search icon
என் மலர்tooltip icon

    கோவில்கள்

    • நாளை இரவு 7.45 மணிக்கு தங்கரத பவனி நடக்கிறது.
    • 83 ஆண்டுகளுக்கு முன்பு இந்த கோவில் கட்டப்பட்டது.

    எனது பக்தர்கள் அனைவரும் என் குழந்தைகள், நான் உங்கள் தந்தை, நீங்கள் வணங்கும் தெய்வம் எதுவோ அதையே எப்போதும் வணங்குங்கள். விரைவில் உங்களை இறைவன் ஆசீர்வதிப்பார். இது பல லட்சம் பக்தர்கள் நம்பிக்கையோடு வணங்கும் ஷீரடி சாயிபாபாவின் ஆசீர்வாத வார்த்தைகள்.

    ஷீரடி சாயிபாபா

    மனித குலம் பல யுகங்களை கடந்து, கடைசியாக கலியுகத்தில் வந்து நிற்கிறது. இந்த கலியுகம் நலமாக வாழ நாமசங்கீர்த்தனமே சிறந்தது என்று யோகிகளும், முனிவர்களும் கூறினர். அந்த வரிசையில் மனிதராய் அவதரித்து, அன்பால் அனைத்து உயிர்களையும் தன் பால் ஈர்த்து, கலியுகத்தின் கருணை கடவுளாக பக்தர்களால் போற்றி வணங்கப்படுபவர் ஷீரடி சாயிபாபா.

    கல்லை கரைத்தது, உப்பு தண்ணீரை நல்ல தண்ணீராக மாற்றியது, விஷத்தை நீக்கியது என்று சாயிபாபா நிகழ்த்திய அற்புதங்கள் ஏராளம்.

    முழு உருவ சிலை

    அவ்வளவு மகிமை பொருந்திய ஷீரடி சாயிபாபாவுக்கு, தென்னிந்தியாவில் முதன் முறையாக கோவை-மேட்டுப்பாளையம் சாலையில் சாய்பாபா காலனியில் 83 ஆண்டுகளுக்கு முன்பு கோவில் கட்டப்பட்டது. இங்குள்ள ஷீரடி சாயிபாபா கோவிலுக்கு ஸ்ரீ நாகசாயி மந்திர் என்று பெயர் சூட்டப்பட்டது. இக்கோவிலுக்குள் நுழைந்ததுமே நமது மனதில் உள்ள இறுக்கம் விலகி சென்று விடுகிறது. அதன் உச்சமாக முழு உருவ பளிங்கு சிலையில் காட்சி தரும் பாபாவை கண்டவுடன், நம் மனம் எல்லையில்லாத மகிழ்ச்சியில் திளைப்பதையும் உணர முடிகிறது.

    முதல் கும்பாபிஷேகம்

    கோவையில் கடந்த 1943-ம் ஆண்டு ஸ்ரீ நாகசாயி அறக்கட்டளை நிறுவப்பட்டது. இந்த நிர்வாகத்தின் கீழ் ஸ்ரீ நாகசாயி மந்திர் (சாயிபாபா கோவில்) உள்ளது. உலகோர் அனைவரும் பாபாவை அறிய வேண்டும். அவரது அருளை பெற வேண்டும் என்பதை குறிக்கோளுடன், பூஜ்ய ஸ்ரீ பி.வி.நரசிம்ம சுவாமிஜி மற்றும் சி.வரதராஜா அய்யா இணைந்து, கோவை-மேட்டுப்பாளையம் சாலையில் சாயிபக்தி இயக்க அமைப்பையும், சாயிபாபா மிஷனையும் 1939-ம் ஆண்டு தொடங்கினர். தென்னிந்தியாவின் முதல் ஷீரடி சாயிபாபா கோவில், ஸ்ரீ நாகசாயி மந்திர் ஆகும். இக்கோவிலில் முதல் கும்பாபிஷேகம் 10-10-1946 அன்று நடைபெற்றது.

    தங்கரத பவனி

    ஸ்ரீ நாகசாயி மந்திர் கோவிலின் கோபுரம் ஷீரடி சாயிபாபா சமாதி அடைந்த பின்பு, அவருக்காக முதன் முதலாக கட்டப்பட்ட கோபுரம் ஆகும். ஸ்ரீ நாகசாயி மூலவர் சிலையானது உலகிலேயே 2-வது பளிங்கு கல்லால் உருவாக்கப்பட்டது. 1943-ம் ஆண்டு ஜனவரி மாதம் 7-ந் தேதி வியாழக்கிழமை சாயிபாபா படத்திற்கு முன் 3 அடி முதல் 4 அடி நீளம் உள்ள நாகரூபத்தில் சாயிபாபா 17 மணி நேரத்திற்கு மேலாக தொடர்ந்து காட்சி அளித்தார்.

    ஸ்ரீ நாகசாயி மந்திர் கோவிலில் மகா கும்பாபிஷேகம் 20 ஆண்டுகளுக்கு பின்னர், இன்று (புதன்கிழமை) காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் நடைபெற்றது. கடந்த 28-ந் தேதி முதல் யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து மாலை 5 மணிக்கு ஸ்ரீ நாகசாயி உற்சவ மூர்த்தி வீதி உலாவும், நாளை (வியாழக்கிழமை) இரவு 7.45 மணிக்கு தங்கரத பவனியும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ நாகசாயி அறக்கட்டளை அறங்காவலர் குழு துணைத்தலைவர் எஸ்.பாலசுப்பிரமணியன், செயலாளர் எஸ்.பாலசுப்பிரமணியன், பொருளாளர் என்.சர்வோத்தமன், அறங்காவலர்கள் ஜி.தியாகராஜன், எஸ்.சந்திரசேகர், ஜி.சுகுமார் ஆகியோர் செய்து வருகின்றனர்.

    வரலாற்று சின்னம்

    இதுகுறித்து ஸ்ரீ நாகசாயி அறக்கட்டளை அறங்காவலர் குழு துணைத்தலைவர் எஸ்.பாலசுப்பிரமணியன் கூறும்போது, அறக்கட்டளையின் கீழ் சாயிபாபா வித்யாலயம் நடுநிலை பள்ளி (அரசு உதவி பெறும் பள்ளி), சாயிதீப் திருமண மண்டபம், இலவச ஹோமியோபதி கிளினிக் மற்றும் மருத்துவ உதவி, கல்வி உதவித்தொகை பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. சாயிபாபா வித்யாலயம் நடுநிலை பள்ளி 1946-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இன்று வரை கட்டணமில்லா தரமான கல்வி அளிக்கப்பட்டு வருகிறது. ஸ்ரீ நாகசாயி மந்திர் கோவில் கோவை மாநகரத்தின் வரலாற்று சின்னங்களில் ஒன்றாக விளங்குகிறது. இக்கோவிலில் தரிசனத்திற்கு தினமும் உள்ளூர், வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருகை தருகின்றனர் என்றார்.

    • இந்த ஆலயத்தில் 5-ந்தேதி தைப்பூசத் திருவிழா நடைபெற உள்ளது.
    • கோவிலில் தினமும் காலை, மதியம் அன்னதானம் வழங்கப்படுகிறது.

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தென் பொதிகை மலையின் ஒரு பகுதியாக இருக்கிறது, தோரணமலை. தேனினும் இனிய தமிழுக்கு இலக்கணம் வகுத்த அகத்தியர் கண்டு வியந்தமலை இது. யானை படுத்து இருப்பதுபோல் காட்சி தருவதன் காரணமாக, இந்த மலை முதலில் 'வாரணமலை' என்று அழைக்கப்பட்டது. அதுவே மருவி தற்போது 'தோரணமலை' என்று வழங்கப்படுகிறது.

    தென்காசி மாவட்டம் கடையம் அருகே அமைந்துள்ள தோரணமலையின் உச்சியில் உள்ள குகையில் முருகப்பெருமான் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் அருள்பாலித்து வருகிறார். சிவன்-பார்வதி திருமணம் கயிலாய மலையில் நடந்தபோது, அந்த திருமணத்தைக் காண்பதற்காக தேவர்கள், ரிஷிகள், முனிவர்கள் என்று அனைவரும் கயிலாய மலையில் குவிந்தனர். இதனால் வட பகுதி தாழ்ந்து, தென்பகுதி உயர்ந்தது. உலகம் சமநிலையை அடைவதற்காக அகத்தியரை, தென் பகுதிக்கு அனுப்பினார் சிவபெருமான்.

    அப்படி அகத்தியர் வந்தபோது, அவரைக் கவர்ந்த இடம் இந்த தோரணமலை. இங்கு அகத்தியர் உலக மக்கள் நோயின்றி வாழ, மருத்துவ ஆராய்ச்சியில் ஈடுபட்டார். 'மண் முதல் விண் வரை உலக இயக்கத்தின் அத்தனையையும் கற்று தேர்ச்சி அடைந்தால்தான், ஒருவன் முழு மருத்துவனாக முடியும்' என்று கருதிய அகத்தியர், அதற்காக ஒரு லட்சத்து 24 ஆயிரம் கிரந்தங்களை வகுத்துள்ளார்.

    அகத்தியருக்கு பல சீடர்கள் உண்டு. ஒவ்வொருவரையும் வானவியல், வேதியியல், மண்ணியல், கணிதவியல், மருத்துவம் என வெவ்வேறு துறையை பற்றி ஆராய்ச்சி செய்ய பணித்தார். அந்த ஆராய்ச்சியின்படி பாடத்திட்டங்களை வகுத்தார். பாடத்திட்டத்தில் தமிழ் மொழி இலக்கிய இலக்கணம் கற்பதே முதல் பாடமாக இருந்தது. தொடர்ந்து கணிதம், மருத்துவ ஆய்வு வகைகள், வானசாஸ்திரங்கள், இருநிலை பிரிவாகம், மலை வாசகம், மூலிகை வாகடம், பாடான வாகடம், மூலிகை மூலாதரத்துவம், ரசாயன ஆய்வு- அதன் அனுபவ பயிற்சி, பாடான சுத்திமுறை, அனுபான முறைகள், களிம்பாக்கம், பற்பம், செந்தூரம், உலோகபற்பம், சங்கு பற்பம், மருத்துவ சிகிச்சை முறைகள், திரிநிலையில் தாவர சமூகங்கள், பாடான பற்பங்கள், தைல லேகிய முறைகள் என்ற வகையில் பாடத்திட்டங்கள் வகுக்கப்பட்டன.

    மேலும் சிறப்பு மருத்துவமாக கிருமிநாசினி, நச்சு அகற்றும் முறை, மழலையர் மருத்துவம், ரணவாகடம், உடல்தத்துவம், நார், தசை, தந்தம், குருதி ஆகியவற்றின் ஆய்வு, கபாலம் பற்றிய ஆய்வு, நேந்திரம், நாசி, செவி, கண்டம், சருமநிலை போன்ற படிப்புகளும் உண்டு. இதுதவிர ஆறு ஆதாரநிலைகள், சரியை, கிரியை, ஞானம் என அனைத்து கலைகளும் கற்றுக் கொடுக்கப்பட்டது. இப்படி முழுமையான பாடத்திட்டம் வகுத்த பின்னர், தோரணமலை பகுதியில் அகத்தியர் பாடசாலையை தொடங்கினார். தோரணமலை பயிற்சிக் கூடத்தில் பயில சித்தர்கள் பலர் வந்தனர். அங்கு பயின்றவர்கள் மூலம் உலகின் பல்வேறு பகுதிகளில் பாடசாலைகளின் கிளைகள் உருவாக்கப்பட்டன.

    இதில் இலஞ்சி, மருதமலை, ஆவினன்குடி (பழனி), கொல்லிமலை, சித்தர்குகை, அவன் அவளாய் நின்ற மலை போன்றவை முக்கியமானதாகும். இந்த பாடசாலையில் 6 ஆண்டுகளாக பாடங்கள் பிரிக்கப்பட்டு தனித்தனியே பட்டங்கள் வழங்கப்பட்டன.

    அகத்தியரும், அவரது சீடர் தேரையரும் தோரணமலையில் இருந்த போது தமிழ் கடவுளாம் முருகனை சிலை வைத்து வணங்கி வந்தனர்.

    அவர்கள் இருவரும் வழிபட்ட முருகப்பெருமான்தான், இன்றும் தோரணமலையில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். தோரணமலை முருகன் கோவில், ஆரம்பத்தில் சுற்றுவட்டார பகுதிக்கு மட்டும் அறிந்த ஆலயமாக இருந்தது. 1970-ம் ஆண்டு ஆதிநாராயணன் என்பவர் தோரணமலை கோவில் நிர்வாகியாக பொறுப்பு ஏற்ற பின்னர், தோரணமலையின் புகழ் பல்வேறு மாவட்டங்களுக்கு பரவியது. பக்தர்களின் வருகைக்குப் பிறகு, இந்த ஆலயத்தில் தினமும் இறைவனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன. மலையேறிச் செல்வதற்கான பாதைகள், படிகள் நல்ல முறையில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஆங்காங்கே மலை வழியில் பக்தர்கள் அமர்ந்து செல்ல, அகத்தியர், தேரையர், அருணகிரிநாதர் ஆகியோர் பெயர்களில் மண்டபங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

    கோவிலில் தினமும் காலை, மதியம் அன்னதானம் வழங்கப்படுகிறது. இந்த ஆலயத்தில் தைப்பூசத் திருநாள் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அன்றைய தினம், முருகப்பெருமான்-வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம் நடைபெறும்.

    அகத்தியர், தேரையர், சித்தர்கள் வழிபட்ட முருகன் என்பதால், தோரணமலை முருகனை வணங்கினாலே எந்த தோஷமும் நம்மை நெருங்காது என்பது நம்பிக்கை. முருகன் அருகில் பத்திரகாளியம்மன் அருள்பாலிக்கிறார். முருகன் சன்னிதி அருகே ஒரு சுனை உள்ளது. இந்த சுனையில் தண்ணீர் வற்றாமல் இருக்கும். தோரணமலை அடிவாரத்தில் வல்லப விநாயகர், குரு பகவான், பாலமுருகன், நவக்கிரகங்கள், சப்த கன்னியர்கள், கன்னிமாரியம்மன் சன்னிதிகளும் உள்ளன. இந்த ஆலயத்தில் வருகிற 5-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தைப்பூசத் திருவிழா நடைபெற உள்ளது.

