search icon
என் மலர்tooltip icon

    முக்கிய விரதங்கள்

    • பைரவர் விரதம் அனைத்து அஷ்டமி திதிகளிலும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
    • பைரவ விரதம் தொடர்ச்சியாக 21 அஷ்டமி திதிகளில் கடைப்பிடிப்பது மிகவும் சிறப்பானதாகும்.

    சிவனின் அம்சமான கால பைரவரை எந்தெந்த நாளில், எந்த ராசியினர் வழிபடுவது சிறப்பு, எப்படி வழிபட வேண்டும் என்பதை பார்ப்போம்.

    பைரவர் சிவனின் 64 திருஉருவத்தில் ஒருவர் ஆவார். சொர்ணாகர்ஷண பைரவர், யோக பைரவர், ஆதி பைரவர், கால பைரவர், உக்கிர பைரவர் என பல பெயர்களில் அழைக்கப்படுகின்றார்.

    பைரவரின் சன்னதி ஒவ்வொரு சிவன் கோவிலிலும் வடகிழக்கு பகுதியில் நின்ற கோலத்தில் இருக்கும். அவர் ஐப்பசி மாதத்தில் வரும் தேய்பிறை அஷ்டமி தினத்தில் அவதரித்தார், என்பதால் ஒவ்வொரு மாதமும் வரும் தேய்பிறை அஷ்டமி தினம் மிகுந்த விசேஷமாக பார்க்கப்படுகிறது.

    பைரவர் விரதம் அனைத்து அஷ்டமி திதிகளிலும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதிலும் செவ்வாய்க்கிழமையில் வரும் அஷ்டமி திதி மிகவும் விசேஷம் ஆகும்.

    பைரவ விரதம் தொடர்ச்சியாக 21 அஷ்டமி திதிகளில் கடைப்பிடிப்பது மிகவும் சிறப்பானதாகும். இத்தனை சிறப்பு மிக்க பைரவரை 12 ராசிக்காரர்கள், அதற்குரிய கிழமைகளில், வழிபட்டால், சிறந்த பலனை அடையலாம்.

    ஞாயிறுக்கிழமை

    சிம்ம ராசியினர் ஞாயிற்றுக் கிழமையில் வழிபடுவதால், தள்ளிப்போகும் திருமணம் கை கூடும். இந்த கிழமையில் சிம்ம ராசி உள்ள ஆண், பெண்கள் பைரவருக்கு ராகு காலத்தில் அர்ச்சனை, ருத்ராட்ச அபிஷேகம், வடை மாலை சாற்றி வழிபட்டால், திருமண தடை நீங்கி விரைவில் நடை பெறும்.

    திங்கட்கிழமை

    கடக ராசியினர் திங்கட் கிழமை அல்லது சங்கடஹர சதுர்த்தி தினத்தில் பைரவருக்கு பன்னீர் அபிஷேகம் செய்து, சந்தன காப்பிட்டு, புனுகு பூசி, நந்தியாவட்டை மலர் மாலை அணிவித்து வழிபட்டு வந்தால், கண் சம்பந்தமான நோய்கள் குணமாகும்.

    செவ்வாய்க்கிழமை

    மேஷம் மற்றும் விருச்சிக ராசியினர் செவ்வாய்க் கிழமையில் பைரவரை வழிபடுவதால் சிறப்பான பலன்களை தரும். மிளகு தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால் இழந்த பொருளை திரும்ப பெறலாம்.

    புதன்கிழமை

    மிதுனம், கன்னி ராசியினர் புதன் கிழமைகளில் பைரவரை வழிபடுவதன் மூலம் நற்பலன்களைப் பெறலாம். நெய் தீபம் ஏற்றி வழிபடுவதால் பூமி லாபம் கிடைக்கும்.

    வியாழக்கிழமை

    தனுசு, மீன ராசியினர் பைரவரை வியாழக்கிழமைகளில் வழிபடுவதன் மூலம் சிறப்பான பலன்கள் கிடைக்கும். குறிப்பாக வியாழக்கிழமையில் விளக்கேற்றி வழிபட்டால் பில்லி சூனியம் விலகும் என்பது ஐதீகம்.

    வெள்ளிக்கிழமை

    ரிஷபம், துலாம் ராசியினர் வெள்ளிக்கிழமை அன்று கால பைரவரை வழிபடுவதால் சிறப்பான பலன்களை பெறலாம். வெள்ளிக்கிழமை மாலையில் வில்வ இலையாலும், வாசனை மலர்களாலும் சகஸ்ரநாம அர்ச்சனை செய்து வந்தால் வறுமை நீங்கி செல்வம் சேரும்.

    சனிக்கிழமை

    மகரம், கும்ப ராசியினர் சனிக்கிழமையன்று பைரவரை வழிபடுவதால் சிறப்பான பலன்களை தரும். சனி பகவானுக்கு பைரவர் தான் குரு ஆவார். இதனால் அஷ்டம சனி, ஏழரை சனி, அர்த்தாஷ்டமச் சனி விலகி நல்லது நடக்கும் என்பது ஐதீகம். மேலும் தேய்பிறை அஷ்டமியில் பஞ்ச தீபம் ஏற்றி வழிபட்டால் காலத்தினால் தீர்க்க முடியாத தொல்லைகள் நீங்கி, நல்லவை வந்து சேரும்.

    • லலிதா சகஸ்ர நாம பாராயணம் செய்யுங்கள்.
    • வீட்டின் தரித்திரங்கள் அனைத்தும் விலகும்.

    பங்குனி கடைசி செவ்வாய்; விரதம் இருந்து வீட்டு பூஜையறையில் விளக்கேற்றுங்கள்...

    panguni viratham rahu kala pooja

    விரதம், Viratham

    பங்குனிச் செவ்வாயில், விரதம் இருந்து ராகுகாலவேளையில் வீட்டுப் பூஜையறையில் விளக்கேற்றுங்கள். அம்பாள் துதி பாராயணம் செய்து வேண்டிக் கொள்ளுங்கள். வீட்டின் தரித்திரங்கள் அனைத்தும் விலகும். சுபிட்சம் குடிகொள்ளும்.

    பங்குனி மாதத்தின் ஒவ்வொரு செவ்வாய்க் கிழமையும் மகத்துவம் வாய்ந்தது. இந்தநாளில் விரதம் இருந்து இறை வழிபாடு செய்வது, வீட்டில் மங்கல காரியங்களை நடத்தித் தரும். ஐஸ்வரிய கடாட்சங்களை அள்ளிக் கொடுக்கும்.

    அம்பாளுக்கு உரிய செவ்வாய்க்கிழமையில், சக்தி வழிபாடு செய்யச் செய்ய, துஷ்ட சக்திகள் நம்மை விட்டு விலகும். தீயசக்திகள் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று ஓடும்.

