search icon
என் மலர்tooltip icon

    முக்கிய விரதங்கள்

    இன்று முருகனுக்கு விரதம் இருந்தால் குழந்தை பாக்கியம் நிச்சயம்...
    X

    இன்று முருகனுக்கு விரதம் இருந்தால் குழந்தை பாக்கியம் நிச்சயம்...

    • விசாக நட்சத்திரத்தின் தேவதை குமரன். அதாவது முருகன்.
    • விசாக நாளில் முருகனை வணங்கினால் நினைத்தது நிறைவேறும்.

    வைகாசி விசாக நாளில் முருகன் வள்ளி, தெய்வானையுடன் இருக்கும் படத்தைச் சுத்தம் செய்து, சந்தன குங்குமப் பொட்டு வைத்து மலர்களால் அலங்கரிக்க வேண்டும். பின்னர் தலைவாழை இலையில், சர்க்கரைப் பொங்கல், தினைமாவு, பால், சித்ரான்னங்கள், பட்சணங்களை நைவேத்யமாகப் படைத்து குத்து விளக்கை ஏற்ற விநாயகப் பெருமானை மஞ்சளில் அல்லது பசுஞ்சாணத்தில் பிடித்து வைத்து பூஜை செய்ய வேண்டும்.

    விநாயகர் பூஜை முடிந்தபின் முருகப் பெருமானுக்குரிய நாமங்களைச் சொல்லி அர்ச்சித்து தீபம் காட்டி வழிபட வேண்டும். மாலையில் அருகில் உள்ள முருகப்பெருமானின் கோவிலுக்கு சென்று வழிபட்டு விட்டு வீட்டிற்கு வந்ததும் கந்த சஷ்டி கவசம், கந்தரனுபூதி ஆகியவைகளைப் படிக்க வேண்டும். வைகாசி மாதத்தில் சூரியன் ரிஷப ராசியில் இருக்கிறார். அவர் அங்கிருந்து ஏழாம் பார்வையாக விசாக நட்சத்திரத்தைப் பார்க்கிறார். விசாக நட்சத்திரத்தின் தேவதை குமரன். அதாவது முருகன்.

    சூரியன் விசாக நட்சத்திரத்தைப் பார்ப்பதன் மூலம் முருகனை வழிபடுவதாக ஐதீகம். எனவேதான், சூரியன் வழிபடும் முருகப்பெருமானை அந்நாளில் விரதமிருந்து நாமும் வழிபட்டு வருகிறோம்.

    விசாக நாளில் முருகனை வணங்கினால் நினைத்தது நிறைவேறும். பகை நீங்கி அன்பு பெருகும் சுகம் கிடைக்கும். தீராத வினைகளும், எதிரிகளின் தொல்லைகளும் நீங்கும்.

    குழந்தை பாக்கியத்திற்காக கோவில் கோவிலாக ஏறி இறங்கும் தம்பதியர் வைகாசி விசாகம் அன்று விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபட்டால் உடனே பலன் கிடைக்கும். இந்த விரதத்தை மேற்கொள்ளும் பெண்கள் மோர், பானகம், தயிர் சாதம் ஆகியவற்றை ஏழை எளியவர்களுக்கு தானம் கொடுப்பது மிகவும் நல்லது.

    வைகாசி மாதம் முழுவதும், எவர் ஒருவர் சூரியன் உதிப்பதற்கு ஒரு மணி நேரம் முன்பே எழுந்து, குளித்து, கடவுளை வழிபடுகின்றாரோ, அவர்களுக்கு எங்கும், எதிலும் வெற்றி உறுதி என்கின்றன சாஸ்திரங்கள்! இயலாதவர்கள், வைகாசி பவுர்ணமி நாளிலாவது இதைக் கடைப்பிடிப்பது அவசியம்.

    Next Story
    ×