search icon
என் மலர்tooltip icon

    முக்கிய விரதங்கள்

    • மகாலட்சுமி வழிபாட்டிற்கு உரியதாகிறது.
    • அவசியம் இந்த நாளில் விரதம் இருக்க வேண்டும்.

    திதிகளில் ஏழாவது திதி புனிதமானது. சப்தமி என்று பெயர். சூரிய வழிபாட்டிற்கு சிறப்பானது. பங்குனியில் வளர்பிறை சப்தமி திதி கமலா சப்தமி என்று வழங்கப்படுகிறது. இன்று வரும் கமலா சப்தமி மகாலட்சுமி வழிபாட்டிற்கு உரியதாகிறது.

    இந்த நாளில் விரதம் இருந்து சூரியபகவானையும், மகாலட்சுமியையும் வணங்கினால் சந்தான விருத்தி உண்டாகும். குழந்தை செல்வம் இல்லாதவர்கள் அவசியம் இந்த நாளில் விரதம் இருக்க வேண்டும். கண் நோய்கள் தீரும்.

    இன்றைய தினமும் நாள் முழுவதும் லட்சுமி தேவிக்கு உகந்த மந்திரங்களையும், ஸ்லோகங்களையும் உச்சரித்துக்கொண்டே இருக்கலாம். வீட்டில் பூஜை செய்த பின்னர் கோவிலுக்குசென்று வழிபாடு செய்ய வேண்டும். உங்களால் இயன்ற தானங்களை இன்று செய்ய வேண்டும்.

    மாலையில் விளக்கேற்றி வழிபாடு செய்த பின்னர் விரதத்தை நிறைவு செய்யலாம்.

    • குழந்தை வரம் பெற சஷ்டி விரதம் இருப்பது நல்லது என கூறுவர்
    • முருகப்பெருமானை சரணடைவதற்கு இந்த விரதம் ஏற்றது.

    சஷ்டி தினத்தன்று அதிகாலையில் எழுந்து, குளித்து முடித்து விட்டு வீடு முழுவதுமோ அல்லது வீட்டின் பூஜை அறையை மட்டுமோ சுத்தம் செய்ய வேண்டும். பின்பு பூஜையறையில் முருகன் படத்திற்கு முன்பு தீபமேற்றி, தூபங்கள் காட்டி, பால்,பழம் நிவேதனம் வைக்க வேண்டும். காலையிலிருந்து உணவேதும் அருந்தாமல் அப்பூஜையறையில் அமர்ந்து "கந்த சஷ்டி கவசத்தையோ' வேறு ஏதேனும் முருகனின் மந்திரங்களையோ நாள் முழுவதுமோ அல்லது உங்களால் முடிந்த வரை ஜெபிக்க வேண்டும். வேலை காரணமாக வெளியில் செல்பவர்கள், ஓம் முருகா என்று மனதிற்குள் ஜபித்தவாறு தங்கள் வேலையில் ஈடுபடலாம்...

    பெரும்பாலும் குழந்தை வரம் பெற சஷ்டி விரதம் இருப்பது நல்லது என கூறுவர். ஆனால் அப்படி இல்லை பல்வேறு செல்வங்களை அள்ளித்தர வல்ல முருகப்பெருமானை சரணடைவதற்கு இந்த விரதம் ஏற்றது.

    குழந்தை வரம், நல்ல வேலை கிடைக்க வேண்டும், வியாபாரம் செழிக்க வேண்டும், நல்ல வரன் அமைய வேண்டும், ஆரோக்கியம் கிடைக்க வேண்டும் போன்ற கோரிக்கையை என 16 சம்பத்துகளையும் வேண்டி இந்த விரதம் இருக்கலாம். நம்பிக்கையோடு முருகப்பெருமானை எண்ணி விரதம் இருந்தால், குழந்தை வரம் மட்டுமல்லாமல், அனைத்து வகை செல்வங்களையும் முருகப்பெருமான் நமக்கு அருளச் செய்வார்.

    குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியர் இந்த விரதத்தை முறையாக மேற்கொண்டு முருகப்பெருமானை வழிபட்டால் அழகான குழந்தையை பத்துத் திங்களில் பெற்று மகிழ்வர் என்பது ஐதீகம்...

    • குடும்பத்தில் குதூகலமும் ஒற்றுமையும் ஓங்கும்.
    • லட்சுமி சுலோகம் சொல்லி வழிபட வேண்டும்.

    ஸ்ரீவிஷ்ணுவின் விருப்பத்தால் தேவர்களும் அசுரர்களும் ஒன்று சேர்ந்து திருப்பாற் கடலை கடைந்தனர். அப்போது பாற்கடலில் இருந்து ஸ்ரீ மகாலட்சுமி தோன்றினாள். அந்த நன்நாளே ஸ்ரீபஞ்சமி-லட்சுமி பஞ்சமி எனப்படுகிறது. இன்று (ஞாயிறு) லட்சுமி பஞ்சமி தினமாகும். இன்று விரதம் இருந்து ஸ்ரீ விஷ்ணுவுடன் ஸ்ரீ லட்சுமி தேவியை பூஜை செய்து மல்லிகைப் பூவால் லட்சுமி சகஸ்ரநாமம் அர்ச்சனை செய்து லட்சுமி சுலோகம் சொல்லி வழிபட வேண்டும். இதனால் குடும்பத்தில் லட்சுமி கடாட்சம் ஏற்படும், ஏழ்மை விலகும்.

    இன்று பஞ்சமியில் விரதம் இருக்கலாம். இந்த விரதத்தை அனுஷ்டிப்பதன் மூலமாக தொழில் வளம் பெருகும். பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தின் வறுமை நீங்கும். குடும்பத்தில் குதூகலமும் ஒற்றுமையும் ஓங்குவதும், சுபநிகழ்ச்சிகள் நடப்பதும், வீடு, வாகனம் முதலிய பொருள் சேர்க்கை ஏற்படும்.

    இன்று காலை எழுந்தவுடன் வீட்டை தூய்மை செய்து, வீட்டில் உள்ள அனைவரும் நீராடி விட்டு பூஜை அறையில் ஒரு பலகை வைத்து, அதிலே கோலம் போட்டு, கலசத்தை ஆவாகனம் செய்ய வேண்டும். அந்த கலசத்தில் திருமகளுக்கான லட்சுமி மந்திரங்களைச் சொல்லி ஆவாகனம் செய்ய வேண்டும். "இந்த கலசத்தில் மகாலட்சுமி தாயே வந்து அமர வேண்டும். எங்கள் எளிய பூஜையை ஏற்றுக்கொண்டு திருப்தி அடைய வேண்டும்" என்று மனதார பிரார்த்தனை செய்து பூஜையை நிறைவு செய்ய வேண்டும்.