    மேலும் செவ்வாய்க்கிழமை என்பது முருகப் பெருமானுக்கும் உகந்த நன்னாள். சூரத்தனம் செய்பவர்களையும் அசுர குணம் கொண்டவர்களையும் தன் வேல் கொண்டு அழிப்பதில் வல்லவன் கந்தக் கடவுள் என்கிறது புராணம்.

    எல்லாவற்றையும் விட முக்கியமாக, செவ்வாய்க்கிழமை விரதம் இருந்து ராகுகால வேளையில், அம்மனை வழிபடுவது, ஆயிரம் மடங்கு பலனையும் பலத்தையும் தரவல்லது. அதனால்தான், செவ்வாய்க்கிழமைகளில், ராகுகால வேளையில், துர்கைக்கு தீபமேற்றி வணங்குகின்றனர் பக்தர்கள்.

    இன்று செவ்வாய்க்கிழமை. பங்குனி மாதத்தின் கடைசி செவ்வாய்க்கிழமை. இந்தநாளில், விரதம் இருந்து ராகுகால வேளையான மாலை 3 முதல் 4.30 மணிக்குள்ளான நேரத்தில், வீட்டுப் பூஜையறையில் விளக்கேற்றுங்கள். லலிதா சகஸ்ர நாம பாராயணம் செய்யுங்கள். துர்கை துதி முதலான ஸ்லோகங்களைப் பாராயணம் செய்யுங்கள். வீட்டின் தரித்திரங்கள் அனைத்தும் விலகும். சுபிட்சம் குடிகொள்ளும். தடைகள் அனைத்தும் விலகும். அமைதியும் ஆனந்தமும் நிறைந்து, குடும்பத்தில் நிம்மதி தவழும்!

    • பங்குனி சங்கடஹர சதுர்த்தியில் விநாயகப் பெருமானை வணங்கி வழிபடுவோம்.
    • நம் தொல்லைகளையும் துக்கங்களையும் தீர்த்தருளுவார் தும்பிக்கையான்.

    பங்குனி மாதம் வழிபாட்டுக்கான மாதம். பூஜைகளும் பிரார்த்தனைகளும் செய்வதற்கு உகந்த மாதம். தெய்வங்கள் பலவற்றுக்கும் திருமணங்கள் அரங்கேறிய மாதம். எனவே இந்த மாதத்தில் தெய்வங்கள் முழு சாந்நித்தியத்தை வெளிப்படுத்தி, பிரபஞ்சத்தையும் மக்களையும் அமைதிப்படுத்தி ஆனந்தத்திலும் நிறைவிலுமாக ஆழ்த்துவார்கள் என்பது ஐதீகம்.

    பங்குனி மாதத்தில், ஐயப்பனின் அவதார தினமும் வரும். ஸ்ரீராமபிரானின் அவதார நன்னாளும் வரும். ஸ்ரீவள்ளி அவதரித்ததும் பங்குனி மாதத்தில்தான். இத்தனைப் பெருமையும் புண்ணியமும் நிறைந்த மாதத்தில், விநாயகப் பெருமானை தினமும் வழிபட்டு வந்தாலே உன்னத பலன்கள் நமக்குக் கிடைக்கும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

    எந்த தெய்வத்தை வணங்குவதாக இருந்தாலும் முதலில் பிள்ளையாரை வழிபட வேண்டும் என்று விவரிக்கிறது தர்மசாஸ்திரம். ஆகம விதிப்படியும் ஆலயங்களில், முதலில் பிள்ளையாரை வணங்குகிறோம். அதன் பின்னரே மூலவரை தரிசிக்கிறோம்.

    விநாயகர், முழுமுதற் கடவுள் என்று போற்றப்படுகிறார். பிரமாண்டமான கோயிலிலும் பிள்ளையாரைத் தரிசிக்கலாம். தெருமுனைக் கோயிலிலும் கணபதி காட்சி தருவார். ஆற்றங்கரையிலும் குளக்கரையிலும் கூட, அரசமரத்தடி நிழலில் கூட பிள்ளையாரப்பா அற்புதமாகக் காட்சி தந்து, நமக்கு அருளையும் பொருளையும் அள்ளித்தந்தருளுகிறார் என்று போற்றுகின்றனர் பக்தர்கள்.

    நம் விக்னங்களையெல்லாம் தீர்த்து அருளுகிறார். அதனால்தான் அவருக்கு விக்ன விநாயகர் என்றே திருநாமம் அமைந்தது. கணங்கள் என்றால் பொழுதுகள் என்று அர்த்தம். நம்முடைய ஒவ்வொரு கணத்துக்கும் அதிபதி பிள்ளையார்தான். அதனால்தான் அவருக்கு கணபதி எனும் திருநாமமும் அமைந்தது என்று சொல்லிச் சிலிர்க்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

    இத்தனை பெருமைகள் கொண்ட பிள்ளையாருக்கு உகந்தது சங்கட ஹர சதுர்த்தி நன்னாள். நாளை, சங்கடஹர சதுர்த்தி. பங்குனி மாதத்தின் சங்கடஹர சதுர்த்தி. இந்த நன்னாளில், விரதம் இருந்து பிள்ளையாரை தரிசிப்போம். விநாயகர் அகவல் பாராயணம் செய்வோம். மகா கணபதி மந்திரம் ஜபித்து வேண்டிக்கொள்வோம்.

    விநாயகப் பெருமானுக்கு அருகம்புல் சார்த்தி வேண்டிக் கொள்வது ரொம்பவே மகத்துவம் மிக்கது. அதேபோல், பிள்ளையாருக்கு வெள்ளெருக்கு மாலை சார்த்தி வேண்டிக்கொண்டால், நம் விக்னங்களெல்லாம் பறந்தோடும். கவலைகள் அனைத்தும் காணாமல் போகும். துக்கங்களையெல்லாம் போக்கித் தருவார் தும்பிக்கையான்!

    சங்கடஹர சதுர்த்தியில் ஆனைமுகத்தானை மனதார பிரார்த்திப்போம்.

    • தேரோட்டம் 14-ந்தேதி நடக்கிறது.
    • 15-ந் தேதி அம்மன் வீதியுலா நடைபெறுகிறது.

    தமிழகத்தில் உள்ள சிறந்த சக்தி ஸ்தலங்களில் திருச்சி உறையூர் வெக்காளியம்மன் கோவிலும் ஒன்றாகும். மண்மாரியில் இருந்து உறையூரையும், மக்களையும் காப்பாற்றிய அன்னை வெக்காளியம்மன் கோவில் சித்திரை திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம்.