    -புலவனூரான்

    • இக்கோவில் படிக்கட்டில் தாந்தன் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது.
    • இங்கு நம்மாழ்வாருக்கு பெருமாளை விட ஒரு படி மேலாகவே சிறப்பளிக்கப்படுகிறது.

    நவக்கிரக நாயகர்களின் வரிசையில் ஐந்தாவதாகவும், நவதிருப்பதி வரிசைகளுள் ஒன்பதாவதாகவும் விளங்கும் கோவில் "ஆழ்வார்திருநகரி". இது குருவின் அம்சமாக விளங்குகிறது.

    மூலவர் பெயர் : ஆதிநாத பெருமாள் (நின்ற கோலம்)

    உற்சவர் பெயர் : ஸ்ரீ தேவி, பூ தேவி, நீளா தேவி சகிதம் பொலிந்துநின்றபிரான்.

    தாயார்கள் : ஆதிநாதநாயகி, திருகுருகூர்நாயகி

    விமானம் : கோவிந்த விமானம்

    தீர்த்தம் : பிரம்ம தீர்த்தம், தாமிரபரணி தீர்த்தம்.

    கோவில் விருட்சம் : உறங்காபுளிய மரம்.

    சிறப்பு சன்னதி : நம்மாழ்வார், ஞானப்பிரான், உறங்கா புளியமரம், மதில் மேல் கருடன்.

    மற்ற சிறப்புக்கள் : கல்நாதஸ்வரம், சங்கு மண்டபம்.

    கோவில் வரலாறு:

    முற்காலத்தில் படைக்கும் தொழிலை செய்து வந்த நான்முகனாகிய பிரம்மன், மகாவிஷ்ணுவை குறித்து தவம் செய்ய சிறந்த இடத்தை பூஉலகத்தில் தேடினார். அதற்குரிய இடத்தை கூறும்படி மகாவிஷ்ணுவிடமே வேண்டினார். அதற்கு மகாவிஷ்ணுவும், நான்முகனாகிய உன்னை நான் படைக்கும் முன்பே பூஉலகில் தாமிரபரணி ஆற்றின்கரையில் யாம் சுயம்பு மூர்த்தமாக எழுந்தருளியுள்ளோம், அந்த இடமே உம் தவத்திற்கு ஏற்ற இடம் என்று கூறி புன்முறுவல் புரிந்தார்.

    பிரம்மனும் பூஉலகம் அடைந்து தாமிரபரணி ஆற்றின்கரையில் உள்ள தற்போதைய ஆழ்வார்திரு நகரி பகுதிக்கு வந்து மகாவிஷ்ணுவை குறித்து கடுந்தவம் புரிந்தார். அந்த தவத்திற்கு இறங்கி மகாவிஷ்ணு பிரம்மனுக்கு காட்சியளித்து, குருவாக இருந்து படைப்பு தொழி லுக்குரிய வேத மந்திரங்களையும் உபதேசித்து அருளினார். இவ்வாறு பிரம்மன் இங்கு தவமியற்றுவதற்கு முன்பே சுயம்பு மூர்த்தமாய் பெருமாள் எழுந்தருளியிருந்ததால் இத்தலத்திற்கு 'ஆதிபுரி' என்றும் இப்பெருமாளுக்கு 'ஆதிநாதர்' என்றும் பெயர் வந்தது. குருவாக இருந்து உபதேசித்ததால் "திருகுருகூர்" என்றும் சிறப்பிக்கப்படுகிறது.

    முற்காலத்தில் ஒரு வேதபாடசாலையில் அந்தண குலத்தில் பிறந்த மந்தன் என்பவன் மாணவனாக பயின்று வந்தான். அவன் அதிக திமிர் பிடித்தவன் என்பதால் வேதங்கள் கற்பதில் ஆர்வம் காட்டாமல், வேதம் பயின்ற பிற மாணவர்களையும், வேதம் கற்பித்த ஆசிரியர்களையும் நிந்தனை செய்து வந்தான். இதனால் வெகுண்ட வேதபாடசாலையின் குருமுனிவர், மந்தனே நீ வேதம் கற்கும் பாடசாலையில் இருந்தும் வேதங்களை கற்காததோடு, மற்றவர்களையும் இழிவாக பேசிய காரணத்தால் நீ அடுத்தபிறவியில் புலையனாக பிறக்கக்கடவாய் என சாபமிட்டு விடுகிறார்.

    அப்போதும் சிறிதும் வருந்தாத, தாந்தன் வேதங்களை கற்பதால் மட்டும் இறைவனை அடைந்துவிட முடியாது, அவருக்கு தொண்டு செய்வதன் மூலமும் இறைவனை அடையலாம் எனக்கூறி அந்த வேதபாடசாலையை விட்டு நீங்கி, அங்கிருந்த விஷ்ணு கோவிலை அடைந்து அக்கோவிலை சுத்தப்படுத்தி, செப்பனிட்டு, தொண்டுகள் பல செய்து வாழ்வை கழித்தான்.

    மறுபிறவியில் குருவின் சாபத்தால் தாந்தன் என்னும் பெயரில் புலையனாக பிறப்பெடுத்தான். முற்பிறவியில் விஷ்ணு கோவிலுக்கு தொண்டுகள் செய்த காரணத்தால் புலையனாக பிறந்தாலும் நல்ல ஒழுக்க சீலனாகவும், சிறந்த பக்திமானாகவும் விளங்கினான் தாந்தன். அவன் இந்த ஆதிபுரிக்கு வந்த போது, ஆதிநாத பெருமாளை தரிசிக்க செல்கையில், புலையன் என்பதால் உள்ளே செல்ல அந்தணர்களால் அனுமதி மறுக்கப்படுகிறது. இதனால் வருந்திய தாந்தன் ஆதிநாதரை வழிபடும் பொருட்டு வேள்வி ஒன்றை செய்ய எண்ணி வேள்விச்சாலை அமைத்தான். அங்கும் அந்தணர்கள் வந்து அவனுக்கு இடையூறு செய்தனர். இதனால் வருந்திய தாந்தன் பெருமாளிடம் முறையிட, பெருமாள் அவனுக்கு இடையூறு செய்த அந்தணர்களின் கண்கள் பார்வையிழந்து போகும்படி செய்கிறார்.

    அப்போது வானில் ஓரு குரல் தாந்தன் என் பக்தன் அவனுக்கு இடையூறு செய்பவர்கள் என் தண்டனைக்கு ஆளாவார்கள் என்று அசரீரியாக ஒலித்தது. இதனால் மனம்திருந்திய அந்தணர்கள் தாந்தனிடம் சென்று மன்னிப்பு கேட்க, அந்தணர்கள் இழந்த பார்வையை மீண்டும் பெற்றனர். அப்போது பெருமாள் அவர்களுக்கு காட்சியளித்து, முன்ஜென்ம சாபத்தினை போக்கி தாந்தனுக்கு முக்தி அளித்தார்.

    இந்த வரலாற்றை விளக்கும் வண்ணம் இக்கோவில் படிக்கட்டில் தாந்தன் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. தாந்தன் ஆதிநாதரை வழி பட்ட இடம் அப்பன் கோவில் என்று அழைக்கப்படுகிறது. இந்நிகழ்வு சாதி ஏற்றத்தாழ்வுகள் என்பது இறைவனுக்கு இல்லை என்பதை உணர்த்துகிறது.

    நம்மாழ்வார் வரலாறு:

    முற்காலத்தில் கரிமாற பாண்டியன் என்ற குறுநில மன்னன் இப்பகுதியை ஆட்சி செய்து வந்தான். அவனுக்கு உடையநங்கை என்னும் பெண்ணோடு திருமணம் நடந்தது. இவர்கள் இருவரும் ஆதிநாதர் மீது அளவற்ற பக்தி செலுத்தி வந்தனர். இவர்களுக்கு திருமணமாகி பல ஆண்டுகள் குழந்தைபேறு இல்லை. எனவே குழந்தை பேறு வேண்டி இவர்கள் ஆதிநாதரை வழிபட்டு வந்தனர்.

    இவர்களின் வேண்டுதலுக்கு பலனாக வைகாசி மாத விசாக நட்சத்திர தினத்தில் கடக லக்னத்தில் ஓர் ஆண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு சடகோபன் என்னும் பெயர் சூட்டி வளர்த்து வந்தனர்.

    அந்த குழந்தை மற்ற குழந்தைகளை போல உண்ணாமல், உறங்காமல், இமைக்காமல், தும்மாமல், அழாமல், அசையாமல் அப்படியே இருந்தது. இதனால் வருந்திய பெற்றோர் அக்குழந்தையை ஆதிநாதர் சன்னதியில் கிடத்தி கண்ணீர்மல்க வேண்டினர். அப்போது அதுவரை அசைவில்லாமல் கிடத்தப்பட்ட குழந்தையானது தவழ்ந்து சென்று அங்கிருந்த புளியமரத்தினடியில் சென்று அமர்ந்துகொண்டது.

    அக்காட்சியை கண்ட பெற்றோர்கள் இது பெருமாளின் திருவிளையாடலே என்பதை உணர்ந்து அக்குழந்தையை தொந்தரவு செய்யாமல் பெருமாள் பார்த்துக்கொள்வார் என்று விட்டுச்சென்றார்கள். அதன்பின் 16 ஆண்டுகள் அக்குழந்தை அப்புளியமரத்தினடியில் அமர்ந்தபடியே யோக நிஷ்டையில் இருந்தது. 16 ஆண்டுகள் கழித்து கண்விழித்த அந்த குழந்தையே நம்மாழ்வார். நம்மாழ்வார் கண்விழித்ததும் வேதத்தின் சாரத்தையெல்லாம் பிழிந்து திருவாய்மொழியாக அருளினார்.

    பின்னர் திருக்கோளூரில் இருந்த மதுரகவியாழ்வார் இங்கு வந்து நம்மாழ்வாரை தன் குருவாக ஏற்று பணிவிடைகள் செய்து வந்தார். மதுரகவியாழ்வார் வயதில் மூத்தவராய் இருந்தும் 16 வயது பாலகனான நம்மாழ்வாரை குருவாக ஏற்றதோடு அல்லாமல் நம்மாழ்வார் மீது தனி பாசுரங்களே பாடியுள்ளார். அவற்றுள் கண்ணி நுன் சிறுதாம்பு என்று துவங்கும் பாடல் பிரசித்தி பெற்றது ஆகும்.

    மதுரகவியாழ்வார் இக்குருகூர் வந்து முதன்முதலாக யோக நிஷ்டையில் இருந்த நம்மாழ்வார் மீது சிறு கல் எறிந்து எழுப்பினார். எழுந்த நம்மாழ்வாரிடம் "செத்ததின் வயிற்றில் சிறியது பிறந்தால் எத்தை தின்று எங்கே கிடக்கும்" என்ற கேள்வியை மதுரகவியாழ்வார் கேட்க, அதற்கு அக் குழந்தை நம்மாழ்வாரோ "அத்தை தின்று அங்கே கிடக்கும்" என்ற உயர்ந்த அத்வைதத்தை பதிலாக உரைத்தார். இதனால் மகிழ்ந்த மதுரகவியாழ்வார் ஆகா இவர் அல்லவா என் உண்மையான குரு என்று கூறி நம்மாழ்வாரை தன் குருவாக ஏற்றார்.

    நம்மாழ்வார் இங்கு புளியமரத்தடியில் 16 ஆண்டுகள் யோக நிலையில் இருந்து பின் கண்விழித்து பல திருவாய்மொழி பாடல்களை அருளியுள்ளார். அவர் பல கோவில்களுக்கு எழுந்தருளி தன் பாசுரங்களால் பெருமாளை மங்களாசாசனம் செய்துள்ளார். இவருக்கு இங்கு ஆதிநாதப்பெருமாள் தனக்கு நிகரான அந்தஸ்து அழித்து சிறப்பித்துள்ளார். எனவே இங்கு நம்மாழ்வாருக்கு பெருமாளை விட ஒரு படி மேலாகவே சிறப்பளிக்கப்படுகிறது.

    நம்மாழ்வார் சன்னதி

    பெருமாளின் அம்சமாகவே பிறந்த நம்மாழ்வாருக்கு இங்கு, ஆதிநாதர் தனக்கு நிகரான அந்தஸ்து அளித்து சிறப்பித்துள்ளார். எனவே இங்கு நம்மாழ்வார் தனி விமானம், தனி கொடிமரம் கொண்டு தெற்கு நோக்கிய தனி சன்னதியில் காட்சித்தருகிறார். இவருக்கு வருடத்தில் இரண்டு முறை மாசி மாதம் மற்றும் வைகாசி மாதம் கொடியேற்றமாகி திருவிழா நடைபெறும்.

    இங்கு பிறந்த நம்மாழ்வார் 16 வயது வரை இங்கிருந்த புளியமரத்தடியில் யோக நிஷ்டையில் இருந்து, வைணவ கோவில்கள் பலவற்றுக்கும் மங்களாசாசனம் செய்து, இறுதியில் மோட்சமடைந்த பின் அவரின் உடலானது இப்புளியமரத்தின் அடியிலேயே வைக்கப்பட்டு தனிக்கோவில் எழுப்பப்பட்டதாக கூறுகிறார்கள்.

    உறங்காபுளி மரம்

    பெருமாள் அம்சமாக நம்மாழ்வார் இப்பூவுலகில் அவதரிக்கும் முன்பே ஆதிசேஷனின் அம்சமாக இங்கு புளியமரம் அவதரித்ததாம். இம்மரம் சுமார் 5000 ஆண்டுகளை தாண்டி இன்றும் இத்தலத்தில் உறங்காபுளியாக நிலைப்பெற்றுள்ளது. இம்மரம் பூக்கும் ஆனால் காய்க்காது என்று கூறப்படுகிறது.

    பொதுவாக புளியமரத்தின் இலைகள் மாலை 6.00 மணிக்கு பின் மூடி ஒன்றாகிவிடும். ஆனால் இந்த மரத்தின் இலைகள் எப்போதும் மூடாது என்பதால் உறங்காபுளி என்று சிறப்பிக்கப்படுகிறது.