    இன்று குதிரை பூஜை தினம்

    ஹயம் என்றால் குதிரை. குதிரையை பூஜிக்க வேண்டிய நாளே ஹய பஞ்சமி. தேவ அசுரர்கள் மந்திரமலையை மத்தாக்கி வாசுகி என்னும் பாம்பை கயிறாக்கி பாற்கடலைக் கடைந்த போது கடலில் இருந்து உச்சைஸ்ரவஸ் என்னும் பறக்கும் சக்தி உடைய தேவக்குதிரை தோன்றிய நாள்தான் இன்று பஞ்சமி நாள். எனவே இன்று குதிரையை பூஜித்து, குதிரைக்கு கொள்ளு தானியத்தை சாப்பிடதர வேண்டும். மேலும் குதிரை வடிவில் வந்து அருள்புரிந்த ஸ்ரீஹயக்ரீவ மூர்த்தியை ஆராதிக்கலாம். இதனால் நீதிமன்ற வழக்குகளில் வெற்றி கிடைக்கும். வியாபார லாபமும் ஏற்படும்.

    • இன்று முருகப் பெருமானை தரிசிப்போம்.
    • செவ்வரளி மாலை சார்த்துவோம்.

    ஞானகுருவெனத் திகழும் முருகப்பெருமானை, கிருத்திகை நட்சத்திர நாளில் வணங்குவோம். எதிர்ப்புகளையெல்லாம் தவிடுபொடியாக்கி அருளுவார் ஞானக்குமரன்.

    திதியைக் கொண்டு இறைவழிபாடு செய்யலாம். அதேபோல், கிழமைகளைக் கொண்டும் இறைவனை வணங்கலாம். அருகில் உள்ள ஆலயங்களுக்குச் சென்று வழிபடலாம். அதேபோல், நட்சத்திர நாளைக் கொண்டும் அந்தந்த தெய்வங்களை வழிபடலாம்.

    திருவாதிரை நட்சத்திரம் சிவபெருமானுக்கு உரிய நட்சத்திரம். மாதந்தோறும் வருகிற திருவாதிரையில் விரதம் இருந்து சிவ வழிபாடு செய்வது உகந்தது. அதேபோல், சுவாதி நட்சத்திர நாளில் விரதம் இருந்து ஸ்ரீநரசிம்மரையும் உத்திர நட்சத்திர நாளில் ஸ்ரீஐயப்ப சுவாமியையும் தரிசித்து வேண்டிக்கொள்ளலாம். திருவோணம் நட்சத்திரம், பெருமாளுக்கு உரிய நாள். மகாவிஷ்ணுவுக்கு உரிய நாள். இந்த நன்னாளில், விரதம் இருந்து மகாவிஷ்ணுவை வழிபடுவார்கள்.

    கார்த்திகை நட்சத்திரம் என்பது முருக வழிபாட்டுக்கு உரிய நாள். முருகு என்றால் அழகு என்று அர்த்தம். கார்த்திகைப் பெண்கள் வளர்த்ததால் கார்த்திகேயன் எனும் திருநாமம் அமைந்தது இவருக்கு. மேலும் வைகாசி விசாகமும் பங்குனியின் உத்திரமும் தை மாதத்து பூச நட்சத்திரமும் முருகக் கடவுளுக்கு மிகவும் உகந்த நாட்கள் என்று போற்றுகின்றனர் பக்தர்கள்.

    ஒவ்வொரு மாதமும் வருகிற கார்த்திகை நட்சத்திரம், கந்தனுக்கு உரிய நாள். கார்த்திகை நட்சத்திர நாளில் விரதம் மேற்கொள்ளும் பக்தர்களும் உண்டு. அருகில் உள்ள முருகன் கோயிலுக்குச் சென்று முருகப்பெருமானுக்கு செவ்வரளி மாலை சார்த்தி, வேண்டிக்கொண்டால், இல்லத்தில் ஒற்றுமை மேலோங்கும். கடன் தொல்லையில் இருந்து விடுபடலாம். வீடு மனை வாங்கும் யோகம் கிடைக்கப் பெறலாம்.

    கந்தன் என்றும் கந்தகுரு என்றும் சொல்கிறோம். ஞானவேல் என்றும் ஞானகுரு என்றும் ஞானக்குமரன் என்றும் கொண்டாடுகிறோம்.

    சுவாமிமலையிலும் திருச்செந்தூரிலும் ஞானகுருவாகவே திகழ்கிறார் முருகப்பெருமான். கந்தன் குடிக்கொண்டிருக்கும் ஆலயத்தில், கார்த்திகை நட்சத்திர நாளில் (இன்று) விரதம் இருந்து மாலையில் சென்று முருகப் பெருமானை தரிசிப்போம். செவ்வரளி மாலை சார்த்துவோம். சிக்கல்களையும் கவலைகளையும் நீக்கி நல்லனவெல்லாம் தந்தருளுவான் ஞானக்குமரன்!

    • வெள்ளிக்கிழமை என்பது அம்பாளுக்கு உரிய தினமாக கொண்டாடப்படுகிறது.
    • பெண்களுக்கு தட்சணையுடன் தாம்பூலம் அளிக்க வேண்டும்.

    பெண்கள் செல்வச் செழிப்போடு நல்ல கணவன், குழந்தைகள், பேரக் குழந்தைகள் என நிறைவான வாழ்வு வாழ்வதே சவுபாக்கியம் எனப்படும்.

    அத்தகைய நிறைவான வாழ்வு வரம் தரும் சவுபாக்கியத்தை பெற பெண்கள் விரதம் இருந்து வழிபாடு செய்ய வேண்டும் என்பது ஐதீகம். இந்த விரதத்துக்கு சவுபாக்கிய கவுரி விரதம் என்று பெயர்.

    பங்குனி மாத வளர்பிறை திருதியை சவுபாக்கிய கவுரி விரதம் என்று அழைப்பார்கள். இன்று (வெள்ளிக்கிழமை) இந்த சிறப்பான தினம் வருகிறது. அம்பாளை கொண்டாடுகின்ற இந்த விரதத்தை மிக எளிமையான பூஜையின் மூலம் கொண்டாடலாம். சிலர் ஒரு மாத காலம் கொண்டாடுவார்கள்.

    அடுத்து வரும் திருதியை முதல் அட்சய திருதியை வரை கலசத்தை ஆவாகனம் செய்து தினந்தோறும் அம்பாளை பூஜை செய்வதன் மூலமாக பற்பல சவுபாக்கியங்கள் பெறலாம்.

