என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முக்கிய விரதங்கள்
- விநாயகரை விரதம் இருந்து வழிபட்டால் துன்பங்கள் பறந்தோடும்.
- விநாயகருக்கு உகந்த விரதங்களை அறிந்து கொள்ளலாம்.
சதுர்த்தி விரதம்
ஆவணி வளர்பிறை சதுர்த்தியில் துவங்கி அடுத்த ஆண்டு புரட்டாசி சதுர்த்தி வரை ஒரு ஆண்டிற்கு தொடர்ந்து அனுஷ்டிப்பது சதுர்த்தி விரதம். இதனால் செய்யும் தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும்.
வெள்ளிக்கிழமை விரதம்
வைகாசி வளர்பிறை வெள்ளிக்கிழமை துவங்கி, தொடர்ந்து 52 வெள்ளிக்கிழமைகளில் அனுஷ்டிக்கும் விரதம். இந்த விரதத்தால் ஆயுள் பலம் அதிகரிக்கும்.
சங்கடஹர சதுர்த்தி விரதம்
மாசி மாத தேய்பிறை சதுர்த்தி துவங்கி, ஒரு ஆண்டு முழுவதும் ஒவ்வொரு மாத தேய்பிறை சதுர்த்தியிலும் விரதம் இருப்பது. இந்த சங்கடஹர சதுர்த்தி விரதத்தினால் எப்படிப்பட்ட துன்பமும் விலகிவிடும்.
குமார சஷ்டி விரதம்
கார்த்திகை தேய்பிறை பிரதமை திதி முதல் மார்கழி வளர்பிறை சஷ்டி வரை 21 நாட்கள் அனுஷ்டிக்கும் இந்த விரதத்தால் 'தைரியம்' அதிகரிக்கும். இந்த விரதத்தை 'பிள்ளையார் நோன்பு' என்பர்.
செவ்வாய் விரதம்
தை அல்லது ஆடி முதல் செவ்வாய் தொடங்கி, தொடர்ந்து 52 வாரங்கள் அனுஷ்டிக்கும் விரதம் 'செவ்வாய் விரதம்.' இந்த விரதத்தால் செல்வ வளம் பெருகும். இந்த விரதம் மேற்கொள்ளும் பெண்களுக்கு வசதியில்லாத நாட்களாக அமையுமானால் பின்வரும் வாரங்களில் கூட்டிக் கொள்ளலாம்.
தை வெள்ளி விரதம்
விநாயகரைக் குறித்து தை மாத வெள்ளிக்கிழமைகளில் பெண்கள் மட்டும் அனுஷ்டிக்க வேண்டிய விரதம். இதனால் செல்வ விருத்தியும், கன்னிப் பெண்களுக்கு மாங்கல்ய பாக்கியமும் கிடைக்கும்.
- தைப்பூசம் முருகப்பெருமானுக்கு உகந்த நாளாகும்.
- முருகனை வழிபடும் சமயத்தில் முருக வேலை வழிபடுவது நல்லது.
தை மாதத்தில் பூச நட்சத்திரமும் பௌர்ணமியும் கூடி வரும் ஒரு அற்புதமான தினமே தைப்பூசமாக கொண்டப்படுகிறது. தைப்பூசம் தினத்தில் தான் இந்த அகிலம் தோன்றியதாக ஒரு ஐதீகம் உள்ளது.
தைப்பூச நன்னாளானது முருகப்பெருமானுக்கு உகந்த நாளாகும். அதோடு சிவனுக்கும், குரு பகவானுக்கும் கூட இந்த நாள் சிறப்புடையதாகும்.
தைப்பூச நாளில் காலையில் எழுந்து குளித்துவிட்டு, நெற்றியில் திருநீறு அணிந்து, கந்த சஷ்டி கவசம், கந்தரலங்காரம், கந்தரனுபூதி, திருமுருகாற்றுப்படை, திருப்புகழ், கந்த கலிவெண்பா போன்றவற்றை மாலை வரை படிக்கலாம். வேளைக்கு செல்வோர் கந்தனை காலையிலேயே பூஜித்து மனதார வணங்கிவிட்டு நாள் முழுவதும் கந்தனை நினைத்து "ஓம் சரவண பவ" என்னும் மந்திரத்தை உச்சரித்தவாறே வேலைகளை செய்யலாம்.
முருகனை வழிபடும் சமயத்தில் முருக வேலை வழிபடுவது நல்லது. காலை மாலை என இருவேளையும் இந்நாளில் கோவிலிற்கு சென்று வழிபடுவது மேலும் சிறப்பு சேர்க்கும்.
முருக பக்தர்கள் பலர் தைப்பூச விரதத்தை 48 நாட்கள் இருப்பது வழக்கம். மார்கழி மாதத்தில் தொடங்கி தைப்பூசம் வரை விரதம் இருப்பது வழக்கம். அன்னை பார்வதி தேவி, முருகனுக்கு ஞானவேல் வழங்கியது இந்த நன்னாளில் தான். அந்த ஞானவேல் கொண்டே ஞானபண்டிதன் அசுரவதம் புரிந்தார் என்பது வரலாறு. தைப்பூச நாளில் முருகனுக்குரிய வேலை வழிபடுவதன் பயனாக தீய சக்திகள் நம்மை அண்டாது.
- நான்கு நவராத்திரிகள் இருப்பதாக கூறுகிறது தேவி பாகவதம்.
- சியாமளா தேவி வேத மந்திரங்களுக்கு எல்லாம் அதிதேவதை.
ஒவ்வொரு வருடமும் 4 விதமான நவராத்திரி கொண்டாடப்படுகிறது. சித்திரை மாதம் வசந்த நவராத்திரி கொண்டாடப்படுகிறது. ஆடி மாதம் வாராகீ நவராத்திரி, புரட்டாசி மாதம் சிரந் நவராத்திரி வருகிறது. தை மாதம் சியாமளா நவராத்திரி என்று நான்கு தேவி நவராத்திரிகள் இருப்பதாக கூறுகிறது தேவி பாகவதம்.
இவற்றில் தை மாதம் அமாவாசைக்கு மறுநாள் பிரதமை முதல், நவமி வரையுள்ள ஒன்பது நாட்கள் சியாமளா நவராத்திரி எனப்படும். இன்று (ஞாயிற்றுக்கிழமை) சியாமளா தேவி நவராத்திரி விரதம் தொடங்குகிறது.
சியாமளா நவராத்திரியின் ஒன்பது நாட்களிலும் ராஜசியாமளா தேவியின் மந்திரங்களை குருமுகமாக உபதேசம் செய்து கொண்டு வழிபாடு செய்யலாம்.
காளிதாசர் இயற்றிய ஸ்ரீ சியாமளா தண்டகம் என்னும் புத்தகத்தில் சியாமளா தேவி மாணிக்க கற்கள் பதித்த வீணையை வாசிப்பதில் ஆர்வமுள்ளவளாக, எட்டுக் கைகளுடன், மரகதப் பச்சை நிறமுள்ளவளாக, மார்பில் குங்குமச் சாந்து தரித்தவளாக நெற்றியில் சந்திர கலையை அணிந்து கொண்டவளாக, கைகளில் கரும்பு வில், மலர் அம்பு, பாசம், அங்குசம் ஆகிய வற்றை தரித்தவளாக கரங்களில் கிளியுடன் தியானம் செய்வதாக வர்ணிக்கப்பட்டுள்ளாள்.