    அதன்படி, இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. இதையொட்டி நேற்று முன்தினம் மாலை விநாயகர் வழிபாடும், வாஸ்துசாந்தியும் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து நேற்று காலை 8 மணிக்கு மேல் காப்புகட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    அப்போது, வெக்காளியம்மனுக்கு விரதம் இருந்து பால்குடம் எடுக்கும் பக்தர்கள் மற்றும் நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள் திரளாக வந்து கோவிலில் காப்பு கட்டி விரதம் தொடங்கினர். தொடர்ந்து மதியம் 12 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

    பின்னர் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருவிழாவின் முதல் நாளான நேற்று இரவு 7 மணிக்கு கேடயத்தில் வெக்காளியம்மன் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    இன்று (வெள்ளிக்கிழமை) முதல் 13-ந் தேதி வரை தினமும் பகல் 12 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார வழிபாடு நடைபெறுகிறது. மேலும், 13-ந் தேதி வரை இரவு 7 மணிக்கு முறையே பூதவாகனம், கயிலாய வாகனம், காமதேனு வாகனம், சிம்ம வாகனம், யானை வாகனம், அன்னவாகனம், குதிரை வாகனம் ஆகியவற்றில் அம்மன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 9-ம் திருநாளான 14-ந் தேதி காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. முன்னதாக அன்று காலை 9 மணிக்கு அம்மன் திருத்தேரில் எழுந்தருளல் நடக்கிறது. அன்று மாலை 6 மணிக்கு, சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

    10-ம் திருவிழாவான 15-ந் தேதி இரவு 7 மணிக்கு முத்துப்பல்லக்கில் அம்மன் வீதியுலா நடைபெறுகிறது. 16-ந்தேதி மதியம் 12 மணிக்கு மகா அபிஷேகமும், இரவு 7 மணிக்கு கேடயத்தில் வீதியுலா காட்சியும் நடைபெறுகிறது. அன்று இரவு 8 மணிக்கு காப்பு கலைத்தல் மற்றும் விடையாற்றி உற்சவத்துடன் சித்திரை திருவிழா நிறைவு பெறும்.

    விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் லெட்சுமணன், துணை ஆணையர் ஞானசேகரன் மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் செய்து வருகிறார்கள்.

    • பங்குனி உத்திர நட்சத்திரத்துக்கு மற்ற நட்சத்திரங்களைவிட அதிக மகத்துவமும் முக்கியத்துவமும் உண்டு.
    • பங்குனி மாதத்தில் ஏற்றிய தீபத்தில் சிவனும் பார்வதியும் ஐக்கிய சொரூபமாகக் காட்சி தருகின்றனர்.

    பங்குனி உத்திரப் பெருவிழா தமிழ்நாடு முழுவதும் ஆலயங்களில் சீரும் சிறப்பாக நடந்து கொண்டு இருக்கிறது. இன்று (5-ந் தேதி) பங்குனி மாதத்தின் உத்திர நட்சத்திர நன்னாளாகும்.

    ஒவ்வொரு மாதத்திலும் ஒவ்வொரு நட்சத்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து விழாக்கள் நடத்துவார்கள். விரதம் மேற்கொள்வார்கள். ஆனால், பங்குனி உத்திர நட்சத்திரத்துக்கு மற்ற நட்சத்திரங்களைவிட அதிக மகத்துவமும் முக்கியத்துவமும் உண்டு. அதற்கு முக்கிய காரணம் தெய்வத் திருமணங்கள் அதிகம் நடைபெற்ற மாதம் பங்குனி என்பதுதான்.

    இன்னொரு சிறப்பு... தமிழில், 12வது மாதம் பங்குனி. அதேபோல், நட்சத்திரங்களில் 12வது நட்சத்திரம் உத்திரம். அதாவது 12-வது மாதமான பங்குனியும் 12-வது நட்சத்திரமான உத்திரமும் இணையும் அற்புதமான நாள் பங்குனி உத்திரம். இந்த தினத்தின் சிறப்புகள் அதிகம்.

    ஸ்ரீராமபிரான்- சீதாதேவி, பரதன்- மாண்டவி, லட்சுமணன்- ஊர்மிளை, சத்ருக்னன்- சிருத கீர்த்தி ஆகியோருக்கு திருமணம் நடந்த நன்னாள் பங்குனி உத்திரம்!

    முருகப் பெருமான்- தெய்வானை திருமணம் நடந்த நாள். ஸ்ரீவள்ளி அவதரித்த தினமும் இதுதான் என்கிறது புராணம்.

    தேவேந்திரன்- இந்திராணி திருமணம் நடைபெற்ற நாள்.இந்த நாளில் விரதம் மேற்கொண்ட சந்திரன், அழகுமிக்க 27 பெண்களை மனைவியாக ஏற்றுக் கொண்டதாகச் சொல்கிறது புராணம்!

    இந்த நாளில் விரதம் மேற்கொண்ட ஸ்ரீமகா லட்சுமி, விஷ்ணுவின் திருமார்பில் வீற்றிருக்கும் பாக்கியத்தைப் பெற்றாள். ஸ்ரீபிரம்மா, தன் நாவில் சரஸ்வதியை வரித்துக் கொண்ட தினம், பங்குனி உத்திரம் என்பர்.

    ஐயன் ஐயப்ப சுவாமியின் முந்தைய அவதாரமான சாஸ்தா அவதரித்தது பங்குனி உத்திர திருநாளில் என்கிறது சாஸ்தா புராணம். .

    அர்ஜுனன் அவதரித்தது இந்த நாளில்தான்!

    ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள்- ரங்க மன்னார் திருக்கல்யாண வைபவம் நிகழ்ந்த திருநாள் பங்குனி உத்திரம் என்கிறது ஆண்டாள் புராணம்.

    தனது தவத்தைக் கலைத்த மன்மதனை, சிவபெருமான் நெற்றிக் கண்ணால் எரித்து சாம்பலாக்கினார். பின்னர், தன்னை வணங்கி மன்றாடிய ரதிதேவியின் வேண்டுகோளுக்கு மனமிரங்கிய சிவபெருமான், மன்மதனை மீண்டும் உயிர்ப்பித்து அருளினார். அது பங்குனி உத்திர திருநாளில்தான் என்கிறது சிவபுராணம்.

    சுந்தரமூர்த்தி நாயனாருக்கு மணக் கோலத்தில் பரமேஸ்வரன் பார்வதிதேவியுடன் காட்சி தந்தது இந்த நாளில்தான். காரைக்கால் அம்மையார் பங்குனி மாதத்தில்தான் முக்தி பெற்றார்.

    காஞ்சியில், பவுர்ணமி திதி கூடிய பங்குனி உத்திரத் தன்று, ஏகாம்பரேஸ்வரர் திருக்கல்யாண விழா இனிதே நடைபெறும். இந்த நாளில் காஞ்சி வரதராஜர் கோவில்- பெருந்தேவி தாயார் சந்நிதியில், தேவி-பூதேவி, மலை யாள நாச்சியார், ஆண்டாள் மற்றும் பெருந்தேவி தாயார் சகிதம் காட்சி தருகிறார் வரதராஜ பெருமாள்.

    தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே உள்ள நவக்கிரக தலங்களில் ஒன்றான சந்திர பரிகாரத் தலம் திங்களூர் திருத்தலம். இங்குள்ள சிவாலயத்தில், ஆண்டுதோறும் பங்குனி உத்திர நன்னாளில், காலையில் 6 மணிக்கு சூரியக் கதிர்களும் மறு நாள் மாலை 6 மணிக்கு சந்திரனின் ஒளியும் சிவலிங்கத்தின் மீது விழுகின்றன என்பது இயற்கையின் அற்புதம். அப்போது, இங்கு சூரிய- சந்திர பூஜைகள் சிறப்பாக நடைபெறுகின்றன. இந்த பூஜையை தரிசித்தால் எல்லா வளமும் பெறலாம் என்கின்றனர் சிவாச்சார்யர்கள். மேலும் சந்திர தோஷம் யாவும் நீங்கிவிடும். சந்திர பலம் பெற்று, மனோபலம் கிடைக்கப் பெற்று மனத்தெளிவுடன் வாழலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை!

    பழனியில் காவடி உற்சவம், மயிலாப்பூரில் அறுபத்துமூவர் உற்சவம், சுவாமி மலையிலும், திருச்செந்தூரிலும் வள்ளி கல்யாணம், திருப்பரங் குன்றத்தில் தெய்வானை கல்யாணம், காஞ்சிபுரத்தில் கல்யாண உற்சவம் , மதுரையில் மீனாட்சி திருமணம் என பங்குனி உத்திர நாளில் விழாக்களின் சங்கமம் மிக மிக அதிகம்.

    சைவ வழிபாடுகளிலும், வைணவ வழிபாடுகளிலும் பங்குனிஉத்திரம் மிக முக்கிய பங்கு வகிக்கிறது . இந்த இரு சமய வழிபாடுகளிலும் பங்குனி உத்திரம் போல வேறு எந்த மாதத்திலும் இவ்வளவு சிறப்பான விழா வருவது இல்லை .

    ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் நடக்கும் விழாக்களில் மிக முக்கியமான பெருவிழா பங்குனி உத்திர திருவிழாதான். பெரு மாளுக்கும், தாயாருக்கும் ஊடல் நிகழ்ந்து, பிறகு இருவரும் இணைந்தது பங்குனி உத்திர நன்னாளில்தான். எனவே பெருமாளும், தாயாரும் அருகருகே கல்யாண கோலமாக எழுந்தருளி சேர்த்தி சேவை சாதிப்பர் . இது ஆலய 5-வது திருச்சுற்றில், பங்குனி உத்திர மண்டபத்தில் நடக்கும்.

    பங்குனி உத்திரப்பெருவிழா தினத்தன்று காலையில் நடைபெறும் இந்த வைபவத்தை கண் குளிர தரிசித்தால், திருமணப்பேறு உண்டாகும் , பிரிந்த தம்பதி ஒன்று சேர்வர் என்பது ஐதீகம் . இணைந்து வாழ்ந்து வருகிற தம்பதிகள் மேலும் ஒருவரையொருவர் நன்கு புரிந்துகொண்டு கருத்து ஒற்றுமையுடன் வாழ்வார்கள் என்பது நம்பிக்கை .

    பங்குனி உத்திரத்தன்று கன்னிப்பெண்கள் கல்யாண விரதமிருந்து அருகில் உள்ள ஆலயங்களில் திருமணக்கோல தெய்வங்களை தரிசித்தால் அவர்களுக்கு கல்யாண வைபோகம் தான் .அது போல திருமழபாடியில் நந்திக்கல்யாணம் கண்டால் முந்திக்கல்யாணம்தான்.

    பங்குனி மாதத்தில் ஏற்றிய தீபத்தில் சிவனும் பார்வதியும் ஐக்கிய சொரூபமாகக் காட்சி தருகின்றனர். அதனால் அன்று திருவிளக்கு பூஜை செய்து பாவங்களை விலக்கி, பகை அகற்றி புண்ணியம் பெறலாம்.

    பங்குனி உத்திரம் அன்று நீங்கள் எந்த தெய்வத்தை வழிபட்டாலும் சரி , எந்த ஆலய விழாவில் கலந்து கொண்டாலும் சரி மறக்காமல் குலதெய்வ வழிபாட்டையும் செய்ய வேண்டும். குலதெய்வ வழிபாடும் மிக முக்கியமான வழிபாடாகும்.*

    • ஆண், பெண் என அனைவருமே இந்த விரதத்தை அனுசரிக்கலாம்.
    • இன்று ஒரு வேளை மட்டுமே உணவு உண்டு விரதம் இருக்க வேண்டும்.

    பங்குனி மாதத்தில் உத்திர நட்சத்திர தினத் தில் பவுர்ணமி நிலவு ஒளிவீசும் தினத்தை ஒரு விரத நாளா கவே கருதி முருகனை வழிபட்டால் கன்னியர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும். திருமணம் ஆன பெண்களின் மாங்கல்யம் பலம் பெறும்.

    ஆண், பெண் என அனைவருமே இந்த விரதத்தை அனுசரிக்கலாம். அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு வீட்டில் விளக்கேற்றி முருகப்பெருமானை வணங்க வேண்டும். பங்குனி உத்திரத்தன்று நாள் முழுவதும் கந்த சஷ்டி கவசம், திருமுருகாற்றுப்படை, திருப்புகழ் போன்ற நூல்களை படிக்கலாம். வேலை உள்ளவர்கள் "ஓம் சரவண பவ" என்னும் மந்திரத்தை நாள் முழுக்க உச்சரிக்கலாம். இதன் மூலம் நமது மனமானது இறைவனையே நினைத்த வண்ணம் இருக்கும். அதனால் மனம் செம்மை அடையும்.

    பங்குனி உத்திர தினத்தன்று ஒரு வேளை மட்டுமே உணவு உண்டு விரதம் இருக்க வேண்டும். வயதானவர்கள், உடல் நலம் பாதிக்கபட்டவர்கள் பால், பழம் போன்றவற்றை உண்ணலாம். நாள் முழுக்க விரதம் இருந்து மாலையில் முருகன் கோவிலுக்கு சென்று அர்ச்சனை செய்து விரதத்தை நிறைவு செய்யலாம்.