    கல் நாதஸ்வரம்

    இந்த கோவிலில் கல்லில் செதுக்கப்பட்ட நாதஸ்வரம் ஒன்று உள்ளது. இந்த அற்புத நாதஸ்வரத்தை தயார் செய்யவதே தனிக் கலை ஆகும். இந்த கல் நாதஸ்வரத்தை செதுக்க பல நுட்பங்களை கையாண்டுள்ளனர் கலைஞர்கள். இதற்கென சிறப்பு வாய்ந்த கருங்கல்லை தேர்ந்தெடுத்து செதுக்கும் போது அது உடையாமல் இருக்க அந்த கருங்கல்லை பலவகையான மூலிகைகளில் இருந்து எடுக்கப்பட்ட சாற்றில் மூழ்க வைத்து, பக்குவப்படுத்தியே செதுக்கியுள்ளார்கள். இதனால் தான் இந்த நாதஸ்வரம் தற்போதும் நேர்த்தியாக உள்ளதாக கூறப்படுகிறது.

    கோவில் சிறப்புக்கள்

    இங்கு கருவறையில் நின்று அருள்பாலிக்கும் பெருமாளின் பாதங்கள் பூமிக்குள் புதைந்திருப்பதாக கூறப்படுகிறது. இங்குள்ள நம்மாழ்வார் திருமேனி மதுரகவியாழ்வாரால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாகும்.

    நம்மாழ்வார் இத்தலத்தின் மீது பதினொரு திருவாய்மொழி பாசுரங்கள் (3106 முதல் 3116வரை) பாடி மங்களாசாசனம் செய்துள்ளார்.

    இங்கு கருவறைக்கு எதிரிலுள்ள கருடன் மற்ற கோவில்களை போல கரம் கூப்பிய நிலையில் இல்லாமல், சங்கு-சக்கரம் ஏந்தியும், அபய-வரதம் காட்டியும் நான்கு கரங்களுடன் காட்சியளிப்பது சிறப்பு.

    நவதிருப்பதிகளின் ஒன்பது பெருமாள்களும் வருடத்திற்கு ஒருமுறை இந்த ஆழ்வார்திருநகரிக்கு எழுந்தருளி நம்மாழ்வாருக்கு காட்சிகொடுப்பார்கள். நவதிருப்பதி கோவில்களில் இந்த ஆழ்வார்திருநகரி தவிர வேறெந்த கோவில்களிலும் நம்மாழ்வாருக்கு உற்சவ திருமேனி கிடையாது.

    திருவரங்கத்திற்கு அடுத்தபடியாக இங்குதான் அரையர் சேவை பிரசித்தமாக நடைபெறும். நம்மாழ்வார் பல கோவில்களின் பெருமாள் மீது பாசுரங்கள் பாடியிருக்க, இங்கு அவரின் சிஷ்யரான மதுரகவியாழ்வார் நம்மாழ்வாரை போற்றி அவர் மீதே பாசுரங்கள் பாடியுள்ளார்.

    இங்கு தனக்கு நிகரான அந்தஸ்த்தை பெருமாள், நம்மாழ்வாருக்கு வழங்கியிருந்தாலும், பெருமாளுக்கு ஒருபடி மேலாகவே இவர் சிறப்பிக்கப்படுகிறார். இங்குள்ள பெருமாளின் கருவறை விமானத்தை காட்டிலும், நம்மாழ்வாரின் கருவறை விமானமே அளவில் சற்று பெரியதாகும்.

    இங்கு வேடன் ஒருவனும், வேழம் ஒன்றும், இங்கு வாழ்ந்த நாய் ஒன்றும் இத்தல மகிமையால் முக்தி பெற்றுள்ளது.

    இங்கு பிரம்மன், நம்மாழ்வார், மதுரகவியாழ்வார், சங்கன், தாந்தன், இந்திரன், பல ரிஷிகள் ஆகியோர் பெருமாளின் தரிசனம் கண்டுள்ளார்கள்.

    இங்கு நடைபெறும் திருஅத்யன உற்சவத்தில் நம்மாழ்வார் எழுந்தருளியிருக்கும் இடத்திற்கு பெருமாளே நேரில் சென்று காட்சியளித்து, நம்மாழ்வாரின் திருமுடி மீது தன் திருவடி வைத்து சேவை சாதிப்பார். இதற்கு திருமுடி சேவை என்று பெயர்.

    காசிப முனிவரால் சபிக்கப்பட்ட இந்திரன் இத்தலத்தில் ஆதிநாத பெருமாளை வணங்கி விமோசனம் பெற்றார்.

    இங்கு மற்ற கோவில்களை போல இராமானுஜருக்கு காவி உடை சாத்தப்படாமல், வெள்ளை உடையே சாத்தப்படுகிறது.

    இத்தலத்தில் எழுந்தருளியுள்ள நம்மாழ்வாருக்கு மாறன், சடகோபன், பராங்குசன், பராங்குசநாயகி, வகுளாபரணன், குருகைப்பிரான், குருகூர்நம்பி, தொண்டர் பிரான், திருநாவீறு உடைய பிரான், உதயபாஸ்கரர், குழந்தைமுனி, ஞானத்தமிழ்க்கடல், மெய்ஞ்ஞானகவி, வரோக பண்டிதன் ஆகிய பெயர்களும் வழங்கப்படுகிறது.

    கம்பர் தான் எழுதிய ராமாயணத்தை அரங்கேற்றம் செய்யும் முன்னர், இங்கு வந்து சடகோபன் என்று அழைக்கப்படும் நம்மாழ்வாரை வணங்கி அவர் மீது சடகோப அந்தாதி என்னும் பாடலை பாடி வணங்கி உள்ளார்.

    தமிழ் தாத்தா என்று சிறப்பித்து கூறப்படும் உ. வே. சுவாமிநாத அய்யர் பத்துபாட்டு என்னும் ஓலைச்சுவடிகளை தேடி அலைந்த போது, இத்தலம் வந்து நம்மாழ்வாரை வேண்டிட, அதற்கு அடுத்த இரண்டு நாட்களில் அந்த ஓலைச்சுவடி கிடைக்கப் பெற்றதாம்.

    இத்தலத்தில் தான் ராமானுஜரின் பிறப்பிற்கு முன்பே அவருக்கு தனிக் கோவில் எழுப்பப்பட்டது.

    • இக்கோயில் கிருபானந்த வாரியார் சுவாமிகளின் அருளாசியின்படி கட்டப்பட்டது.
    • பெருமாளும், சிவனும் தனித்தனி சந்நதிகளில் அருள்பாலிக்கின்றனர்.

    தூத்துக்குடி மாவட்டம் புன்னைநகரில் சீனிவாசப்பெருமாள் தன் தேவியருடன் திருவருட்பாலிக்கிறார். சிவ-விஷ்ணு ஒருமைப்பாடு காணும் இத்தலத்தில் பெருமாளுக்கும், சிவனுக்கும் தனித்தனி ராஜகோபுரம் அமைந்துள்ளது. வடநாட்டு பாணி மற்றும் தென்னிந்திய அமைப்பில் ஆலயம் நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது.

    தினமும் சூரியபகவானின் ஒளிக்கதிர்கள் பெருமாளின் வலது கையில் பட்டு, முன்னே நிற்கும் பக்தர்கள் மீது பிரதிபலிப்பது பெருமாளிடமிருந்து நேரடியாகவே ஆசி பெறுவது போல் அமைந்துள்ளது. இத்தலம் அந்நாளில் புன்னை மரங்கள் சூழ, பசுக்கள் மேய்ந்த தலமாக இருந்துள்ளது. இதனாலேயே இத்தலம் புன்னையடி என வழங்கப்பட்டது.

    ஸ்ரீரங்கம் பெருமாள் கோயில் தல விருட்சம் புன்னை மரம் என்பதும், அனைத்து பெருமாள் கோயில்களிலும் பிரம்மோற்சம் 9ம் நாள் திருவிழாவில் பெருமாள் புன்னைமர வாகனத்தில் தரிசனம் தருவார் என்பதும் குறிப்பிடத்தக்கவை.

    இக்கோயில் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளின் அருளாசியின்படி கட்டப்பட்டது. சைவ, வைணவ பேதமின்றி பெருமாளும், சிவனும் தனித்தனி சந்நதிகளில் அருள்பாலிக்கின்றனர். இத்தலம் தாமிரபரணி ஆற்றின் கடைசி கரைப்பகுதியில் முந்திரி சோலை நடுவே மிகவும் ரம்மியமாக அமைந்துள்ளது.

    ராஜகோபுரம் அடுத்து உற்சவ மண்டபம், பிராகார மண்டபம், மகாமண்டபம், அர்த்தமண்டபம், கர்ப்பகிரகம் என ஆகம வரிசைப்படி கோயில் அமைந்துள்ளது. கோயிலில் நுழைந்தவுடன் முழுமுதற்கடவுள் ராஜ கணபதி முதல் தரிசனம் தருகிறார். ஆன்மிக கலைநிகழ்ச்சிகள், சொற்பொழிவுகள் நடத்துவதற்காக உற்சவ மண்டபம் பிரமாண்டமாக அமைந்துள்ளது. மகாமண்டபம் எனப்படும் அஷ்டலட்சுமி மண்டபத்தில் சக்கரத்தாழ்வாரையும், யோக நரசிம்மரையும் தரிசிக்கலாம்.

    கர்ப்பகிரகத்தில் பெருமாள் கிழக்கு பார்த்து நின்ற கோலத்தில் அருள்கிறார். ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீனிவாசப்பெருமாள் உற்சவ மூர்த்தியாக அர்த்தமண்டபத்தில் அருள்கிறார். இங்கே பெருமாளின் பத்து அவதாரங்களும் அருமையாக வடிக்கப்பட்டுள்ளன. கன்னி மூலையில் தாயார் பத்மாவதி தனிச் சந்நதியில் அருள்பாலிக்கிறார்.

    அடுத்தடுத்து வடபழநி முருகன், கிருபானந்த வாரியார், ராஜகோபாலர், வள்ளி-தெய்வானை சமேத தணிகை முருகன் ஆகியோரை தனித்தனியே தரிசிக்கலாம். வாயு மூலையில் ஆண்டாள் உள்ளார். சீனிவாசப் பெருமாளின் மூல ஸ்தானத்தின் வெளிப்பிராகாரத்தில் தெற்கு நோக்கி கணபதி, தட்சிணாமூர்த்தி, பின் பக்கம் குருவாயூரப்பன், வடக்கு நோக்கி விஷ்ணு துர்க்கை, பிரம்மா, ஈசான்யத்தில் ஆஞ்சநேயர் என தரிசனம் பெறலாம்.

    மகாமண்டபத்தில் பெருமாளை வணங்கியபடி கருடாழ்வார் நிற்கிறார். அடுத்துள்ள ஆதி நாராயணர் -சிவனணைந்த பெருமாள் திருக்கோயிலில் மூலவராக ஆதி நாராயணர் நின்ற கோலத்தில் கொலுவிருக்கிறார். ஆதிநாராயணருக்கு வலது பக்கம் பெரிய பலவேசம், சின்ன பலவேசம் இருவரும் தனிச் சந்நதியிலும், வடக்கு நோக்கி சிவனணைந்த பெருமாள், தெற்கு நோக்கி சிவகாமி, பிரம்ம சக்தி, பேச்சி ஆகியோரும் அருள்பாலிக்கின்றனர்.

    கோயில் பிராகாரத்தில் பூக்கண் பலவேசம், சப்பாணி முத்து, லாடகுரு சன்னியாசி, முத்து பிள்ளையம்மன், இருளப்பர், நட்டாணி பலவேசம், சுடலை, முண்டன் ஆகிய கிராம தெய்வங்கள் திகழ்கிறார்கள். மூலவருக்கு வெள்ளிக்கிழமைகளிலும், உற்சவருக்கு புதன் கிழமைகளிலும் திருமஞ்சனம் நடக்கிறது.

    இதில் கலந்து கொண்டால் திருமணத்தடை நீங்குவதாக ஐதீகம். வியாழன் தோறும், சனி முதலான கிரக தோஷங்களை நிவர்த்தி செய்யும் இத்தல பெருமாளின் ஏகாந்த சேவையை தரிசிக்கலாம்.

    திருநெல்வேலி-திருச்செந்தூர் வழியில் உள்ள குரும்பூர் சென்று அங்கிருந்து நாசரேத் செல்லும் வழியில் 5 கி.மீ. தூரம் கடந்தால் புன்னை நகரை அடையலாம்.

    • இக்கோவில் பரசுராமனின் தோஷம் நீக்கிய தலம் ஆகும்.
    • மகாசிவராத்திரி நாளில் 1008 திருவிளக்கு பூஜை நடக்கும்.

    காவிரி பாய்ந்து வளம் கொழிக்கும் தஞ்சை மாவட்டத்தில் திரும்பும் திசையெல்லாம் கோவில்கள் அமைந்து மக்களை காத்து வருவது அனைவரும் அறிந்ததே.

    காவிரி கரையோர கிராமங்களில் எண்ணற்ற சைவ கோவில்கள் உள்ளன. பழம் பெருமை வாய்ந்த இந்த கோவில்களுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள சிவாலயங்களில் மக்கள் தங்களின் மனச்சுமைகளை இறக்கி வைத்து ஆறுதல் பெற்று வருகின்றனர். அந்த வகையில் தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளிக்கு வடக்கு பகுதியில் கொள்ளிடம் ஆற்றின் கரையில் விஷ்ணம்பேட்டை கிராமத்தில் அமைந்துள்ளது திருக்கானூர் கரும்பீஸ்வரர் திருக்கோவில்.

    மணல் மூடிய ஆலயம்

    திருக்கானூர் என்ற மணல்மேடு என அழைக்கப்படும் இக்கோவில் கிழக்கு நோக்கி அமைந்துள்ள சிவன் கோவில் ஆகும்.

    இக்கோவிலின் உள்ளே நுழைந்த உடன் வடபுறத்தில் தெற்கு நோக்கி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் இறைவன் கரும்பீஸ்வரர். அம்மன் சவுந்தரநாயகி அம்பாள்.

    மூலஸ்தானத்தில் கோவில் கொண்டுள்ள இறைவனுக்கு கரும்பீஸ்வரர், செம்மேனிநாதர் தேஜோமயர், இஷுவனேஸ்வரர், செம்பேனியப்பர், முளைநாதர் ஆகிய பெயர்களும் உள்ளன. இக்கோவிலின் தீர்த்தம் கொள்ளிடம் மற்றும் வேத தீர்த்தம் ஆகும். தலவிருட்சம் வில்வ மரம்.