ராஜ சியாமளா, மாதங்கி, மந்திரிணீ போன்ற பல பெயர்களில் அழைக்கப்படும் இவள் மதங்க முனிவரின் மகளாக அவதரித்தவள். தசமகாவித்யைகளுள் ஒன்பதாவது வித்தையாக அறியப்படுபவள்.
கலைகள், பேச்சுத்திறன், நேர்வழியில் செல்லும் புத்தி, கல்வி, கேள்விகளில் மிக உயர்ந்த நிலையை அடையும் திறன் ஆகியவற்றுக்கு அதிபதியான சியாமளா தேவி வேத மந்திரங்களுக்கு எல்லாம் அதிதேவதை. ஆகவே மந்திரிணி என்று அழைக்கப்படுகிறாள்.
லலிதா தேவி பண்டாசூரனுடன் போருக்கு புறப்பட்ட போது லலிதா தேவியின் கையில் உள்ள மனஸ் தத்துவமான கரும்பில் இருந்து தோன்றியவளே சியாமளா தேவி, லலிதா பரமேஸ்வரியின் மகாமந்திரியாக, இவ்வுலகை ஆட்சி செய்து அருள் புரியும் இவள் லலிதா தேவிக்கு சக்தியை தந்தவள், லலிதா தேவியின் அக்சர சக்தியாக விளங்குபவள், சரஸ்வதியை போன்றே அருளுபவள்.
என்றாலும் கூட வெளியில் உள்ள கலைகளுக்கும் திறமைகளுக்கும் அதிபதி சரஸ்வதி, சியாமளா தேவியோ தகரா காசத்தில் உள்ள கலைகளுக்கு அதிபதி, அம்பிகையின் பிரதிநிதியாக, ஆட்சி நடத்துபவள்.
மேலும் கதம்பவனவாசினி என்றும் இந்த அம்பிகை போற்றப்படுகிறாள். அதாவது ஸ்ரீ லலிதா தேவியின் நிவாச தலமான ஸ்ரீநகரத்தில் சுற்றிலும் கதம்பவனம் நிறைந்த பகுதியில் வாசம் செய்கிறாள் சியாமளா தேவி. மதுரை மாநகருக்கு கதம்பவனம் என்ற ஒரு பெயரும் உண்டு என்பதால் மதுரை மீனாட்சி அம்மன் இந்த அம்பிகையின் அம்சமாகவே போற்றப்படுகிறாள்.
பண்டாசூர வதத்தின்போது, கேயசக்ரம் என்னும் தேரில் இருந்து கொண்டு லலிதா தேவிக்கு உதவியாக சியாமளா தேவி போர் புரிந்து, பண்டாசூரனின் தம்பியான விஷன் என்னும் அசுரனை வதம் செய்தாள்.
வீணையைக் கையில் தாங்கிக் கொண்டு காட்சி தரும் சியாமளா தேவி சங்கீதக் கலைக்கு தலைவி ஆவாள். சங்கீதம் கற்றுக் கொள்பவர்களுக்கும் சங்கீதத்தை உபாசிப்பவர்களுக்கும் குறிப்பாக வீணை வாசிப்பவர்களுக்கும் விசேஷமாக அருள் புரிபவள் சியாமளா. ஆகவே இன்று முதல் நவராத்திரியின் ஒன்பது நாட்களும் சங்கீத இசை பாடுவதாலும் சங்கீதத்தை கேட்பதாலும் சங்கீதத்தில் ஈடுபட்ட இசை வல்லுனர்களை தேவியாக பாவித்து தாம்பூலம் தந்து மகிழ்விப்பதாலும் சியாமளா தேவியின் பூரண அருள் கிடைக்கும்.
- இந்த விரதம் பெருமாளுக்கு உகந்த அற்புதமான நாள்.
- சந்திர திசை நடப்பவர்கள் விரதம் அனுஷ்டிக்கலாம்.
பெருமாளின் திருநட்சத்திரமான திருவோண நட்சத்திரமான இன்று (22.1.23) திருவோண விரதம் அனுஷ்டிக்க வேண்டும். திருமாலை மாலையில் ஆலயம் சென்று தரிசியுங்கள். வாழ்வில் எல்லா சந்தோஷங்களையும் தந்தருள்வார் பெருமாள்!
திருவோணம் நோன்பு என்பது, திருவோண நட்சத்திரத்தோடு கூடிய நன்னாளில் நோற்கும் விரதம். இந்த விரதம் பெருமாளுக்கு உகந்த அற்புதமான நாள்.
திருவோண விரதம் மேற்கொள்பவர்களின் வாழ்வில், கஷ்டங்கள் அனைத்தும் நீங்கும். வீட்டின் தரித்திரம் விலகும். ஐஸ்வர்யம் பெருகும். மிக முக்கியமாக, இந்த நாளில் திருவோண விரதநாளில், பெண்கள் திருமாலை தரிசித்து வேண்டிக் கொண்டால், அவர்களின் கண்ணீரையும் கஷ்டத்தையும் துடைத்தருள்வார் திருமால். அவர்கள் விரும்பியதெல்லாம் தந்தருள்வார்!
திருமணம் தாமதமாகிக் கொண்டிருக்கிறதே எனும் நிலை முற்றிலுமாக மாறும். கல்யாண மாலை தோள் சேரும். அதேபோல், நீண்ட காலம் குழந்தை இல்லையே என ஏங்கித் தவித்தவர்களுக்கு, குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
திருவோண விரதம் இருக்கும் பக்தர்கள், மகா விஷ்ணுவை வணங்கி அவரின் திருநாமங்களைச் சொல்லிக்கொண்டே இருங்கள். விஷ்ணு புராணங்களைப் பாராயணம் செய்யலாம். சுவாமிக்கு நிவேதித்தப் பொருட்களை எல்லோருக்கும் விநியோகித்து மகிழலாம்.
விரதம் இருக்க முடியாதவர்கள் அருகில் உள்ள பெருமாள் கோயிலுக்குச் சென்று வழிபட வேண்டும்.
இன்றைய நாளில், மாலை வேளையில், வீட்டில் நெய் விளக்கேற்றி வழிபடுங்கள். சகல தோஷங்களும் விலகும். சந்தோஷம் மட்டும் வீட்டில் நிறைந்திருக்கும் என்பது உறுதி!
திருவோண நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், சந்திர திசை நடப்பவர்கள் பெருமாளை குலதெய்வமாகக் கொண்டவர்கள், சுக்கிர யோகம் தடைப்பட்டிருப்பவர்கள், பெருமாளை தரிசித்து துளசி மாலை சார்த்தி பிரார்த்தனை செய்துகொள்ளுங்கள். கடன் தொல்லையில் இருந்து விடுபடுவீர்கள். கஷ்டங்களும் நஷ்டங்களும் காணாமல் போகும்!
- அமாவாசை தினங்களில் மாமிசம் சாப்பிடக்கூடாது.
- வீட்டின் வாசலில் கோலமிடுதல் கூடாது.