    அருகில் முருகன் கோவில் இல்லை என்றால் சிவன் அல்லது பெருமாள் கோவிலுக்கு செல்லலாம். முடிந்தால் பகல் வேளையில் ஏழை- எளியவர் களுக்கு அன்னதானம் செய்யலாம். இந்த திருநாளில் தண்ணீர் பந்தல் அமைத்து நீர், மோர் வழங்குபவர் வளம் பெறுவார்கள். மாலையில் அருகில் உள்ள முருகன் கோவில் அல்லது முருகன் சன்னதி உள்ள கோவிலுக்கு சென்று முருகனை தரிசித்து வரலாம். பிறகு இரவில் சாத்வீகமான உணவை எடுத்துக் கொண்டு விரதத்தை முடித்துக் கொள்ளலாம்.

    திருமணம் ஆகாத ஆண்கள் மற்றும் பெண்கள் பங்குனி உத்திரம் தினத்தன்று விரதம் இருந்து இறைவனை வழிபாட்டால் நிச்சயம் விரைவில் திருமணம் கை கூடும். பங்குனி உத்திர விரதம் இருந்தால் சிறப்பான நல்லதொரு வரன் கை கூடி வரும் என்பது முன்னோர்கள் வாக்கு. அதனாலேயே பங்குனி உத்திரம் விரதத்திற்கு திருமண விரதம் என்றொரு பெயரும் உண்டு.

    பங்குனி உத்திரம் தினத்தன்று ரங்கநாத பெருமாள் கோவிலில் நடக்கும் வைபவத்தை காண்பது விஷேசம். இதனை கண்டால் களத்திர தோஷம் விலகி திருமணம் கைகூடும் என்பது நம்பிக்கை.

    திருமணமான தம்பதியினர் இருவருக்குள்ளும் ஏதாவது ஒரு பிரச்சினை அடிக்கடி நேர்ந்தால் பங்குனி உத்திரத்தன்று விரதம் இருப்பதன் மூலம் அந்த பிரச்சி னைகள் விலகும். கணவன் மனைவி இருவரும் நீண்ட ஆயுளோடு அன்பில் திளைத்திருக்க பங்குனி உத்திர விரதம் உதவும். அதோடு வீட்டில் உள்ள பண கஷ்டங்கள் யாவும் விலகி செல்வ செழிப்போடு வாழ இந்த விரதம் உதவும்.

    பங்குனி உத்திரத்திற்கு முந்தைய நாளில் இருந்து விரதமாக இருந்து நமது குலக் கோவில்களுக்கு சென்று வழிபட வேண்டும். நம்மால் ஆன உதவியை வயதானவர்களுக்கு செய்வதன் மூலம் பெரியவர்களின் பரிபூரண ஆசிகள் நம்மை வாழ வைக்கும். தெய்வத்திருமணங்களை தரிவிப்பதே நம் வீட்டில் மங்கள விழாக்கள் நடக்க வேண்டியதை நாம் சிந்திப்பதற்காக அமைந்தவைகள் ஆகும். இந்த திருமண உற்சவத்தில் கலந்து கொண்டு இறைவனை தரிசிக்க திருமணம் கூடிவரும்.

    இறைவன் அவதரித்த ஆராட்டு விழாக்களை பங்குனி உத்திரம் தினத்தன்று நினைப்பதன் மூலம் குழந்தை பாக்கியம் உண்டாகும். பங்குனி உத்திரம் விரதம் இருந்து நாராயணர் லட்சுமிதேவியை அடைந்ததைப் போல் நம் வீட்டு பெண்கள் கடைபிடிக்கும் விரதத்தின் மூலம் வற்றாத செல்வம் உண்டாகும்.

    கலைமகள் பிரம்மாவை அடைந்த நாள் பங்குனி உத்திரம் என்பதால் இந்நாளில் குழந்தைகள் ஆலயம் சென்று வணங்குவதன் மூலம் கல்வியின் சிறப்பை பெறுவார்கள். இந்த விரதத்தால் உத்யோக உயர்வு, கல்வியில் மேன்மை என அனைத்து யோகமும் கிடைப்பதுடன் சொந்தங்களின் அனுசரனையும் அமைந்து குடும்ப ஒற்றுமையுடன், குடும்ப பாரம்பரிய ஒற்றுமையும் உண்டாகும்.

    • ஆலயத்திற்குச் சென்று அர்ச்சனை செய்து வழிபட்டு வர வேண்டும்.
    • தடைபட்டு வந்த திருமணம் விரைவில் நடைபெறும் என்பது நம்பிக்கை.

    பங்குனி மாதத்தில் வரும் உத்திரம் நட்சத்திரம் சிறப்புக்குரியதாக போற்றப்படுகிறது. இந்த நாளில் தான் சிவன்-பார்வதி, ராமன்- சீதை, கிருஷ்ணா்-ருக்மணி, முருகன்-தெய்வானை உள்பட பல தெய்வங்களின் திருமணங்கள் நடைபெற்றதாக புராணங்கள் தெரிவிக்கின்றன. இந்த நாளில் விரதம் இருந்து வழிபாடு செய்தால், தடைபட்டு வந்த திருமணம் விரைவில் நடைபெறும் என்பது நம்பிக்கை.

    பங்குனி உத்திர விரதத்தை 8 வயதில் இருந்து 80 வயது உள்ளவர்கள் வரை அனுஷ்டிக்கலாம். விரதம் இருப்பதற்கு முன்தினம் இயல்பை விட குறைவாக சாப்பிட வேண்டும். எளிதில் செரிக்கக்கூடிய உணவை, ஒரு வேளை மட்டும் சிறிதளவு எடுத்துக்கொள்ளலாம். அல்லது மூன்று வேளையும் பழச்சாறு அருந்தலாம். வயதானவர்கள், உடல் நலம் பாதிக்கபட்டவர்கள் பால், பழம் போன்றவற்றை சாப்பிடலாம். நாள் முழுக்க விரதம் இருந்து மாலையில் அருகில் உள்ள முருகப்பெருமான் அல்லது, சிவன், பெருமாள் ஆலயத்திற்குச் சென்று அர்ச்சனை செய்து வழிபட்டு வர வேண்டும்.

    பங்குனி உத்திரத்தன்று காலைக்கடனை முடித்து விட்டு, பூஜை பாராயணங்களை செய்ய வேண்டும். அன்று முழுவதும் கந்த சஷ்டி கவசம், திருமுருகாற்றுப்படை, திருப்புகழ் போன்ற நூல்களை படிக்கலாம். வேலை உள்ளவர்கள், வேலை செய்தபடியே 'ஓம் சரவண பவ' என்ற மந்திரத்தை மனதிற்குள் உச்சரித்து வரலாம். இதன் மூலம் நமது மனமானது இறைவனையே நினைத்த வண்ணம் இருக்கும். அதனால் மனம் செம்மை அடையும்.

