search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    துன்பங்களை அகற்றும் பூரி ஜெகந்நாதர்
    X

    துன்பங்களை அகற்றும் பூரி ஜெகந்நாதர்

    பூரி ஜெகந்நாதர் தரிசனம் சகல போகமும், செல்வமும், நல்வாழ்வும் கிட்டச் செய்யும் என்கிறார்கள். பூரி ஜெகந்நாதரின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    துவாரகையில் தன் மனைவியரோடு வசித்து வந்தார் கிருஷ்ண பகவான். அவரது மனைவியர் அனைவரும் அவர் மீது மிகுந்த பக்தியும், அன்பும் கொண்டிருந்தனர். இருப்பினும் நீலமேகவண்ணன் கிருஷ்ணனோ எப்போதும் பிருந்தாவன கோபியர்களையே நினைத்துக் கொண்டிருந்தார்.

    இது எதனால் என்பதனை அறிய விரும்பிய கண்ணனின் மனைவியர், கண்ணனின் குழந்தைப் பருவ லீலைகளை பிருந்தாவனத்தில் அருகில் இருந்து தரிசித்த அன்னை ரோகிணியை அணுகினர்.

    அவரோ, ‘கண்ணனின் குழந்தைப் பருவ லீலைகளை உங்களுக்கு கூறவேண்டும் என்றால், ஒரு நிபந்தனை. நான் அதுபற்றி கூறும்போது, அந்த அறைக்குள் கண்ணனையோ, பலராமரையோ அனுமதிக்கக் கூடாது. அப்படி அனுமதித்தால் அவற்றைக் கேட்டு அவர்களின் பிருந்தாவன ஏக்கம் மேலும் அதிகரித்துவிடும்’ என்றார்.

    கண்ணன் மற்றும் பல ராமரின் தங்கையான சுபத்ரா தேவியை, அந்த அறையின் பாதுகாப்பிற்காக நிறுத்திவிட்டு பிருந்தாவன நிகழ்வை விவரிக்கலானாள், ரோகிணி. அனைவரும் மெய்மறந்து கேட்டுக் கொண்டிருந்தனர். அதனைக் கேட்டுக்கொண்டு, காவலுக்கு நின்ற சுபத்ரா தேவியும் தன்னை மறந்து சொக்கி நின்றாள். அப்போது அங்குவந்த கண்ணனும், பலராமரும் கூட தங்கள் குழந்தைப் பருவ லீலைகளைக் கேட்டு மெய் மறந்து பரவசநிலையில் ஒன்றியிருந்தனர்.

    இப்படி கண்ணனும், பலராமரும், சுபத்ரா தேவியும் அதிபரவச திருக்கோலத்தில் மெய்மறந்திருப்பதைக் கண்ட நாரதர், தான் பார்த்து உள்ளம் நெகிழ்ந்த அந்த வேறுபட்ட வடிவங்களை அன்பர்களும் பார்க்க வேண்டும் என்று கண்ணபிரானிடம் வேண்டுதல் வைத்தார். இசைந்த கண்ணன், ‘வெகுவிரைவில் அக்கோலத்திலேயே தாங்கள் மூவரும் பூரி திருத்தலத்தில் எழுந்தருள்வோம்’ என நாரதரிடம் கூறி அருளினார்.

    அந்த நாளும் கூடிவந்தது. கலிங்க தேசத்து மன்னன் இந்திரத்யும்னன் சிறந்த விஷ்ணு பக்தன். ஒருநாள் அவன் கனவில் கண்ணபிரான் தோன்றி, தமக்கு ஒரு கோவிலை உண்டாக்கி, தம்மை மரக்கட்டையில் செதுக்கி நிர்மாணிக்குமாறு பணிக் கிறார். அவ்வண்ணமே கோவிலை நிர்மாணித்த மன்னன், சிலைசெய்து பிரதிஷ்டை செய்ய வேண்டி மரக்கட்டையை தேர்ந்தெடுத்து, தகுந்த சிற்பிகளை கூட்டிவந்து சிலையை வடிவமைக்க ஆரம்பித்தான். ஆனால் எந்த சிற்பியாலும் அந்த மரக்கட்டையை செதுக்கி சிற்பமாக்க முடியவில்லை.

    கவலையடைந்த மன்னன், கண்ணபிரானை வேண்டினான். இதையடுத்து தேவ சிற்பியான விஸ்வகர்மாவே அச்சிலையை செதுக்க முன்வந்தார். சிலை உருவாக்க 21 நாட்கள் ஆகும். அதுவரை தான் வேலைசெய்யும் அறை மூடியே இருக்கும். எக்காரணம் கொண்டும் யாரும் கதவுகளை திறக்கக்கூடாது. சிலையை உருவாக்கி முடித்ததும், நானே கதவை திறந்து வெளியில் வருவேன்’ என நிபந்தனை விதித்தார், விஸ்வகர்மா.