    இந்த விரதத்தால், வீட்டில் தடைப்பட்ட சுப நிகழ்ச்சிகள் எல்லாம் தடை நீங்கி நடக்கும். வீட்டில் பூஜை செய்ய முடியாதவர்கள் பெருமாள் கோவிலில் தாயாருக்கும், சிவாலயத்தில் அம்பாளுக்கும் விளக்கு போட்டு அர்ச்சனை செய்து வரலாம்.

    கவுரி என்பது அம்பாளை குறிக்கும் ஒரு சொல்லாகும். உலக மக்களுக்கு தாயாக இருந்தாலும் அவள் கன்னியாகவே பாவிக்கப்படுகிறாள். ஆகவே இவளை வழிபடுபவர்களுக்கு கேட்ட வரம் கேட்ட படியே கிடைக்கும் என்பது நம்பிக்கை. மரங்களில் புன்னை மரம் என்பது இயற்கை அளித்த அருட்கொடையாகும். புன்னை மரத்தில் அதிக மலர்கள் பூத்துக் குலுங்குவதை வைத்து அந்த காலத்தில் மழை பொழிவை தீர்மானித்து வந்ததாகவும் சான்றுகள் உள்ளன.

    புன்னை மரத்திற்கு அடியில் அம்பாளை வைத்து சர்க்கரை பொங்கல் நிவேதனம் படைத்து மரத்தை சுற்றிலும் 108 முறை வலம் வந்து வணங்கினால் வேண்டிய வரமெல்லாம் கிடைக்குமாம். ஆனால் புன்னை மரத்திற்கு நாம் எங்கு செல்வது? புன்னை மரம் தெரிந்தவர்கள் இப்படி செய்யலாம். அப்படி புன்னை மரத்தை வைத்து வழிபட முடியாதவர்கள் புன்னை மர பூக்களை கொண்டு தாராளமாக வழிபடலாம்.

    புன்னையில் கவுரி வசிக்கின்றாள். பொதுவாக வெள்ளிக்கிழமை என்பது அம்பாளுக்கு உரிய தினமாக கொண்டாடப்படுகிறது. எந்த கிழமையில் நாம் விளக்கேற்றா விட்டாலும் வெள்ளிக்கிழமையில் வீட்டில் விளக்கேற்றி வைத்து விடுவது உண்டு. வெள்ளிக்கிழமை மகாலட்சுமிக்கு உகந்த நாளாக இருப்பதால் அன்றைய நாள் இறை வழிபாட்டிற்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. அம்பாள் ஆகிய கவுரியை இந்தப் பூவை வைத்து வெள்ளிக்கிழமையில் வழிபட்டால் கேட்ட வரம் அப்படியே கிடைக்கும் என்பது பக்தர்களுடைய நம்பிக்கையாக இருந்து வருகிறது.

    கவுரி விரதத்தில் அன்னையை சவுபாக்ய சுந்தரி என்னும் திருநாமத்தால் சிவனாருடன் இணைந்த திருக்கோலத்தில் வழிபட வேண்டும். தட்சனின் மகளான சதி தேவி இவ்விரதத்தின் பயனால் சிவனாரை மணந்தாள்.

    சவுபாக்கிய கவுரி விரதம் சவுபாக்கியம் எனப்படும் அனைத்து (பதினாறு) வகை பேறுகளையும் பெற்றுத் தரும்.

    விரத தினத்தில் அதிகாலை நீராடி முறையாக சங்கல்பம் செய்து கொள்ள வேண்டும்.

    பூஜை அறையில் விளக்கேற்றி வைத்து சிவனாருடன் தேவி இணைந்த கோலத்தில் அம்பிகையின் உருவ படத்தை மலர் மாலை சூட்டி சிவப்பு வஸ்திரத்தால் அலங்கரிக்க வேண்டும்.

    மங்கல பொருட்கள் என சொல்லப்படும் பதினாறு வகை பொருட்கள் மஞ்சள், குங்குமம், சந்தனம், காதோலை, கருமணி, மர சீப்பு, கண்மை, மஞ்சள் கயிறு, மெட்டி, கொலுசு, வளையல்கள், மருதாணி, தாம்பூலம் (வெற்றிலை, பாக்கு), புடவை, ரவிக்கை துண்டு ஆகியவை தயாராக வைத்து கொள்ள வேண்டும்.

    பூக்கள், பழங்கள், பலகாரங்கள், நிவேதனப் பொருட்கள் ஆகியவையும் தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். பூஜையை காலை அல்லது மாலை செய்யலாம்.

    முதலில் கணபதியை பூஜிக்க வேண்டும். பின்னர் நவகிரகங்களை வணங்க வேண்டும். பின்னர் சிவன் பார்வதியை பூக்களால் அர்ச்சித்து வழிபட வேண்டும். தூப, தீப, கற்பூர ஆரத்தியுடன் , தயாராக உள்ள பழங்கள், பலகாரங்கள், நிவேதனப் பொருட்கள், மங்கள பொருட்கள் அனைத்தையும் பக்தியுடன் அர்ப்பணம் செய்ய வேண்டும். பின்னர் யாரேனும் இருவருக்கு உணவளித்து, பெண்களுக்கு தட்சணையுடன் தாம்பூலம் அளிக்க வேண்டும்.

    • மூன்றாம் பிறை தரிசனம் முற்பிறவி பாவத்தைப் போக்கும் என்பார்கள்.
    • சந்திர தரிசனம் செய்து வணங்குவதால் நோய்கள் நீங்கும்.

    ஒவ்வொரு அமாவாசைக்கு பிறகு வரும் மூன்றாம் நாள், மூன்றாம் பிறை நாளாகும். அமாவாசைக்கு மறுநாள் நிலவு தெரிவதில்லை. ஆனால், மூன்றாம் நாளான துவிதியை திதியில் தெரியும் நிலவு அழகாகவும், பிரகாசமாகவும் இருக்கும். மூன்றாம் பிறையானது இரவு வருவதற்கு முன்னே 6.30 மணியளவில் தோன்றும் பிறையாகும்.

    மூன்றாம் பிறையை தெய்வீக பிறை என்றே சொல்லலாம். இந்த மூன்றாம் பிறையைதான் சிவன் தன்முடி மீது அணிந்திருக்கிறார். மூன்றாம் பிறையை பார்த்தால் பேரானந்தமும், மன அமைதியும் கிடைக்கும். மனக்கஷ்டங்கள், வருத்தங்கள் எல்லாமே நீங்கும்.

