என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முக்கிய விரதங்கள்
- செவ்வாய்க்கிழமைகளில் முருகனின் ஆலயம் சென்று வழிபடுதல் மிக நல்ல பலன்களை தரும்.
- முருகனுக்கு உகந்தது செவ்வாய் கிழமை.
கிரகங்களில் செவ்வாய்க்கு அதிபதி முருகன். செவ்வாய்க்கிழமைகளில் முருகனை நினைத்து விரதமிருந்தால், மனதிலும், குடும்பத்திலும் அமைதி நிலவும். மேலும் செவ்வாய்க்கிழமைகளில் முருகனின் ஆலயம் சென்று வழிபடுதல் மிக நல்ல பலன்களை தரும். வள்ளலார் ராமலிங்க சுவாமிகள், செவ்வாய்க்கிழமை விரதத்தை மிகவும் வலியுறுத்தி கூறியுள்ளார். அவர், திருத்தணிகை முருகனையும், கந்தக்கோட்ட முருகனையும் முதல்நிலை கடவுளாகக் கொண்டிருந்தார். செவ்வாய்க்கிழமை விரதத்தை கடைப்பிடித்து வாழ்வில் அமைதி பெறுவோமாக!
செவ்வாய் கிரகத்திற்குரிய அதிதேவதை முருகன். பிரபலமான செவ்வாய் தலங்களாக வைத்தீஸ்வரன். கோவிலும், பழநியும் கருதப்படுகின்றன. வைத்தீஸ்வரன் கோவிலில் உள்ள முத்துக்குமார சுவாமி சன்னதிக்கும், பழநி தண்டாயுதபாணி சன்னதிக்கும் சென்று வந்தால் மன ஆறுதல் கிடைப்பதுடன் செவ்வாய் தோஷத்தால் தடைபடும் திருமணங்கள் விரைவில் நடக்கும் என்பது ஐதீகம்.
இது தவிர மயிலாடுதுறை அருகிலுள்ள சிறுகுடி மங்களநாதர் கோவிலில் செவ்வாய் அருள்பாலிக்கிறார். இங்குள்ள தீர்த்தத்தில் நீராடினால் செவ்வாய் தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை. முருகனுக்கு உகந்தது செவ்வாய் கிழமை. செவ்வாய் கிழமைகளில் விரதமிருந்து அருகில் உள்ள சிவன் கோவில் அல்லது முருகன் கோவிலுக்கு சென்று நெய் தீபம் ஏற்றி முருகப்பெருமானை வழிபடலாம்.
இவ்வாறு தொடர்ந்து (ஒவ்வொரு செவ்வாய் கிழமை)விரதமிருந்து நெய் தீபம் ஏற்றி வந்தால் திருமணம் தடைபடும் திருமணம் விரைவில் நடைபெறும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை.
- முதலில் கணபதியை பூஜிக்க வேண்டும்.
- பெண்களுக்கு தட்சணையுடன் தாம்பூலம் அளிக்க வேண்டும்.
பெண்கள் செல்வச் செழிப்போடு நல்ல கணவன், குழந்தைகள், பேரக் குழந்தைகள் என நிறை வாழ்வு வாழ வரம் தரும் சௌபாக்ய கௌரி விரதம் !
சிறப்பு: சவுபாக்கிய கவுரி விரதம்
வழிபாடு: அம்பிகைக்கு விரதமிருந்து வழிபடுதல்.
சௌபாக்ய தாயை ச வித்மஹே
காம மாலாயை தீமஹி
தன்னோ கௌரி ப்ரசோதயாத்!
பெண்கள் செல்வச் செழிப்போடு நல்ல கணவன், குழந்தைகள், பேரக் குழந்தைகள் என நிறை வாழ்வு வாழ்வதே சௌபாக்கியம் எனப்படும்.
அத்தகைய நிறை வாழ்வு வரம் தரும் சவுபாக்கிய கவுரி விரதத்தில் அன்னையை சௌபாக்ய சுந்தரி என்னும் திருநாமத்தால் சிவனாருடன் இணைந்த திருக்கோலத்தில் வழிபட வேண்டும். தக்ஷனின் மகளான சதி தேவி இவ்விரதத்தின் பயனால் சிவனாரை மணந்தாள். சவுபாக்கிய கவுரி விரதம் சௌபாக்கியம் எனப்படும் அனைத்து (பதினாறு) வகை பேறுகளையும் பெற்றுத் தரும்.
விரத நாள்:
பங்குனி மாதம் வளர்பிறை திருதியை அன்று அனுசரிக்கப்படுகிறது.
விரத முறை:
விரத தினத்தில் அதிகாலை நீராடி முறையாக சங்கல்பம் செய்து கொள்ள வேண்டும்.பூஜை அறையில் விளக்கேற்றி வைத்து சிவனாருடன் தேவி இணைந்த கோலத்தில் அம்பிகையின் உருவ படத்தை மலர் மாலை சூட்டி சிவப்பு வஸ்திரத் தால் அலங்கரிக்க வேண்டும்.
மங்கல பொருட்கள் என சொல்லப்படும் பதினாறு வகை பொருட்கள் மஞ்சள், குங்குமம், சந்தனம், காதோலை, கருமணி, மர சீப்பு, கண்மை, மஞ்சள் கயிறு, மெட்டி, கொலுசு, வளையல்கள், மருதாணி, தாம்பூலம் (வெற்றிலை, பாக்கு), புடவை, ரவிக்கை துண்டு ஆகியவை தயாராக வைத்து கொள்ள வேண்டும்.
பூக்கள், பழங்கள், பலகாரங்கள், நிவேதனப் பொருட்கள் ஆகியவையும் தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். பூஜையை காலை அல்லது மாலை செய்யலாம்.