    கோவிலின் அருகில் உள்ள கொள்ளிடம் நதி பெருக்கெடுத்து ஓடியதால் இந்த கோவிலை மணல்மூடி மக்கள் கண்களுக்கு தெரியாமல் இருந்தது. இந்தநிலையில், மாடு மேய்க்கும் சிறுவர்கள் காலில் கோவில் கலசம் தென்பட்டதை தொடர்ந்து இந்த இடத்தை தோண்டி பார்க்க கோவில் முழுமையும் வெளியே கொண்டு வரப்பட்டது.

    தோஷம் நீக்கிய தலம்

    இக்கூற்று உண்மை என்பது போல் தற்போது கோவிலின் மதில் சுவரை சுற்றி மணல்மேடு காணப்படுகிறது. இக்கோவில் இருந்த பகுதிக்கு பனிமதி மங்கலம், கரிகாற்சோழர் சதுர்வேதி மங்கலம் என வேறு பெயர்கள் இருந்ததாகவும் வரலாறு தெரிவிக்கிறது.

    இக்கோவில் பரசுராமனின் தோஷம் நீக்கிய தலம் ஆகும். அம்மன் சிவ தியானம் செய்ய பூவுலகில் இத்தலத்தை தேர்வு செய்து சிவதியானத்தில் ஆழ்ந்தார். சிவதியானத்தில் இருந்த அம்பாளுக்கு இறைவன் ஒளி வடிவாக காட்சியளித்தார். இதனால் இத்தல இறைவனுக்கு தேஜோமயர், செம்மேனியப்பர், என்றும் அம்பாளுக்கு சிவயோக நாயகி என்று பெயர் வந்ததாகவும் கூறப்படுகிறது.

    சூரிய ஒளிக்கதிர்கள்

    விஷ்ணம்பேட்டை, திருக்கானூர், மணல்மேடு என அழைக்கப்படும் இக்கோவில் இந்து சமய அறநிலைய ஆட்சித்துறையின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது. தல மகிமையாக ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் 1, 2, 3-ந் தேதிகளில் சூரிய உதயத்தில், சூரியனின் ஒளி மூலஸ்தான இறைவன் மீது படும் வகையில் கோவில் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த 3 நாட்களிலும் காலை உதய நேரத்தில் சூரிய கதிர்கள் மூலவர் மீது பட்டு சூரியபகவான் சிவனை பூஜிக்கும் விழாவாக நடைபெறுகிறது. ஆவணி மாத மூல நட்சத்திரத்தில் சந்தனக்காப்பு, தை மாத பவுர்ணமியை அடுத்து வரும் வெள்ளிக்கிழமையில் சிறப்பு அபிஷேகம் நடைபெறும். பிரதோஷ வழிபாடும் இக்கோவிலில் சிறப்பாக நடந்து வருகிறது. மகாசிவராத்திரி நாளில் 1008 திருவிளக்கு பூஜை நடக்கும்.

    திருக்கானூர் கரும்பீஸ்வரர் கோவிலுக்கு திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர் ஆகியோர் வருகை தந்து வழிபட்டனர் என்பது அவர்கள் எழுதிய பாடல்கள் வாயிலாக தெரிய வருகிறது.

    உடல் நலம் பெறும்

    பண்டைய சோழ மன்னன் கரிகாலன் ஊர் இந்த கோவில் அமைந்துள்ள ஊர் என்றும், யானை மாலையிட்டு கரிகாற் சோழனை அழைத்துச் சென்றது இந்த ஊரில் இருந்துதான் என்றும் ஒரு செவிவழி செய்தி இந்த ஊரை பற்றி தெரிவிக்கிறது. மேலும் இந்த கோவிலுக்கு முதலாம் ராஜேந்திர சோழன் நிலங்களை வழங்கி உள்ளதாகவும் கல்வெட்டு செய்தி கூறுகிறது.

    இத்தலத்தில் உள்ள சிவனையும், அம்பாளையும் வணங்கினால் உடல்நலக்குறைவு நீங்கி திருமணத்தடை அகலும் என்றும், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பதும் வளமான வாழ்க்கையை கரும்பீஸ்வரர் அருள்வார் என்பதும் பக்தர்களின் நம்பிக்கை.

    திருக்கானூர் கரும்பீஸ்வரர் கோவிலில் தல விருட்சம் வில்வ மரத்தின் இலைகளால் செம்மேனி நாதருக்கு அர்ச்சனை செய்து வஸ்திரம் சாற்றி, நெய் தீபம் ஏற்றி சிவகவசம் பாராயணம் செய்தால் நீண்ட நாட்களாக உடல் நலக்குறைவால் அவதிப்படுபவர்கள் நோய் நீங்கி நல்வாழ்வு பெறுவார்கள் என்றும், சவுந்தரநாயகி அம்பாளுக்கு புத்தாடை அணிவித்து, செவ்வரளி மாலை சாற்றி தீபமிட்டு அர்ச்சனை செய்ய திருமண தடை நீங்கி, திருமணம் கைகூடும் என்றும், செம்மேனியப்பருக்கும், அம்பாளுக்கும் எருக்கமாலை அணிவித்து பால், தயிர், நெய், தேன், பன்னீர் அபிஷேகம் செய்ய சந்தானபாக்கியம் கிடைக்கும் என்பதும் ஐதீகம்.

    சப்தமி நாளில் இக்கோவிலில் மூலவரையும், அம்பாளையும் அர்ச்சனை செய்து வழிபட்டால் சகல தோஷங்களும் நீ்ங்கும் என இன்றும் பக்தர்களால் நம்பப்படுகிறது.

    குடமுழுக்கு

    இக்கோவிலின் நடை காலை 6 மணி முதல் 8 மணி வரையும், மாலை 4 மணி முதல் 6 மணி வரையும் திறந்திருக்கும். கடந்த 2019-ம் ஆண்டு திருக்கானூர் கரும்பீஸ்வரர் கோவிலில் குடமுழுக்கு நடந்தது. முற்றிலும் கிராம சூழலில் ஆற்றங்கரையோரத்தில் அமைந்துள்ள இ்ந்த சிவாலயம் காவிரி டெல்டாவில் அமைந்துள்ள முக்கிய சிவாலயமாக திகழ்கிறது.

    கோவிலுக்கு செல்வது எப்படி?

    திருக்கானூர் கரும்பீஸ்வரர் கோவிலுக்கு தென் மாவட்டங்களில் இருந்து வர விரும்பும் பக்தர்கள் முதலில் பஸ் அல்லது ரெயில் மூலம் தஞ்சைக்கு வர வேண்டும். பின்னர் தஞ்சையில் இருந்து பஸ் மூலம் திருக்காட்டுப்பள்ளி பஸ் நிலையத்துக்கு வந்து அங்கிருந்து ஆட்டோ மூலம் திருக்காட்டுப்பள்ளி காவிரி பாலத்தை கடந்து சென்றால் கோவிலை அடையலாம்.

    • பூதப்பாண்டி மிகவும் பழமையான வரலாற்று பின்னணியை கொண்டது.
    • கருவறையின் மேல் விமானம் கிடையாது.

    'ஆலயம் தொழுவது சாலவும் நன்று', 'கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்' என்றனர் நமது முன்னோர்கள். அதனால்தான் தமிழகத்தை ஆண்ட சேர, சோழ, பாண்டிய, பல்லவ, குறுநில மன்னர்கள் திரும்பிய பக்கம் அனைத்திலும் கோவில்களை அமைத்தனர்.

    குமரி மாவட்டம் தோவாளை தாலுகா நாகர்கோவிலில் இருந்து வடக்கே 10 கிலோ மீட்டர் தொலைவில் பூதப்பாண்டியில் பழமையானதும் வரலாற்று சிறப்பு மிக்கதுமான சிவகாமி அம்பாள் உடனுறை பூதலிங்கசாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் தாடகை மலை அடிவாரத்தில் பழையாற்றின் கரையில் இயற்கை எழில் சூழ்ந்த இடத்தில் அமைந்துள்ளது.

    பூதப்பாண்டி மிகவும் பழமையான வரலாற்று பின்னணியை கொண்டது. அதாவது கி.பி.25 முதல் கி.பி.50-ம் ஆண்டு வரை ஆட்சி செய்தவர் பசுபொன் பாண்டியன். இவர் தனது தந்தை பூதப்பாண்டியன் பெயரால் இந்த ஊரை நிறுவி இருக்கலாம் என கூறப்படுகிறது.

    இந்த கோவிலில் சுமார் 13 கல்வெட்டுகளை தமிழக தொல்பொருள் ஆய்வுத்துறை பதிவு செய்துள்ளது. இந்த கோவிலில் நந்தி மண்டப தூண் ஒன்றில் உள்ள கல்வெட்டில் 'கி.பி. 1503- கொல்லம் ஆண்டு 679-ல்' என காணப்படுகிறது. இதன் மூலம் இந்த கோவில் கி.பி.15-ம் நூற்றாண்டுக்கு முன்னரே கட்டப்பட்டிருக்க வேண்டும் என தெரிகிறது.

    இந்த கோவிலில் மூலவர் சுயம்புலிங்கமாக காட்சி தந்ததால் இந்த கோவில் கருவறை பாறையை குடைந்து நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது. கருவறையின் மேல் விமானம் கிடையாது. மூலவரை சுற்றி வலம் வந்து வழிபட சுற்று பிரகாரமும் இல்லை. கிழக்கு நோக்கி அமைந்துள்ள கோவிலின் வடக்கே ஒரு அழகிய தெப்பக்குளமும் அதன் நடுவே அழகிய மண்டபமும் காட்சி தருகிறது.

    கருவறை மூலவராக பூதலிங்க சாமி காட்சி அளிக்கிறார். மேலும் பூதநாதர், விநாயகர், வள்ளி தெய்வானையுடன் முருகன், தட்சிணாமூர்த்தி, சூரியபகவான், சாஸ்தா, சண்டிகேசுவரர், இறைவன் காட்சி தந்ததாக சொல்லப்படும் பக்தர் ஆண்டி செட்டியார் ஆகியோர் இந்த கோவிலில் காட்சி தருகின்றனர்.

    மூலவர் பூதலிங்க சாமியின் வலதுபக்கம் தெற்கு பகுதியில் சிவகாமி அம்பாளுக்கு விமானத்துடன் கூடிய தனி சன்னதியும் சுற்று பிரகாரமும் உள்ளன.

    சாலியர் கண்ட திருமேனி

    பல நூற்றாண்டுக்கு முன்பு நெசவு தொழிலை குலத்தொழிலாக கொண்ட சாலியர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் இந்த பகுதியில் வாழ்ந்து வந்தனர். இப்படி வாழ்ந்து வந்த காலகட்டத்தில் அவர்களில் ஒருவர் வளர்த்து வந்த பசு பாறைகள் அடர்ந்த புல்வெளியில் ேமய்ந்து விட்டு வீடு திரும்புவது வழக்கம். அந்த பசு பல நாட்களாக பால் தராமல் இருந்தது. இதனால் ஒரு நாள் பசுவை பின்தொடர்ந்து சென்றார்.

    அப்போது செடி அடர்ந்த புதர் ஒன்றின் மீது தனது பாலை சொரிந்து கொண்டு நிற்பதை பார்த்தார். அந்த புதரை வெட்டி மாற்றிய போது சுயம்புலிங்கம் உருவில் சிலை ஒன்று இருப்பதை கண்டார். இதுகுறித்து அவர் ஊர் மக்களிடம் தெரிவித்தார். ஊர் மக்கள் அங்கு வந்து பார்த்து அங்கு கோவில் ஒன்று கட்டி வழிபட தொடங்கினர். சாலியர் முதல் முதலில் கண்டதால் இறைவன் சாலியன் கண்ட திருமேனி என்று அழைக்கப்பட்டதாக கல்வெட்டு மூலம் தெரிய வருகிறது.

    கி.பி.1691-ல் (கொல்லம் 867) செதுக்கப்பட்ட கல்வெட்டு ஒன்று வடக்குதெரு மூலையில் காணப்படுகிறது. இதில் சேரமன்னன் ரவிவர்மா கோவில் அலுவலகத்தில் இருக்கும் போது சாலிய மக்கள் கேட்டுக்கொண்டபடி அவர்களுக்கு சில சலுகைகள் அளித்ததோடு இப்போது உள்ள வடசேரியில் அவர்கள் குடியிருக்க அனுமதி அளித்ததாக தெரிகிறது.

    எனவே, சாலிய சமுதாய மக்கள் இங்கு வசித்து வந்துள்ளனர். இன்றும் அவர்கள் பயன்படுத்திய நூல் நனைக்கும் கல்தொட்டி வரலாற்று சான்றாக இந்த பகுதியில் காணப்படுகிறது.

    விழாக்கள்

    பாண்டிய மன்னர்களால் உருவாக்கப்பட்ட இந்த கோவில் கி.பி. 15-ம் நூற்றாண்டில் சேர ஆட்சிக்கு உட்பட்டிருக்க வேண்டும். சேரர்கள் கைக்கு வந்ததும் சேர மன்னர்கள் ஆலய வழிபாட்டிற்கு பல்வேறு வசதிகளை செய்து கொடுத்ததோடு பல நிலங்களையும் கொடுத்துள்ளனர்.

    இந்த கோவிலில் தைமாதமும், சித்திரை மாதமும் 10 நாள் விழா ெகாண்டாடப்படுகிறது. தை மாதம் பெருந்திருவிழாவாக கொண்டாட படுவதுடன் 9-ம் நாள் தேரோட்டமும் 10-ம் நாள் தெப்பத்திருவிழாவும் நடக்கிறது.

    ஐப்பசி மாதம் திருக்கல்யாண உற்சவமும், பிரதோச நாளில் தேவருக்கு சிறப்பு வழிபாடும் நடக்கிறது. நினைத்ததை முடிக்கும் விநாயகரை ஆட்கொண்ட அரச மரத்தடியை இங்கு காணலாம்.

    இங்கு மாதம்தோறும் அமாவாசை அன்று மூலஸ்தான திருமூர்த்தியே சந்திர சேகரராக, உற்சவ மூர்த்தியாக தேரில் எழுந்தருளி கோவிலில் அமைந்துள்ள குடை வரை கொண்ட திருமலையை சுற்றி வலம் வருவார். அப்போது பக்தர்கள் அனைவரும் பக்தி கோஷம் முழங்க பின்னால் வருவார்கள்.

    -கு.மகாதேவன்,

    நிறுவன தலைவர், நேசநாயனார் அறக்கட்டளை, வடசேரி.