    இத்தகைய சிறப்புடைய மூன்றாம் பிறை சந்திர தரிசன தினமாக இன்று (வியாழக்கிழமை) தினம் அமைந்துள்ளது. இந்த மூன்றாம் பிறை சந்திர தரிசனம் தொடர்பாக ஒரு வரலாறு உள்ளது.

    ஒருமுறை விநாயகப்பெருமான், சிவனின் அதிகாரத்தையும், பொறுப்புகளையும் ஏற்றுக்கொண்டார். அதன்பிறகு விநாயகர் அனைத்து உலகங்களையும் பார்வையிட சென்றார். எல்லா உலகத்தையும் பார்வையிட்ட விநாயகர் சந்திரனையும் பார்க்க சென்றார். சந்திரன் ஒரு முழுவெண்மதி என்பதால், விநாயகரின் திருவுருவை பார்த்து கேலி செய்தான்.

    இதனால் கோபம் அடைந்த விநாயகப்பெருமான் உன் அழகு இன்று முதல் இருண்டு, உன்னை உலகத்தார் வணங்க மாட்டார்கள் என்று சாபமிட்டார். விநாயகரின் சாபத்தால் சந்திரனின் அழகு குன்றியது. இதனால் கவலை அடைந்த சந்திரன் மனம் வருந்தி சிவனை நோக்கி கடும் தவம் இருந்தான். அந்த தவத்தின் பயனாக ஈசன் துணையுடன் தன் பழைய அழகை பெற்றான்.

    சந்திரனை தரிசிக்கும் வேளையில், கையில் காசை வைத்து மூடிக்கொண்டு வலமாக மூன்று முறை சுற்றி, மீண்டும் ஒரு முறை பிறையை தரிசித்து வணங்க, பெண்களுக்கு மாங்கல்ய பலம் ஏற்படுகிறது.

    மூன்றாம் நாளில் சந்திர தரிசனம் காண்பவர்களுக்கு ஞாபக சக்தி அதிகரிக்கும். மனக்குழப்பம் நீங்கும். கண் பார்வை தெளிவாகும். மேலும் ஆயுள் கூடும் என்பது நம்பிக்கை.

    சந்திர தரிசனம் செய்து வணங்குவதால் நோய்கள் நீங்கும். ஆயுள் விருத்தியாகும். சந்திரனுக்கும் ஆயுளுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. ஒருவர் ஜாதகத்தில் சந்திரன் கெட்டிருந்தால் அவர்களுக்கு நீண்ட ஆயுள் அமையாது. எனவே ஜாதகத்தில் சந்திரன் லக்னத்திற்கு 6,8,12-ம் வீடுகளில் மறைவு பெற்றோ, விருச்சிகத்தில் பெற்றோ அல்லது சனி,ராகு, கேது போன்ற அசுப கிரகங்களுடன் சேர்ந்து இருந்தாலோ சந்திர தரிசனம் செய்து வணங்குவது தோஷம் போக்கி ஆயுளை விருத்தியாக்கும்.

    சந்திரனோடு சர்ப்பக் கிரகம் இருக்கும் அமைப்பு, சந்திரன் நீசமாக உள்ள அமைப்பு இருப்பவ ர்கள் சந்திர வழிபாட்டை அவசியம் செய்ய வேண்டும். மேலும் ஜாதகத்தில் சந்திரன் நீசம் அடைந்தவர் சந்திரனுடன் ராகு, கேதுக்கள் இணைந்து தோஷம் அடைந்தவர்கள் ஆகியோர் மூன்றாம் பிறை தரிசனம் செய்தால் தோஷங்கள் படிப்படியாக விலகும்.

    ஜாதகத்தில் சந்திர தோஷம் இருந்தால் அவர்கள் அமாவாசைக்குப் பின்னர் வரக்கூடிய துவிதியை திதியில் விரதம் இருக்கவேண்டும். அன்று மாலை நேரத்தில் சந்திர தரிசனம் செய்யவேண்டும். சிவன், பார்வதி, விநாயகப் பெருமான் போன்ற தெய்வங்கள் சூடும் இந்தப் பிறை தெய்வீக சின்னமாகும். மூன்றாம் பிறை தரிசனம் முற்பிறவி பாவத்தைப் போக்கும் என்பார்கள்.

    சித்திரை, வைகாசி மாதங்களில் காணும் பிறை தரிசனத்திற்கு ஒரு வருட பிறை தரிசனம் கண்ட பலன் கிட்டும், அதே போல் கார்த்திகை. மார்கழி மாதங்களில் காணும் பிறை தரிசனத்தால் சகல பாவங்களும் தீரும், ஆக மகிமை பெற்ற சந்திர பிறை தரிசனம் செய்தால் அறிவு வளரும், ஞாபக சக்தி கூடும். கேட்ட வரம் கிடைக்கும், செல்வமும் சந்தோஷமும் தேடிவந்து அமையும். நாளை வரும் பங்குனி மாதம் சந்திர தரிசனம் கண்டால் சிவனை தரிசித்த புண்ணியம் கிடைக்கும். எனவே சிவனை தரிசனம் செய்த புண்ணியத்தைப் பெற நாளை மறக்காமல் சந்திர தரிசனம் செய்யுங்கள்.

    இந்த பிறைநாள் செவ்வாய். வெள்ளி. சனிக்கிழமை வந்தால் இரட்டிப்பான பலன்கள் உண்டு.

    சூரியனிடமும் சந்திரனிடமும் வேறு எந்த தெய்வத்திடமும் நாம் வேண்டியதை கேட்கும் போது கையேந்தியே கேட்க வேண்டும், அதுவே யாசகம் பெறுவது போன்றதாகும். ஸ்ரீ கிருஷ்ணர் கூட கர்ணனிடம் யாசகம் பெறும்போது கையேந்தியே பெற்றார்.

    சிவபெருமான் கூட அனு தினம் அவரவர் செய்து வைத்துள்ள தர்மத்தை பிச்சையாக வாங்கி அதன் பலனை அவரவருக்கு பிச்சை இடுவார். இதை படி அளப்பது என்பார்கள். எனவே இதை உணர்ந்து பவ்வியமாக மரியாதையாக பிறை தரிசனம் செய்யும் போது வேண்டுங்கள். ஆயுள் அதி கரிக்க இறைவன் அருள் கிடைக்கும்.

    சந்திரனின் நட்சத்திரங்களான ரோகிணி, அஸ்தம், திருவோணத்தில் பிறந்தவர்கள் தங்களது வாழ்நாள் முழுவதும் இந்த மூன்றாம் பிறை தரிசனத்தை கண்டால் சந்திரனின் பரிபூரண அருளைப் பெறலாம்.