    வயதான தம்பதியரை இல்லத்திற்கு அழைத்து அவர்களுக்கு பூஜை செய்து, தாம்பாளத்தில் புடவை, வேட்டி வைத்து கொடுக்க வேண்டும். அன்னதானமும் அளிக்க வேண்டும். சிவபெருமானையும் பார்வதி தேவியையும் திருமணக்கோலத்தில் மனதில் நினைத்து தியானம் செய்ய வேண்டும். அன்று முழுவதும் இறைவனைப் பற்றிய சிந்தனையில் மூழ்கி இருத்தல் வேண்டும்.

    பட்டினி கிடந்து பசித்திருக்க வேண்டும். துளசி தீர்த்தம், பால், மோர், இளநீர், தேன் இவற்றில் சிறிதளவு பருகலாம். மாலையில் கோவிலுக்கு சென்று வணங்கி விட்டு, இரவில் பால், பழம் உண்டு விரதத்தை முடிக்கலாம். இவ்வாறு தொடர்ச்சியாக 48 ஆண்டுகள் இந்த விரதத்தை கடைப்பிடித்து வந்தால், அடுத்த ஜென்மத்தில் தெய்வீகப் பிறவி கிடைக்கும் என்று புராணங்கள் சொல்கின்றன.

    • சிவபெருமானை நினைத்து தியானம் செய்வதற்கு மிக உகந்த நேரம் பிரதோஷ நேரம்தான்.
    • நெற்றியில் திருநீறு அணிந்து சிவன் நாமத்தை ஜபித்துக்கொண்டிருக்க வேண்டும்.

    பரமேஸ்வரன் விஷம் உண்டது ஏகாதசி நாளில் . பள்ளி கொண்டது துவாதசியில். உலகமெலாம் உய்வுறத் தாண்டவமாடியது திரயோதசி நாளில். அதுவும் அந்திசாயும் நேரத்தில். இந்தக் காலத்தைத்தான் பிரதோஷக்காலம் என்கிறோம்.

    பிரதோஷ காலங்களில் ஈசனை தரிசிப்பதால், சகல பாவங்களும் விலகி, புண்ணியம் சேரும். சகல செளபாக்கியங்களும் உண்டாகும். இந்திரனுக்கு சமமான புகழும், செல்வாக்கும் கிட்டும். அன்று செய்யப்படும் எந்த தானமும் அளவற்ற பலனைக் கொடுக்கும். பிறப்பே இல்லாத முக்தியை கொடுக்கும் என்றெல்லாம் புராணங்கள் தெரிவிக்கின்றன.

    சிவபெருமானை நினைத்து தியானம் செய்வதற்கு மிக உகந்த நேரம் பிரதோஷ நேரம்தான். பிரதோஷ நேரத்தில் உலகம் ஒடுங்குகிறது. எனவே ஈசனிடம் ஒடுங்க அதுவே சரியான நேரம். பிரதோஷ நேரத்தில் சிவன் எல்லாவற்றையும் தன்னுள் அடக்கிக்கொள்வதாகவும், இந்நாளில் சிவனைத் தரிசித்தால் கடன், வறுமை, நோய்ப்பயம் போன்றவை விலகும் என்பது ஐதிகம். 14 ஆண்டுகாலம் பிரதோஷ நாளில் முறையாக சிவாலய தரிசனம் செய்பவர்கள், சாரூப்ய பதவி பெற்று, சிவகணங்களாகிவிடுவார்கள் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது.

    சோமவார பிரதோஷநாளில் இருக்கும் விரதம் பன்மடங்கு பலன்களைத் தரும் என்பது ஆன்மிக நம்பிக்கை. நாள் முழுக்க நீர் ஆகாரத்தை தவிர வேறு எதையும் உண்ணாமல் விரதம் இருக்க வேண்டும். நெற்றியில் திருநீறு அணிந்து சிவன் நாமத்தை ஜபித்துக்கொண்டிருக்க வேண்டும்.

    மாலை சிவன் கோயிலுக்குச் சென்று ஒரு கைப்பிடி காப்பரிசி, ஒரு பிடி வன்னி இலை, ஒரு பிடி அருகம்புல் ஆகியவற்றை நந்தியின் கொம்புகளுக்கிடையில் அர்ப்பணித்து, விளக்கேற்றி நந்தியையும் சிவனையும் தொழுதால் சனி பகவானால் உண்டாகும் சகல துன்பங்களும் விலகிப் போகும்

    அபிஷேகப்பிரியாரான சிவனுக்கு தேன், பால், பன்னீர், சந்தனம், வில்வ இலை, தாமரை பஞ்சாமிர்தம் போன்றவற்றை சமர்ப்பிக்கலாம்.

    சிவபெருமானுக்கும், நந்திக்கும் தூய பசும்பால் அபிஷேகத்திற்கு வாங்கித்தரலாம். கொண்டக்கடலை எலுமிச்சை சாதமோ தயிர்ச்சாதமோ, சர்க்கரைப் பொங்கலோ வெண்பொங்கலோ இறைவனுக்கு நைவேத்தியம் செய்து, பக்தர்களுக்குக் கொடுப்பதன் மூலம் தடைகள் நீங்கும். முன்னேற்றம் கிடைக்கும்.

    பிரதோஷ காலத்தில் காப்பரிசி நிவேதனத்தை நந்திக்கு சமர்ப்பிப்பது மிகவும் சிறப்பானது. பிரதோஷ நாளான இன்று தவறாமல் விரதம் இருந்து ஈசனை வழிபட்டு வளம் பெறலாம்.

    • வளர்பிறை ஏகாதசியை சுக்ல பட்ச ஏகாதசி என்பார்கள்.
    • தேய்பிறை ஏகாதசியை கிருஷ்ண பட்ச ஏகாதசி என்பார்கள்.

    மாதந்தோறும் அமாவாசையும் பெளர்ணமியும் வரும். அமாவாசையில் இருந்து பெளர்ணமியை நோக்கி வரும் நாட்களில், ஏகாதசி திதி வரும். இதை வளர்பிறை ஏகாதசி என்பார்கள். அதேபோல், பெளர்ணமியில் இருந்து அமாவாசை நோக்கி வருகின்ற நாட்களில் ஏகாதசி திதி வரும். இதனை தேய்பிறை ஏகாதசி என்பார்கள்.

    வளர்பிறை ஏகாதசியை சுக்ல பட்ச ஏகாதசி என்பார்கள். தேய்பிறை ஏகாதசியை கிருஷ்ண பட்ச ஏகாதசி என்பார்கள். மாதந்தோறும் ஏகாதசி வந்தாலும் மார்கழி மாதத்தில் வரும் ஏகாதசி வைகுண்ட ஏகாதசி என்று போற்றப்படுகிறது. வணங்கப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் விரதம் இருந்து பெருமாளை தரிசித்தாலும் மார்கழி வைகுண்ட ஏகாதசியில் விரதம் இருப்பதும் பெருமாளை ஸேவிப்பதும் மகா புண்ணியம் என்று போற்றுகின்றனர் ஆச்சார்யப் பெருமக்கள்.