முன்னோர்களை நினைத்து மாதம் தோறும் அமாவாசை தினங்களில், ஒவ்வொருவரும் தங்களின் மறைந்த முன்னோர்களுக்கு படையல் போட்டு, காகத்திற்கு படைத்து சாப்பிடுவர். இது நடைமுறையில் இருந்தாலும் அவற்றில் ஆடி அமாவாசை, புரட்டாசியில் வரும் மகாளய அமாவாசை, தை அமாவாசை ஆகிய மூன்றும் முக்கியமானதாக கருதப்படுகிறது. ஆடி அமாவாசை அன்று பித்ரு லோகத்தில் இருந்து பூலோகத்திற்கு புறப்பட்டு வரும் நம்முடைய முன்னோர்கள், மகாளய அமாவாசையில் நம் வீட்டு வாசலில் உணவுக்காக நின்று, நாம் படைக்கும் உணவுகளையும், நாம் கொடுக்கும் தர்ப்பணத்தையும் ஏற்றுக்கொள்கிறார்கள். பின்னர் அவர்கள் தை அமாவாசையில் மீண்டும் பித்ருலோகம் புறப்பட்டுச் செல்வதாக சொல்லப்படுகிறது.
தை அமாவாசை அன்று பித்ரு லோகம் புறப்படும் நம் முன்னோர்களுக்கு தாகம் அதிகமாக இருக்கும். எனவே அன்றைய தினமும் நீர்நிலைகளில், நம்முடைய முன்னோர்களுக்கு எள், தண்ணீர் தெளித்து தர்ப்பணம் செய்ய வேண்டும். இதனால் அவர்கள் மகிழ்ச்சி அடைந்து, நமக்கு ஆசிகளை வழங்குவார்கள். மறைந்த நம் முன்னோர்களுக்குச் சிரத்தையுடன் செய்யும் காரியம் என்பதால் இது 'சிரார்த்தம்' என்று அழைக்கப்படுகிறது. 'பித்ருக்களின் சாபத்திற்கு ஆளாகிவிட்டால் தெய்வத்தால்கூட கருணை காட்ட முடியாது' என்கிறது கருட புராணம். எனவே தை அமாவாசை திதியன்று ஆறு, கடல் உள்ளிட்ட நீர்நிலைகளில் நீராடி, முன்னோர்களுக்கு பிடித்த உணவுகளை படையல் வைத்து, தர்ப்பணம் செய்து விரதம் கடைப்பிடிக்க வேண்டும்.
சாதத்தைப் பிடித்து ஆறு பிண்டங்கள் வைத்து, எள், தண்ணீா், தர்ப்பை கொண்டு அவர்களை ஆராதிக்க வேண்டும். தந்தை, தாத்தா, முப்பாட்டன்கள், தாய், பாட்டி, கொள்ளுப் பாட்டி ஆகியோருக்கு நாம் ஒவ்வொருவரும் செய்யவேண்டிய, மிக முக்கிய கடமையாக இது இருக்கிறது. இந்த ஆறு பிண்டங்களையும் ஒன்றாக இணைத்து காகத்துக்கு வைக்கும்போது, அது உண்ணுவதன் மூலம் நம் முன்னோர்களுக்கு அந்த ஆகாரம் செல்வதாக ஐதீகம்.
இந்தத் தர்ப்பணமானது பித்ருக்களுக்கு ஏதேனும் குறைகள், கோபங்கள் இருந்தால், அவர்களின் மனதை குளிரச் செய்து, நம் குடும்பத்தில் அசம்பாவிதங்கள் எதுவும் நடக்காதபடி காக்கும். பித்ரு கடனை நிறைவேற்றினால் நன்மைகள் வளரும் என்று சிவபெருமான், ஸ்ரீராமரிடம் கூறி இருக்கிறார். அதனால்தான், வனவாச காலத்தில் இருந்த போது தன் தந்தைக்குச் செய்ய முடியாத தர்ப்பணத்தை, சீதையை மீட்டு வந்தபிறகு, ராமேஸ்வரத்தில் வைத்து ராமபிரான் செய்தாா். அதே போல் தனக்காக உயிர்நீர்த்த ஜடாயு என்ற கழுகு அரசனுக்கும், மகன் ஸ்தானத்தில் இருந்து இறுதிச் சடங்குகளைச் செய்து தர்ப்பணம் கொடுத்தார் என்கிறது புராணங்கள்.
செய்யக்கூடியவை
தை அமாவாசை தினத்தில் முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் கொடுக்க வேண்டும். அதன்பின் வீட்டிற்கு வந்து, முன்னோர்களின் படத்தை வடக்கு அல்லது கிழக்கு திசையில் வைத்து அதற்கு சந்தனம், குங்குமம் இட்டு, துளசி மாலை சூட்ட வேண்டும். படத்திற்கு முன்பாக முன்னோர்கள் பயன்படுத்திய பொருட்கள், அவர்களுக்குப் பிடித்த உணவுகளை படைத்து, குத்துவிளக்கேற்றி வைக்க வேண்டும். தை அமாவாசைக்கு முன்தினம் கோதுமை தவிடு, அகத்திக்கீரை ஆகியவற்றை ஊறவைத்து, அதை அமாவாசை அன்று பசுவிற்கு தானமாக வழங்க வேண்டும்.
செய்யக்கூடாதவை
முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளித்து, வீட்டில் வழிபாடு செய்து முடிக்கும் வரை, வீட்டில் தெய்வ சம்பந்தமான பூஜைகளை ஒத்திவைப்பது நல்லது. தர்ப்பணம் செய்து முடிந்த பின்னர் தினசரி செய்ய வேண்டிய பூஜைகளைச் செய்யலாம். அமாவாசை தினங்களில் மாமிசம் சாப்பிடக்கூடாது. தர்ப்பணம் செய்யும் போது கறுப்பு எள்ளை, மற்றவர்களிடம் இருந்து கடன் வாங்கக்கூடாது. நீரில் இருந்து கொண்டு கரையில் தர்ப்பணம் செய்யக்கூடாது. அதைப்போல் கரையில் இருந்து கொண்டு நீரிலும் தர்ப்பணம் செய்யக்கூடாது. கிழக்கு திசை பார்த்தபடி அமர்ந்துதான் தர்ப்பணம் செய்ய வேண்டும். அன்றைய தினம் வீட்டின் வாசலில் கோலமிடுதல் கூடாது.
- நாளை தை அமாவாசை கடைபிடிக்கப்படுகிறது.
- தர்ப்பணம் என்பது எள்ளும், நீரும் கொண்டு தரப்படுவதாகும்.
ஒரு வருடத்துக்கு 96 தர்ப்பணங்கள் என வரையறுத்து அறிவுறுத்தியுள்ளது சாஸ்திரம். அமாவாசை, தமிழ் மாதப் பிறப்பு, கிரகணம், புரட்டாசி மகாளய பட்ச புண்ணிய காலமான 15 நாட்கள் என மொத்தம் 96 தர்ப்பணங்கள் செய்யவேண்டும்.
மாதாமாதம் அமாவாசை வந்தாலும், ஒரு வருடத்தில் மூன்று அமாவாசைகள் மிக மிக முக்கியமானவை. தை அமாவாசை, ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை ஆகிய மூன்று அமாவாசை தினங்களிலேனும் மறக்காமல், முன்னோர் எனப்படும் பித்ரு ஆராதனை செய்யவேண்டும்.