முதலில் கணபதியை பூஜிக்க வேண்டும். பின்னர் நவகிரகங்களை வணங்க வேண்டும். பின்னர் சிவ பார்வதியை பூக்களால் அர்ச்சித்து வழிபட வேண்டும். தூப, தீப, கற்பூர ஆரத்தியுடன் , தயாராக உள்ள பழங்கள், பலகாரங்கள், நிவேதனப் பொருட்கள், மங்கள பொருட்கள் அனைத்தையும் பக்தியுடன் அர்ப்பணம் செய்ய வேண்டும்.
பின்னர் யாரேனும் இருவருக்கு உணவளித்து, பெண்களுக்கு தட்சணையுடன் தாம்பூலம் அளிக்க வேண்டும்.
- விளக்கேற்றி பூஜை செய்து வந்தால் நாம் நினைத்தது வெற்றி பெறும்.
- பவுர்ணமியில் கட்டாயம் விரதம் இருந்து வீட்டில் விளக்கு ஏற்றி வழிபட வேண்டும்.
சித்ரா பவுர்ணமியில் விளக்கேற்றினால் தான்யம் பெருமளவில் கிடைக்கும். வைகாசி பவுர்ணமியில் விளகேற்றினால் திருமணமாகாத பெண்களுக்கு நல்ல இடத்தில் வரன் பேசி முடிக்கப்பட்டு திருமணம் கைகூடும்.
ஆனி மாதப் பவுர்ணமியில் விளக்கேற்றினால் குழந்தையில்லாத பெண்களுக்கு புத்திர பாக்கியம் ஏற்படும்.
புரட்டாசி மாதப் பவுர்ணமியில் விளக்கேற்றினால் பசுக்கள் விருத்தியாகி பால் வியாபாரம் அதி கரிக்கும். லட்சுமி கடாட்சம் பெருகும்.
ஐப்பசி மாதம் பவுர்ணமியில் விளக்கேற்றினால் உணவு தான்யம் பெருகி பசிப்பிணிகள் நம்மை விட்டு அகலும்.
கார்த்திகை மாதப் பவுர்ணமியில் விளக்கேற்றினால் பேரும் புகழும் வளர்ந்து அது நிலைத்து நிற்கும்.
மார்கழி மாதப் பவுர்ணமி யில் விளக்கேற்றினால் தேக ஆரோக்கியம் ஏற்பட்டு உடல் பலம் பெறும்.
மாசி மாதப் பவுர்ணமியில் விளக்கேற்றினால் துன்பம் விலகி இன்பமும் மகிழ்ச்சியும் பெருகும்.
பங்குனி மாதப் பவுர்ணமி யில் விளக்கேற்றினால் தர்மமும், புண்ணியமும் செய்த பலன் கிட்டும்.
பவுர்ணமி அன்று பூஜை அறையில் ஐஸ்வர்ய கோலத்தை போட்டு நமது பிரார்த்தனையை மனத்தில் நினைத்து அல்லது ஒரு தாளில் எழுதி ஐஸ்வர்ய கோலத்தில் வைத்து விளக்கேற்றி பூஜை செய்து வந்தால் நாம் நினைத்தது வெற்றி பெறும்.
உலகத்தை படைத்த உலக நாயகியான அம்பிகையை பவுர்ணமியில் விரதம் இருந்து வழிபட வாழ்வில் இருக்கும் இருள் நீங்கி ஒளிமாயமான எதிர்காலம் அமையும் என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது. பவுர்ணமியில் கட்டாயம் விரதம் இருந்து வீட்டில் விளக்கு ஏற்றி வழிபட வேண்டும். இதனால் வாழ்வில் சகல வளங்களும் பெறலாம் என்பது ஐதீகம். வைகாசி மாத பவுர்ணமியில் விரதமிருந்து, வீட்டில் விளக்கு ஏற்றி அம்பிகையை வழிபட்டு வந்தால் அனைத்து நன்மைகளும் கிடைக்கும். பாயாசம் நைவேத்தியம் படைத்து பவுர்ணமியை வழிபட்டால் ஆயுள் விருத்தி உண்டாகும்.
பவுர்ணமியில் முருகன் வழிபாடு
திருச்சி மாநகருக்கு அருகில் உள்ள விராலி மலையில் வள்ளி தேவசேனை சமேதராகக் காட்சி அளிக்கும் சுப்ரமணியசுவாமி திருக்கோவிலில் சித்திரா பவுர்ணமி அன்று சங்காபிஷேகமும், வைகாசி விசாக விழாவும் பங்குனி உத்திர திருவிழாவும் சிறப்பானது. பவுர்ணமி நாள்களில் இம்மலையில் உள்ள முருகனைத் தரிசனம் செய்தால், இறைவனின் அருளைப் பெறுவதுடன் இங்குள்ள மூலிகையான விராலிச் செடியின் மனத்தைச் சுவாசிக்கும் பொழுது உடலில் உள்ள நோய்கள் மறைந்து ஆரோக்கியமான வாழ்வும் கிட்டும்.
பவுர்ணமியில் காமாட்சி தேர்
சிவனின் சொல்லை மீறி தட்சனின் யாகத்திற்குச் சென்ற பார்வதியைத் தட்சன் அவமதித்ததால் அந்த யாகத்தில் குதித்து விடுகிறாள். யாகத்தில் எரிந்து கொண்டிருந்த பார்வதியின் உடலை எடுத்து ருத்ர தாண்டவம் ஆடுகிறார். இதைக்கண்டு அஞ்சிய தேவர்களும் முனிவர்களும் இந்திரன் நாரதன் முதலானோர் பிரம்மனிடம் முறையிட இந்தப் பிரச்சினையை மகாவிஷ்ணுவால்தான் தீர்க்க முடியும் என்று விஷ்ணுவை வேண்ட, அவரும் தனது சக்ராயுதத்தால் அன்னையின் உடலை ஐம்பத்தோரு துண்டுகளாக வெட்டி வீச, அதில் பார்வதியின் தொப்புள் வீழ்ந்த இடம் காஞ்சி சக்தி பீடங்களில் ஒன்றாகத் திகழ்கிறது.