    இதேபோல், பங்குனி மாதத்தில் வளர்பிறை மற்றும் தேய்பிறையில் வரும் ஏகாதசியும் விசேஷமானவை. தேய்பிறையில் வரும் ஏகாதசியை விஜயா ஏகாதசி என்பார்கள். வளர்பிறையில் வரும் ஏகாதசியை ஆமலகீ ஏகாதசி என்பார்கள். பங்குனி மாத வளர்பிறையில் வரும் ஏகாதசியான ஆமலகீ ஏகாதசி நன்னாளில், விரதம் மேற்கொள்ளும் பக்தர்கள் ஏராளம். இந்தநாளில், விரதம் மேற்கொண்டு, வீட்டில் நெல்லிமரம் இருந்தால் சுத்தம் செய்து, நீர் தெளித்து, சந்தனம் குங்குமமிட்டு சுற்றி வந்து நமஸ்கரிக்க வேண்டும் என்றும் நெல்லி மரத்தடியில், தூய்மை செய்யப்பட்ட இடத்தில், ஸ்ரீபரசுராமரின் திருவடிவத்தை வரைந்து கலசப் பிரதிஷ்டை செய்து பிரார்த்தனை செய்பவர்களும் உண்டு.

    நெல்லி மரத்தை மூன்று முறை வலம் வந்து வணங்க வேண்டும். நெல்லி மரம் இல்லாத நிலையில், வீட்டுப் பூஜையறையில், வணங்கி வழிபட்டுவிட்டு, சர்க்கரைப் பொங்கல் மற்றும் புளியோதரை நைவேத்தியம் செய்து வழிபடலாம். துளசிச் செடி வளர்த்து வந்தால், துளசிச் செடிக்கு சந்தனம் குங்குமமிடலாம். மூன்று முறை வலம் வந்து வேண்டிக்கொள்ளலாம். இதனால், கோ தானம் செய்த பலன்கள் கிடைக்கப் பெறலாம் என்பது ஐதீகம்.

    பங்குனி மாதத்தின் வளர்பிறை ஏகாதசியில் மகாவிஷ்ணுவை விரதம் இருந்து வழிபட்டுப் பிரார்த்தனை செய்தால் நம் வாழ்வில் வளமும் நலமும் தந்தருளுவார் என்று போற்றுகின்றனர் பக்தர்கள்.

    • மகாலக்ஷ்மியை விரதம் இருந்து வழிபடுங்கள்.
    • வெள்ளியன்று, விரதம் இருந்து சக்தியை வணங்குங்கள்.

    வெள்ளிக்கிழமையில் அம்மனைக் விரதம் இருந்து கொண்டாடுவோம். அம்மனை மனதாரப் பிரார்த்தனை செய்து வேண்டிக் கொள்வோம். எல்லா சத்விஷயங்களையும் தந்து, நம்மையும் நம் குடும்பத்தையும் காத்தருள்வாள் அம்பிகை.

    வெள்ளிக்கிழமையை சுக்கிர வாரம் என்பார்கள். வெள்ளிக்கிழமை என்பது அம்மனுக்கு உகந்த நாள். மகாலக்ஷ்மியை விரதம் இருந்து வணங்கவேண்டிய அற்புதமான நாள். அஷ்ட லக்ஷ்மியரையும் விரதம் இருந்து வழிபடவேண்டிய நன்னாள். சாந்த சொரூபினியையும் உக்கிர தேவதையையும் வணங்கி அவர்களின் அருளைப் பெறவேண்டிய நாள்.

    ஏதேனும் நல்லது நடந்தால், பணம் காசு சேர்ந்தால், வீடு வாசல் வாங்கினால், 'சுக்கிர யோகம்தான் உனக்கு' என்று சொல்லுவார்கள். வெள்ளிக்கிழமைக்கு சுக்கிர வாரம் என்றே பெயர் உண்டு. சுக்கிர பகவானின் அருளைப் பெறவேண்டுமெனில், மகாலக்ஷ்மியை மனதார வணங்கினாலே போதும்.

    வெள்ளிக்கிழமையில், விரதம் இருந்து வீட்டில் விளக்கேற்றுங்கள். 'அயிகிரி நந்தினி' பாடுங்கள். லலிதா சகஸ்ரநாமம் சொல்லுங்கள். 'கற்பூர நாயகியே கனகவல்லி' பாடலை வாயாரப் பாடுங்கள். இவற்றில், குளிர்ந்து போய் உங்கள் இல்லத்துக்கு அடியெடுத்து வைப்பாள் அகிலாண்டகோடி பிரமாண்ட நாயகி!

    வெள்ளியன்று ராகுகாலம் என்பது காலை 10.30 முதல் 12 மணி வரை. இந்த நேரத்தில், துர்கை, காளி முதலான உக்கிர தெய்வங்களை விளக்கேற்றி வழிபடுவது, தீயசக்திகளை அழிக்கும். எதிர்ப்புகளையெல்லாம் இல்லாமல் செய்யும். இதேபோல், மாலையிலும் விளக்கேற்றி வழிபடுங்கள்.

    வெள்ளியன்று, விரதம் இருந்து சக்தியை வணங்குங்கள். மகாலக்ஷ்மியை விரதம் இருந்து வழிபடுங்கள். சுக்கிர யோகம் கிடைக்கப் பெறுவீர்கள்.

    • மனதிற்குள் ‘ராமா ராமா’ என்ற மந்திரத்தை உச்சரித்துக் கொண்டே இருங்கள்.
    • குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இந்த விரதத்தை மேற்கொள்ளலாம்.

    ஸ்ரீ மகாவிஷ்ணுவின் பற்பல அவதாரங்களில் மிகச் சிறப்பானது ஸ்ரீராம அவதாரம். அயோத்தி நகரத்தில் தசரதனுக்கும் கவுசல்யா தேவிக்கும் மூத்த மகனாக ராமர் பிறந்தார். அவர் பிறந்தபோது பங்குனி மாதம் நவமி திதியில் புனர்பூச நட்சத்திரத்தில் கடக லக்னத்தில் நடுப்பகலில் 5 கிரகங்கள் உச்சமாக இருந்தது. இந்த அரிய நிகழ்வை கொண்டாடுவதே ஸ்ரீ ராம நவமியாகும்.

    ராம நவமிக்கு முன்பாக ஒன்பது நாட்கள் (22-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை) பிரதமை முதல் நவமி வரை ஸ்ரீராமாயண பாராயணம் செய்து கொண்டாடுவார்கள். பிறகு ஸ்ரீராமர் பிறந்த நாளில் இருந்து 9 நாட்கள் ஸ்ரீ ராமாயண பாராயணம், பிரவசனம் முதலியவைகளுடன் கொண்டாடுவார்கள்.

