search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருநள்ளாரில் நாளை சனிப்பெயர்ச்சி விழா: பக்தர்கள் குவிகிறார்கள்
    X

    திருநள்ளாரில் நாளை சனிப்பெயர்ச்சி விழா: பக்தர்கள் குவிகிறார்கள்

    திருநள்ளாறு சனீஸ்வர பகவான் தலமான தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் நாளை (19-ந்தேதி) சனிப்பெயர்ச்சிவிழா நடைபெற உள்ளது.
    திருநள்ளாறில் சனீஸ்வர பகவான் தலமான தர்பாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. உலகளவில் சனிதோஷ நிவர்த்திக்கு பிரசித்தி பெற்ற தலமாக விளங்கும் இந்த கோவிலில் சனிபகவானுக்கு தனி சன்னதி உள்ளது.

    நாளை (19-ந்தேதி) சனிப்பெயர்ச்சிவிழா நடைபெற உள்ளது. நாளை காலை 10.01 மணிக்கு சனிபகவான் விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.

    சனீஸ்வர பகவானை தரிசிக்க வரும் பக்தர்கள் ஒரு இரவு தங்கி மறுநாள் தரிசனம் செய்தால் சிறப்பு என கூறப்படுகிறது. இதனால் சனிப்பெயர்ச்சி விழாவில் பங்கேற்க தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் பஸ் மற்றும் கார்களில் இன்றே திருநள்ளாறு வரத்தொடங்கியுள்ளனர்.
    நளதீர்த்தம்

    முதலில் நளதீர்த்தத்தில் புனித நீராடி விட்டு, அங்குள்ள நளன் கலிதீர்த்த விநாயகர் கோவிலுக்கு சென்று தேங்காய் உடைத்து விநாயகரை வழிபட்ட பின்னரே கோவிலுக்கு செல்வார்கள். பக்தர்கள் புனித நீராடுவதற்கு வசதியாக குளத்தில் உள்ள பழைய தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்பட்டது. அங்கு தூர்வாரி, புதிதாக மணல் நிரப்பி தண்ணீர் விடப்பட்டுள்ளது.

    சனிப் பெயர்ச்சி தினத்தன்று லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடுவார்கள் என்பதால் தொடர்ந்து 24 மணி நேரமும் 2 மோட்டார்கள் மூலம் குளத்திலிருந்து பழைய தண்ணீரை வெளியேற்றி, 2 மோட்டார்கள் மூலம் புதிதாக தண்ணீர் விடுவதற் கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. குளத்தை சுற்றிலும் நிரந்தர மற்றும் தற்காலிகமாக பெண்கள் உடைமாற்றும் அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.

    சனிப்பெயர்ச்சி விழாவையட்டி இலவச தரிசனம், ரூ.200, ரூ.500 கட்டண தரிசனம், நன்கொடை யாளர்கள் தரிசனம் மற்றும் சிறப்பு தரிசனம் என்று 5 தரிசன பாதைகள் அமைக்கப்பட்டுள்ளது. இலவச தரிசனத்துக்கு வருபவர்கள் நளன் குளம் செல்லும் வழியில் திருநள்ளாறு போலீஸ் நிலையம் அருகில் தொடங் கும் வரிசையில் நுழைந்து வரிசை வளாகம் வழியாக கோவிலின் வடக்கு பிரகாரத்தில் நுழைந்து 3-வது பிரகாரம், 2-வது பிரகாரம் வழியாக உள்ளே செல்ல வேண்டும்.

    ரூ.200 மற்றும் சிறப்பு தரிசனத்துக்கு வருபவர்கள் தெற்கு வீதியில் அமைக்கப்பட்டுள்ள வரிசையில் நுழைந்து சரஸ்வதி தீர்த்தத்தின் மேற்கு கரை வழியாக கோவிலின் தெற்கு வாசலில் நுழைந்து உள்ளே செல்ல வேண்டும். 

    ரூ.500 மற்றும் நன்கொடை யாளர்கள் கீழவீதியில் அமைக்கப்பட்டுள்ள வரிசையில் நுழைந்து சன்னதி தெரு மற்றும் ராஜகோபுரம் வழியாக கோவிலுக்குள் செல்லலாம். 

    சனிப்பெயர்ச்சி விழாவையொட்டி தமிழகம் மற்றும் புதுவையில் இருந்து 350 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. சென்னை, புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், காரைக்கால் வழியாக வரும் பஸ்களை நிறுத்த திருநள்ளாறு முன்பு உள்ள வடக்கு உள்வட்டச் சாலையிலும், திருச்சி, தஞ்சா வூர், கும்பகோணம், மயிலாடுதுறை, பேரளம், நெடுங்காடு வழியாக வரும் பஸ்களை நிறுத்த சுரக்குடி ரோட்டில் வடக்கு உள்வட்டச் சாலையின் மேற்கு பகுதியிலும் தற்காலிக பஸ் நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 

    மயிலாடுதுறை, கும்ப கோணம், திருச்சி, தஞ்சாவூர் போன்ற ஊர்களிலிருந்து பேரளம் வழியாக திருநள் ளாறு வரும் பக்தர்களின் கார், வேன், பஸ் போன்ற வாகனங்களை நிறுத்த திருநள்ளாறு- பேரளம் சாலையில் செல்லூர் அருகிலுள்ள வி.ஐ.பி. நகர் மற்றும் பேட்டை ரோட்டில் உள்ள பொங்கலடி திடல் ஆகிய இடங்களும், நெடுங்காடு வழியாக திருநள்ளாறு வரும் வாகனங்களை நிறுத்த சுரக்குடி மாரியம்மன் கோவில் திடல், வேளாண்கல்லூரி ஆகிய இடங்களிலும், காரைக்கால் வழியாக திருநள்ளாறு செல்லும் வாகனங்கள் காரைக் கால் களையங்கட்டி பாலம் அருகில் உள்ள நகராட்சி சந்தை திடல், திருநள்ளாறில் உள்ள வடக்கு உள் வட்ட சாலையிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    திருநள்ளாறு பஸ் நிலைய வளாகத்தில் வி.ஐ.பி.க்களின் வாகனங்களை நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காரைக்காலில் இருந்து வருபவர்களின் இருசக்கர வாகனங்களை நிறுத்த திருநள்ளாறில் உள்ள வெள்ளாளர் தெருவிலும், பேரளம், நெடுங்காடு வழியாக வருபவர்களின் இருசக்கர வாகனங்களை நிறுத்த சுரக்குடிரோடு முனையில் உள்ள அய்யனார் கோவில் திடலிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    Next Story
    ×