இந்தநாளில், தர்ப்பணம் முதலான சடங்குகள் செய்து, நம் முன்னோரை ஆராதித்து வணங்கவேண்டும். எள்ளும்தண்ணீரும் முன்னோருக்கு விட்டு, தர்ப்பண மந்திரங்களைச் செய்யவேண்டும்.
தை அமாவாசை தினத்தில் மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தால், அவர்களின் அருளாசியால் எண்ணற்ற நன்மைகள் ஏற்படும். நமக்கு ஆசீர்வாதம் செய்வதற்காகக் காத்திருப்பார்களாம் பித்ருக்கள். எனவே, இந்தநாளில் மறக்காமல் முன்னோர் வழிபாட்டைச் செய்வோம்.
இந்த ஆண்டு தை அமாவாசை 21-ம் தேதி (நாளை) கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளில் முன்னோர்களை நினைத்து வணங்கி அவர்களுக்கு திதி கொடுக்கலாம். இதன்மூலம் நமது முன்னோர்களின் ஆசி கிடைக்கும். இந்தநாளில், முன்னோரை ஆராதித்து, பூஜைகள் செய்து, நம் வேண்டுதலை அவர்களிடம் வைத்து முறையிடுவோம். அவர்களை நினைத்து நான்கு பேருக்கேனும் உணவுப் பொட்டலம் வழங்குவோம். முக்கியமாக, தயிர்சாதப் பொட்டலம் தருவது ரொம்பவே சிறப்பு வாய்ந்தது.
இதனால் மகிழ்ந்த முன்னோர்கள் கருணையுடன் நம்மை ஆசீர்வதிப்பார்கள். நம் வீட்டின் தரித்திரங்களெல்லாம் விலகிவிடும். இல்லத்தில் இருந்த தீயசக்திகள் தெறித்து ஓடிவிடும். கடன் தொல்லையில் இருந்து மீள்வோம். கவலையும் பயமும் காணாமல் போகும் என்பது உறுதி!
தை அமாவாசையில் முன்னோருக்கு உணவு, புத்தாடை படைத்து வழிபட்டு விட்டு, அவற்றை ஏழை எளியவர்களுக்கு தானமாக வழங்கினால் நன்மைகள் பல வந்து சேரும்.
அமாவாசை அன்று நம்முடைய முன்னோர்களின் ஆத்ம சாந்திக்காக செய்யப்படும் திதி, தர்ப்பண பூஜையானது, நம்முடைய வம்சாவழியினருக்கு பெரிதும் நலம் தரும். தர்ப்பணம் என்பது எள்ளும், நீரும் கொண்டு தரப்படுவதாகும். இந்த தர்ப்பண நீரின் சக்தியானது, பூமியின் ஆகர்ஷன சக்தியை மீறி, மேல்நோக்கி எழும்பிச் சென்று, பல கோடி மைல்களுக்கு தொலைவில் உள்ள பித்ரு லோகத்தை அடையும். தை அமாவாசையன்று, இந்த சக்தியானது மிகவும் அபரிமிதமாக பெருகுகிறது. முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளிப்பவர்களின் வீட்டில் காரியத் தடைகள் நீங்கி நன்மைகள் நடைபெறும்.
சனி அமாவாசை தினத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளிப்பது போல ஏழைகளுக்கு தானம் அளிப்பதும் சிறப்பானது. கருப்பு உளுந்து, கருப்பு எள், வெல்லம், உடைகள், பார்லி ஆகியவை நாம் தானம் அளித்தால் மிகவும் நல்லது. இதனால் நம் முன்னோர்களின் ஆசி கிடைக்கும். தானத்தில் சிறந்த தானம் அன்ன தானம் என்பார்கள். அதே போல் தண்ணீர் தானமும் சிறப்பானது. தேவையான மக்களுக்குத் தண்ணீர் தானம் கொடுப்பது, குடிக்க இனிப்பு கலந்த தண்ணீர் கொடுப்பது மிகவும் சிறந்தது.
நமது மூததையர்கள், முன்னோர்களை நாம் எப்போதும் மறக்கக்கூடாது. தாத்தா, கொள்ளுத்தாத்தா, எள்ளுத்தாத்தா, பாட்டன் பூட்டன் என பல தலைமுறையினரை பெயரை நினைவில் வைத்து நாம் தர்ப்பணம் தரவேண்டும். அரிசி, பருப்பு, காய்கறிகள் குறிப்பாக வாழைக்காய், குடை, வஸ்திரங்கள், காலணி உள்பட பல பொருட்களை சக்திக்கு ஏற்ப தானம் கொடுக்க வேண்டும். வருங்கால சந்ததியினருக்கு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதனால் ஏற்படும் நன்மைகளை எடுத்துக்கூற வேண்டும். நம்முடைய முன்னோர்களுக்கு அளிக்கும் தர்ப்பணத்தின் மூலம் நமக்கு ஏற்பட்டு வந்த தடைகள் நீங்கும் சுப காரியங்கள் நடைபெறும். மன குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும்.
- குருவின் அருளால் புத்திரபாக்கியம் கிடைக்கும்.
- தர்மத்தைப் பின்பற்றினால் இறைவனின் தரிசனம் கிடைக்கும்.
வியாழக்கிழமைகளில் வரும் பிரதோஷ தினம் மிகவும் சிறப்புவாய்ந்தது. அந்த நாளில் நந்தி பகவானை வழிபடுவதன் மூலம் குருவருளையும் திருவருளையும் பெறலாம்.
குருவாரம் வியாழக்கிழமையில் வரும் பிரதோஷத்தில், சிவ பூஜை செய்வதும் விரதமிருந்து, ருத்ரம் ஜபித்தும் வழிபாடு செய்வதும் ஞானத்தையும் யோகத்தையும் தந்தருளும்.
சிவபெருமானின் அறுபத்து நான்கு வடிவங்களில் ஒன்றான தட்சிணாமூர்த்தி திருவடிவத்தைக் கட்டாயம் வணங்க வேண்டிய நாள் வியாழக்கிழமை. அதோடு பிரதோஷம் சேர்ந்துவருவது மிகவும் சிறப்பு வாய்ந்தது.
நலமும் வளமும் தரும் பிரதோஷ பூஜையை தரிசிப்பதும் அப்போது சிவனாரை மனமொன்றிப் பிரார்த்தனை செய்வதும் ரொம்பவே சிறப்பு வாய்ந்தது. மிகுந்த நன்மைகளை வாரிவழங்கக் கூடியது.
நந்தி பகவான் சிவபெருமானின் வாகனம். சிவனோடு இருப்பவர். சிவ என்பதற்கு மங்களம் என்று பொருள். நந்தி என்பதற்கும் ஆனந்ததையும் மகிழ்ச்சியையும் தருபவர் என்றே பொருள். தகுதியில்லாதவர்கள் சிவ தரிசனம் பெறுவதைத் தடை செய்பவர் நந்தி. நந்தியை தர்மம் என்று உபநிடதங்கள் போற்றுகின்றன. தர்மத்தைப் பின்பற்றினால் இறைவனின் தரிசனம் கிடைக்கும். இறைவனின் சந்நிதியில் நந்திக்குப் பின் நின்று வணங்க வேண்டும் என்பதன் தாத்பர்யமும் தர்மத்தைப் பின்பற்றி அதன் மூலம் இறைவனை வழிபட வேண்டும் என்பதுதான்.