    • தமிழகத்திலேயே உயரமான நந்தியெம்பெருமான் இத்திருத்தலத்திலேயே அமைந்துள்ளார்.
    • தர்மதேவதையே இந்த நந்தியெம்பெருமானாக உள்ளார் என்பது ஐதீகம்.

    இறைவன்: கோமுக்தீஸ்வரர், மாசிலாமணீஸ்வரர்

    இறைவி: ஒப்பிலாமுலையம்மை  

    தீர்த்தம்: கோமுக்தி தீர்த்தம்  

    கோவிலின் சிறப்புகள்:

    தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை ஆலயங்களில் 36-வது ஆலயம். திருக்கயிலாயத்தில் இறைவி இறைவனோடு சொக்கட்டான் ஆடிக்களித்தமையால் பசு வடிவம் எய்தினார்.. அவர் அப்பசு வடிவத்தோடு இங்கு வந்து வழிபட்டு அவ்வடிவம் நீங்கப்பெற்றனர். இறைவரின் திருப்பெயர் மாசிலாமணியீஸ்வரர். இவரே கர்ப்ப கிரகத்தில் எழுந்தருளியிருப்பவர். அணைத்தெழுந்த நாயகர்; இவர் உமாதேவியை அணைத்தெழுந்த கோலமாக இருப்பவர்.

    திருவிழாவின் முடிவில் கோமுத்தி தீர்த்தத்தில் தீர்த்தம் கொடுத்தருளுபவர் இவரே. இரண்டு பிள்ளையார்கள் துணை வந்த பிள்ளையார், அழகிய பிள்ளையார். இறைவியின் திருப்பெயர் ஒப்பிலாமுலையம்மை. இத்திருப்பெயர் சுந்தர மூர்த்திநாயனாரால் `ஒப்பிலா முலையாள் ஒரு பாகா" என்று இவ்வூர்ப் பதிகத்தில் எடுத்து ஆளப்பெற்றுள்ளது. தீர்த்தங்கள் கோமுத்தி தீர்த்தம், பத்மதீர்த்தம், கைவல்யதீர்த்தம் என்பன. இவை முறையே திருக்கோவிலுக்கு எதிரிலும், கொங்கணேசுவரர் கோவிலின் பக்கத்திலும், திருக்காவிரியிலும் இருக்கின்றன. 

    திருமூலர் மூவாயிரம் ஆண்டுகள் வாழ்ந்து திருமந்திரம் இயற்றிய திருத்தலமிது. ஒரு ஆண்டுக்கு ஒரு பதிகம் வீதம் மூவாயிரம் பதிகம் பாடிய இவருக்கு இங்கு தனி சன்னதி உள்ளது. சிவபக்தரான திருமாளிகைத் தேவர் மீது படையெடுத்து வந்த நரசிங்க மன்னனுடன் போரிட்டு அவரைத் தோற்கடிப்பதற்காக அம்பிகை திருவாவடுதுறை கோவில் மதில் மீது இருந்த நந்திகளனைத்தையும் ஒரே நந்தியாக்கி அனுப்பியதால் இன்றளவும் இத்திருக்கோவில் மதில் மீது நந்திகள் கிடையாது. சிவபெருமானே சகல தோஷங்களும் நிவாரணமாக இருப்பதால் இத்திருக்கோவிலில் நவக்கிரகங்களுக்கு தனிச் சந்நதி கிடையாது. திருஞானசம்பந்தர் தமது தந்தையின் வேள்விக்காக சிவபெருமானிடம் ஆயிரம் பொற்காசுகள் பெற்ற திருத்தலம். முப்பத்து முக்கோடி தேவர்களும் படர் அரச மரமாக இருக்க அம்மரத்தின் கீழ் சிவபெருமான் திருநடனம் புரிந்த திருத்தலம்.

    தமிழகத்திலேயே உயரமான நந்தியெம்பெருமான் இத்திருத்தலத்திலேயே அமைந்துள்ளார். இவரது உயரம் 14 அடி 9 அங்குலம். (தஞ்சாவூரில் அமைந்துள்ள பெரிய கோவில் ஒரே கல் நந்தியின் உயரம் 12 அடி).தர்மதேவதையே இந்த நந்தியெம்பெருமானாக உள்ளார் என்பது ஐதீகம். இக்கோவில் திருவாடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமானது. 

    மயிலாடுதுறையில் இருந்து கும்பகோணம் செல்லும் வழியில் 15.கி.மீ. தொலைவில் இக்கோவில் உள்ளது. மயிலாடுதுறையில் இருந்து கும்பகோணத்திலிருந்தும் ஏராளமான பேருந்துகள் உள்ளன. 

    கோவிலின் முகவரி:

    அருள்மிகு கோமுக்தீஸ்வரர் திருக்கோவில்,

    திருவாடுதுறை,

    குத்தாலம் வழி,

    மயிலாடுதுறை மாவட்டம் 609803.

    • இங்கு பெருமாள் 12 அடி நீளத்தில் சயனக்கோலம் அருள்பாலிக்கிறார்.
    • இந்த கோவில் புதன் அம்சமாக விளங்குகிறது.

    நவகிரகங்கள் வரிசையில் நான்காவதாகவும், நவதிருப்பதி வரிசைகளுள் மூன்றாவதாகவும் விளங்கும் கோவில் "திருப்புளிங்குடி". இது புதன் அம்சமாக விளங்குகிறது.

    முன் ஒருசமயம் மகாவிஷ்ணு, தன் இருதேவியர்களுள் ஒருவரான லட்சுமியுடன் பூலோகத்தில் கருட வாகனத்தில் உலா வந்து கொண்டிருந்தார். அப்போது அவர் இயற்கை எழில் கொஞ்சும் தாமிரபரணி நதிக்கரையில் உள்ள மணல்மேடான இடங்களை பார்த்து அங்கே அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். இதனை கண்ட நாரதர் உடனே பூமாதேவியிடம் சென்று இந்த சம்பவத்தினை கூறி கலகம் மூட்டினார்.

    இதனை கேட்டு வெகுண்ட பூமாதேவி, வைகுண்டம் விடுத்து பாதாள உலகத்திற்குள் சென்று மறைந்து விட்டாள். பூமாதேவியின் கோபத்தால் உலகனைத்தும் நீரின்றி வறண்டது. குடிக்கக்கூட தண்ணீரின்றி உயிர்கள் தத்தளித்தன.

    இந்நிலை கண்டு அஞ்சிய முப்பத்து முக்கோடி தேவர்களும் திருமாலை தேடி வந்து முறையிட்டனர். உடனே திருமால் திருமாலும் பூமாதேவியின் கோபத்தை அறிந்து அவளை சமாதானம் செய்ய பாதாள உலகம் நோக்கி சென்றார்.

    அங்கு சென்று பூமாதேவியை கண்டு, சமாதானமாக பேசி என்னை பொறுத்த வரை திருமகளும், நீயும் எனக்கு சமமானவர்களே என எடுத்துரைத்தார். பொறுமையின் சிகரமான பூமாதேவியும் அந்த விளக்கத்தை கேட்டு மகிழ்ந்து தன் தவறை உணர்ந்தாள். மீண்டும் வைகுண்டம் அடைந்ததோடு மட்டுமல்லாமல் பூவுலைகையும் வளம் கொழிக்க செய்தாள். இவ்வாறு பூமிதேவியின் சினத்தை தணித்ததால் இவர் பூமிபாலகர் என்றும் காய்சினிவேந்தர் திருநாமம் பெற்றார்.

    இந்திரனின் பிரம்மகத்தி தோஷம் நீக்கி, யக்ஞசர்மாவுக்கு சாபநிவர்த்தி அளித்த வரலாறு:

    முற்காலத்தில் இமயமலையில் ஒரு முனிவரும் அவரது மனைவியும் மான் உருவில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கும் போது இந்திரன், மான் உருவில் இருந்த முனிவரை தனது ஆயுதத்தால் கொன்று பிரம்மகத்தி தோஷத்திற்கு ஆளானான். வியாழ பகவானின் ஆலோசனைப்படி, இந்திரன் இத்தலத்திற்கு வந்து பூமிபாலகனை வேண்டி இத்தலத்தில் தீர்த்தம் உண்டாக்கி, அதில் நீராடி இத்தல பெருமாளை வணங்கினார். அவர் உருவாக்கிய தீர்த்தமே இந்திர தீர்த்தம் என பெயர் பெற்றது.

    தனது தோஷம் நீங்கிய மகிழ்ச்சியில் இந்திரன் இந்த புண்ணிய தீர்த்தக் கரையில் யாகம் ஒன்றினை நடத்த நினைத்து அதற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தான். அந்த நேரத்தில், இந்திரன் நடத்தும் யாகத்தினை தடுக்கும் நோக்குடன் அரக்கன் ஒருவன் அங்கு வந்து இந்திரனுக்கு பல்வேறு இடையூறுகளைச் செய்தான். அந்த அரக்கனால் இன்னலுக்கு ஆளான இந்திரன் பூமிபாலகரை மனதார நினைத்து மனமுருக வேண்டி நின்றான். இந்திரனின் வேண்டுகோளுக்கு இணங்க பூமிபாலகரும் அந்த அரக்கனை தன் கதையினால் தாக்கினார்.

    அப்போது அந்த அரக்கன் தனது சுய உருவத்தைப் அடைந்தான். அப்போது பூமிபாலகர், அவனை நோக்கி, நீ யார்? என்று கேட்க " நான் முன்ஜென்மத்தில் யக்ஞ சர்மா என்ற பெயரில் ஒரு பிராமணனாகப் பிறந்தேன். நான் எனது இல்லத்தில், வசிஷ்ட புத்திரர்களால் செய்யப்பட்ட யாகத்திற்கு உரிய மரியாதை செய்யாமல் அவர்களை அவமதித்ததன் காரணமாக, அவர்கள் என்னை கொடிய அரக்கனாக ஆகும்படி சாபமிட்டனர். நான் என் தவறை உணர்ந்து அவர்களிடம் மன்னிப்பு கேட்டு சாபவிமோசனம் கூறும்படி கேட்டேன்.

    அதற்கு அவர்கள் பூலோகத்தில் பொருநை ஆற்றின் நதிக்கரையோரமாக இந்திரன் தனது பாவத்தைப் போக்கிக் கொள்ள யாகம் மேற்கொள்வான். அந்த சமயம் நீ போய் யாகத்தை நடத்த விடாமல் தடுக்கும் நேரத்தில் திருமால் உன்னை கதையால் தாக்குவார். அன்றைய நாளில் இருந்து உன் பழைய உருவம் பெற்று நீ வாழ்வாய்" எனக் கூறினார். அரக்கனும் தன் நிஜ உருப்பெற்று மகிழ்ச்சியுடன் சென்றபின் இந்திரன் தான் செய்ய நினைத்த வேள்வியினை சிறப்புடன் செய்து முடித்து பூமிபாலகப்பெருமாளின் அருளை பெற்றதாகும் வரலாறு கூறுகிறது.

    பொதுவாக பெருமாளின் நாபியிலிருந்து தோன்றும் தாமரை மலரில் காட்சியளிக்கும் பிரம்மா, இங்கு பெருமாளின் தொப்புளிலிருந்து தோன்றும் தாமரை மலரில் காட்சியளிக்கிறார்.

    இங்குள்ள நிலமகள் நாச்சியார் மற்றும் பூமகள் நாச்சியார் இருவரும் சற்றே பெரிய திருமேனி. இவர்கள் பெருமாளின் பாதங்களுக்கு அருகே வீற்றிருக்கிறார்கள் என்பதால் இங்கு தாயார்களுக்கு தனி சன்னதி இல்லை.

    இங்கு பெருமாள் சுமார் 12, அடி நீளத்தில் சயனக்கோலம் சாதித்தருள்வதால் இவரின் திருமுகம் முதல் மூட்டு வரை உள்ள பகுதியை மட்டுமே கருவறையில் தரிசிக்க முடியும். பிரகாரத்தில் உள்ள சாளரத்தின் வழியாகத்தான் இவரின் பாதங்களை நன்றாக தரிசிக்க முடியும். இங்கு வருணன், நிருதி, யக்ஞசர்மா, இந்திரன் ஆகியோர் பெருமாளை வணங்கி அருள்பெற்றுள்ளார்கள்.

    முன்னர் ஒருமுறை ராமானுஜர் இத்தலம் வந்து இங்குள்ள பெருமாளை தரிசித்தபின், ஆழ்வார்திருநகரி செல்ல திருவுள்ளம் கொண்டார். ஆனால் அவருக்கு அங்கிருந்து ஆழ்வார்திருநகரி செல்லும் தொலைவு தெரியாத காரணத்தால், அங்கு நெல் மணிகளை காய வைத்துக்கொண்டிருந்த அர்ச்சகரின் பெண்ணிடம் அதுபற்றி கேட்க, அதற்கு அந்தப்பெண் "கூப்பிடும் தூரத்தில் தான் ஆழ்வார்திருநகரி உள்ளது"என்று சாதுர்யமாக பதிலளிக்க, ராமனுஜரின் கண்களில் நீர் பெருக அவர் அகநெகிழ்ந்தார். பின் "யாமும் கூப்பிடும் தொலைவை எய்திவிட்டோம்" என்று ராமானுஜர் பதில் அளித்தார். அந்த அளவிற்கு இத்தலத்தில் வளர்ந்தவர்களுக்கு ஞானம் வந்தவிடும் என்பது சிறப்பம்சம் ஆகும்.

    • கடையநல்லூர் தாலுகாவில் அமைந்துள்ளது இந்த கோவில்.
    • இந்த கோவிலில் வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

    தென்காசி மாவட்டத்தில் அருள்வாக்கிற்கு பெயர் பெற்ற கடையநல்லூர் தாலுகா புளியங்குடி நகரில் அரசு மருத்துவமனை அருகில் கோபுர நகரில் அமைந்துள்ளது முப்பெரும் தேவியர் பவானி அம்மன் ஆலயம்.

