search icon
என் மலர்tooltip icon

    முக்கிய விரதங்கள்

    இன்று ஸ்ரீராம நவமி விரதம்
    X

    இன்று ஸ்ரீராம நவமி விரதம்

    • மனதிற்குள் ‘ராமா ராமா’ என்ற மந்திரத்தை உச்சரித்துக் கொண்டே இருங்கள்.
    • குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இந்த விரதத்தை மேற்கொள்ளலாம்.

    ஸ்ரீ மகாவிஷ்ணுவின் பற்பல அவதாரங்களில் மிகச் சிறப்பானது ஸ்ரீராம அவதாரம். அயோத்தி நகரத்தில் தசரதனுக்கும் கவுசல்யா தேவிக்கும் மூத்த மகனாக ராமர் பிறந்தார். அவர் பிறந்தபோது பங்குனி மாதம் நவமி திதியில் புனர்பூச நட்சத்திரத்தில் கடக லக்னத்தில் நடுப்பகலில் 5 கிரகங்கள் உச்சமாக இருந்தது. இந்த அரிய நிகழ்வை கொண்டாடுவதே ஸ்ரீ ராம நவமியாகும்.

    ராம நவமிக்கு முன்பாக ஒன்பது நாட்கள் (22-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை) பிரதமை முதல் நவமி வரை ஸ்ரீராமாயண பாராயணம் செய்து கொண்டாடுவார்கள். பிறகு ஸ்ரீராமர் பிறந்த நாளில் இருந்து 9 நாட்கள் ஸ்ரீ ராமாயண பாராயணம், பிரவசனம் முதலியவைகளுடன் கொண்டாடுவார்கள்.

    ஸ்ரீ ராமர் விசுவாமித்ரருடன் சென்ற போதும், 14 ஆண்டுகள் வன வாசமுமாக பெரும்பாலும் காட்டிலேயே வசித்ததால் அதை உணர்த்தும் வகையில் இன்று வெப்பத்தைப்போக்க விசிறி தானம் செய்து, நீர்மோரும் பானகமும் தானம் செய்யலாம். இதனால் ராமரின் அருளும், அளவற்ற புண்ணியங்களும் கிடைக்கும்.

    வீட்டிலேயே ராமநவமி பண்டிகையை எப்படி கொண்டாடுவது என்பதைப் பற்றி பார்க்கலாம். எந்த ஒரு பண்டிகையை நம் வீட்டில் கொண்டாட வேண்டும் என்றாலும் முதலில் வீட்டையும் பூஜை அறையை சுத்தம் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். அதிகாலையிலேயே எழுந்து சுத்தமாக குளித்துவிட்டு, உங்களுடைய வீட்டில் ராமரின் பட்டாபிஷேக படம் இருந்தால் அதை பூஜைக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். அப்படி இல்லை என்றால் அனுமனின் படத்தை பூஜைக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். எதுவுமே இல்லை என்றால் பெருமாளின் படத்திற்கு துளசி இலைகளால் அலங்காரம் செய்து வாசனை மிகுந்த பூக்களைச் சூட்டி பூஜைக்கு தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.

    பூஜை அறையை அலங்காரம் செய்து முடித்துவிட்டு ஒரு தீபத்தை ஏற்றி வைத்துவிட்டு, ராமருக்கு பிடித்த பால் பாயாசத்தை ராமநவமி அன்று நிவேதனமாக செய்து வைக்க வேண்டும். கட்டாயம் ஒரு டம்ளரில் பானகம் தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள். அடுத்தபடியாக பூஜை அறையில் அமர்ந்து உங்களுடைய வேண்டுதலை மனதார ராமபிரானிடம் சொல்லி 'ஸ்ரீ ராம ஜெயம்' மந்திரத்தை 108 முறை உச்சரிக்க வேண்டும். 108 முறைக்கும் மேல் எத்தனை முறை உச்சரித்தாலும் தவறு கிடையாது. வெறும் மூன்று முறை உச்சரித்தாலும் தவறில்லை.

    இந்த ராம நவமி பூஜையை காலை 6.00 மணியிலிருந்து 8.00 மணிக்குள் செய்துவிட்டு அதன் பின்பு உபவாசத்தை தொடங்கலாம். அப்படி காலை நேரத்தில் பூஜை செய்ய முடியாதவர்கள் காலையிலிருந்து உபவாசம் இருந்து மாலை 5.00 மணியிலிருந்து 7.30 மணிக்குள் இந்த பூஜையை செய்து அதன் பின்பு விரதத்தை நிறைவு செய்துகொள்ள வேண்டும். ராம நவமி தினத்தன்று உணவு சாப்பிடாமல் உபவாசம் இருந்து விரதம் இருக்க முடியும் என்று நினைப்பவர்கள் தாராளமாக விரதத்தை மேற்கொள்ளலாம்.

    உடல்நிலை சரியில்லாதவர்கள் பால் பழம் சாப்பிட்டும் இந்த விரதத்தை மேற்கொள்ளலாம். மாலை உங்கள் வீட்டில் ராமருக்கு பூஜை செய்து வழிபாட்டை முடித்து விட்டு, அதன் பின்பு இறைவனுக்கு நிவேதனமாக வைத்த பிரசாதத்தை முதலில் சாப்பிட்டு விரதத்தை முடித்துக் கொள்ளுங்கள்.

    இன்று ராமநவமி அன்று ஒருநாள் மட்டுமாவது கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தாமல், அடுத்தவர்களது மனதை புண்படுத்தாமல் உங்கள் மனதிற்குள் 'ராமா ராமா' என்ற மந்திரத்தை உச்சரித்துக் கொண்டே இருங்கள். செய்த பாவங்கள் நீங்கும். நினைத்த காரியம் உடனே நடக்கும்.

    குறிப்பாக குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இந்த விரதத்தை மேற்கொள்ளலாம். எந்த ஒரு விஷயத்தை எடுத்தாலும் காரியத்தடை ஏற்பட்டு வாழ்க்கையில் முன்னேற்றம் தடைபட்டுக் கொண்டிருக்கின்றது என்பவர்கள் இந்த விரதத்தை கடைப்பிடிக்கும் பட்சத்தில், வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். ஒரு மனிதருக்கு நல்ல வாழ்க்கை என்பது அவருடைய எண்ணத்தைப் பொறுத்தது. எண்ணம் போல் வாழ்க்கை என்று சொல்லுவார்கள் அல்வா அது முற்றிலும் உண்மை தான். அனைவரும் நன்றாக வாழவேண்டும் என்று அந்த ராமபிரானை வேண்டிக்கொண்டு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

    Next Story
    ×