    மூன்றாம் பிறையை தரிசனம் செய்தால், சிவனின் சிரசையே நேரில் தரிசனம் செய்ததாக அர்த்தம். தொடர்ந்து மூன்றாம் பிறையை தரிசித்து வருபவர்கள் வாழ்வில் வற்றாத செல்வ வளத்தை பெற்று பிரகாசத்துடன் திகழ்வார்கள்.

    • ஐப்பசி மாதம் வரும் சரந் நவராத்திரியை மட்டுமே விசேஷமாகக் கொண்டாடுகிறோம்.
    • அம்மனை உபாசித்து பூஜைகள் செய்து கொண்டாடுவார்கள்.

    ஒரு வருடம் என்பது இரண்டு இரண்டு மாதங்களாக மொத்தம் ஆறு ருதுக்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அவைகளில் முதலாக வருவது வசந்தம் என்னும் ருது. ருதூநாம் குஸுமாகர: ருதுக்களில் நான் வசந்த ருதுவாக இருக்கிறேன் என்று ஸ்ரீ கிருஷ்ணர் சொல்கிறார். வசந்த ருது ஆரம்பமாகும் பங்குனி அமாவாசைக்கு மறுநாள் முதல் 9 ராத்திரிகள் அம்பிகை ஆராதிக்க சிறந்த காலம்.

    இதையே வசந்த நவராத்திரி என்கிறார்கள். ஒவ்வொரு வருடமும் 1) தேவி நவராத்திரி, 2) வாராகி நவராத்திரி, 3) சரந் நவராத்திரி, 4) சியாமளா நவராத்திரி என்பதாக மொத்தம் நான்கு முறை நவராத்திரியைக் கொண்டாட வேண்டும் என்பது ஸ்ரீவித்யா சாஸ்திரம்.

    அவற்றில் நாம் ஐப்பசி மாதம் வரும் சரந் நவராத்திரியை மட்டுமே விசேஷமாகக் கொண்டாடுகிறோம். ஆனால் ஸ்ரீ வித்யா மார்கத்தில் ஈடுபட்டு சத்குரு மூலம் மந்திர உபதேசம்- தீட்சை பெற்று நவாவரணம் போன்ற விசேஷ பூஜைகளைச் செய்பவர்கள் இந்த 4 நவராத்திரிகளையுமே அம்மனை உபாசித்து பூஜைகள் செய்து கொண்டாடுவார்கள். சைத்ர மாதம் சுக்ல பட்ச பிரதமையான இன்று முதல் தொடர்ந்து 8 நாட்கள் கொண்டாடப்படும் நவராத்திரி வசந்த நவராத்திரி என்று அழைக்கப்படுகிறது.

    இந்த அனைத்து நாட்களிலும் தினசரி தேவியை விசேஷமாகப் பூஜைகள் செய்து ஸ்தோத்ர பாராயணம் செய்து கன்னிகா பூஜை கள் செய்து கொண்டாடலாம். மேலும் நவாவரண பூஜை, ஸ்ரீ லலிதா சஹஸ்ர நாமம், சப்த சதீ பாராயணம், சுவாசிநீ பூஜை, சண்டீ ஹோமம் போன்றவற்றால் அம்மனை ஆராதிக்கலாம்.

    திருப்பாவாடை கல்யாண உற்சவம்

    ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் அருகே உள்ள திருப்பாற்கடல் கிராமத்தில் ரங்கநாயகி சமேத ரங்கநாத பெருமாள் தேவஸ்தானத்தின் 36-ம் ஆண்டு பங்குனி ரேவதி திருமஞ்சன திருப்பாவாடை கல்யாணம் நாளை நடைபெறுகிறது. தொடர்புக்கு- 9442313789.

    • பங்குனி மாதத்தின் உத்திர நட்சத்திர நாள் ரொம்பவே விசேஷமானது.
    • சிவனாருக்கு உகந்த மாதம் பங்குனி.

    மங்கலங்கள் நிறைந்த மாதம் என்று பங்குனி மாதத்தைப் போற்றுவார்கள். புராணத்தில் குறிப்பிட்டிருக்கும் சகல மங்கல காரியங்களும் பங்குனி மாதத்தில்தான் பெரும்பாலும் அரங்கேறியிருக்கின்றன என்று போற்றுகின்றனர் ஆச்சார்யர்கள்.

    மலைமகள் உமையவளை சிவபெருமான் மணம் புரிந்த மாதம் பங்குனி என்கிறது புராணம். இந்த மாதத்தில் நாம் செய்கிற சின்னச் சின்ன தானங்கள் கூட மிகுந்த பலன்களைத் தரும் என்றும் ஆயிரம் பசுக்களை தானம் செய்த புண்ணியத்தைத் தருகிற மாதம் இது என்றும் சிலாகிக்கிறார்கள்.

    பங்குனி மாதத்தில் முறையே நாம் தெய்வ வழிபாடுகளைச் செய்து வந்தால், தடைகளெல்லாம் நீங்கும். வெற்றி தேடி வரும் என்பது ஐதீகம்!

    அரங்கனை விபீஷணர் பெற்றுக்கொண்ட மாதமும் பங்குனி என்கிறது புராணம். அதுமட்டுமா? அரங்கன் அமர்ந்துகொண்டு, காவிரிக்கும் கொள்ளிடத்துக்குமான இடத்தை திருவரங்கம் என அமைத்து திருத்தலமாக்கியதும் இந்த பங்குனியில்தான் என்கிறது ஸ்தல புராணம்.

    சிவனாருக்கு உகந்த மாதம் பங்குனி. அதேபோல் அரங்கனைப் போற்றுகின்ற மாதமாகவும் திகழ்கிறது பங்குனி மாதம். பங்குனி மாதத்தின் உத்திர நட்சத்திர நாள் ரொம்பவே விசேஷமானது. இந்த நாளில்தான் முருகப்பெருமானை விரதம் இருந்து தரிசிப்பார்கள் பக்தர்கள். அதேபோல், காவடி எடுத்தும் பால் குடம் ஏந்தியும் எண்ணற்ற பக்தர்கள் வழிபடுவார்கள்.

    பங்குனி மாத உத்திர நட்சத்திர நாளில் விரதம் இருந்து முருகக் கடவுளைத் தரிசித்தால், விரைவில் திருமண பாக்கியம் கைகூடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    அதேபோல், பங்குனி மாதத்தில் தேய்பிறையில் வரும் ஏகாதசியை விஜயா ஏகாதசி என்பார்கள். எத்தனை தடைகள் இருந்தாலும் அவற்றையெல்லாம் நீக்கி, எடுத்த காரியத்தில் வெற்றியை அளிக்கக் கூடியது விஜயா ஏகாதசி. பங்குனி தேய்பிறை விஜயா ஏகாதசியில், பெருமாளை தரிசிப்பதும் துளசி மாலை சார்த்தி பிரார்த்தனை செய்வதும் மகத்தான பலன்களை வழங்கும். நாம் பெருமாளிடம் வைக்கிற கோரிக்கைகளெல்லாம் நிறைவேறும்.

