search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    தஞ்சையில் 24 பெருமாள்கள் கருடசேவை 4-ந்தேதி நடக்கிறது
    X

    தஞ்சையில் 24 பெருமாள்கள் கருடசேவை 4-ந்தேதி நடக்கிறது

    இந்து சமய அறநிலையத்துறை, தஞ்சை அரண்மனை தேவஸ்தானம், ராமானுஜதர்சன சபை சார்பில் தஞ்சையில் 24 பெருமாள்கள் கருட சேவை வருகிற 4-ந்தேதி நடைபெறுகிறது.
    இந்து சமய அறநிலையத்துறை, தஞ்சை அரண்மனை தேவஸ்தானம், ராமானுஜதர்சன சபை சார்பில் 24 கருடசேவை விழாவை ஆண்டுதோறும் நடத்தி வருகிறார்கள். அதன்படி 84-வது ஆண்டாக இந்த ஆண்டு 24 பெருமாள்கள் கருடசேவை வருகிற 4-ந்தேதி (திங்கட்கிழமை) நடைபெறுகிறது.

    விழாவின் தொடக்கமாக வெண்ணாற்றங்கரை நரசிம்மபெருமாள் சன்னதியில் திவ்யதேச பெருமாள்களுக்கு திருமங்கைஆழ்வார் மங்களாசாசனம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து அரண்மனை தேவஸ்தானத்துடன் இணைந்த 18 கோவில்கள் மற்றும் ஏனைய 6 கோவில்கள் என மொத்தம் 24 கோவில் களில் இருந்து கருட வாகனத்தில் பெருமாள்கள் எழுந்தருளி அவரவர் கோவில்களில் இருந்து புறப்பட்டு கொடிமரத்து மூலையை வந்தடைகின்றனர்.

    அங்கிருந்து அன்னபட்சி வாகனத்தில் திருமங்கை ஆழ்வார் எம்பெருமானை தொழுத வண்ணம் முதலில் வர அவரை தொடர்ந்து நீலமேகப்பெருமாள் லட்சுமியுடன் மற்ற பெருமாள்களான நரசிம்மபெருமாள், வெண்ணாற்றங்கரை மணிக்குன்னபெருமாள், வேளூர் வரதராஜபெருமாள், கல்யாணவெங்கடேச பெருமாள், கரந்தை யாதவக்கண்ணன், கொண்டிராஜபாளையம் யோகநரசிம்மபெருமாள், கோதண்டராமர், கீழராஜவீதி வரதராஜபெருமாள், தெற்கு வீதி கலியுகவெங்கடேச பெருமாள், அய்யங்கடைத்தெரு பஜார் ராமசாமி பெருமாள், எல்லையம்மன்கோவில் தெரு ஜனார்த் தனபெருமாள், கோட்டை பிரசன்ன வெங்கடேச பெருமாள், கோவிந்தராஜ பெருமாள், மேலராஜவீதி ரெங்கநாதபெருமாள், விஜயராமபெருமாள், நவநீதகிருஷ்ணன், சக்காநாயக்கன் தெரு பூலோக கிருஷ்ணன், மானம்புச்சாவடி நவநீதகிருஷ்ணசாமி, பிரசன்ன வெங்கடேச பெருமாள், பள்ளியக்ரகாரம் கோதண்டராமசாமி பெருமாள், சுங்கான்திடல் லட்சுமி நாராயணபெருமாள், கரந்தை வாணியத்தெரு வெங்கடேச பெருமாள், கொள்ளுப்பேட்டைத்தெரு வேணுகோபாலசாமி ஆகிய 24 பெருமாள்களும் கருடவாகனத்தில் புறப்படுகிறார்கள்.

    கருடவாகனத்தில் எழுந்தருளிய அனைத்து பெருமாள்களும் வரிசையாக காலை 7 மணி முதல் 11.30 மணி வரை கீழராஜவீதி, தெற்கு ராஜவீதி, மேலராஜவீதி, வடக்கு ராஜவீதி வழியாக உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்துவிட்டு மீண்டும் கொடிமரத்து மூலையை வந்தடைகின்றனர். பின்னர் பெருமாள்கள் அங்கிருந்து புறப்பட்டு அந்தந்த கோவில்களை சென்றடைகின்றனர். கருடவாகனத்திற்கு முன்பும், பின்பும் பக்தர்கள் பஜனைபாடியபடி செல்வார்கள்.

    5-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) நவநீத சேவையும், 6-ந்தேதி விடையாற்றி உற்சவமும் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை அரண்மனை தேவஸ்தான அறங்காவலர் பாபாஜிராஜாபோன்ஸ்லே, அரண்மனை தேவஸ்தான உதவி ஆணையர் பரணிதரன், செயல் அலுவலர் மாதவன், கண்காணிப்பாளர்கள் சுரேஷ், தமிழ்ச்செல்வி மற்றும் ராமானுஜதர்சன சபையினர் செய்து வருகிறார்கள். 
    Next Story
    ×