    இக்கோவில் குருநாதர் சக்தியம்மா தலைமையில் வருடம்தோறும் சித்திரை மாதம் 2-வது செவ்வாய்க்கிழமை கால்நாட்டி சித்திரை பெருந்திருவிழா 9 நாட்கள் நடைபெறும். ஆடிமாதம் நடைபெறும் ஆடிப்பூர வளைகாப்பு திருவிழா இங்கு மிகவும் பிரசித்தி பெற்றது. இந்நாளில் அம்மாக்களிடம் குழந்தை வரம் வேண்டி வரும் கன்னியர்களுக்கும், நீண்ட நாள் குழந்தை வரம் இல்லாதவர்களுக்கும், குழந்தை பாக்கியம் பெற்றவர்களுக்கும் இக்கோவிலில் வளையல், குங்குமம் வளைகாப்பும், 21 வகையான சாதங்களும், பிரசாதமாக வழங்கப்படும். இந்த அருட்பிரசாதத்தை பெற்றவர்களுக்கு குழந்தைச்செல்வம் கட்டாயம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

    ஒவ்வொரு ஐப்பசி மாதமும் முதல் வெள்ளிக்கிழமையன்று மகா பெரும்பூஜை என்னும் சிறப்பு திருவிழா நடைபெறுகிறது. ஆன்மிக வாழ்க்கையில் 30-ம் ஆண்டாக தொடர் புனித பயணம் மேற்கொள்ளும் குருநாதர் சக்தியம்மாவின் உடம்பிற்குள் ஸ்ரீ பெரிய பாளையத்து பவானி அம்மன் குடி கொண்ட நாளையே மகா பெரும் பூஜை திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.

    அன்றைய தினம் அம்மாக்களுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெறும். காலை 8 மணி முதல் குருநாதர் சக்தியம்மா சேலை அணிந்து முழு பெண் உருவத்தில் ஒரு கையில் தீச்சட்டியுடன் மகாசக்தி வாய்ந்த பவானி அம்மாவாக சுமார் 12 மணி நேரம் தொடர்ந்து பக்தர்களுக்கு தலையில் கை வைத்து சொல்லும் அருள் வாக்கு என்னும் சிறப்பு நிகழ்ச்சி ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.

    இந்நாளில் முப்பெரும் தேவியர் பவானி அம்மாவாக பெண் உருவத்தில் அருள்வாக்கு வழங்கும் குருநாதர் சக்தியம்மாவிடம் ஆண், பெண் பக்தர்கள் தங்களது வேண்டுதல் நிறைவேற சேலை எடுத்து கொடுக்கும்போது முப்பெரும் தேவியர் பவானி அம்மாவே ஏற்றுக்கொள்வதாக ஐதீகம்.

    • இத்தல பெருமாளுக்கு தினமும் இரவில் அப்பம் செய்து படைக்கப்படுகிறது.
    • இத்தலத்தில் வழிகாட்டி விநாயகர் உள்ளார்.

    மூலவர் : அப்பக்குடத்தான்

    தாயார் : இந்திராதேவி,கமலவல்லி

    ஸ்தலவிருட்சம் : புரஷ மரம்

    தீர்த்தம் : இந்திர புஷ்கரிணி

    ஊர் : கோவிலடி

    மாவட்டம் : தஞ்சாவூர்

    தல வரலாறு

    உபமன்யு என்ற மன்னன் துர்வாசரின் சாபத்திற்கு ஆளாகி, தன் பலமிழந்தான். தன்னை மன்னித்து சாப விமோசனம் தர வேண்டி துர்வாசரிடம் மன்றாடினான். அதற்கு முனிவர்,"மன்னா பலசவனம் எனப்படும் இத்தலத்தில் லட்சம் பேருக்கு அன்னதானம் செய்தால் உனது சாபம் தீரும்,"என்றார். இதன்படி மன்னன் கோவிலின் அருகிலேயே ஒரு அரண்மனை கட்டி அன்னதானம் செய்து வந்தான். இந்த அன்னதானம் நீண்ட நாள் நடந்தது.

    ஒரு நாள் ஸ்ரீமன் நாராயணன்,வயதான அந்தணர் வேடத்தில் இங்கு வந்து அன்னம் கேட்க,அவருக்கும் உணவு பரிமாறப்பட்டது. மன்னனை சோதனை செய்ய நினைத்தார் பெருமாள். அன்றைய பொழுது தயாரிக்கப்பட்ட உணவு அனைத்தையும் உண்டு தீர்த்தர். இதனால் ஆச்சரியப்பட்ட மன்னன்,"ஐயா!தங்களுக்கு இன்னும் என்ன வேண்டும்,"என கேட்டான். அதற்கு அவர்,"எனக்கு ஒரு குடம் அப்பம் வேண்டும்,"என்றார். அதன்படி அப்பம் செய்து கொண்டு வரப்பட்டது. அந்த அப்பக்குடத்தை பெருமாள் வாங்கியவுடன் உபமன்யுவின் சாபம் தீர்த்தது.

    பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 6 வது திவ்ய தேசம். இத்தல பெருமாளுக்கு தினமும் இரவில் அப்பம் செய்து படைக்கப்படுகிறது. பெருமாளின் "பஞ்சரங்கத்தலம்'என்று சொல்லக்கூடிய ஐந்து அரங்களில் இதுவும் ஒன்று. இத்தலத்தில் வழிகாட்டி விநாயகர் உள்ளார்.

    இப்பெருமாளின் வலது கை ஒரு அப்பக்குடத்தை அணைத்தவண்ணம் உள்ளது. இந்திரனுக்கு கர்வம் போக்கியும், மார்கண்டேயருக்கு எம பயம் போக்கியும் அருளிய தலம். ஸ்ரீரங்கத்திற்கும் மிக பழமையானது இத்தலம். சுமார் 3000 ஆண்டுகளுக்கு முற்பட்ட கோவிலாக கோவிலடி அருள்மிகு அப்பக்குடத்தான் கோவில் இருக்கிறது. இங்கு வந்து வழிபடுவோருக்கு வைகுண்ட வாசம் நிச்சயம் என்பது ஐதீகம். பெருமாள் மேற்கு பார்த்தும் தாயார் கிழக்கு பார்த்தும் "தம்பதி சமேதராக அருள்பாலிக்கிறார்.

    திறக்கும் நேரம் :

    காலை 8:30 மணி முதல் 12:00 மணி வரை, மாலை 4:30மணி முதல் இரவு 8:00 மணி வரை.

    • திருக்கோளூர் என்றாலே ‘தேடிப் புகும் ஊர்’ என்கிறார்கள் ஆச்சார்யார்கள்.
    • இது செவ்வாய்க்குரிய தலமாகும்.

    நவக்கிரக வரிசையில் மூன்றாவதாக, செவ்வாய்க்குரிய தலமாகவும், நவதிருப்பதி வரிசைகளுள் எட்டாவதாகவும் விளங்கும் கோவில் "திருக்கோளூர்". 108-வைணவ திவ்ய தேசங்களுள் ஒன்றாக விளங்கும் இக்கோவில், நம்மாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ளது.

    மூலவர் பெயர் : வைத்தமாநிதி பெருமாள் (கிடந்த கோலம்)

    உற்சவர் பெயர் : நிஷேபவித்தன் (நித்தியபவித்திரர் - நின்றகோலம்)

    தாயார்கள் : குமுதவல்லி நாச்சியார், கோளூர்வல்லி நாச்சியார்.

    விமானம் : ஸ்ரீகர விமானம்

    தீர்த்தம் : நிதி தீர்த்தம், குபேர தீர்த்தம், தாமிரபரணி.

    கோவில் வரலாறு

    முற்காலத்தில் ஒருசமயம் குபேரன் அழகான செல்வச்செழிப்பு கொண்ட அழகாபுரியை அரசாண்டு வந்தான். அப்போது ஒருமுறை சிவபெருமானை தரிசிக்க குபேரன் கைலாயம் சென்றிருந்த வேளையில், சிவபெருமான் தனது பத்தினியான பராசக்தியோடு அன்போடு பேசிக்கொண்டிருந்தார். அதுசமயம் சென்ற குபேரன் பராசக்தியின் அழகில் மயங்கி ஓரக்கண்ணால் அவளை பார்க்க, அதைக்கண்டு வெகுண்ட உமையவளோ மிகுந்த கோபத்துடன், நீ தவறான எண்ணத்தில் என்னைப் பார்த்ததால் அந்த ஒரு கண்ணின் பார்வையை இழந்து, உன் செல்வங்களை இழந்து, விகார தோற்றுத்துடன் திரிவாய் என குபேரனுக்கு சாபமிட்டாள். அடுத்த நிமிடமே நவநிதிகளும் குபேரனை விட்டு அகல, ஒரு கண் பார்வையும் மறைந்து, விகாரமான தோற்றத்தை பெற்றான் குபேரன்.

    இப்படி குபேரனை விட்டு விலகிய நவநிதிகளும் தாங்கள் தஞ்சமடைவதற்கு தகுந்த தலைவன் இல்லையே என்று தவித்தபடி தாமிர பரணிக்கரையில் தீர்த்தம் உருவாக்கி அதில் நீராடி திருமாலை நினைத்து வழிபட, அவர்களின் வேண்டுதலுக்கு இறங்கி திருமால் காட்சியளித்து, நவநிதிகளையும் தன்னோடு சேர்த்தபடி பள்ளிகொண்ட கோலத்தில் காட்சியளித்தார். நிதிகளை தன் பக்கத்துல் வைத்து அதற்கு பாதுகாப்பளித்து, அவற்றின் மீது சயனம் கொண்டதால் வைத்தமாநிதி பெருமாள் என்ற திருநாமத்தை பெற்றார்.

    தன் தவறை உணர்ந்த குபேரனும் பரமசிவனின் பாதத்தில் விழுந்து மன்னிப்பு கேட்க, சிவபெருமானோ பார்வதியிடம் மன்னிப்பு கேட்கும்படி திருவாய் மலர்ந்தார். அதன்படி பார்வதியிடம் மன்னிப்பு கேட்ட குபேரனிடம், உன் நவநிதிகளும் பெருமாளிடம் தஞ்சம் புகுந்துள்ளன, எனவே தாமிரபரணிக்கரையில் உள்ள பெருமாளை வழிபட்டு அருள் பெறுவாய் என்று விமோசனமளித்தாள். உடனே குபேரனும் தாமிரபரணிக்கரையில் உள்ள திருக்கோளூர் பகுதிக்கு வந்து, பெருமாளை நினைத்து கடுந்தவம் புரிந்தார்.

    இறுதியாக குபேரனின் தவத்தை மெச்சிய பெருமாள், குபேரனுக்கு காட்சியளித்து சாபவிமோசனம் அருளியதுடன், அவன் இழந்த நிதிகளில் ஒரு பகுதியை மரக்காலால் அளந்து குபேரனுக்கு திருப்பி அளித்தார். அந்த நிதிகளை பெற்று மீண்டும் அழகாபுரி சென்று ஆட்சிபுரிய தொடங்கினான் குபேரன்.

    தர்மகுப்தன் செல்வம் பெற்ற வரலாறு

    முற்காலத்தில் தர்மகுப்தன் என்பவர் எட்டு பிள்ளைகளை பெற்று மிகவும் வறுமையோடு வாழ்ந்து வந்தார். தரித்திரம் அவரை பல வகையில் வாட்டி வதைத்தது. இந்தநிலையில் அவர் தன் குரு பரத்பாஜரை சந்தித்து, வணங்கி தன் நிலை விவரித்து வருந்தினான். அதற்கு குரு அவனிடம், "நீ முற்பிறவியில் செல்வந்த அந்தணராக பிறந்திருந்தாய், அப்போது உன் ஊர் அரசன் உன்னிடம் எவ்வளவு செல்வம் இருக்கிறது என்று கேட்டதற்கு உண்மையை மறைத்து பொய்யான தகவல்களை கூறினாய், அந்த செல்வத்தை கொண்டு பிறர் ஒருவருக்குக்கூட நீ உதவி செய்யவில்லை, அந்த வினைப்பயனை தான் இப்போது நீ அனுபவிக்கிறாய்" என எடுத்துரைத்தார்.

    ஆகவே உன்னுடைய முற்பிறவி பாவம் நீங்க, நீ தாமிரபரணி நதிக்கரையில் குபேரனின் நவநிதிகளையும் ஏற்று அருள்புரிந்த வைத்தமாநிதி பெருமாளை சரணடைந்தால், உன் பாவங்கள் விலகி அருள்பெறலாம் என்று உபதேசித்தார். குருவின் உபதேசத்தை ஏற்று இங்கு வந்த தர்மகுப்தன், இங்கு பெருமாளை நோக்கி தவம்புரிந்து, வைத்தமாநிதி பெருமாளின் காட்சிபெற்று தன் முன்வினை பாவங்கள் நீங்கி, செல்வங்களை பெற்றான் என்றும் கூறப்படுகிறது.

    திருக்கோளூர் பெயர் காரணம்

    கோள் என்றால் புரம் கூறுவது என்று அர்த்தம். புரம் கூறுவது தகாத செயலாக கூறப்படும் போது, அந்த கோளுக்கு முன் திரு சேர்த்து திருக்கோளூர் என்று அழைக்கிறார்களே என்னவாக இருக்கும் என அறிய முற்பட்ட போது, அதற்கும் ஒரு செவிவழி புராணக்கதை கூறப்படுகிறது.

    ஒருமுறை தர்மதேவதை இந்த இடத்தில் வந்து அதர்மத்திற்கு பயந்து ஒளிந்து கொண்டதாம். அப்போது இங்கு வந்த அதர்மம், தர்மதேவதையிடம் சண்டையிட இறுதியில் தர்மதேவதையே வென்றுவிட, அதர்மம் இங்கிருந்து வெளியேறிய போது, குபேரனிடம் சென்று உன்னுடைய நவநிதிகள் அனைத்தும் இந்த தலத்தில் தான் நிரந்தர வாசம் புரிகின்றன எனக்கோள் சொல்லியதாகவும், அதனால் தான் இத்தலம் "திருக்கோளூர்" என்று அழைக்கப்பட்டதாகும் தெரியவருகிறது.

    குபேரனிடமிருந்த நவநிதிகள்

    சங்கநிதி, பதுமநிதி, மகரநிதி, கச்சபநிதி, மகுடநிதி, நந்தநிதி, நீலநிதி, கர்வநிதி மற்றும் மகாபதுமநிதி இவை ஒன்பதும் குபேரனிடமிருந்த ஒன்பது வகை செல்வங்கள் ஆகும்.