    மன்னனும் அவன் அருகில் இருந்த அவனது மனைவி பட்டத்தரசி குண்டிச்சா தேவியும் அதற்கு ஒப்புக்கொண்டனர். உடனே சிலையை செதுக்கும் பணியை விஸ்வகர்மா ஆரம்பித்தார். பதினைந்து நாட்கள் கழிந்தன. ஒருநாள் மன்னனின் மனைவி குண்டிச்சா தேவிக்கு சிலையைக் காணும் ஆவல் தோன்றியது. யாருக்கும் தெரியாமல் ஓரிரவு அந்த அறைக்கதவை திறந்தாள், குண்டிச்சா தேவி. அந்தநொடியே சிலைசெய்து கொண்டிருந்த விஸ்வகர்மா மறைந்துவிட, சிலை செதுக்கும் வேலை பாதியில் நின்றுபோனது. இதனால் மரக்கட்டை மூன்று துண்டுகளாக முற்றுப்பெறாத அமைப்பில் காணப்பட்டது.

    மனம் கலங்கிய மன்னன் இந்திரத்யும்னனும், அவனது மனைவி குண்டிச்சா தேவியும் மீண்டும் கண்ணனை துதித்தனர். அப்போது அங்கே ஒரு அசரீரி ஒலித்தது.

    ‘மன்னா! கவலை வேண்டாம். உனது பட்டத்தரசி குண்டிச்சா தேவி எம்மை தரிசிக்கும் ஆவலினால் சிற்பியின் அறையை திறந்ததால், சிலை வடிவம் முற்றுப்பெறவில்லை. இந்த சிலை வடிவே இங்கு யாம் எழுந்தருள எமக்கு மிகவும் உகந்தது. ஆம்! அன்னை ரோகிணி விவரித்த எங்களது பிருந்தாவன குழந்தைப்பருவ லீலைகளைக் கேட்டு ஒருவித பரவசநிலையில் நாங்கள் யாவரும் மெய்மறந்து நின்றோம். அதேகோலத்தில் உலகோருக்கு அருள நாரதன் எம்மிடம் வேண்டினான். அதன்பொருட்டு அந்த பரவசகோலத்தில் இந்த மூன்று முற்று பெறாத மரக்கட்டைகளில் யானும், பலராமனும், தங்கை சுபத்ராவும் எழுந்தருளி உள்ளோம். எனவே இப்படியே கருவறையில் நிறுவிவிடுங்கள்' என்றது அந்தக் குரல்.

    மேலும் ‘குண்டிச்சா தேவி.. தாய்மை பாசத்துடன் என்னை பார்க்கும் ஆவலில் சிலை உருவான அறையை திறந்ததால், வருடத்தில் ஒன்பது நாட்கள் குண்டிச்சா தேவியின் இருப்பிடம் நாடி வருவேன்' எனவும் வாக்களித்தார் ஜெகந்நாதரான கண்ணன்.

    அதன்படியே இன்றும் கருவறையில் வலப்புறம் ஓரத்தில் ஐந்து அடி, ஏழு அங்குல உயரத்தில் கறுப்பு நிறத்தில் வட்டவடிவமான பெரிய கண்களுடன் ஜெகந்நாதர் எனும் திருநாமத்தில் கண்ணபிரானும், மறு ஓரத்தில் ஐந்தடியில் வெள்ளை நிறத்தில் தாமரைக்கண்களுடன் பலராமரும், இருவருக்கும் நடுவில் ஐந்தடி உயரத்தில் மஞ்சள் நிறத்தில் சுபத்ரா தேவியும் எழுந்தருளி உள்ளனர். அதாவது ஜெகந்நாதர், பலராமர், சுபத்ரா மூவரும் ஒரே கருவறையில் கை, கால் உறுப்புகள் இன்றி மூன்று தனித்தனி மரக்கட்டைகளாகவே உள்ளனர். அதிலே கண், காது, மூக்கு வடிவமைக்கப்பட்டு அதனையே வழிபடுகிறார்கள்.

    பன்னிரண்டு வருடங்களுக்கு ஒருமுறை ஆடிமாதத்தில் பூரி ஜெகந்நாதர் ஆலய கருவறையில் புதிய மரத்திருவுருவை நிறுவி, பழைய திருவுருவினை ‘வைகுண்ட்' எனும் ஆலயத்தின் ஒருபகுதியில் இரவில் பூமிக்குள் வைத்துவிடும் நிகழ்வு நடைபெறுகிறது. இந்த நிகழ்வு நடைபெறும் போது யாருக்கும் அனுமதியில்லை. அதுசமயம் பூரி நகரம் முழுவதும் ஒடிசா மாநில அரசு மின்தடையை ஏற்படுத்துகிறது. அடுத்து புதுச் சிலையை உருவாக்கும்போது, அச்சிலை செய்யப்பயன்படும் வேப்ப மரத்தினை இத்தல விமலாதேவி பாம்பு வடிவில் வந்து அடையாளம் காட்டுவாளாம். இந்த அதிசய நிகழ்வு இன்றும் தொடர்கிறதாம்.

    பூரி ஜெகந்நாதர் தரிசனம் சகல போகமும், செல்வமும், நல்வாழ்வும் கிட்டச் செய்யும் என்கிறார்கள்.
    Next Story
    ×