    பங்குனி மாதத்தில், குருவாரம் என்று அழைக்கப்படும் வியாழக்கிழமைகளில், சிவ வழிபாடு மேற்கொள்வதும் சிவகுருவாகத் திகழும் ஸ்ரீதட்சிணாமூர்த்தியை மனதார வழிபடுவதும் மகத்தான பலன்களைத் தந்தருளும்!

    • இன்று (ஞாயிறு) பிரதோஷ தினமாகும்.
    • இந்த பிரதோஷ விரதம் மரணபயத்தை நீக்கும்.

    திதிகளில் 13-வது திதி திரயோதசி. இந்த திதி தினத்தை பிரதோஷ தினம் என்பார்கள். வளர்பிறையில் ஒரு பிரதோஷமும் தேய்பிறையில் ஒரு பிரதோஷமும் வரும். பிரதோஷ நாட்களில் விரதம் இருந்து நந்தியையும் சிவனையும் வழிபட வேண்டும்.

    இன்று (ஞாயிறு) பிரதோஷ தினமாகும். இன்று பிரதோஷ விரதம் இருக்க வேண்டும். இந்த விரதத்துக்கு மிருத்யுஞ்ஜய பிரதோஷ விரதம் என்று பெயர். இந்த பிரதோஷ விரதம் மரணபயத்தை நீக்கும். ஆயுளை நீட்டிக்கும்.

    இன்று காலை முதல் விரதமிருந்து மாலையில் சிவன் கோவிலுக்குச் சென்று வணங்குவதால் துன்பங்கள் நீங்கும். நோயால் அவதிப்படுபவர்கள் கோவிலுக்குச் செல்ல முடியாவிட்டாலும், மாலையில் பூஜை அறையில் ஒரு விளக்கேற்றி வைத்து, சிவபெருமானை எண்ணி மிருத்யுஞ்ஜய மந்திரத்தைச் சொல்லி வழிபடுவதால் நோய்கள் அகலும்.

    கடன் தொல்லைகள் நீங்கும். இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் இன்றைய வழிபாடுகள் மூலம் சூரியனின் அருளையும் பெற முடியும்.

    • வளர்பிறை ஏகாதசியை சுக்ல பட்ச ஏகாதசி என்பார்கள்.
    • தேய்பிறை ஏகாதசியை கிருஷ்ண பட்ச ஏகாதசி என்பார்கள்.

    இன்று திருவோணம் மற்றும் பங்குனி தேய்பிறை ஏகாதசி "விஜயா" எனப்படும். இந்த நாளில் 7 வகையான தானியங்களை ஒன்றின் மேல் ஒன்று என அடுக்கு முறையில் பரப்பி கலசம் வைத்து

    பங்குனி மாதத்தில் தேய்பிறையில் வரும் ஏகாதசியை விஜயா ஏகாதசி என்பார்கள். எத்தனை தடைகள் இருந்தாலும் அவற்றையெல்லாம் நீக்கி, எடுத்த காரியத்தில் வெற்றியை அளிக்கக் கூடியது விஜயா ஏகாதசி.

    பங்குனி தேய்பிறை விஜயா ஏகாதசியில், பெருமாளை தரிசிப்பதும் துளசி மாலை சார்த்தி பிரார்த்தனை செய்வதும் மகத்தான பலன்களை வழங்கும். நாம் பெருமாளிடம் வைக்கிற கோரிக்கைகளெல்லாம் நிறைவேறும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

    'இலங்கை சென்று ராவணனுடன் போரிட்டு, சீதையை எப்படி மீட்பது?' என்று ஸ்ரீராமர் சிந்தனையில் ஆழ்ந்தார். அப்போது முனிவர் ஒருவர் அவரிடம் இந்த விஜயா ஏகாதசி விரதத்தை அனுஷ்டிக்கச் சொன்னார். அதன்படி விரதம் இருந்து ஸ்ரீராமர், சீதையை மீட்டு வந்தார் என ஏகாதசி விரத மகாத்மியம் தெரிவிக்கிறது.

    விஜயா ஏகாதசி நன்னாளில், வாழை இலையில் ஏழு விதமான தானியங்களை (எள் சேர்க்கக் கூடாது என்பார்கள்) ஒன்றின் மேல் ஒன்றாகப் பரப்ப வேண்டும். அதன் மீது ஒரு கலசத்தை வைத்து, அதில் மஹாவிஷ்ணுவை ஆவாகணம் செய்து பிரார்த்தித்தால் கடல் கடந்து சென்று வெற்றி பெறுவர் என்பது ஐதீகம். நெல்லி மரத்தை மூன்று முறை வலம் வந்து வணங்க வேண்டும். நெல்லி மரம் இல்லாத நிலையில், வீட்டுப் பூஜையறையில், வணங்கி வழிபட்டுவிட்டு, சர்க்கரைப் பொங்கல் மற்றும் புளியோதரை நைவேத்தியம் செய்து வழிபடலாம். துளசிச் செடி வளர்த்து வந்தால், துளசிச் செடிக்கு சந்தனம் குங்குமமிடலாம். மூன்று முறை வலம் வந்து வேண்டிக்கொள்ளலாம். இதனால், கோ தானம் செய்த பலன்கள் கிடைக்கப் பெறலாம் என்பது ஐதீகம். குடும்பத்தில் ஒற்றுமை மேலோங்கும்.

    • முக்கிய விரத நாட்களில் உபவாசம் இருப்பது பலரிடம் காணப்படுகிறது.
    • ஆன்மிக ரீதியாக பலரும் இந்த உபவாசத்தைக் கடைப்பிடிக்கிறார்கள்.

    ஒரு வேளையோ அல்லது ஒரு நாள் முழுவதுமோ, அவரவர்களின் சக்திக்கு ஏற்ப உணவு, நீர் உட்கொள்ளாமல் இருப்பதை 'உபவாசம்' என்பார்கள். ஆன்மிக ரீதியாக பலரும் இந்த உபவாசத்தைக் கடைப்பிடிக்கிறார்கள். குறிப்பாக முக்கிய விரத நாட்களில் உபவாசம் இருப்பது பலரிடம் காணப்படுகிறது. இப்படி உபவாசம் இருப்பதில் 27 வகையான உபவாசம் இருப்பதாக சொல்கிறார்கள். அதனை இங்கே பார்க்கலாம்.