நந்திபகவான் பிரதோஷ நாளில் வேண்டும் வரம் தருபவராக விளங்குகிறார். இந்த நாளில் அவரை நினைத்து வழிபடுவது சிவ பெருமானின் பேரருளை நமக்குத் தரும். அதனால்தான் பிரதோஷ தினத்தில் நந்திக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.
சிவபக்தர்களை ஓடிவந்து காக்கும் நந்தி தேவரை பிரதோஷ வேளையில் நினைத்து வழிபட, அவரே குருவாக இருந்து நமக்கு இறையருளைப் பெற்றுத் தருவார். இன்று மாலை (19/1/23) பிரதோஷ வேளையில் அனைவரும் வீட்டில் சிவபெருமானை நினைத்து நல்லெண்ணெய் தீபம் ஏற்றி சிவபுராணம் படியுங்கள்.
வியாழக்கிழமை (இன்று) நாளில் நடைபெறும் பிரதோஷ பூஜைகளில் பங்கேற்றால் துன்பங்கள் நீங்கும் கஷ்டங்கள் காணாமல் போகும். தோஷங்களும் தீரும். திருமணத் தடைகள் விலகி மாங்கல்ய பலன் கிடைக்கும். குருவின் அருளால் புத்திரபாக்கியம் கிடைக்கும்.
- இந்த நிகழ்ச்சிக்கு ஒரு வரலாற்று கதை உள்ளது.
- ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கலுக்கு அடுத்த நாள் திருவூடல் திருவிழா கொண்டாடப்படுகிறது.
இந்த நிகழ்ச்சிக்கு ஒரு வரலாற்று கதை உள்ளது. பிருங்கி என்ற முனிவர் அருணாசலேஸ்வரரை மட்டுமே வணங்கி வந்துள்ளார்.
ஒரு சமயத்தில் அருணாசலேஸ்வரரும், அம்மனும் ஒன்றாக இருந்தபோது அவர் வண்டு உருவில் அருணாசலேஸ்வரரை மட்டும் சுற்றி வந்து வணங்கினார்.
இதனால் சாமிக்கும், அம்மனுக்கும் இடையே ஊடல் ஏற்பட்டு பின்னர் கூடல் ஏற்பட்டதாக வரலாறு கூறுகிறது.
இந்த ஊடல் மற் றும் கூடலை விளக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் திருவூடல் திருவிழா கொண்டாடப்படுகிறது.
தை மாதம் 2-ந் தேதி நடக்கும் இந்த திருவிழா நேற்று நடைபெற்றது. இதற்காக அதிகாலை நடை திறக்கப்பட்டு சாமிக்கும், அம்மனுக்கும் சிறப்பு அலங்காரம், தீபாராதனை செய்யப்பட்டது.
மேலும் மாட்டுப்பொங்கலை முன்னிட்டு கோவிலில் உள்ள நந்திகளுக்கு வடை, அதிரசம், முருக்கு, காய், பழங்கள் மற்றும் பூ மாலைகளைக் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
சாமி, அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய சாமிகள் திருவூடல் விழாவுக்கு புறப்பட்டனர். அதிகாலையில் நந்திக்கு தரிசனம் கொடுத்து விட்டு ராஜகோபுரம் அருகில் உள்ள திட்டி வாயிலில் சூரிய பகவானுக்கும் காட்சி கொடுத்து மாடவீதியை 3 முறை சுற்றி வந்தனர்.
அதைத்தொடர்ந்து இரவு சுமார் 7 மணியளவில் திருவூடல் தெருவில் திருவூடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
திருவூடல் திருவிழாவின் போது சாமிக்கும், அம்மனுக்கும் இடையே ஊடல் ஏற்பட்டு அம்மன் மீண்டும் கோவிலுக்கு சென்று விட்டார். அருணாசலேஸ்வரர் குமரக்கோவிலுக்கு சென்று விட்டார்.
அங்கிருந்து இன்று பக்தர்கள் கிரிவலம் செல்வது போன்று அருணாசலேஸ்வரர் கிரிவலம் புறப்பாடு நடந்தது. கிரிவலம் முடித்து விட்டு கோவிலுக்கு வரும் போது சாமி சன்னதியில் மறுவூடல் நிகழ்ச்சி நடக்கும். அப்போது சாமி அம்மன் இணைந்து கோவிலுக்குள் செல்வார்கள். இதனுடன் திருவூடல் திருவிழா நிறைவு பெறுகிறது.
விடுமுறை தினம் என்பதால் இன்று அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
- உத்தராயண காலத்தின் ஆரம்பமே தை மாத முதல் நாள்.
- தைக்கிருத்திகை முருகப்பெருமானுக்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது.
சூரியனின் தேர்ப்பாதை வடதிசையில் மாறும் உத்தராயண காலத்தின் ஆரம்பமே தை மாத முதல் நாள். இது மிகவும் புண்ணியமான காலம் என்று புராணங்கள் சொல்கின்றன. உயர்வான இந்த மாதத்தில் பல தலங்களில் சிறப்பான பூஜைகள் நடைபெற்றன.
தை மாதத்தில் மக்கள் தைப்பூசம், தை அமாவாசை, ரத சப்தமி போன்ற விழாக்களையும், பைரவ வழிபாடு, வீரபத்திரர் வழிபாடு, தை வெள்ளி வழிபாடு போன்ற வழிபாட்டு முறைகளையும் இம்மாதத்தில் பின்பற்றுகின்றனர்.
தைக்கிருத்திகை முருகப்பெருமானுக்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஜனவரி 30-ம்தேதி தைக்கிருத்திகை அனுஷ்டிக்கப்படுகிறது. சஷ்டி விரதம் சக்தி வாய்ந்தது. அதுபோல 27 நட்சத்திரங்களில் கார்த்திகை நட்சத்திரம் முருகப் பெருமானுக்கு உகந்த நட்சத்திரம். மாதம்தோறும் வரும் கிருத்திகை நட்சத்திரம் சிறப்பானது. கார்த்திகைப் பெண்களை சிறப்பிக்கும் வண்ணம் கிருத்திகை விழா கொண்டாடப்படுகிறது. ஆண்டுக்கு மூன்று கார்த்திகை தினங்கள் அதீத முக்கியத்துவம் பெறும். அவை, உத்தராயன துவக்கமான தை மாதம் வரும் தை கிருத்திகை, கார்த்திகை மாதம் வரும் பெரிய கிருத்திகை மற்றும் தட்சிணாயன துவக்கமான ஆடி மாதத்தில் வரும் ஆடிக் கிருத்திகை.
