search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    நெல்லையப்பர் கோவில் தேரோட்டத்தையொட்டி பாதுகாப்புக்காக குவிக்கப்பட்ட போலீசாரை படத்தில் காணலாம்.
    X
    நெல்லையப்பர் கோவில் தேரோட்டத்தையொட்டி பாதுகாப்புக்காக குவிக்கப்பட்ட போலீசாரை படத்தில் காணலாம்.

    நெல்லையப்பர் கோவிலில் இன்று தேரோட்டம்

    நெல்லையப்பர் கோவில் தேரோட்ட பாதுகாப்புக்கு 1,500 போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். நவீன கேமராக்கள் மூலமும் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
    நெல்லையில் பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் -காந்திமதி அம்பாள் கோவிலில் ஆனித்திருவிழா கடந்த 19-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் சுவாமி, அம்பாள் வீதிஉலா மற்றும் பக்தி கலை நிகழ்ச்சிகள் நடந்தன. 9-வது நாள் விழாவையொட்டி இன்று (புதன்கிழமை) தேரோட்டம் நடக்கிறது. காலை 9 மணிக்கு சுவாமி தேர் வடம் பிடித்து இழுக்கப்படுகிறது. முன்னதாக விநாயகர், சுப்பிரமணியர் தேர்களும், சுவாமி தேரை தொடர்ந்து அம்பாள் தேரும், இறுதியாக சண்டிகேசுவரர் தேரும் இழுக்கப்படுகின்றன.

    இந்த 5 தேர்களுக்கும் கடந்த சில நாட்களாக துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. நேற்று தேர் அலங்கரிக்கும் பணி முழுமை அடைந்தது.

    தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள். இதையொட்டி நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் மகேந்தர்குமார் ரத்தோட் உத்தரவுப்படி துணை கமிஷனர்கள் சுகுணா சிங் (சட்டம்- ஒழுங்கு), பெரோஸ்கான் அப்துல்லா (குற்றம்-போக்குவரத்து) ஆகியோர் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து உள்ளனர்.

    இன்று நடைபெறும் தேரோட்டத்தின் போது பக்தர்களை ஒழுங்குபடுத்தவும், பக்தர்களுக்கு பாதுகாப்பு அளிக்கவும் போலீஸ் உதவி கமிஷனர்கள், துணை சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார், ஊர்க்காவல் படையினர் வரவழைக்கப்பட்டு உள்ளனர். நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மொத்தம் 1,500-க்கும் மேற்பட்ட போலீசார் நெல்லை டவுனில் குவிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் தேரோட்டத்தின்போது பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். சாதாரண உடையிலும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

    தேரோட்டத்தின் போது திருடர்கள் கைவரிசை காட்டுவதை தடுக்கும் வகையில் போலீசார் நவீன கேமராக்கள் மூலம் கண்காணிக்க உள்ளனர். இதற்காக 4 ரதவீதிகளும் தற்காலிக கண்காணிப்பு கோபுரங்கள் நிறுவப்பட்டு உள்ளன. மேலும் நாலாபுறமும் கண்காணித்து காட்சிகளை பதிவு செய்யும் கேமராக்கள் பொருத்தப்பட்ட வேனும் ரதவீதிகளில் தேர் ஓடும்போது சுற்றி வருகிறது.

    மேலும் தேரோட்டத்தையொட்டி டவுன் பகுதியில் இன்று 1 நாள் மட்டும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. தேரோட்டத்தை காண வரும் பக்தர்களின் வாகனங்களை நிறுத்துவதற்கு ஆங்காங்கே பார்க்கிங் வசதியும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. அதற்கான அறிவிப்பு பேனர்களும் போலீசார் வைத்துள்ளனர்.

    தேரோட்டத்தையொட்டி ஏராளமான வியாபாரிகள் நேற்றே குவிந்தனர். அவர்கள் சுவாமி சன்னதி ரோடு, ரதவீதிகள் மற்றும் கோவிலுக்கு செல்லும் ரோடுகளில் கடைகள் அமைத்து உள்ளனர். வெளி தெப்பக்குளம் அருகில் குழந்தைகளுக்கான ராட்டினங்களும் நிறுத்தப்பட்டு உள்ளன. 
    Next Story
    ×