    மூலவர் வைத்தமாநிதி பெருமாள்

    கருவறையில் ஸ்ரீகர விமானத்தின் கீழ் ஆதிசேஷன் மீது புஜங்க சயனத்தில், வலக்கையை நீட்டியவாறு, குபேரனுக்கு செல்வங்களை அளந்து கொடுத்த மரக்காலைத் தன் தலைக்கு வைத்தும், கையில் அஞ்சனம், மை தடவி நிதி எங்கு எவ்வளவு உள்ளது என கணக்குப் பார்க்கும் கோலத்தில் சேவை சாதிக்கிறார், வைத்தமாநிதி பெருமாள்.

    கோளூர்வல்லி தாயார்

    பெருமாள் சன்னதிக்கு வலப்புறம் தனி சன்னதியில் பூமகளாகிய ஸ்ரீ தேவியின் அம்சமாகிய கோளூர்வல்லி தாயார் நான்கு கரங்கள் கொண்டு அமர்ந்த கோலத்தில் தரிசனம் தருகிறாள்.

    குமுதவல்லி தாயார்

    பெருமாள் சன்னதிக்கு இடப்புறம் தனி சன்னதியில் நிலமகளாகிய பூ தேவியின் அம்சமாகிய குமுதவல்லி தாயார் நான்கு கரங்கள் கொண்டு அமர்ந்த கோலத்தில் தரிசனம் தருகிறாள்

    உற்சவர் நிஷேபவித்தன்

    இங்கு உற்சவர் நிஷேபவித்தன் என்னும் திருநாமம் கொண்டு, நான்கு கரங்களுடன் நின்ற கோலத்தில் ஸ்ரீ தேவி, பூ தேவியுடன் காட்சித்தருகிறார்.

    மதுரகவியாழ்வார் சன்னதி சிறப்பு

    பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவராக திகழ்பவர் மதுரகவியாழ்வார் ஒன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதி ஈசுவர ஆண்டு, சித்திரை திங்கள் வளர்பிறையுடன் கூடிய சதுர்த்தி திதியில் அந்தணர் குலத்தில் இத்திருக்கோளூர் தலத்திலே அவதரித்தார். இவர் பெரியதிருவடி என்று சிறப்பித்து கூறப்படும் கருடனின் அம்சமாக பிறந்தவராவார். இவர் வேத சாத்திரங்களை நன்கு கற்றுணர்ந்து கவிபாடும் திறமை பெற்றிருந்தார். இனிமையான சொற்களால் கவிகளை இயற்றியதால் மதுரகவி என்று சிறப்பித்து அழைக்கப்பெற்றார்.

    இவர் வடநாட்டு புண்ணிய தேசங்களுக்கு பயணம் மேற்கொண்டிருந்த வேளையில். ஒருநாள் இரவு பேரொளி ஒன்றினைக் கண்டு வியப்படைந்தார். அவ்வொளியை மறுநாளும் அவர் காணவே, அவ்வொளி எங்கிருந்து வருகிறது என்பதை அறிவதற்காக அதனை பார்த்தவாறே தெற்கு நோக்கி நடக்கத் தொடங்கினார். அயோத்தி, பூரி, அகோபிலம், திருப்பதி ஆகிய புண்ணிய தலங்களை தாண்டியும் அவ்வொளித் தெரிந்ததால் ஆழ்வாரும் தெற்கு நோக்கி நடந்து கொண்டே இருந்தார்.

    இறுதியாக அந்த ஒளி, தாமிரபரணி நதிக்கரையில் உள்ள திருக்குருகூரில் (ஆழ்வார்திருநகரி) சென்று மறைந்தது. அங்கு வந்த மதுரகவியாழ்வாரும் அவ்வூர் மக்களிடம், இவ்வூரில் ஏதேனும் சிறப்பு உள்ளதா என்று கேட்க, அவ்வூர் மக்களும் இங்கு 16 வயது பாலகனாக ஒருவர் ஒரு புளிய மரத்தடியில் தவம் செய்து கொண்டிருப்பதாக கூறினார்கள்.

    மதுரகவியாழ்வாரும் அங்கு சென்று அப்பாலகனுக்கு உயிர் இருக்கிறதா என்று சோதிக்கும் பொருட்டு அவர் மீது ஓர் கல்லை எடுத்து எறிந்தார். அப்பாலகன் தான் நம்மாழ்வார்.

    தன் மீது கல் விழுந்ததால் முதன்முறையாக கண் திறந்துப் பார்த்தார் அந்த பாலகரான நம்மாழ்வார். மதுரகவிகளும் இவர்க்கு உயிர் இருக்கிறது என்பதை புரிந்துக் கொண்டு, இவரால் பேச முடியுமா என்று பரிசோதிக்க விரும்பி.,

    "செத்ததின் வயிற்றில் சிறியது பிறந்தால் எத்தை தின்று எங்கே கிடக்கும்?" என்று கேட்டார். அதற்கு நம்மாழ்வார், "அத்தைத் தின்று அங்கே கிடக்கும்" என்றார். இந்த பதிலின் உள்ளர்த்தத்தைப் புரிந்துகொண்ட மதுரகவிகள், நம்மாழ்வாரின் பெருமையையும் ஞானத்தையும் புரிந்துக்கொண்டு அவரின் சீடரானார். இந்த வினா விடையில் இரு தத்துவம் புதைந்துள்ளது.

    செத்ததின், அதாவது உயிர் இல்லாத இவ்வுடம்பில், ஜீவன் என்னும் சிறியது பிறந்தால், பாவ புண்ணியங்களின் பயன்களை நுகர்வதே அதற்கு வாழ்க்கையாக இருக்கும்.

    தன்னை பற்றிய அறிவு, பரமாத்வான திருமாலை பற்றிய அறிவற்ற ஜீவனுக்கு, பரமாத்மாவை பற்றிய அறிவு ஏற்பட்டால், அதைக்கொண்டே பக்தி வளரும்.

    மதுரகவியாழ்வார் தன்னுடைய பாசுரங்களில் திருமாலை மையப்படுத்தி பாடாது, நம்மாழ்வாரையே மையப்படுத்தி பாடியிருக்கிறார். இவரது பாசுரங்கள் குரு பக்திக்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்.

    மதுரகவியாழ்வார் நம்மாழ்வாரின் பாசுரங்களை எல்லாம் ஓலைச்சுவடியாக பதிந்தார். பின் நம்மாழ்வார் முக்தியடைந்துவிட, தங்கத்தால் ஆன நம்மாழ்வாரின் விக்ரகம் கிடைக்க, அவ்விக்ரகத்தை எடுத்துக்கொண்டு மதுரகவியாழ்வார் பல தலங்களுக்கும் சென்று நம்மாழ்வாரின் பெருமையை எடுத்துச்சொல்ல முடிவுசெய்தார்.

    நம்மாழ்வாரின் பலவிருதுகளைப் பாடிக்கொண்டே மதுர கவியாழ்வார் மதுரையுள் சென்றார். அங்கே இருந்த சங்ககாலப் புலவர்கள், நம்மாழ்வாரின் பாடல்களை சங்கப்பலகையில் ஏற்றாமல், விருதுகளாக பாடக்கூடாது என்று எதிர்ப்புத் தெரிவித்தனர். அக்காலத்தில், சங்க பலகையில் பாடலை எற்றுவர். அப்பலகை அந்த பாடலை கிழே தள்ளிவிட்டால், புலவர்கள் அப்பாடலை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

    நம்மாழ்வார் எட்டு வரி, நான்கு வரி கொண்ட பாடல்கள் நிறையப் பாடியுள்ளார். அவற்றை எல்லாம் விட்டுவிட்டு, இரண்டே வரியுள்ள, ஒரு பாடலை பலகையில் மதுரகவியாழ்வார் ஏற்றினார். சங்கப்பலகை அப்பாடலைத் தள்ளாமல் ஏற்றுக்கொண்டது. இதன்மூலம் நம்மாழ்வாரின் பெருமைகளை புரிந்துக்கொண்ட சங்ககாலப் புலவர்களும் தாம் செய்த தவற்றின் பரிகாரமாக நம்மாழ்வாரின் பெருமையை தாமே பாடலாக இயற்றினார்கள்.

    இதில் வியப்பு என்ன என்று கேட்டால், அங்குக் கூடியிருந்த அனைத்து புலவர்களும் ஒரே பாடலையே நம்மாழ்வார் குறித்து எழுதியிருந்தனர். இவ்வாறு மதுரகவியாழ்வார் மேலும் சிலகாலம் நம்மாழ்வாரின் பெருமையை எடுத்துச்சொல்லி இறுதியில் வைகுண்டம் சேர்ந்தார். இவ்வாறு மதுரகவியாழ்வார் ஆச்சார்ய பக்தியின் பெருமையை எடுத்துச்சொல்ல அவதரித்தவர் என்ற சிறப்பை பெறுகிறார். இவரது பிறந்த தலமான இங்கு இவருக்கு தனி சன்னதி அமையப்பெற்றுள்ளது.

    திருக்கோளூர் பெண் பிள்ளை ரகசியம்

    திருக்கோளூர் என்றாலே 'தேடிப் புகும் ஊர்' என்கிறார்கள் ஆச்சார்யார்கள். அத்தகைய இந்த ஊருக்கு முன்னர், ராமானுஜர் வைத்தமாநிதி பெருமாளை தரிசிப்பதற்காக வரும் ஓர் அதிகாலை வேளையில், மோர் விற்கும் அம்மையார் ஒருவர் வியாபாரத்திற்காக ஊரை விட்டு வெளியேறிக் கொண்டிருக்கிறார். அதைக் கண்ணுற்ற ராமானுஜர், 'புகும் ஊருக்கு நாங்கள் வரும் போது நீங்கள் வெளியேறிக் கொண்டிருக்கிறீர்களே' என்று கேட்கிறார்.

    அதற்கு, ராமாயணமும், மகாபாரதமும், பாகவதமும், ஆழ்வார்கள் வரலாறும் தெரிந்த அந்த அம்மையார், வெகு இயல்பாக, 'அழைத்து வருகிறேன் என்றேனோ அக்குரூரரைப் போலே', 'அகல் ஒழித்து விட்டேனோ விதுரரைப் போலே' எனத் தொடங்கி 'துறைவேறு செய்தேனோ பகவரைப் போலே' என முடியும் 81 விஷயங்களைக் கூறி, அப்பேர்ப்பட்ட நபர் நான் அல்ல, எனவே வெளியேறிக் கொண்டிருக்கிறேன்' என்று சாதுர்யமாக பதில் அளிக்கிறார்.

    அந்த 81 வாக்கியங்களில் அவர் வைணவத்தின் பெருமைகளை விவரிக்கிறார். அதைக் கேட்ட ராமானுஜர், சாதாரண தயிர் விற்கும் பெண்மணிக்கே இத்தகைய ஞானம் இருக்குமானால் நிச்சயம் இது புக வேண்டிய ஊர்தான் என அம்மையாரைப் பணிகிறார். பின்னாளில் அந்த அம்மையாரும் ராமானுஜரின் சீடராகிறார்.

    இவர் கூறிய 81 வாசகங்கள் அதாவது 'திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம்' நமக்கு பாமரப் பெண்களும் கூட இந்த நாட்டில் மேதைகளாகத் தான் இருந்திருக்கிறார்கள் என்பதையும் உணர்த்துகிறது.

    கோவில் அமைப்பு

    தாமிரபரணி ஆற்றின் தென்கரையில் அமையப்பெற்றுள்ள இக்கோவில், மொட்டை கோபுரத்தை கொண்டது. இந்த கோபுரத்தை தாண்டி உள்ளே சென்றால் முன்மண்டபம் நம்மை வரவேற்கிறது. முன்மண்டபத்தில் கொடிமரமும், பலிபீடமும் அமையப்பெற்றுள்ளது. அதனை தாண்டி கருவறைக்கு நேரெதிரே கருடன் சன்னதி உள்ளது.

    அவரை வணங்கி, அடுத்த வாயில் வழியே உள்ளே சென்றால் நடுநாயமாக கருவறை அமையப்பெற்றுள்ளது. வெளித்திருச்சுற்றில் தென்புறம் கோளூர்வல்லி தாயார் சன்னதியும், மேற்கு திருச்சுற்றில் யோக நரசிம்மர் சன்னதியும், தொடர்ந்து வடக்கு திருச்சுற்றில் குமுதவல்லி தாயார் சன்னதியும் அமையப்பெற்றுள்ளது. உள்ளே தீர்த்தக்கிணறும் உள்ளது.

    முன்பக்கம் மதுரகவியாழ்வாருக்கு தெற்கு நோக்கிய தனி சன்னிதியும், கோவில் யானை வளர்ப்பிற்கு தனி இடமும் என இக்கோவில் அமையப்பெற்றுள்ளது.

    • மூலஸ்தானம் வரை சென்று சுவாமியை தொட்டு தரிசனம் செய்யலாம்.
    • கோவில் மந்திரமாக ஹரி ஓம் ராமானுஜாய உச்சரிக்கப்படுகிறது.

    ஐந்துவீட்டு சுவாமி கோவில் தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூருக்கு தென்மேற்கே சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள உடன்குடியிலிருந்து ஸ்ரீவைகுண்டம் செல்லும் சாலையில் அமைந்துள்ள செட்டியாபத்து என்ற ஊரில் குடிகொண்டுள்ளது ஐந்துவீட்டு சுவாமி திருக்கோவில்.

    ஐந்து வீட்டு சுவாமி கோவில், தென் மாவட்டங்களில் மிகவும் புகழ்பெற்ற கோவில்களில் ஒன்றாகும். இங்கு ஆண்டுதோறும் சித்திரை பெருந்திருவிழா 8 நாட்கள் நடைபெறும். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குடும்பத்துடன் வந்து தங்கி இருந்து சாமி தரிசனம் செய்துவிட்டு. அன்னமுத்திரி பிரசாதம் வாங்கிச் செல்வது இக்கோவிலின் சிறப்பு ஆகும். ஐந்துவீட்டு சுவாமி கோயிலுக்கும் வரும் பக்தர்கள் கோவில் மூலஸ்தானம் வரை சென்று சுவாமியை தொட்டு தரிசனம் செய்யலாம்.

