search icon
என் மலர்tooltip icon

    முக்கிய விரதங்கள்

    இன்று வைகாசி கடைசி சோமவாரம்: விரதம் இருந்து வீட்டில் விளக்கேற்றுங்கள்...
    X

    இன்று வைகாசி கடைசி சோமவாரம்: விரதம் இருந்து வீட்டில் விளக்கேற்றுங்கள்...

    • இன்று விரதம் இருந்து சிவவழிபாடு செய்வது உத்தமம்.
    • இந்தநாளில், ஞானமும் யோகமும் தந்தருளும் சிவனாரை விளக்கேற்றி வழிபடுவோம்.

    புண்ணியம் நிறைந்த வைகாசி மாதம் என்று ஞானநூல்கள் போற்றுகின்றன. இந்த வைகாசி மாதத்தில், விசாக நட்சத்திர நாள் என்பது முருகப்பெருமானுக்கு உரிய அற்புதமான நாள். அதேபோல், வைகாசிச் செவ்வாயும் வெள்ளியும் அம்பிகைக்கு உகந்த நாள்.

    விசாக நட்சத்திரநாளில் முருக வழிபாடு மிகுந்த விசேஷம். அதேபோல், அம்பிகையை ஆராதிக்க, வாழ்வில் சங்கடங்கள் அனைத்தும் விலகிவிடும். சந்தோஷங்கள் பெருகும்.

    சோமவாரம் என்றால் திங்கட்கிழமை என்று அர்த்தம். வைகாசி மாதத்தின், திங்கட்கிழமைகள் ஈஸ்வர வழிபாடு ரொம்பவே வலிமையைத் தரக்கூடியது என்கிறார்கள் ஆச்சார்யர்கள். திங்கட்கிழமைகளில், விரதம் இருந்து சிவ ஸ்துதி பாராயணம் செய்து சிவபெருமானை தீபாராதனை காட்டி பிரார்த்தனை செய்வது உத்தமம். ருத்ரம் ஜபிப்பது, எதிரிகளையும் தீய சக்திகளையும் அழிக்கவல்லது.

    வைகாசி மாதத்தின் கடைசி சோமவாரம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. இந்தநாளில், விரதம் இருந்து வீட்டில் விளக்கேற்றுங்கள். சோம வார நாளில், சோமன் எனப்படும் திங்கள் எனப்படும் சந்திரன் எனப்படும் நிலா உதயமாகும் மாலை வேளையில் விளக்கேற்றுங்கள். முடிந்தால், கிடைத்தால், சிவனாருக்கு வில்வம் சார்த்துங்கள். குடும்பமாய் அமர்ந்து சிவநாமம் சொல்லுங்கள். தேவார, திருவாசகப் பாடல்களைப் பாடுங்கள் அல்லது ஒலிக்கவிடுங்கள். முக்கியமாக, நோய் தீர்க்கும் பதிகங்களைப் பாடி பரமேஸ்வரனைப் பிரார்த்தனை செய்யுங்கள்.

    சிவனாருக்கு தயிர்சாதம் அல்லது எலுமிச்சை சாதம் நைவேத்தியம் செய்து, அக்கம்பக்கத்தாருக்கு வழங்குங்கள். ஞானமும் யோகமும் தந்தருள்வார் சிவனார்.

    தென்னாடுடைய சிவனே போற்றி.

    எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி.

    Next Story
    ×