தை மாதத்தில் வரும் கிருத்திகையில் விரதமிருந்து முருகப்பெருமானை வணங்கி வழிபாடு செய்தால் நிச்சயம் திருமணத்தடை நீங்கம் என்பது ஐதீகம். புத்திரபாக்கியம் கிடைக்கும். சித்திரை முதலாகத் தொடங்கும் பன்னிரு மாதங்களில் பத்தாவது மாதமாக வருவது தை மாதம். பத்து மாதம் கருவுற்று, பிள்ளைச் செல்வம் பெற வேண்டிய பெண்மணிகள், பத்தாவது மாதமான தை கிருத்திகையில் முருகனை மனமார நினைத்து விரதம் இருந்துவழிபட்டால், அவர்களின் மூடிய கருப்பை திறக்கும் கட்டாயம் குழந்தையும் பிறக்கும் என்பது நம்பிக்கை. இந்த தைக் கிருத்திகை தினத்தில் விரதமிருந்து கந்தவேளை வணங்க அனைத்து கவலைகள், பிரச்சனைகள், தொல்லைகள், தொந்தரவுகள் நீங்கி வாழ்வில் சகல சௌபாக்கியங்களும் சேரும்.
தை மாதம் வளர்பிறை ஏகாதசி புத்திரத ஏகாதசியாக கடைபிடிக்கப்படுகிறது. இந்த ஏகாதசி விரதம் இருப்பவர்களுக்கு சந்தான பாக்கியம் கிடைக்கும். நல்ல புத்திரர்கள் கிடைப்பார்கள்.
இந்த ஆண்டு தைப்பூசம் பிப்ரவரி 4-ம் தேதி கொண்டாடப்படுகிறது. தை மாதத்தில் வரும் பௌர்ணமியோடு கூடிய பூசம் நட்சத்திரத்தில் சிவபெருமான், முருகனை வழிபடுவது சிறப்பு. சிதம்பரம் பொன்னம்பலத்தில் இறைவன் ஆடலரசனாக உலக மக்களுக்கு காட்சியருளிய நாள் தைப்பூசம் என்றும், உமையம்மை வேலவனுக்கு சக்தி வேலை வழங்கிய நாள் தைப்பூசம் என்றும் கருதப்பட்டு வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது. இவ்விழா உலகெங்கும் உள்ள தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
தை அமாவாசை இந்த ஆண்டு தை அமாவாசை ஜனவரி 21-ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. தை அமாவாசை அன்று மக்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் எனப்படும் நீத்தார் கடன் வழிபாட்டினை மேற்கொள்கின்றனர். ஆறு, குளம், கடல் போன்ற நீர்நிலைகளில் இவ்வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது. உத்திராண்ய காலத்தின் முதல் மாதமான தை மாத அமாவாசையும், தட்சியாண காலத்தின் முதல் மாதமான ஆடி மாத அமாவாசையும், புரட்டாசியில் வரும் மகாளய அமாவாசையும் முன்னோர்களுக்கான வழிபாட்டிற்கு உகந்தவை எனக் கருதப்படுகின்றன. இந்த வழிபாட்டின் மூலம் தாங்கள் செய்த பாவங்கள் நீங்குவதாகவும், குழந்தைப்பேறு, குடும்பத்தில் ஒற்றுமை, சுபிட்சம், மகிழ்ச்சி போன்றவை கிடைப்பதாகவும் கருதப்படுகிறது.
வீரபத்ர வழிபாடு என்பது செவ்வாய் தோறும் ஓராண்டு காலம் கடைபிடிக்கப்படுகிறது. ஓராண்டு வழிபட முடியாதவர்கள் தை மாத செவ்வாய்க்கிழமையில் மட்டுமாவது இவ்வழிபாட்டினை கடைபிடிக்கலாம். இவ்வழிபாட்டை மேற்கொள்வதால் நீங்காத தடையும் நீங்கும். தீராத பகையும் தீரூம். நவகிரக பாதிப்புகளிலிருந்து நம்மைக் காக்கும்.
உத்தராயண காலத்தின் ஆரம்ப மாதமான தை மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமையில் அம்மன் வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது. அன்றைய தினங்களில் அபிராமி அந்தாதி, சௌந்தர்ய லஹரி உள்ளிட்ட அம்மன் குறித்த பாடல்களைப் பாடி வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது.
ஸ்ரீசரஸ்வதி அவதரித்த தினமே வசந்த பஞ்சமி. அந்த நாள் தை மாதத்தில் வரும் சுக்ல பஞ்சமியாகும். இதனை மகாபஞ்சமியாகவும் கடைபிடிக்கின்றனர். ஸ்ரீசரஸ்வதி தேவிக்கு வசந்த பஞ்சமி தினத்தில் பூஜைகள் செய்து வழிபாடு செய்வதால், ஞான சித்தியாகும். அக்ஷராப்பியாசத்திற்கும் கல்வி சம்பந்தமான புதிய முயற்சிகள் துவங்கவும் ஏற்ற தினம் இது. ஸ்ரீகிருஷ்ணர், சாந்தீபனி முனிவரிடம் குருகுல வாசம் துவங்கிய நாளும் இன்று தான். மேற்கு வங்கத்தில் இந்த வசந்த பஞ்சமி நாள் அன்றுதான் வித்யாரம்பம் செய்கிறார்கள். இந்த ஆண்டு ஜனவரி 26-ம் தேதி வசந்த பஞ்சமி கடைபிடிக்கப்படுகிறது.
ரத சப்தமி என்பது தை மாதத்தின் வளர்பிறையில் வரும் சப்தமி திதி அன்று கொண்டாடப்படுகிறது. இந்நாளில்தான் சூரியன் தனது வடஅரைக்கோளப் பயணத்தைத் தொடங்குகிறார். இந்நாளில் விரதம் மேற்கொள்வதால் ஆரோக்கியம், நோய் இல்லாமை, செல்வம், புத்திரப்பேறு, நீண்ட ஆயுள், பகைவர்களை வெல்லும் சக்தி, வெற்றி, நிலம், தானியம், புண்ணியம் ஆகியவை கிடைக்கும். மேலும் மனக்கவலை, வியாதி ஆகியவற்றை நீக்கும். வழியில்லாமல் தவிக்கும்போது வழி காட்டும் என்றும் கருதப்படுகிறது. ரத சப்தமி அன்று சந்திரசேகர சுவாமி ரதத்தில் எழுந்தருளி, மேலண்டைக் குளக்கரையில் தீர்த்தவாரியும், பின்னர் திருவீதி உற்சவமும் நடைபெறும். தை மாத வெள்ளிக்கிழமைகளில் கற்பகாம்பாள் பிராகார உலா நடைபெறும். இந்த ஆண்டு ரத சப்தமி ஜனவரி 28-ம்தேதி வருகிறது.
ரதசப்தமிக்கு அடுத்த நாள் அஷ்டமி திதி. இந்த அஷ்டமி திதியை பீஷ்மாஷ்டமியாக கடைபிடிக்கப்படுகிறது. 58 நாட்கள் அம்புபடுக்கையில் படுத்து இருந்த பிதாமகர் பீஷ்மர் பரமாத்மாவின் கடாக்ஷத்தால் ஸ்ரீ வைகுண்ட ப்ராப்தி அடைந்த நாள்.வேதம் படிக்கும் படித்த வித்யார்த்திகள் அனைவரும் மந்திர ரூபமாக பிதாமகருக்கு தர்ப்பணம் செய்வது மிகுந்த பாக்கியத்தை கொடுக்கும். தவிர மற்றவர்கள் யார் வேண்டுமானாலும் பிதாமகருக்கு தர்ப்பணம் செய்யலாம். அன்று புனிதநீர் நிலைக்குச் சென்று பீஷ்மருக்கான தர்ப்பணமும் நம்மில் வாழ்ந்த முன்னோர்களுக்காக பிதுர் பூஜையும் செய்தால், சுகமான வாழ்வு நிரந்தரமாகக் கிடைக்கும் என்பது நம்பிக்கை!
