search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    விழாவில் திருமணக்கோலத்தில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானையுடன் பக்தர்களுக்கு அருள் பாலித்த காட்சி.
    X
    விழாவில் திருமணக்கோலத்தில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானையுடன் பக்தர்களுக்கு அருள் பாலித்த காட்சி.

    பழனி முருகன் கோவிலில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி - தெய்வானை திருக்கல்யாணம்

    பழனி முருகன் கோவில் வைகாசி விசாக திருவிழாவில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    முருகப்பெருமானின் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா கடந்த 22-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த திருவிழாவில் நேற்று முத்துக்குமாரசுவாமி -வள்ளி, தெய்வானை திருக்கல்யாணநிகழ்ச்சிநடைபெற்றது.

    இதற்காக நேற்று மாலை பெரியநாயகி அம்மன் கோவிலில் சோமாஸ்கந்தர் சன்னதியில் மூலவர் சோமாஸ்கந்தர் வள்ளி-தெய்வானைக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதை தொடர்ந்து சோமாஸ்கந்தருக்கு ராஜ அலங்காரம் செய்யப்பட்டு சோமாஸ்கந்தர் வள்ளி-தெய்வானை திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது.

    தொடர்ந்து சன்னதி முன்பு திருமண மேடையில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை அம்மனுக்கு 16 வகையான அபிஷேகம் மற்றும் சிறப்பு யாகம் நடைபெற்றது. அதன்பின்னர் பொற்சின்னம் இடித்தல் நிகழ்ச்சி நடந்தது. பின்பு முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. ஆராதனைக்கு பிறகு கன்னிகா தானம், மாங்கல்ய பூஜை நடந்தது. அதனைத்தொடர்ந்து வள்ளி-தெய்வானைக்கு பட்டத்து குருக்கள் அமிர்தலிங்கம் திருமாங்கல்யம் அணிவித்து திருக்கல்யாணத்தை நடத்தி வைத்தார்.

    பின்னர் மலர் மாலை மாற்றும் நிகழ்ச்சி நடந்தது. அதனை தொடர்ந்து முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானையுடன் திருமணக்கோலத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தொடர்ந்து இரவு 8.30 மணிக்கு மேல் வெள்ளிகாமதேனு வாகனத்தில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை அம்மனுடன் திருவுலா வந்தார். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருக்கல்யாண நிகழ்ச்சி மற்றும் பூஜைகளை செல்வ சுப்பிரமணியகுருக்கள், சுந்தரமூர்த்திசிவம் மற்றும் பூஜை முறை குருக்கள் செய்தனர்.

    திருவிழாவில் இன்று (திங்கட்கிழமை) மாலை 4.30 மணிக்கு வைகாசி விசாகத் திருத்தேரோட்டம் நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து இரவு 7.30 மணிக்கு தந்தப்பல்லக்கில் தேர் பார்த்தல் நிகழ்ச்சியும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை பழனி கோவில் இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் செந்தில்குமார் மற்றும் கோவில் அலுவலர்கள் செய்திருந்தனர். 
    Next Story
    ×