    * உமிழ்நீரைக் கூட விழுங்காமல் இருப்பது. இதனை யோகிகள் மட்டுமே கடைப்பிடிப்பார்கள்.

    * தேன் அல்லது இளநீர். இவற்றில் ஏதாவது ஒன்றை மட்டும் அருந்தி உபவாசம் இருத்தல்.

    * பசுவின் பாலை மட்டும் அருந்தி உபவாசம் இருத்தல்.

    * எந்த உணவுமில்லாமல் தொடர்ந்து பன்னிரண்டு நாட்கள் நீரை மட்டும் அருந்தி உபவாசம் இருத்தல்.

    * காலை நேரம் மட்டும் உணவருந்தி உபவாசம் இருத்தல்.

    * பகல் நேர உணவை மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.

    * இரவு நேர உணவை மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.

    * மூன்று நாட்கள்தொடர்ந்து காலை நேர உணவை மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.

    * மூன்று நாட்கள்தொடர்ந்து மதிய நேர உணவை மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.

    * மூன்று நாட்கள்தொடர்ந்து இரவு நேர உணவை மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.

    * கடுமையான விரதங்களுக்கு, 21 நாட்கள் வெறும் பசும்பால் மட்டும் அருந்தி உபவாசம் இருத்தல்.

    * மூன்று நாட்கள் பகல் ஒருவேளை மூன்று கைப்பிடி உணவை மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.

    * இரவில் மட்டும் மூன்று கைப்பிடி அளவு உணவு மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.

    * ஒருநாள் பகல் நேரத்தில் சுத்தமான எள்ளுப் புண்ணாக்கு மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.

    * ஒருநாள் இரவில் மட்டும் பசுவின் பால் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.

    * ஒரு நாள் மோரை மட்டும் அருந்தி உபவாசம் இருத்தல்.

    * ஒரு நாள் முழுவதும் சுத்தமான நீரை மட்டுமே அருந்தி உபவாசம் இருத்தல்.

    * ஒரு நாள் முழுவதும் பொரிமாவு (புழுங்கல் அரிசியை வறுத்து நன்கு பொடித்து, நெய், தேங்காய், சர்க்கரை ஆகியவற்றைப் போட்டுப் பிசைந்து வைத்திருப்பது) மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.

    * ஒரு நாள் முழுவதும் திணை மாவு மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.

    * தேய்பிறை அன்று ஆரம்பித்து வளர்பிறை முடிந்து மீண்டும் தேய்பிறை நாட்கள் வரையான விரதத்தில், தினம் ஒருபிடி அன்னத்தை மட்டும் சாப்பிட்டு, வளர்பிறையில் தினம் ஒவ்வொரு பிடி அன்னத்தை அதிகமாக்க வேண்டும். மீண்டும் தேய்பிறையில ஒவ்வொரு பிடி அன்னமாகக் குறைப்பது என உபவாசம் இருத்தல்.

    * ஒரு நாள் முழுவதும் வில்வ இலையையும், நீரையும் மட்டுமே அருந்தி உபவாசம் இருத்தல்.

    * ஒரு நாள் முழுவதும் அரச இலைத் தளிர்களையும், நீரையும் அருந்தி உபவாசம் இருத்தல்.

    * ஒரு நாள் முழுவதும் அத்தி இளந்தளிர்களையும், நீரையும் மட்டும் அருந்தி உபவாசம் இருத்தல்.

    * இரு வேளை உணவுடன் உபவாசம் இருத்தல்.

    * முதல் நாள் ஒரு வேளை பகல் உணவு மட்டும், மறுநாள் இரவு மட்டும் உணவுடன் உபவாசம் இருத்தல்.

    * மசாலாக்கள் இல்லாத சைவ உணவுகளை மட்டுமே குறைந்த அளவு சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.

    * வாழைக்காய், பூண்டு, வெங்காயம், பெருங்காயம் ஆகியவை இல்லாத உணவுகளை சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.

    இந்த உபவாசங்களில், எது உங்கள் உடல்நலத்திற்கும், சூழலுக்கும் தகுந்ததோ, அந்த உபவாசத்தைத் தேர்வு செய்து விரதத்தை கடைப்பிடிக்கலாம். ஆனால் எதுவுமே சாப்பிடாமல், நீர் மட்டும் அருந்தி உபவாசம் இருப்பதே சிறந்த விரத முறையாகும்.

    • இந்த விரதத்தை 'சாவித்திரி விரதம்', 'காமாட்சி விரதம்' என்றும் அழைப்பார்கள்.
    • இந்த விரதத்திற்காக காரடை செய்து நைவேத்தியம் படைக்கலாம்.

    இன்று (புதன்கிழமை) பெண்கள் காரடையான் நோன்பு இருக்க வேண்டிய தினமாகும். காமாட்சி அம்மனுக்குதான் பெண்கள் காரடையான் நோன்பு இருப்பர். கணவனுக்கு நீண்ட ஆயுள் கிடைத்து தாங்கள் தீர்க்க சுமங்கலியாக இருக்க இந்த நோன்பிருந்து பெண்கள் வேண்டிக் கொள்வார்கள். சாவித்திரி விரதம், கவுரி விரதம், காமாட்சி விரதம், மாங்கல்ய நோன்பு உள்ளிட்ட பல பெயர்களால் காரடை யான் நோன்பை குறிப்பிட்டு அழைக்கிறார்கள்.

    இந்த நோன்பை பற்றி சொன்னாலே சத்யவான், சாவித்ரி கதை தான் பலரின் நினைவுக்கு வரும். இளவரசி சாவித்திரி, அண்டை தேச இளவரசன் சத்யவான் மீது காதல் கொண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணம் நடைபெற்ற கொஞ்ச நாளில் சத்யவானின் பெற்றோருக்கு கண் பார்வை பறிபோய் விட்டது. உடல் நலம் மட்டுமில்லாமல், அவர்களின் தேசத்தையும் இழந்துவிட்டார்கள். இதனால் காட்டில் தன் கணவருடன் சாவித்திரி வாழ்ந்தாள்.

    அப்போது சீக்கிரமே தன் கணவரும் இறக்க போகிறார் என சாவித்திரி அறிந்து கொண்டாள். தன் கணவர் உயிரை காப்பாற்ற காமாட்சி அம்மனை நினைந்து மனமுருகி விரதம் இருந்தாள் சாவித்திரி. காட்டில் கிடைத்த பொருள்களால் அம்மனுக்கு நைவேத்தியம் படைத்து, வழிபட்டு வந்தாள். சத்யவான் உயிரிழக்கும் நாள் நெருங்கியது. அன்றும் சாவித்திரி வழிபாடு செய்தாள். எம தர்மராஜா சத்யவானின் உயிரை எடுத்துவிட்டு புறப்பட்டார். அவரை தடுத்து கணவரின் உயிரை திருப்பித் தர எமனிடம் மண்டியிட்டு மன்றாடினாள்.

