search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருப்பைஞ்சீலி கோவில் ஆடிப்பூர கொடியேற்று விழாவையொட்டி விசாலாட்சி அம்மன் கேடயத்தில் எழுந்தருளி வலம் வந்தகாட்சி
    X
    திருப்பைஞ்சீலி கோவில் ஆடிப்பூர கொடியேற்று விழாவையொட்டி விசாலாட்சி அம்மன் கேடயத்தில் எழுந்தருளி வலம் வந்தகாட்சி

    திருப்பைஞ்சீலி நீலிவனேஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர விழா தொடங்கியது

    திருப்பைஞ்சீலி நீலிவனேஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகிற 13-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது.
    மண்ணச்சநல்லூர் அருகே திருப்பைஞ்சீலியில் நீலிவனேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர் ஆகியோரால் தேவாரப் பாடல் பாடப்பெற்ற 61-வது திருத்தலமாகும். மேலும் சிவபெருமான் அப்பர் பெருமானாகிய திருநாவுக்கரசருக்கு திருக்கட்டமுது அளித்து காட்சி அருளியதும், அதிகார வல்லவராகிய சிவபெருமான் எமதர்மராஜனுக்கு இழந்த பதவியையும், அதிகாரத்தையும், மீண்டும் வழங்கியதும், தேவலோக சப்த கன்னிகள் என்றும் அழியாத வரம் பெற்று கல்வாழைகளாக அவதரித்து ஆண், பெண் இருபாலரின் சகல தோஷங்களை நிவர்த்தி செய்து அவர்கள் எண்ணிய வரம் அளித்து அருள்புரியும் தலமாகும்.

    இத்தகைய சிறப்புவாய்ந்த இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடிப்பூர விழா சிறப்பாக கொண்டாடப் படும். இந்த ஆண்டுக்கான விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக விசாலாட்சி அம்மன் பூக்களால் அலங்கரிக்கப்பட்டு கோவிலின் உட்பிரகாரத்தில் வலம் வந்து கொடி மரம் முன்பு காலை 11.15 மணி அளவில் கேடயத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து கொடிமரத்திற்கு சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை நடைபெற்றன.

    அதைத்தொடர்ந்து துணியில் காளை வாகனம் வரையப்பட்ட கொடியினை கோவில் அர்ச்சகர்கள் கொடிமரத்தில் ஏற்றினர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பயபக்தியுடன் அம்மனை வணங்கினர். தொடர்ந்து இரவு அம்மன் கேடயத்தில் எழுந்தருளி தேரோடும் வீதி வழியாக வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று முதல் காலையில் பல்லக்கிலும் இரவில் ஒவ்வொரு நாளும் சேஷ வாகனம், கிளி வாகனம், காமதேனு வாகனம், ரிஷப வாகனம், அன்னவாகனம், யாளி வாகனம், தங்க குதிரை வாகனத்தில் அம்மன் எழுந்தருளி வீதி உலா வருகிறார்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 13-ந் தேதி நடக்கிறது. 14-ந் தேதி காலையில் நடராஜர் புறப்பாடு, (தேர்க்கால் பார்த்தல்) நிகழ்ச்சியும், பல்லக்கு புறப்பாடு (தீர்த்தவாரி) நிகழ்ச்சியும், இரவு கேடயத்தில் அம்மன் புறப்பாடும் நடைபெறுகிறது. 15-ந் தேதி விடையாற்றி நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை தக்கார் பா.ராணி மேற்பார்வையில் செயல் அலுவலர் ஹேமலதா, கோவில் பணியாளர்கள் மற்றும் அனைத்து கிராம பட்டயதாரர்கள் செய்து வருகின்றனர்.
    Next Story
    ×