search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ராமலிங்க பிரதிஷ்டை விழாவில் ஆஞ்சநேயர் வேடமிட்ட ஒருவர் சாமி விக்ரகத்துடன் ஆடி வந்த காட்சி.
    X
    ராமலிங்க பிரதிஷ்டை விழாவில் ஆஞ்சநேயர் வேடமிட்ட ஒருவர் சாமி விக்ரகத்துடன் ஆடி வந்த காட்சி.

    ராமேசுவரம் கோவில் தல வரலாற்றை நினைவுகூரும் ராமலிங்க பிரதிஷ்டை விழா

    ராமேசுவரம் கோவில் தல வரலாற்றை நினைவுகூரும் ராமலிங்க பிரதிஷ்டை விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
    இலங்கைக்கு சீதையை கவர்ந்து சென்ற ராவணனை வதம் செய்ததால் ராமபிராமன் பிரம்மஹத்தி தோஷம் நீங்க சிவலிங்கத்தை வழிபாடு செய்த ராமேசுவரம் கோவில் தல வரலாற்றை நினைவு கூரும் ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.

    அதுபோல் இந்த ஆண்டின் ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா கடந்த 20-ந் தேதி தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவின் 3-வது நாளான நேற்று ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா நடைபெற்றது. அதற்காக கோவிலின் சாமி சன்னதியில் உள்ள விசுவநாதர் சன்னதி முன்பு 2 பெரிய கலசத்திலும் 11 சிறிய கலசத்திலும் புனித நீர் வைக்கப்பட்டு சிறப்பு பூஜையும் யாகமும் நடை பெற்றது.அதன்பின் புனித தீர்த்தத்தால் கருவறையில் உள்ள சாமிக்கு மகா அபிஷேகம் நடை பெற்றது.

    தொடர்ந்து விசுவநாதர் சன்னதியில் இருந்து கோவில் குருக்கள் சந்தோஷ் ஆஞ்சநேயர் வேடமிட்டபடி கையில் சாமி விக்ரகத்துடன் ஆக்ரோஷமாக முதல் பிரகாரத்தில் ஆடி வந்து கருவறை சன்னதி முன்பு மண்டியிட சாமி விக்ரகம் கருவறையில் உள்ள சிவலிங்கம் அருகே வைக்கப்பட்டது.

    அதன்பின் கருவறையில் உள்ள ராமநாதசாமிக்கு பால், பன்னீர், திரவியம், தேன், மா, மஞ்சள் பொடி, பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு வாசனை பொருட்களால் மகா அபிஷேகம் நடைபெற்றது. அபிஷேகத்திற்குபின் சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீப ஆராதனை பூஜை நடை பெற்றது.

    ராமலிங்க பிரதிஷ்டை திருவிழாவில் கோவில் இணை ஆணையர் மங்கையர்க்கரசி, உதவி கோட்ட பொறியாளர் மயில்வாகனன், ஆணையர் பாலசுப்பிரமணியன், சூப்பிரண்டு ககாரின்ராஜ், பேஷ்கார்கள் கலைச்செல்வ ண்ணன், போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஷ், இன்ஸ்பெக்டர் திலகராணி, பா.ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் முரளிதரன், நகர் தலைவர் ஸ்ரீதர், இந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர் பிரபாகரன், முன்னாள் கவுன்சிலர் ராதாகிருஷ்ணன் உள்பட பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    தொடர்ந்து இரவு 8 மணிக்கு சாமி-அம்பாள் தங்க ரிஷப வாகனத்தில் எழுந்தருளி பஞ்ச மூர்த்தி களுடன் கோவிலின் 4 ரத வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர். ராமலிங்க பிரதிஷ்டை திருவிழாவையொட்டி கோவிலின் சாமி சன்னதியில் பக்தர்கள் தரிசனம் செய்யும் பகுதி முழுவதும் மலர்களால் அலங்காரம் செய்யப் பட்டிருந்தது.
    Next Story
    ×