பவுர்ணமி தினங்களில் காமாட்சி தங்கத்தேரில் உலா வருவது சிறப்பான ஒன்று. ஆடிப்பூர பவுர்ணமி அன்று, அன்னைக்கு 108 பால் குட அபிஷேகம் நடைபெறும்.
இதில் கலந்து கொள்ளும் பக்தர் களுக்குக் காமாட்சியின் அருட்கடாட்சம் பூரணமாகக் கிட்டும். சகல நன்மைகளும் ஏற்படும்.
- விசாக நட்சத்திரத்தின் தேவதை குமரன். அதாவது முருகன்.
- விசாக நாளில் முருகனை வணங்கினால் நினைத்தது நிறைவேறும்.
வைகாசி விசாக நாளில் முருகன் வள்ளி, தெய்வானையுடன் இருக்கும் படத்தைச் சுத்தம் செய்து, சந்தன குங்குமப் பொட்டு வைத்து மலர்களால் அலங்கரிக்க வேண்டும். பின்னர் தலைவாழை இலையில், சர்க்கரைப் பொங்கல், தினைமாவு, பால், சித்ரான்னங்கள், பட்சணங்களை நைவேத்யமாகப் படைத்து குத்து விளக்கை ஏற்ற விநாயகப் பெருமானை மஞ்சளில் அல்லது பசுஞ்சாணத்தில் பிடித்து வைத்து பூஜை செய்ய வேண்டும்.
விநாயகர் பூஜை முடிந்தபின் முருகப் பெருமானுக்குரிய நாமங்களைச் சொல்லி அர்ச்சித்து தீபம் காட்டி வழிபட வேண்டும். மாலையில் அருகில் உள்ள முருகப்பெருமானின் கோவிலுக்கு சென்று வழிபட்டு விட்டு வீட்டிற்கு வந்ததும் கந்த சஷ்டி கவசம், கந்தரனுபூதி ஆகியவைகளைப் படிக்க வேண்டும். வைகாசி மாதத்தில் சூரியன் ரிஷப ராசியில் இருக்கிறார். அவர் அங்கிருந்து ஏழாம் பார்வையாக விசாக நட்சத்திரத்தைப் பார்க்கிறார். விசாக நட்சத்திரத்தின் தேவதை குமரன். அதாவது முருகன்.
சூரியன் விசாக நட்சத்திரத்தைப் பார்ப்பதன் மூலம் முருகனை வழிபடுவதாக ஐதீகம். எனவேதான், சூரியன் வழிபடும் முருகப்பெருமானை அந்நாளில் விரதமிருந்து நாமும் வழிபட்டு வருகிறோம்.
விசாக நாளில் முருகனை வணங்கினால் நினைத்தது நிறைவேறும். பகை நீங்கி அன்பு பெருகும் சுகம் கிடைக்கும். தீராத வினைகளும், எதிரிகளின் தொல்லைகளும் நீங்கும்.
குழந்தை பாக்கியத்திற்காக கோவில் கோவிலாக ஏறி இறங்கும் தம்பதியர் வைகாசி விசாகம் அன்று விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபட்டால் உடனே பலன் கிடைக்கும். இந்த விரதத்தை மேற்கொள்ளும் பெண்கள் மோர், பானகம், தயிர் சாதம் ஆகியவற்றை ஏழை எளியவர்களுக்கு தானம் கொடுப்பது மிகவும் நல்லது.
வைகாசி மாதம் முழுவதும், எவர் ஒருவர் சூரியன் உதிப்பதற்கு ஒரு மணி நேரம் முன்பே எழுந்து, குளித்து, கடவுளை வழிபடுகின்றாரோ, அவர்களுக்கு எங்கும், எதிலும் வெற்றி உறுதி என்கின்றன சாஸ்திரங்கள்! இயலாதவர்கள், வைகாசி பவுர்ணமி நாளிலாவது இதைக் கடைப்பிடிப்பது அவசியம்.
- வைகாசி விசாகம் இன்று கடைபிடிக்கப்படுகிறது.
- மாம்பழத்தை வைத்து கவச பாராயணம் செய்ய வேண்டும்.
அஞ்சு முகம் தோன்றின் ஆறுமுகம் தோன்றும்
வெஞ்சுமரில் அஞ்சேலென வேல் தோன்றும்-நெஞ்சில்
ஒருகால் நினைக்க இருகாலும் தோன்றும்
முருகா என்றோதுவோர் முன்.
-திருமுறை
ஒவ்வொரு மாதத்திலும் வரும் சிறப்பான நட்சத்திரம் அல்லது திதியைத் தேர்ந்தெடுத்து அதற்குரிய தெய்வத்தை கொண்டாடினால் சிறப்பான வாழ்க்கை அமையும். அந்த அடிப்படையில் வைகாசி விசாகம், ஆடிப்பூரம், கார்த்திகை திருக்கார்த்திகை, தைப்பூசம், பங்குனி உத்திரம், மாசி மகம் போன்றவைகள் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.
நட்சத்திர அடிப்படையில் நாம் தெய்வங்களை கொண்டாடும் பொழுது தான் அச்சமில்லாத வாழ்க்கை நமக்கு அமைகிறது. ஆற்றலும் அவன் அருளால் நமக்கு கிடைக்கிறது.