    ஜாதி பேதம் இல்லாமல் அனைவரும் வழிபடும் இந்த கோயிலை பாண்டிய மன்னர்கள் ஆட்சி செய்த காலத்தில், கோவிலுக்கான செலவுகளை பஞ்சபாண்டவர்கள் பகிர்ந்து கொண்டதாக தல வரலாறு கூறுகிறது. இந்த கோவிலில் செய்யப்படும் அன்னதானமானது மீனவர்கள், அங்காடியில் வியாபாரம் செய்பவர்கள், வெற்றிலை விற்கும் நாடார்கள், ஆடு மாடுகளை வளர்த்துவந்த கோணார்கள், நெசவாளர்கள் இப்படி ஜாதி மத வேறுபாடின்றி இவர்கள் அனைவரும் கொடுக்கப்பட்ட சன்மானத்தில் இந்த ஆலயமானது பராமரிக்கப்பட்டு வந்துள்ளது.

    பெரிய சுவாமி திருக்கரங்களில் சங்கு, சக்கரம் ஏந்தியபடி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். பில்லி, சூனியம், செய்வினை, ஏவல் போன்றவற்றைப் போக்கும் தலமாகவும், மாந்திரீக பிரச்னை களுக்கும், மனநோயால் பாதிக்கப்பட்டோருக்கும் பரிகார தலமாகவும் இக்கோயில் விளங்குகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு பெரியசுவாமி சன்னிதியின் எதிர் புறம் ஆஞ்சநேயர் சன்னிதி அமைக்கப்பட்டு ள்ளது. சிறப்பு மிக்க பிரார்த்தனை தலமான இந்த ஆலயத்தில் வினை மற்றும் மனநோயால் பாதிக்கப்பட்ட வர்கள், தீராத பணிகளால் பாதிக்கப்பட்டவர்கள் வந்து தங்கள் குறைகள் நீங்கப்பெறுகின்றனர்.

    இத்தலத்தில் விரதம் இருந்து தரிசனம் செய்பவர்களுக்கு தீராத வியாதிகள் தீரும். குழந்தைப்பேறு இல்லாதவர்களுக்கு மக்கள் செல்வம் கிட்டும் என்பது நம்பிக்கையாக இருக்கிறது. வேண்டுவோருக்கு வேண்டுபவை எல்லாம் கிடைக்கும் அற்புதத் தலம் இதுவாகும். குழந்தைப்பேறு மற்றும் சுகப்பிரசவம் வேண்டுவோர் இந்த ஆலயத்தில் வீற்றிருக்கும் பெரியபிராட்டி அம்மனுக்கு வளையல் காணிக்கை செலுத்தினால் வேண்டியது நிறைவேறும். கால் உபாதைகளால் பாதிக்கப்பட்டவர்கள் ஆத்தி சுவாமி கோவிலுக்கு நேர்த்திக்கடனாக செருப்பு மற்றும் கதாயுதம் காணிக்கை செலுத்துகின்றனர்.

    புராண வரலாறு

    அனைத்து ஜாதி மக்களும் ஐந்து வீட்டு சுவாமி திருக்கோவிலுக்கு வந்து வணங்கினாலும், அவரவர் மனதுக்குள் ஜாதி வேறுபாடுகள் இருந்து கொண்டுதான் இருந்தது. ஜாதி ஏற்றத்தாழ்வு அதிகமாக பார்க்கும் அந்த காலகட்டத்தில் ஒரு துப்புரவு தொழிலாளி இறைவனுக்கு பிரசாதத்தை படைத்து வழிபட்டான். ஆனால் அந்த பிரசாதத்தை மற்றவர்களுக்கு கொடுக்கும் போது, யாரும் அந்த பிரசாதத்தை பெற்றுக் கொள்ளவில்லை. அதன் காரணம், அவன் செய்யும் துப்புரவு தொழிலும் அவன் ஜாதியில் குறைந்த அந்தஸ்தை உடையவன் என்பதும் தான்.

    அவன் அந்த கோவிலில் அழுது புலம்பி தவித்து சோர்ந்து கோவில் வாசலிலேயே உறங்கிவிட்டான். அந்த சமயத்தில் தொழிலாளியின் கனவில் வந்த பெரியசாமிகள், 'அந்த பிரசாதத்தை ஓரிடத்தில் புதைத்து வைத்துவிட்டு அடுத்த வருடம் வந்து அதை திறந்து பார்க்க சொல்' என கூறிவிட்டு மறைந்து விட்டனர். திடுக்கிட்டு விழித்த அந்தத் தொழிலாளி அந்த கோவிலுக்கு தெற்குப் பக்கத்தில் உள்ள ஒரு இடத்தில் பிரசாதத்தை ஒரு வாழை இலை கொண்டு மூடி, அதை பானையோடு புதைத்து வைத்தான்.

    மறுவருடம் அந்த கோவிலுக்கு வந்த துப்புரவு தொழிலாளி பெரியசாமியை வணங்கிவிட்டு, அவன் புதைத்து வைத்திருந்த அந்த பிரசாதத்தை தோண்டி எடுத்து பார்த்தான். அந்த பிரசாதமானது அப்பொழுதுதான் புதியதாக செய்ததைப் போன்று ஆவி பறக்க இருந்தது. இதை பார்த்த பக்தர்கள் அந்தத் தொழிலாளியின் பிரசாதத்தின் மகிமை கண்டு, அந்த பிரசாதம் தங்களுக்கும் வேண்டுமென்று அனைவரும் கேட்டு கேட்டு வாங்கிச் சென்றனர். அந்த துப்புரவு தொழிலாளிக்கு இறைவன் கொடுத்த ஆசிர்வாதம் தான் இது. அந்த நாளில் இருந்து யாரும் இந்த கோவிலில் ஜாதி மதத்தினை மனதளவில் கூட பார்ப்பதில்லை.

    கோயில் அமைப்பு

    சுமார் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த ஆலயத்தில் ஒரே வளாகத்தில், 5 தனித்தனி சன்னநிதிகளில் சுவாமிகள் வீற்றிருப்பதால், இந்தக் கோவில் ஐந்து வீட்டு சுவாமி திருக்கோவில் என்று பெயர் பெற்றது. 4 ஏக்கர்களைக் கொண்ட இந்த கோவிலானது நான்கு திசைகளிலும், நான்கு வாசல்களை கொண்டுள்ளது. இதில் வடக்கு வாசல் வழியாக உள்ளே செல்லும் போது முதலில் ஸ்ரீ பெரியசாமி சன்னதி அமைந்திருக்கிறது.

    அடுத்ததாக ஸ்ரீ வைணவ பெருமாள் சன்னதியும், அதனைத் தொடர்ந்து ஸ்ரீ அனந்தம்மாள் சன்னதியும், அடுத்ததாக ஸ்ரீ ஆத்தி சுவாமி சன்னதியும், அதனையடுத்து ஸ்ரீ திருப்புளி ஆழ்வார் சன்னதியும், அடுத்ததாக ஸ்ரீ பெரியபிராட்டி சன்னதியும் அமைக்கப்பட்டுள்ளன. ஒரே கோவிலுக்குள் 6 தெய்வங்கள், ஐந்து சன்னதிக்குள் அமைந்திருப்பதால் இந்த கோவிலுக்கு ஐந்து வீட்டு சுவாமிகள் கோவில் என்று பெயர் வந்தது.

    பலன்கள்

    ஐந்து வீட்டு சுவாமி திருக்கோவில் மந்திரமாக ஹரி ஓம் ராமானுஜாய உச்சரிக்கப்படுகிறது. இந்த கோவிலுக்கு சென்று இந்த மந்திரத்தை உச்சரித்து அந்த இறைவனிடம் வேண்டினால், திருமணத் தடைகள் நீங்கும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை வரம் கிடைக்கும். நவக்கிரகங்களின் தோஷங்கள் நீங்கும். மனோதைரியம், நிம்மதி, எடுத்த காரியத்தில் வெற்றி, இவைகளை பெற்று வளமாக வாழலாம். இங்குள்ள ஐந்து வீட்டு சுவாமிகளை மனமுருக தரிசித்தால், நினைத்த காரியம் நிறைவேறும், அற்புதங்கள் நிகழும் என்பது இந்த கோவிலின் பக்தர்களின் அசராத நம்பிக்கை

    திருவிழாக்கள்

    ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் 18–ந் தேதி தொடங்கி 6 நாட்கள் வரை சித்திரை திருவிழாவும், தை மாதம் 5–ந் தேதி தொடங்கி 3 நாட்கள் தைத் திருவிழாவும் இங்கு சிறப்பாக நடைபெறும். மேலும் அமாவாசை, பவுர்ணமி, திருக்கார்த்திகை ஆகிய விழாக்களும் வெகு விமரிசையாக நடத்தப்படுகிறது. சித்திரைத் திருவிழாவின் இறுதி நாள் அன்று ஆலயத்தில் வழங்கப்படும் அன்னமுத்திரி என்ற பிரசாதம் மிகவும் மகிமை பெற்றதாக கருதப்படுகிறது.

    இந்த பிரசாதத்தை நமது வீட்டில் அரிசி வைத்திருக்கும் பானை அல்லது பாத்திரத்தில் போட்டு வைத்தால், ஒருபோதும் அன்னத்துக்கு குறைவிருக்காது என்பது பக்தர்களின் அதீத நம்பிக்கை. இதுமட்டுமின்றி, மாதாந்திர வெள்ளியன்று சிறப்பு பூஜைகள் நடைபெறும். அன்றைய தினம் மதிய வேளையில் மாபெரும் அன்னதானம் நடைபெறும். இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு, அய்யாவின் பேரருளால் உணவருந்தி, மன நிம்மதியுடன் செல்வர். மேலும், அமாவாசை, பவுர்ணமி பூஜைகளும் சிறப்பானது.

    அன்னதானம்

    சாதி மத பேதமின்றி, இந்த கோவில் நடத்தப்படும் அன்னதானம்" என்ற சமபந்தி விருந்து ஆலயத் தின் "தனிச்சிறப்பு" . இங்கு நடைபெறும் அன்னதானத்தில் அனைவரும் கல்ந்துகொண்டு உணவருந்தி மகிழ்வர். ஆலயத்துக்கு வரும் பக்தர்கள் கோவில் மூலஸ்தானம் வரை சென்று சுவாமியை தொட்டு தரிசனம் செய்யலாம். ஜாதி, மத வேறுபாடின்றி எல்லோரும் மூலஸ்தானம் வரை சென்று வணங்குவதால், பிரிவினையை தவிர்க்கும் மனித ஒற்றுமையின் சிறப்பிடமாக இந்த தலம் விளங்குகிறது.

    திருமணிக்கட்டி சிறப்புகள்

    சுவாமியை தரிசனம் செய்யும் பக்தர்கள் அனைவருக்கும், பூஜை முடிந்ததும், மூலஸ்தானத்தில், திருமணிக்கட்டி பொட்டு வைத்து, தீர்த்தம் பிரசாதமாக வழங்கப்பட்டு வருகிறது. ஆலயத்தில் வழங்கப்படும், திருமணிக்கட்டி பிரசாதத்தை, கோவிலில் முடி காணிக்கை செலுத்தியவர்கள் கூட, தலையில் சந்தனத்திற்குப் பதிலாக திருமணிக்கட்டியை பூசிக் கொள்வது வழக்கம். தீராத நோயால் அவதிப்படுபவர்கள் இந்த திருமணியை தண்ணீரில் குழைத்து சாப்பிடுவார்கள்.

    இதன் மூலம் நோய் குணமாவதாக பக்தர்கள் இன்றளவும் நம்பி வருகிறார்கள். புருவ மத்தியில் வெளிச்சத்தை கண்டதற்கு அடையாளமாகத்தான் இந்த வெண்பொட்டு இட்டுக்கொள்ளப் படுகிறது. இந்த பொட்டு வைத்திருப்பவர்களை கண்டாலே, அவர்கள் ஐந்துவீட்டு சுவாமி கோவிலின் பக்தர்கள் என்பது எளிதில் அடையாளம் காணமுடியும். திருமணி நெற்றியில் இட்டவர்க்கு மோட்ச பிராப்தி உண்டாகும் என்பது ஐதிகம்.

    இவ்வாலயம் வந்து வழிபடும் பக்தர்கள் பலரும் தங்கள் குழந்தைகளுக்கு திருமணி என்று பெயர் சூட்டியிருப்பதில் இருந்தே திருமணிக்கட்டி பிரசாதத்தின் மகிமையை நாம் உணர முடியும். இந்தக் கோவிலில் வேப்பமரம், ஆத்தி மரம் போன்ற மூலிகை விருட்சங்கள் இருக்கின்றன. ஆத்தி மர இலையை அரைத்து நீரில் கலந்து குடிப்பது பக்தர்களிடையே தொன்றுதொட்டு இருந்து வரும் பழக்கமாகும். இதனால், தீராத நோய்களும் தீர்ந்து வருகிறது.

    கோவில் திருவிழாக்காலங்களில் பூசாரியானவர், அனைத்து சன்னிதிகளிலும் அஷ்டாட்சரம் என்னும் எட்டு எழுத்தை திருமணி கொண்டு இயந்திரம் போட்டு வைத்துவிட்டு வந்து விடுவார். திருவிழா முடியும் வரை அந்தந்த சன்னிதிகளில் ஜாதி பேதமின்றி நியமிக்கப்பட்டு இருப்பவர்கள் பூஜை செய்து கொள்வார்கள். ஆலய திருவிழாவின் போது ஐந்து வீட்டு சுவாமிகளுக்கு, ஆடு, கோழி, பன்றி போன்றவை பலியிடப்பட்டு படையல் போடப்படும்.

    பூஜை கால அட்டவனை

    ஐந்து வீட்டு சுவாமி கோவிலில் தினசரி 3 கால பூஜைகள் நடைபெறுகின்றன. காலை 8 மணிக்கு காலசாந்தி பூஜையும், மதியம் 12 மணிக்கு உச்சிகால பூஜையும், இரவு 7 மணிக்கு அர்த்தசாம பூஜையும் நடைபெறுகின்றன. ஒவ்வொரு கால பூஜையின்போது, கோவிலில் சங்கநாதம் ஒலிக்கப்படுகிறது. இதுதவிர தினசரி அதிகாலை 4 மணிக்கு சங்கநாதமும், சேகண்டி ஓசையும் முழங்கப்படுகிறது. பக்தர்கள் தங்களது வேண்டுதல் நிறைவேறியதும் தங்களால் முடிந்த பணிவிடைகளை (ஆடு, கோழி, பன்றி போன்றவற்றை பலியிட்டு), படையல் போடுவார்கள்.

    வழிபாட்டு நேரம்

    தரிசன நேரம்: காலை 7-8.30 மணி வரை மதியம் 11-12 மணி வரை மாலை 5.30- 7 மணி வரை.

    ×