம்மா மண்டபத்தில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். அங்கு தயார் நிலையில் இருந்த சிவாச்சாரியார்கள், புரோகிதர்கள் மூலம் தங்களது முன்னோர்கள் நினைவாக தர்ப்பணம் கொடுத்து திரளானோர் வழிபாடு நடத்தினர். பின்னர் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு ரெங்கநாதரையும், மலைக்கோட்டை தாயுமான சுவாமியையும் வழிபட்டனர். திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி கோவிலிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
கடலூர் மாவட்டம் தேவனாம்பட்டினத்தில் உள்ள வெள்ளி கடற்கரையில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். திரும்பிய திசையெல்லாம் மக்கள் கூட்டமாகவே காணப்பட்டது. அவர்கள் கடற்கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து கடலில் புனித நீராடி வழிபட்டனர்.
இதேபோல் விருத்தாச்சலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் அருகே ஓடும் மணிமுக்தா ஆற்றில் திரளான பக்தர்கள் புனித நீராடி வழிபாடு நடத்தினர். புரோகிதர்கள் மூலம் தர்ப்பணமும் கொடுத்தனர்.
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மகாமக குளத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். இதேபோல் வேதாரண்யம் கடலில் புனித நீராடிய பக்தர்கள் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் வழிபாடு நடத்தினர்.
ஈரோடு மாவட்டத்தில் பவானி கூடுதுறை மற்றும் கொடுமுடி காவிரி ஆறு பகுதிகளில் திரளான பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டதோடு, இருகரை தொட்டுச்செல்லும் காவிரி ஆற்றில் புனித நீராடினார்கள்.
இதேபோல் ராமேஸ்வரர் அக்னிதீர்த்த கடலில் இன்று மாசி மகம் தினத்தை முன்னிட்டு ஏராளமான உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் குவிந்தனர். அவர்களும் தர்ப்பணம் கொடுத்து வழிபட்டதோடு, 21 தீர்த்தங்களிலும் புனித நீராடினர். தொடர்ந்து ராமநாதசுவாமியை வழிபட்டனர்.
மேலும் கன்னியாகுமரி முக்கடல் சங்கமிக்கும் பகுதிகள், நெல்லை தாமிரபரணி ஆறு மற்றும் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள நதிகள், கோவில் குளங்களில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர்.
இந்த தினத்தில் பல கோவில்களில் உற்சவ மூர்த்தியுடன் மக்களும் நீர்நிலைகளில் மூழ்கி வழிபாடு நடத்தும் தீர்த்தவாரி நடைபெற்றது. புனித நீராட்டு மற்றும் வழிபாட்டுடன் சில தான தர்மங்களையும் செய்வதால் பாவங்கள் நீங்கி அனைத்து வளங்களும் கிடைக்கப் பெறுவது உறுதி.
அன்னதானத்தின் பெருமைகளை உணர்த்துவது தான் மாசி மகம் என்பதால், பலர் தங்களால் இயன்ற அன்னதானம் செய்தனர். அதுமட்டுமின்றி சிவபெருமான் வருண பகவானுக்கு சாப விமோசனம் அளித்ததும் இந்தநாளில்தான் என்பதால் மழை வளம் பெருகி, அனைவரும் சுபிக்ஷமாக இருக்க மாசிமக வழிபாடு சிறந்ததாகும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்