வரங்களைக் கொடுக்கும் கரங்கள் பனி ரெண்டைக் கொண்டவன் வடிவேலன். எனவே அவனுக்கு உகந்த நாளில் குறிப்பாக வைகாசி மாதம் வரும் விசாக நட்சத்திரத்தன்று முருகப்பெருமானை விரதம் இருந்து வழிபட்டால் வையகத்தில் நல்ல வளமான வாழ்க்கை அமையும். இந்த ஆண்டு வைகாசி விசாகம் இன்று (வெள்ளிக்கிழமை) கடைபிடிக்கப்படுகிறது.
வைகாசி விசாகம் தினத்தன்று விரதம் இருந்து தமிழ்க்கடவுள் முருகப்பெருமானை மனம் உருக வழிபட்டால் பகை விலகும். பாசம் பெருகும். அவனது திருப்புகழைப் பாடினால் எதிர்ப்புகள் அகலும். அன்றைய தினம், குடை, மோர், பாகனம், தயிர்சாதம் போன்றவற்றை தானம் செய்தால் குலம் தழைக்கும் என்று முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள்.
அன்று அதிகாலையில் விநாயகப் பெருமானை வழிபட்டு, இல்லத்து பூஜை அறையில் முருகப் பெருமான் படம் வைத்து, அதற்கு முன்னால் ஐந்து முக விளக்கேற்றி ஐந்து வித எண்ணெய் ஊற்றி, ஐந்து வித புஷ்பம் சாற்றி, ஐந்து வகை பழங்களை அர்ப்பணித்து, கந்தனுக்கு பிடித்த அப்பமான சுந்தரப்பத்தையும், அவனுக்கு பிடித்த மாம்பழத்தையும் வைத்து கவச பாராயணம் செய்ய வேண்டும். 'ஐந்து முகம் தோன்றில் ஆறுமுகம் தோன்றும்' என்பதற்கிணங்க, மயிலில் பறந்து வந்து மால்மருகன் வரம் தருவான்.
சிவபெருமானின் நெற்றிக்கண் தீப்பொறியில் இருந்து அவதரித்தவர் முருகன். சக்தி பார்வதிதேவி சேர்த்தெடுத்து ஞானப்பாலூட்டி வளர்த்த சக்திமைந்தன் தான் முருகன். இவர் விநாயகப்பெருமானின் இளைய சகோதரன், ஐயப்ப சுவாமியின் அண்ணன்.
திருமாலின் மருமகன், இந்திரனின் மாப்பிள்ளை, தேவயானை எனும் தேவியின் கணவன். வள்ளிக்குற மகளின் காதலன், வீரபாகு முதலான நவ வீர வாகுத்தேவர்கள் 9 பேரின் தோழன், தேவர்களுக்கு இன்னல்கள் விளைத்த தாரகாசூரன் சிங்கமுகன் சூரபத்மன் முதலான அசுரர்களை அழித்தவன்.
அகத்திய முனிவருக்கே தமிழ் இலக்கணம் போதித்த முதல் ஆசிரியன், அவ்வைப்பிராட்டிக்கு தத்துவ ஞானத்தை நாவல்பழம் மூலம் போதித்தவன். நக்கீரர், அருணகிரியார், குமரகுருபரர், கச்சியப்ப சிவசாரியார் போன்ற ஞானிகளுக்கே தமிழ் நூல்கள் எழுத போதித்த சற்குரு.
அப்பனுக்கே ஞானம் சொன்ன சுப்பன். தமிழகத்திற்கும் தமிழ்மொழிக்கும் தமிழ் மக்களுக்கும் உண்மையான தமிழ்த்தலைவன், வடக்கே பிறந்து தெற்கே வந்தாலும் முற்றிலும் செந்தமிழ் நாட்டிற்கே உரியவன்.
சித்தர்கள் பரம்பரையை துவக்கி வைத்த பெருமை முருகனுக்கு உண்டு. முருகப்பெருமான் குன்றுகள் இருக்குமிடம் தோறும் வீற்றிருக்கிறான்.
முருகனை மந்திரவடிவிலும், யந்திர வடிவிலும், யாக நெருப்பிலும், பற்பல சிற்ப வடிவிலும், ஓவிய வடிவிலும், தமிழ் மக்கள் வழிபாடு செய்து வருகிறார்கள். முருகப்பெருமானைப் பற்றி நாம் மேலும் அறிய வேண்டுமானால் கச்சியப்பரின் கந்தபுராணம், நக்கீரரின் திருமுருகாற்றுப்படை, அருணகிரியாரின் திருப்புகழ், குமரகுருபரரின் கந்தர்கலிவெண்பா முதலான படைப்புகளை சலிப்பே இல்லாமல் படித்து, அதை நுணுக்கமாக ஆராய வேண்டும்.
விசாகம் தினமான இன்று செய்யுங்கள். முருகன் அருள் நிரம்ப கிடைக்கும்.
- சிவபெருமானை வழிபட வேண்டிய முக்கிய விரதங்களில் ஒன்று பிரதோஷ விரதம்.
- இன்று உபவாசம் இருந்து சிவபெருமானை மனதார வழிபட வேண்டும்.
குருவிற்கு உகந்த நாளான வியாழக் கிழமையில் வருகிற பிரதோஷம் என்பதால் குருவார பிரதோஷம் என்று கூறப்படுகிறது. சிறந்த பலன்களைப் பெற சிவபெருமானை வழிபட வேண்டிய முக்கிய விரதங்களில் ஒன்று பிரதோஷ விரதம். இந்த நாளில் இறைவனை வழிபாடு செய்ய சகல பாவங்களும் நீங்கும் என்பது ஐதீகம். "அல்லற் பிறவி அறுப்பானே ஓவென்று" என்கிறார் மாணிக்கவாசகர். அதில் வைகாசியில் வருகிற, இந்த குருவார பிரதோஷத்தில் இறைவனை விரதம் இருந்து வழிபாடு செய்தால் வெற்றியை அடைவீர்கள். திருமண தடை ஏற்படுபவர்கள் குருவார பிரதோஷமான இன்று விரதம் இருந்து சிவபெருமானை வழிபாடு செய்தால் திருமண தடை நீங்கி விரைவில் திருமணம் நடக்கும்.