    ஸ்ரீ ராமர் விசுவாமித்ரருடன் சென்ற போதும், 14 ஆண்டுகள் வன வாசமுமாக பெரும்பாலும் காட்டிலேயே வசித்ததால் அதை உணர்த்தும் வகையில் இன்று வெப்பத்தைப்போக்க விசிறி தானம் செய்து, நீர்மோரும் பானகமும் தானம் செய்யலாம். இதனால் ராமரின் அருளும், அளவற்ற புண்ணியங்களும் கிடைக்கும்.

    வீட்டிலேயே ராமநவமி பண்டிகையை எப்படி கொண்டாடுவது என்பதைப் பற்றி பார்க்கலாம். எந்த ஒரு பண்டிகையை நம் வீட்டில் கொண்டாட வேண்டும் என்றாலும் முதலில் வீட்டையும் பூஜை அறையை சுத்தம் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். அதிகாலையிலேயே எழுந்து சுத்தமாக குளித்துவிட்டு, உங்களுடைய வீட்டில் ராமரின் பட்டாபிஷேக படம் இருந்தால் அதை பூஜைக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். அப்படி இல்லை என்றால் அனுமனின் படத்தை பூஜைக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். எதுவுமே இல்லை என்றால் பெருமாளின் படத்திற்கு துளசி இலைகளால் அலங்காரம் செய்து வாசனை மிகுந்த பூக்களைச் சூட்டி பூஜைக்கு தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.

    பூஜை அறையை அலங்காரம் செய்து முடித்துவிட்டு ஒரு தீபத்தை ஏற்றி வைத்துவிட்டு, ராமருக்கு பிடித்த பால் பாயாசத்தை ராமநவமி அன்று நிவேதனமாக செய்து வைக்க வேண்டும். கட்டாயம் ஒரு டம்ளரில் பானகம் தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள். அடுத்தபடியாக பூஜை அறையில் அமர்ந்து உங்களுடைய வேண்டுதலை மனதார ராமபிரானிடம் சொல்லி 'ஸ்ரீ ராம ஜெயம்' மந்திரத்தை 108 முறை உச்சரிக்க வேண்டும். 108 முறைக்கும் மேல் எத்தனை முறை உச்சரித்தாலும் தவறு கிடையாது. வெறும் மூன்று முறை உச்சரித்தாலும் தவறில்லை.

    இந்த ராம நவமி பூஜையை காலை 6.00 மணியிலிருந்து 8.00 மணிக்குள் செய்துவிட்டு அதன் பின்பு உபவாசத்தை தொடங்கலாம். அப்படி காலை நேரத்தில் பூஜை செய்ய முடியாதவர்கள் காலையிலிருந்து உபவாசம் இருந்து மாலை 5.00 மணியிலிருந்து 7.30 மணிக்குள் இந்த பூஜையை செய்து அதன் பின்பு விரதத்தை நிறைவு செய்துகொள்ள வேண்டும். ராம நவமி தினத்தன்று உணவு சாப்பிடாமல் உபவாசம் இருந்து விரதம் இருக்க முடியும் என்று நினைப்பவர்கள் தாராளமாக விரதத்தை மேற்கொள்ளலாம்.

    உடல்நிலை சரியில்லாதவர்கள் பால் பழம் சாப்பிட்டும் இந்த விரதத்தை மேற்கொள்ளலாம். மாலை உங்கள் வீட்டில் ராமருக்கு பூஜை செய்து வழிபாட்டை முடித்து விட்டு, அதன் பின்பு இறைவனுக்கு நிவேதனமாக வைத்த பிரசாதத்தை முதலில் சாப்பிட்டு விரதத்தை முடித்துக் கொள்ளுங்கள்.

    இன்று ராமநவமி அன்று ஒருநாள் மட்டுமாவது கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தாமல், அடுத்தவர்களது மனதை புண்படுத்தாமல் உங்கள் மனதிற்குள் 'ராமா ராமா' என்ற மந்திரத்தை உச்சரித்துக் கொண்டே இருங்கள். செய்த பாவங்கள் நீங்கும். நினைத்த காரியம் உடனே நடக்கும்.

    குறிப்பாக குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இந்த விரதத்தை மேற்கொள்ளலாம். எந்த ஒரு விஷயத்தை எடுத்தாலும் காரியத்தடை ஏற்பட்டு வாழ்க்கையில் முன்னேற்றம் தடைபட்டுக் கொண்டிருக்கின்றது என்பவர்கள் இந்த விரதத்தை கடைப்பிடிக்கும் பட்சத்தில், வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். ஒரு மனிதருக்கு நல்ல வாழ்க்கை என்பது அவருடைய எண்ணத்தைப் பொறுத்தது. எண்ணம் போல் வாழ்க்கை என்று சொல்லுவார்கள் அல்வா அது முற்றிலும் உண்மை தான். அனைவரும் நன்றாக வாழவேண்டும் என்று அந்த ராமபிரானை வேண்டிக்கொண்டு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

    • இன்றைய அஷ்டமிக்கு சிறப்பு ஒன்று உண்டு.
    • சோகத்தை விரட்டி மகிழ்ச்சியை ஏற்படுத்தும் அஷ்டமியாக இன்றைய அஷ்டமி கருதப்படுகிறது.

    இன்று (புதன்கிழமை) அஷ்டமி தினமாகும். நேற்று இரவு 10.13 மணிக்கு இந்த அஷ்டமி திதி தொடங்கியது. இன்று இரவு 11.48 மணி வரை அஷ்டமி உள்ளது. கரி நாளாக வரும் இன்றைய தினத்தில் அஷ்டமி வழிபாடுகள் சிறப்பாக செய்யப்பட வேண்டும்.

    இன்றைய அஷ்டமிக்கு சிறப்பு ஒன்று உண்டு. அதாவது சோகத்தை விரட்டி மகிழ்ச்சியை ஏற்படுத்தும் அஷ்டமியாக இன்றைய அஷ்டமி கருதப்படுகிறது. சோகம் என்றால் வருத்தம், அசோகம் என்றால் வருத்தம் நீங்குதல் (மகிழ்ச்சி).

    சோகத்தை நீக்கி மகிழ்ச்சியைத் தரும் அஷ்டமி என்பதால் அசோகாஷ்டமி என்று பெயர். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளில் மருதாணி இலைகளை அரைத்து கைகளில் பூசிக்கொள்கிறார்கள். சீதா தேவி மருதாணி மரங்களுக்கு வரமளித்த நன்னாளே அசோகாஷ்டமி நாளாகும். எனவே இன்று சுத்தமான இடங்களில் மருதாணி மரங்களைப் பயிர் செய்யலாம். தண்ணீர் ஊற்றலாம். 3 முறை வலம் வரலாம்.

    ×