    சாவித்திரி இப்படி மன்றாடியது எமனை திடுக்கிட செய்தது. தான் ஒரு சாதாரண மானிட பெண் கண்ணுக்கு எப்படி தெரிகிறோம்? என எமன் குழம்பினார். இந்த பெண் தெய்வசக்தி படைத்தவளோ என எண்ணி, அவளுக்கு பதில் உரைத்தார். இருவருக்கும் வாக்கு வாதம் வந்தது. எமன் சத்யவானின் உயிரை கையில் கொண்டு எமலோகம் சென்றார். உடன் சாவித்திரி துரத்தி சென்றாள். ஒரு மானிட பெண் தன் பூத உடலுடன் எமலோகம் வந்ததை கண்டு மீண்டும் எமன் அதிசயித்து போனார்.

    ஆனாலும் சத்யவானின் உயிரை கொடுக்க மாட்டேன் என எமன் பிடிவாதம் செய்தார். ஆனால் சாவித்திரி மனம் தளரவில்லை. அப்போது சத்யவானின் உயிரை தவிர வேறு என்ன வரம் வேண்டுமானாலும் கேள் என எமன் கேட்க, சாவித்திரி, 'பதிவிரதை நான். எனக்கு புத்திரப்பாக்கியம் வேண்டும். மாமனார், மாமியாருக்கு பார்வைத்திறன், எங்கள் தேசம் மீண்டும் எங்களுக்கே வேண்டும்' என பல வரங்களை சாவித்திரி கேட்டாள்.

    அனைத்தையும் தருவதாக கூறி நகர்ந்த எமனை மீண்டும் சாவித்திரி தடுக்க, எமன் குழப்பமடைந்தார். பாதி வரம் தான் தந்ததாக சாவித்திரி கூற, அப்போது தான் எமனுக்கு நினைவுக்கு வருகிறது சாவித்திரி பதிவிரதை என்று சொல்லி புத்திரபாக்கியம் கேட்டது. கணவனின் உயிரை மீட்டு கொண்டு வர சாவித்திரி கேட்ட வரம் அவளின் மதிநுட்பத்தின் சான்று. அவளுக்கு எமனிடன் போய் பேச துணிவு கொடுத்தது தெய்வசக்தி. இதை வியந்த எமன் சத்யவானின் உயிரை திரும்ப கொடுத்தார். கணவரின் உயிரை எமனிடம் போராடி சாவித்திரி மீட்ட நாளையே காரடையான் நோன்பாக கொண்டாடுகிறார்கள்.

    மாசி மாதத்தின் கடைசி நாளும், பங்குனி மாதத்தின் முதல் நாளும் இணையும் தினத்தில் தான் காரடையான் நோன்பு கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு நாளை (புதன்கிழமை) காரடையான் நோன்பு வருகிறது. நாளை காலை 6.29 மணி முதல் 6.47 மணி வரை வழிபாடு செய்ய வேண்டும்.

    பெண்கள் கண்டிப்பாக இந்த விரதம் இருக்கவேண்டும். சுமங்கலி பெண்கள் கணவர் நீண்ட ஆயுள் பெறவும், திருமண மாகாத பெண்கள் நல்ல துணை அமையவும் காரடையான் நோன்பு இருப்பார்கள்.

    அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு பூஜையறையில் காமாட்சி படம் அல்லது ஏதாவது ஒரு அம்மன் படத்திற்கு பூக்கள் வையுங்கள். அவர்களுக்கு பூச்சூட்டி வழிபட வேண்டும். காலை முதலாகவே நோன்பை உபவாசம் இருந்து தொடங்குவது நல்லது.

    நம் வீட்டில் உள்ள அம்பாள் படத்திற்கு முன்னால் வெற்றிலை பாக்கு, மஞ்சள் சரடு வைத்து வழிபாட்டை ஆரம்பிக்க வேண்டும். காமாட்சி விருத்தம் பாடவேண்டும். மஞ்சள் சரடில் 2 மல்லிகை பூ அல்லது ஏதேனும் ஒரு பூ வைத்து கட்டிக் கொள்ள வேண்டும். இதனை அம்பாள் படத்தின் முன் வைத்து வழிபட வேண்டும். பின்னர் அக்கயிற்றை கணவரிடம் ஆசி பெற்று, அவர் கையால் கட்டிக் கொள்ள வேண்டும்.

    ஒருவேளை கணவர் வெளியூரில் இருந்தாலோ, விரதம் இருப்பவர் திருமணமாகாத பெண்களாக இருந்தாலோ வீட்டில் இருக்கும் மூத்தோரிடம் ஆசி பெற்று அந்த கயிரை கழுத்திலோ, கையிலோ நீங்களே கட்டிக் கொள்ளலாம்.

    நாளை காரடையான் நோன்பு சரடு (மஞ்சள் கயிறு) கட்டிக்கொள்ள அதிகாலை 5.10 மணி முதல் 6.10 மணி நல்ல நேரமாகும். இந்த நேரத்தில் நோன்பு சரடு கட்டிக் கொண்டால் பெண்கள் நினைத்தது நடக்கும்.

    அப்போது பெண்கள், "தேவியே, மஞ்சளுடன் கூடிய இந்த நோன்பு கயிற்றை நான் கட்டிக்கொள்கிறேன். இந்த விரதத்தால் நீ சந்தோஷப்பட்டு எனது கணவர் மற்றும் குழந்தைகளின் ஆயுளை நீட்டித்து எப்போதும் அருள் புரிய வேண்டும்" என்று வேண்டி கொள்ள வேண்டும்.

    விசேஷமான இந்த நாளில் தாலி சரடும் கூட மாற்றிக் கொள்ளலாம். இந்த நோன்பிற்காக கட்டிய மஞ்சள் சரடை எப்போதும் அணிந்து கொள்ளலாம். குறைந்தபட்சம் 3 நாட்கள் அணிந்து விட்டும் கழற்றி விடலாம்.

    கார அடை, இனிப்பு அடை ஆகியவை அம்மனுக்கு படைக்கலாம். உருகாத வெண்ணைய்யை காமாட்சி அம்பாளுக்கு நைவேத்தியமாக படைக்க வேண்டும்.

    ×