மகா பிரதோஷ வமர்ச்சயத என்றபடி திரயோதசி மாலையில் நிகழும் மகா பிரதோஷ காலத்தில் ஒவ்வொருவரும் சிவனை தரிசித்து மந்திரம் சொல்லி வணங்க வேண்டும்.
இன்று நாள் முழுவதும் உபவாசம் இருந்து சிவபெருமானை மனதார வழிபட வேண்டும். நாள் முழுவதும் உபவாசம் இருக்க முடியாதவர்கள் பழங்களை சாப்பிட்டு விரதம் அனுஷ்டிக்கலாம்.
இன்று மாலை வீட்டில் அம்பிகையுடன் கூடிய பரமேஸ்வரசாம்ப பரமேஸ்வரராக முறையாக பூஜை செய்து பஞ்சாட்சர மந்திரம் சொல்லி சிவாலயம் சென்று தம்பதிகளாக சிவனை தரிசனம் செய்ய வேண்டும். இதனால் தேவையான சமயத்தில் தேவையான எண்ணங்கள், தீர்வுகள் மனதில் தோன்றி நல்லவை நடக்கும்.
இன்று கவாமயன துவாதசி
வைகாசி மாத சுக்லபட்ச துவாதசி அன்று காலையில் திரி விக்ரம் மூர்த்தியான ஸ்ரீ மகாவிஷ்ணுவை துளசி, மல்லிகை பூ ஆகியவற்றால் சகஸ்ர நாமார்ச்சனை செய்து மாம்பழம் நிவேதனம் செய்து பூஜை செய்து ஏழைகளுக்கு சாப்பாடு போட்டு குடும்பத்தினருடன் சேர்ந்து சாப்பிட வேண்டும். திரிவிக்ரம் மூர்த்தியை வணங்குவதால் யாகங்களில் சிறந்த தான கவாமயனம் என்னும் யாகம் செய்த பலன் சுலபமாக கிடைக்கும். அத்துடன் அனைத்து சுகமும் கிடைக்கும்.
- ஒவ்வொரு மாதத்திலும் இரு ஏகாதசிகள் வருகின்றன.
- வருடத்திற்கு 24 ஏகாதசிகள் உள்ளன.
ஆனி மாத வளர்பிறையில் வரும் ஏகாதசி நிர்ஜல ஏகாதசி என போற்றப்படுகிறது. பீமனே அனுஷ்டித்த விரதம் என்பதால் இந்த விரதம் 'பீம விரதம்' என்றும் பீம ஏகாதசி என்றும் போற்றப்படுகிறது.
இன்று தண்ணீர் தானம் செய்பவர்கள் ஒரு கோடி தங்கம் தானம் செய்த பலன் பெறுகிறார்கள். இந்த ஏகாதசியின் சிறப்பை கேட்பவர்கள் வைகுண்ட பதம் அடைவார்கள். மகத்துவம் நிறைந்த இந்த நாளில் ஒரு குடம் ஏன் ஒரு வாட்டர் பாட்டில் தண்ணீராவது தவித்த வாய்க்கு தானமாக கொடுத்து பாருங்கள் அப்புறம் உங்களுக்கு நடக்கும் நன்மைகளை நீங்கள் அறிவீர்கள்.
நிர்ஜல ஏகாதசி விரதமிருப்போர் எமதர்மராஜாவை சந்தித்து அவருடைய கேள்விகளுக்கு பதில் சொல்லி தண்டனை அனுபவிக்க வேண்டாம். வைகுண்டத்தின் தூதுவர்கள் இறப்பிற்கு பின் நேரடியாக வைகுண்டத்திற்கு அழைத்து செல்வார்கள். புனித நதிகளில் நீராடிய பலனும், பலவிதமான தானங்களை அளித்த பலனும் இந்த ஏகாதசி விரதத்தின் மூலம் கிடைக்கும்.
நிர்ஜல ஏகாதசியின் மகிமையைப் பற்றி கேட்பவருக்கு சூரிய கிரகணத்தில் வரும் அமாவாசை திதியில் சிரார்த்தம் செய்த பலன் கிட்டும். ஒரு பிராமணனை கொன்ற பாபம், தொடர்ந்து பொய் சொன்ன பாபம், மது அருந்திய பாபம், தன் குருவை மதிக்காமல் ஏளனம் செய்த பாபம் இவற்றிலிருந்து விடுபடலாம்.
இந்த ஏகாதசி விரதமிருப்போர் தங்கள் பாபத்திலிருந்து விடுபடுவார்கள்.அவர்களின் நூறு தலைமுறைக்கான மூதாதையர்களும் தங்கள் பாப சுமையிலிருந்து விடுபடுவார்கள். இன்று நீங்களும் பெருமாளை நினைத்து விரதம் இருந்து ஒரு குடம் தண்ணீர் யாருக்காவது தானமாக கொடுங்களேன்.
- வைகாசி மாத சுக்லபட்ச ஏகாதசிக்கு நிர்ஜலா ஏகாதசி எனப்பெயர்.
- அனைத்து பாவங்களும்-துன்பங்களும் விலகும்.
வைகாசி மாத சுக்லபட்ச ஏகாதசிக்கு நிர்ஜலா ஏகாதசி எனப்பெயர். கலி தோஷத்தால் ஏற்படும் பாபங்களையும் துன்பங்களையும் போக்கும் சக்தி ஏகாதசி உபவாசத்துக்கு உண்டு. ஆகவே தான் 8 வயது முதல் 80 வயது வரையுள்ள ஆண்கள், பெண்கள் அனைவரும் ஏகாதசியன்று எதுவும் சாப்பிடாமல் உபவாசம் இருக்க வேண்டும் என்கிறது சாஸ்த்திரம்.