- இஷ்டதெய்வங்களை பிரார்த்தனை செய்ய வேண்டும்.
- பால் பொங்கிவரும் போது ‘பொங்கலோ, பொங்கல்’ என்று குரல் எழுப்ப வேண்டும்.
பொங்கல் திருநாளின் போது, சூரியன் உதிப்பதற்கு 5 நாளிகைக்கு முன்பாகவே எழுந்து விட வேண்டும். குளித்து விட்டு, வீட்டை சுத்தம் செய்து முற்றத்தில் நீர் தெளித்து அரிசி மாவால் கோலம் போட வேண்டும். வீட்டு முற்றத்தில் ஒரு பகுதியை, பசுஞ்சாணத்தால் மெழுகி, வெள்ளையடித்து, காவி பூச வேண்டும். காவி நிறம் துர்க்கை தேவிக்கு உரியது. துன்பங்கள் விலகுவதுடன், மங்கள வாழ்வு மலரவும், வாழ்வில் இன்பம் நிலைத்திருப்பதற்காகவும் காவி பூசப்படுகிறது. பின்னர் அந்த இடத்தை மாவிலை, வாழை, கரும்பு மற்றும் பூக்களைக் கொண்டு அலங்கரிப்பதுடன், மஞ்சள் அல்லது சந்தனத்தில் பிள்ளையாரை பிடித்து வைக்க வேண்டும்.
அதன்பிறகு பூரண கும்பம், வெற்றிலை, பாக்கு, தேங்காய் முதலிய மங்கள பொருட்களை வைத்து, குத்துவிளக்கேற்றி வைக்க வேண்டும். தொடர்ந்து விநாயகரை மனதில் நினைத்து, பின்னர் இஷ்டதெய்வங்களை பிரார்த்தனை செய்ய வேண்டும். ஒரு புதுப்பானையில் மஞ்சள் இலை, மாவிலை கட்டி, பானையின் மேற்புறத்தில் திருநீறு குழைத்து பூசுவதுடன் சந்தனம், குங்குமத்தை திலகமாக இடுவதும் சிறப்பு தரும்.
அத்துடன் பானைக்குள் பசும்பாலும், நீரும் விட்டு நிரப்பி தூபதீபம் காட்ட வேண்டும். பின்னர் கற்பூர தீபத்தினால் அடுப்பில் நெருப்பை பற்ற வைக்க வேண்டும். பானையில் பால் பொங்கிவரும் போது 'பொங்கலோ, பொங்கல்' என்று குரல் எழுப்ப வேண்டும்.
பால் பொங்கியதும், பச்சரிசியை அள்ளி, சூரிய பகவானை வணங்கியபடி, பானையை மூன்று முறை சுற்றி, பானைக்குள் இட வேண்டும். பிறகு வெல்லம், கற்கண்டு, திராட்சை முதலியவற்றை இட வேண்டும். பொங்கல் தயாரானதும், 3 தலை வாழை இலையில் பொங்கலை வைத்து, பழங்கள மற்றும் கரும்பு படைத்து, தீபாராதனை காட்டி சூரிய பகவானை வழிபாடு செய்ய வேண்டும். கற்பூர தீபம் காட்டும் போது, குலதெய்வத்தையும், நம்முடைய முன்னோர்களையும் மனதில் நினைத்து வழிபடுவது சிறப்பான வாழ்வு தரும்.
தவத்தில் சிறந்தவர்களான காசிப முனிவருக்கும், அவரது மனைவி அதீதிக்கும் விசுவான் முதலான 12 பேர் பிறந்தனர். அதீதி புத்திரர்கள் என்பதால், இவர்கள் பன்னிரண்டு பேரும் ஆதித்யர் என்று அழைக்கப்பட்டார்கள்.
ஒவ்வொரு பூஜைக்கு முன்னரும், விக்னேஸ்வர பூஜை செய்வது அவசியம். புது மஞ்சளை அரைத்து அதனை பிள்ளையாராக பிடித்து வைக்க வேண்டும். மகர சங்கராந்தி அன்று சூரிய பகவானை வழிபடுவது சிறப்பான பலனைத் தரும்.
ராமபிரான், தினமும் சூரிய காயத்ரி மந்திரம், ஆதித்ய ஹிருத்ய ஸ்தோத்திரம் கூறி சூரிய பகவானை வழிபட்டார். அதன் பயனாக அவர் ராவணனை அழிக்கும் வல்லமை பெற்றார். இதே போல் மகாபாரத காலத்தில் பாண்டவர்கள் சூரிய வழிபாடு நடத்தியதன் பலனாக, வனவாசத்தின் போது அட்சயபாத்திரத்தை பெற்றனர். சூரிய வழிபாடு அனைத்து செல்வங்களையும் வழங்கும்.
- இருள்மயமான வாழ்க்கை ஒளிமயமாக மாற இந்த விரதத்தை மேற்கொள்ளலாம்.
- ‘நமசிவாய’ என்னும் பஞ்சாட்சரத்தை சொல்லி வருவதன் மூலம் பாவங்கள் விலகும்.
எல்லா உயிர்களுக்கும் அம்மையாகவும், அப்பனாகவும் விளங்கும் சிவபெருமானை நினைத்து விரதமிருந்து வழிபட உகந்த நாட்களில் சிவராத்திரியும் ஒன்று. மகா சிவராத்திரி என்பது மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தசி திதியில் வருகின்றது. அன்றைய தினம் இரவு நான்கு சாமங்கள் சிவபூஜை செய்து விரதமிருந்தால் நாள் தோறும் நற்பலன்கள் நடை பெறும். சிவராத்திரி அன்று சிவபெருமானை வில்வ இலையால் அர்ச்சித்து வழிபடுவதன் மூலம் சிறப்புகள் அனைத்தும் வந்துசேரும். இந்த விரதத்தை மேற்கொள்ளும் பக்தர்கள் நான்காவது சாமத்தில் பூஜையை முடித்து, அதிகாலையில் நீராடி, பின்னர் உணவருந்துவது உத்தமம்.
திருவண்ணாமலையில் ஈசனின் அடி முடியைத் தேடி அலுத்துத் திரும்பிய பிறகு, அடிபணிந்த திருமாலுக்கும், பிரம்மனுக்கும் ஜோதி வடிவாய் காட்சிதந்தார் சிவபெருமான். அந்த நிகழ்வு நடைபெற்றது ஒரு சிவராத்திரி நாளில்தான்.
சிவபெருமான் வீற்றிருந்து அருள்வழங்கும் கோவில் ஒன்றில், எலி ஒன்று அங்கும் இங்கும் ஓடியது. அங்கு கருவறையில் ஏற்றப்பட்டிருந்த விளக்கின் தீபம் அணையும் தருவாயில் இருந்தது. எலிக்கோ விளக்கில் ஊற்றப்பட்டிருந்த நெய்யின் வாசம் மூக்கைத் துளைத்தது. இதனால் அது விளக்கின் அருகில் சென்று, அணையும் நிலையில் இருந்த விளக்குத் திரியில் தன் மூக்கை வைத்து உரசியது. இதில் விளக்கில் இருந்து வெளிப்பட்ட திரியில், தீ நன்றாக பிடித்து விளக்கு பிரகாசமாக எரியத் தொடங்கியது. அந்த எலியை, மறு பிறவியில் மகாபலி சக்கரவர்த்தியாக இறைவன் பிறக்கச் செய்தார். எலி, விளக்கைத் தூண்டி விட்டதும் ஒரு சிவராத்திரி நாள் என்று புராணம் சொல்கிறது.