பஞ்சபாண்டவர்களுக்குள் பீமன் மிகவும் பலம் பொருந்தியவர். அதற்குத் தக்க பலமான ஆகாரம் சாப்பிட்டுப் பழக்கப்பட்டவர். ஒரு சமயம் பீமன் வேதவ்யாஸ் மகரிஷியிடம் சென்று 'எனது வீட்டில் சகோதரர்களும், தாயாரும், மனைவியும் ஏகாதசி உபவாசம் அனுஷ்டிக்கின்றனர். அவர்கள் என்னையும் அனுஷ்டிக்குமாறு கூறுகின்றார்கள். எனக்கும் ஏகாதசி உபவாசம் அனுஷ்டிக்க வேண்டும் என்று விருப்பம். ஆனால் என்னால் உணவு உண்ணாமல் உபவாசம் இருப்பது என்பது இயலாத காரியம் என்ன செய்வது? என்று கேட்டார் பீமன்.
ஸ்ரீவேதவியாசரும் சிரித்துக்கொண்டே, பீமா! உன்னால் ஆண்டு முழுவதும் வரும் 25 ஏகாதசியிலும் உபவாசம் இருக்க முடியாவிட்டாலும் பரவாயில்லை. ஆனி மாத சுக்லபட்ச (நிர்ஜலா) ஏகாதசியன்று மட்டும் தண்ணீர் கூட அருந்தாமல் உபவாசம் இரு. அதுவே ஆண்டு முழுவதும் அனைத்து ஏகாதசிகளிலும் உபவாசம் இருந்த பலனை உனக்குத்தரும் என்று ஸ்ரீகிருஷ்ணர் கூறியதை பீமனிடம் கூறினார்.
பீமனும் அவ்வாறே நிர்ஜல ஏகாதசியன்று சுத்த உபவாசம் இருந்து துவாதசியன்று சாப்பிட்டார். அது முதல் இந்த நாளுக்கு பீம ஏகாதசி என்றும், நிர்ஜல ஏகாதசி என்றும் பெயர் ஏற்பட்டது. ஆகவே நாளை எதுவும் சாப்பிடாமல் உபவாசம் இருப்பதால் ஓரு வருடம் முழுவதும் ஏகாதசியன்று உபவாசம் இருந்த பலன் கிட்டும். அனைத்து பாவங்களும்-துன்பங்களும் விலகும்.
ஆன்மிகம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/devotional
- செவ்வாய்கிழமை துர்க்கை வழிபாட்டிற்கு உகந்ததாக கருதப்படுகிறது.
- வெள்ளிக்கிழமை அம்மனுக்கு உகந்த நாள்.
திங்கட்கிழமை
திங்கட்கிழமை எனப்படும் சோமவாரம் சிவபெருமானுக்கு உகந்த நாளாகும். திங்கட்கிழமைகளில் வரும் பிரதோஷங்களில் சிவனை வேண்டி பிரதோஷ விரதம் இருப்பது மிகுந்த நன்மையை தரும். சோமவாரம் விரதம் இருந்து , ஈசனுக்கு பால் , அரிசி மற்றும் சர்க்கரை படைப்பது மிகவும் சிறந்தது என ஆன்மிகப் பெரியவர்கள் கூறியுள்ளனர்.
செவ்வாய் கிழமை
செவ்வாய் கிழமை என்றதும் நமக்கு முதலில் நினைவிற்கு வருவது துர்க்கை அம்மனும் , ராகு காலத்தில் ஏற்றப்படும் எலுமிச்சை விளக்கும் தான். அந்த அளவிற்கு செவ்வாய்கிழமை துர்க்கை வழிபாட்டிற்கு உகந்ததாக கருதப்படுகிறது. செவ்வாய் கிழமைகளில் விரதமிருந்து ராகு காலத்தில் எலுமிச்சை தீபம் ஏற்றி வந்தால் , இல்லத்தில் துன்பம் நீங்கி இன்பம் பெருகும். அன்று முருகனுக்கும் உகந்த நாள். அன்றைய தினம் முருகப்பெருமானை வணங்கி கந்தசஷ்டி கவசம் படித்துவந்தால் பொல்லாதவரை பொடிப்பொடியாக்கும்.
புதன்கிழமை
புதன் கிழமை ஆனைமுகத்தனை வணங்க ஏற்ற நாளாகும். புதன்கிழமைகளில் விநாயகருக்கு விரதம் இருந்து வழிபட , எந்த ஒரு காரியமும் தடங்கல் இல்லாமல் நடக்கும்.
வியாழன் கிழமை
வியாழன் கிழமைகளில் விஷ்ணு , தட்சணாமூர்த்தி மற்றும் லக்ஷ்மி தேவி ஆகிய கடவுளுக்கு விரதம் இருப்பது நன்மையை தரவல்லது. அன்று குபேரனுக்கும் சிறப்பான நாளாக கருதப்படுகிறது.
வெள்ளிக்கிழமை
வெள்ளிக்கிழமை அம்மனுக்கு உகந்த நாள். மேலும் செல்வத்தை வாரி வழங்குபவளான திருமகளை வணங்கவும் ஏற்ற நாளாக கருதப்படுகிறது. வெள்ளிக்கிழமைகளில் பெண்கள் அம்மனுக்கு விரதமிருந்து வழிபடுவது அவர்களையும் அவர்கள் குடும்பத்தையும் காக்கும்.
சனிக்கிழமை
நவகிரகங்களில் அனைவரின் தலை எழுத்தையும் மாற்றவல்ல சனிபகவானுக்கு உகந்த நாள் சனிக்கிழமை. ஆஞ்சநேயர் , பெருமாள் , மற்றும் காளி தேவிக்கும் சனிக்கிழமை உகந்த நாளே. சனிக்கிழமை அன்று அருகில் உள்ள சிவாலயங்களுக்கு சென்று சனிபகவானுக்கு எள் தீபம் ஏற்றினால் ஜாதக ரீதியாக ஒருவருக்கு ஏற்படும் சனி தோஷத்திற்கு நிவாரணம் கிடைக்கும்.
ஞாயிற்றுக்கிழமை
நவகிரகங்களில் முதன்மையானவராகக் கருதப்படும் சூரிய பகவானுக்கு ஏற்ற நாள் ஞாயிற்றுக்கிழமை. ஞாயிற்று கிழமைகளில் தவறாமல் சூரிய பகவானுக்கு விரதமிருந்து வழிபட்டால் , எதிரிகளின் தொல்லைகளில் இருந்து நம்மை காப்பாற்றுவதோடு, நம்முடைய வாழ்க்கையும் அந்த சூரியனைப் போன்று பிரகாசமாக இருக்கும்...
- சிவவழிபாட்டின் சிறப்புகளை வேதங்கள் விளக்குகின்றன.
- ருத்திரன் என்றால் துன்பங்களைத் துடைப்பவன் என்று பொருள்.
இந்து புராணங்களின்படி சிவபெருமானே மிகவும் சக்தி வாய்ந்த கடவுளாக கருதப்படுகிறார். இவருடைய நெற்றிக்கண் உலகில் உள்ள தீமைகளை அழிக்கும் என அனைவராலும் நம்பப்படுகிறது.
சிவம் என்றும் சிவபெருமான் என்றும் பரவலாக அழைக்கப்பெறும் இவருக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெயர்கள் இருக்கின்றன. சிவவழிபாட்டின் சிறப்புகளை வேதங்கள் விளக்குகின்றன. இதிகாசங்கள் எடுத்துரைக்கின்றன. உபநிஷதங்கள் உணர்த்துகின்றன. வேதங்களிலும், உபநிஷத்துகளிலும் சிவபெருமான், ருத்திரன் என்ற பெயரில் குறிப்பிடப்படுகிறார். ருத்திரன் என்றால் துன்பங்களைத் துடைப்பவன் என்று பொருள்.
சிவனருள் பெற விரும்புவோர் எட்டு விதமான விரதங்களை மேற்கொண்டு நன்மை பெறலாம்.
1. சோமவார விரதம் – வாரம் தோறும் திங்கட்கிழமைகளில் இருப்பது
2. உமாமகேஸ்வர விரதம் கார்த்திகை பவுர்ணமியன்று (திருக்கார்த்திகை) இருப்பது
3. திருவாதிரை விரதம் – மார்கழி திருவாதிரையன்று விரதமிருப்பது
4. சிவராத்திரி விரதம் – மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தசி திதியன்று வருவது
5. கல்யாண விரதம் – பங்குனி உத்திர நாளில் கடைபிடிப்பது
6. பாசுபத விரதம் – தைப்பூசத்தன்று மேற்கொள்ளும் விரதம்
7. அஷ்டமி விரதம் – வைகாசி மாத வளர்பிறை அஷ்டமியன்று அனுஷ்டிப்பது.
8. கேதாரகவுரி விரதம் – ஐப்பசி அமாவாசையை ஒட்டி (தீபாவளி அல்லது அதன் மறுநாள்) இருப்பது...
- வைகாசி மாதம் சிவபெருமானை போற்றி கடைப்பிடிக்கப்படும் விரதம்"ரிஷப விரதம்" ஆகும்.
- இவ்விரதத்தை கடைப்பிடிப்பதால் நமது பாவங்கள் நீங்கும்.
சிவபெருமானை வணங்கும் "ரிஷப விரதம்" குறித்தும், அவ்விரதத்தால் நமக்கு கிடைக்கும் பலன்கள் என்ன என்பதையும் இங்கு அறிந்து கொள்ளலாம்.
ரிஷப விரதம் என்பது சிவபெருமானின் வாகனமாக இருப்பவரும், அவரின் அணுக்க தொண்டராக இருக்கும் ரிஷபமாகிய நந்திதேவர் மற்றும் சிவபெருமான் ரிஷபாரூடர் என்கிற பெயரில் அழைக்கப்படும் சிவனுக்கு இருக்கும் விரதம் தான் ரிஷப விரதம் எனப்படுகிறது. இந்த விரதம் அனுஷ்டிப்பதற்கு சரியான காலகட்டம் சூரியன் ரிஷப ராசியில் சஞ்சரிக்கும் வைகாசி மாதமாகும்.
வைகாசி மாதத்தில் வரும் மாத சிவராத்திரி, பிரதோஷம் ஆகிய தினங்களில் இந்த ரிஷப விரதத்தை மேற்கொள்வது சிறந்தது. ரிஷப விரதம் மேற்கொள்ளும் தினத்தன்று அதிகாலையில் எழுந்ததும் மனதிற்குள் நந்தி மீது ரிஷபாரூடராக வீற்றிருக்கும் சிவபெருமானை வணங்க வேண்டும். பின்பு குளித்து முடித்ததும், உணவு ஏதும் உண்ணாமல் உங்களிடம் வெள்ளியால் செய்யப்பட்ட சிறிய அளவு ரிஷபாரூடர் விக்ரகம் இருந்தால், உங்கள் பூஜையறையில் வைத்து, மலர்களை சமர்ப்பித்து, சிவனுக்கு பிடித்த அரிசி கொண்டு செய்யபட்ட அன்னங்கள் மற்றும் பாயசத்தை நைவேத்தியமாக வைத்து சிவமந்திரங்களை துதித்து வழிபட வேண்டும். உண்ணாவிரதம் இருக்க முடியாதவர்கள் பால், பழங்கள் சாப்பிடலாம்.