ஒரு முறை உமாதேவி விளையாட்டாக சிவபெருமான் கண்களைத் தன்னுடைய கரங்களால் மூடியதால் உலகமே இருள்சூழப்பெற்றது. அந்த நாளே 'சிவராத்திரி' என்று புராணங்கள் சொல்கின்றன. அந்த இரவில் ஒளி வேண்டித் தவித்தவர்களுக்கெல்லாம் ஒளி கொடுக்க, சிவன் தன் நெற்றிக் கண்ணைத் திறந்தார். எனவே இருள்மயமான வாழ்க்கை ஒளிமயமாக மாற இந்த விரதத்தை மேற்கொள்ளலாம்.
சிவராத்திரி அன்று நள்ளிரவு 11.30 மணி முதல் 1 மணி வரை லிங்கோத்பவர் காலமாகும். அந்த நேரத்தில் வழிபாடு செய்தால் நற்பலன்கள் நமக்குக் கிடைக்கும். சிவராத்திரி அன்று, சிவலிங்கத் திருமேனியை வலம்புரி சங்கால் அபிஷேகித்து, வில்வ இலையால் அர்ச்சனை செய்து, சுத்த அன்னத்தை நைவேத்தியமாக படைத்து, 'நமசிவாய' என்னும் பஞ்சாட்சரத்தை சொல்லி வருவதன் மூலம் பாவங்கள் விலகும்.
அன்றைய தினம் சனிப்பிரதோஷமும் இணைந்து வருவதால் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இந்த வருட மஹா சிவராத்திரி விளங்குகிறது,
'ஜோதிடக் கலைமணி' சிவல்புரி சிங்காரம்
- பைரவர் விரதம் அனைத்து அஷ்டமி திதிகளிலும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
- பைரவ விரதம் தொடர்ச்சியாக 21 அஷ்டமி திதிகளில் கடைப்பிடிப்பது மிகவும் சிறப்பானதாகும்.
சிவனின் அம்சமான கால பைரவரை எந்தெந்த நாளில், எந்த ராசியினர் வழிபடுவது சிறப்பு, எப்படி வழிபட வேண்டும் என்பதை பார்ப்போம்.
பைரவர் சிவனின் 64 திருஉருவத்தில் ஒருவர் ஆவார். சொர்ணாகர்ஷண பைரவர், யோக பைரவர், ஆதி பைரவர், கால பைரவர், உக்கிர பைரவர் என பல பெயர்களில் அழைக்கப்படுகின்றார்.
பைரவரின் சன்னதி ஒவ்வொரு சிவன் கோவிலிலும் வடகிழக்கு பகுதியில் நின்ற கோலத்தில் இருக்கும். அவர் ஐப்பசி மாதத்தில் வரும் தேய்பிறை அஷ்டமி தினத்தில் அவதரித்தார், என்பதால் ஒவ்வொரு மாதமும் வரும் தேய்பிறை அஷ்டமி தினம் மிகுந்த விசேஷமாக பார்க்கப்படுகிறது.
பைரவர் விரதம் அனைத்து அஷ்டமி திதிகளிலும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதிலும் செவ்வாய்க்கிழமையில் வரும் அஷ்டமி திதி மிகவும் விசேஷம் ஆகும்.
பைரவ விரதம் தொடர்ச்சியாக 21 அஷ்டமி திதிகளில் கடைப்பிடிப்பது மிகவும் சிறப்பானதாகும். இத்தனை சிறப்பு மிக்க பைரவரை 12 ராசிக்காரர்கள், அதற்குரிய கிழமைகளில், வழிபட்டால், சிறந்த பலனை அடையலாம்.
ஞாயிறுக்கிழமை
சிம்ம ராசியினர் ஞாயிற்றுக் கிழமையில் வழிபடுவதால், தள்ளிப்போகும் திருமணம் கை கூடும். இந்த கிழமையில் சிம்ம ராசி உள்ள ஆண், பெண்கள் பைரவருக்கு ராகு காலத்தில் அர்ச்சனை, ருத்ராட்ச அபிஷேகம், வடை மாலை சாற்றி வழிபட்டால், திருமண தடை நீங்கி விரைவில் நடை பெறும்.
திங்கட்கிழமை
கடக ராசியினர் திங்கட் கிழமை அல்லது சங்கடஹர சதுர்த்தி தினத்தில் பைரவருக்கு பன்னீர் அபிஷேகம் செய்து, சந்தன காப்பிட்டு, புனுகு பூசி, நந்தியாவட்டை மலர் மாலை அணிவித்து வழிபட்டு வந்தால், கண் சம்பந்தமான நோய்கள் குணமாகும்.
செவ்வாய்க்கிழமை
மேஷம் மற்றும் விருச்சிக ராசியினர் செவ்வாய்க் கிழமையில் பைரவரை வழிபடுவதால் சிறப்பான பலன்களை தரும். மிளகு தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால் இழந்த பொருளை திரும்ப பெறலாம்.
புதன்கிழமை
மிதுனம், கன்னி ராசியினர் புதன் கிழமைகளில் பைரவரை வழிபடுவதன் மூலம் நற்பலன்களைப் பெறலாம். நெய் தீபம் ஏற்றி வழிபடுவதால் பூமி லாபம் கிடைக்கும்.
வியாழக்கிழமை
தனுசு, மீன ராசியினர் பைரவரை வியாழக்கிழமைகளில் வழிபடுவதன் மூலம் சிறப்பான பலன்கள் கிடைக்கும். குறிப்பாக வியாழக்கிழமையில் விளக்கேற்றி வழிபட்டால் பில்லி சூனியம் விலகும் என்பது ஐதீகம்.
வெள்ளிக்கிழமை
ரிஷபம், துலாம் ராசியினர் வெள்ளிக்கிழமை அன்று கால பைரவரை வழிபடுவதால் சிறப்பான பலன்களை பெறலாம். வெள்ளிக்கிழமை மாலையில் வில்வ இலையாலும், வாசனை மலர்களாலும் சகஸ்ரநாம அர்ச்சனை செய்து வந்தால் வறுமை நீங்கி செல்வம் சேரும்.
சனிக்கிழமை
மகரம், கும்ப ராசியினர் சனிக்கிழமையன்று பைரவரை வழிபடுவதால் சிறப்பான பலன்களை தரும். சனி பகவானுக்கு பைரவர் தான் குரு ஆவார். இதனால் அஷ்டம சனி, ஏழரை சனி, அர்த்தாஷ்டமச் சனி விலகி நல்லது நடக்கும் என்பது ஐதீகம். மேலும் தேய்பிறை அஷ்டமியில் பஞ்ச தீபம் ஏற்றி வழிபட்டால் காலத்தினால் தீர்க்க முடியாத தொல்லைகள் நீங்கி, நல்லவை வந்து சேரும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்