வைகாசி வளர்பிறை அஷ்டமியில் இடபத்தில் அமர்ந்த நிலையில் உள்ள அம்மையப்பரான உமா மகேஸ்வரரை நினைத்து பின்பற்றப்படும் விரதமுறையாகும். இவ்விரதத்தை கடைப்பிடிப்பதால் நமது பாவங்கள் நீங்கும்.
இந்த விரதம் கடைப்பிடித்தால் வாகன யோகம் மற்றும் வாகனம் சம்பந்தமான பிரச்சினைகளை போக்க வல்ல விரதம் இது. மேலும் விவசாய சம்மந்தமான வாகனங்களின் சேர்க்கையும் ஏற்படும் என ஸ்கந்த புராணம் குறிப்பிடுகிறது.
இந்த விரதத்தினால் வாகனயோகம் அடையலாம். புதிய வாகனம் வாங்குவோர் அல்லது பதிவு செய்வோர்க்கு நற்பலன் உண்டு. ரிஷப விரதத்தைக் கடைப்பிடித்து இந்திரன் ஐராவத்தையும், குபேரன் புஷ்பக விமானத்தையும் தங்களது வாகனமாகப் பெற்றார்கள் என்று புராணம் கூறுகின்றது.
இத்தினத்தில் காலை அல்லது மாலை வேளைகளில் சிவன் கோயிலுக்கு சென்று சிவபெருமானுக்கு பஞ்சாமிர்த அபிஷேகம் செய்து வழிபட்டால் உங்களுக்கு சிறந்த நன்மைகள் உண்டாகும். பின்பு உங்களால் முடிந்த அளவிற்கு அக்கோயில்களில் சிவனடியார்களுக்கும், இன்ன பிற பக்தர்களுக்கும் அன்னதானம் செய்து அந்த பக்தர்களுடன் சேர்ந்து நீங்களும் பிரசாதங்களை சாப்பிட வேண்டும். பிறகு சிவ சிந்தனையுடன் வீட்டிற்கு திரும்பி, சிவனை வழிபட்டு இரவு உணவாக பால் மற்றும் பழங்களை சாப்பிட்டு ரிஷப விரதத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.
ரிஷப விரதம் பற்றி ஸ்கந்த புராணத்தில் கூறப்பட்டுள்ளன. ரிஷப விரதத்தை முறையாக அனுஷ்டிப்பவர்களுக்கு ஆயுள் அதிகரிக்கும், நோய்கள் அண்டாத வாழ்வு உண்டாகும், செல்வ நிலை உயரும், அனைத்து நியாயமான ஆசைகளும் பூர்த்தியாகும், அஷ்ட யோகம் ஏற்படும், சிவயோகி ஆகவும் கூடும். அஷ்டதிக் பாலகர்கள், கருட பகவான் போன்றோர்கள் இந்த ரிஷப விரதத்தை அனுஷ்டித்து சிவனிடம் பல வரங்களை பெற்றனர்.
- இன்று முருகனுக்கு உகந்த சஷ்டியில், பார்வதி மைந்தனை வழிபடுங்கள்.
- முருகப்பெருமானுக்கு செந்நிற மாலைகளைச் சூட்டுங்கள்.
மாதந்தோறும் வருகிற சஷ்டியில், விரதமிருந்து முருகனைத் தரிசித்து, வேண்டிக்கொள்வார்கள் பக்தர்கள். விரதம் இருக்க இயலாதவர்கள், அந்தநாள் முழுவதும் சிவமைந்தனை நினைத்தபடி, கவசங்களைப் பாராயணம் செய்வார்கள். சஷ்டி கவசம் படிப்பார்கள். வீட்டில் விளக்கேற்றி, முருகப்பெருமானுக்கு நைவேத்தியம் செய்து வழிபடுவார்கள்.
சஷ்டி திதியில் கந்தனை விரதம் இருந்து வழிபடுவது ரொம்பவே விசேஷம். இந்தநாளில், காலையும் மாலையும் வீட்டு பூஜையறையில் விளக்கேற்றுங்கள். முருகப்பெருமானுக்கு செந்நிற மாலைகளைச் சூட்டுங்கள். செவ்வரளி மாலை சார்த்தி வழிபட்டால், நம் சிக்கல்களெல்லாம் தீரும். கஷ்டங்களெல்லாம் காணாமல் போகும்!
சஷ்டி விரதம் மேற்கொள்பவர்கள், காலை அல்லது மாலையில், அருகில் உள்ள முருகன் கோயிலுக்குச் சென்று வழிபடுங்கள். தனிக்கோயில் என்றில்லாமல், சிவன், அம்மன் கோயில்களில் முருகனுக்கு சந்நிதி இருக்கும். அங்கு சென்றும் தரிசிக்கலாம். முருகக்கடவுளுக்கு நடைபெறும் அபிஷேக, ஆராதனைகளைக் கண்குளிர தரிசிக்கலாம்.
வீட்டில், முருகப்பெருமானுக்கு சர்க்கரைப் பொங்கலோ எலுமிச்சை சாதமோ நைவேத்தியம் செய்து, அக்கம்பக்கத்தாருக்கு வழங்குங்கள். கஷ்டங்களெல்லாம் தீரும். வாழ்வில் நஷ்டங்களெல்லாம் முடிவுக்குக் கொண்டுவருவார் வள்ளிமணாளன். எதிர்ப்புகள் அனைத்தும் தவிடுபொடியாகும். வழக்கு முதலான விஷயங்களில் வெற்றி கிடைக்கும்.
இன்று முருகனுக்கு உகந்த சஷ்டியில், பார்வதி மைந்தனை வழிபடுங்கள். மனதில் உள்ள பயமெல்லாம் போக்கி, காரியத்தில் வெற்றியைத் தேடித் தந்தருள்வார் ஞானகுமாரன்!
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்