search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருப்பதி கோவிலில் திவ்ய, டைம் ஸ்லாட் தரிசனம் ரத்து
    X

    திருப்பதி கோவிலில் திவ்ய, டைம் ஸ்லாட் தரிசனம் ரத்து

    புரட்டாசி மாத சனி, ஞாயிற்றுக்கிழமை, நவராத்திரி பிரம்மோற்சவ விழா ஆகியவற்றையொட்டி ஏழுமலையான் கோவிலில் திவ்ய தரிசனம், டைம் ஸ்லாட் தரிசனத்தில் டோக்கன் வழங்குவது ரத்து செய்யப்பட்டு உள்ளதாக அதிகாரி தெரிவித்துள்ளார். #tirupati
    திருமலை-திருப்பதி தேவஸ்தான இணை அதிகாரி கே.எஸ்.சீனிவாசராஜு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 2 ஆண்டுகளில் 11 முறை ஒரேநாளில் லட்சம் பக்தர்களுக்குமேல் வந்து சாமி தரிசனம் செய்துள்ளனர். செப்டம்பர் மாதம் 29-ந்தேதி அன்று ஒரேநாளில் 1 லட்சத்து 2 ஆயிரத்து 278 பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர்.

    புரட்டாசி மாதம் நடப்பதால் சனிக்கிழமையையொட்டி ஏழுமலையானை தரிசிக்க தமிழகத்தில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருமலைக்கு வருகின்றனர். அன்று பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் வி.ஐ.பி. தரிசனத்தில் சென்ற பக்தர்களின் எண்ணிக்கையை குறைத்து, இலவச தரிசனத்தில் சாதாரண பக்தர்கள் வழிபட அதிக நேரம் ஒதுக்கப்பட்டது. அன்று 300 ரூபாய் டிக்கெட்டில் 5 ஆயிரம் பக்தர்களே சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

    திருமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் டைம் ஸ்லாட் முறையில் சென்ற இலவச தரிசன பக்தர்கள், முதியோர், மாற்றுத்திறனாளிகள், ஒரு வருட கைக்குழந்தைகளுடன் வந்த பெண் பக்தர்கள் ஆகியோர் தனித்தனி வரிசைகளில் அனுமதிக்கப்பட்டனர். இதே நடைமுறையை கூட்டம் அதிகமாக இருக்கும்போதும் நடைமுறை படுத்தப்பட உள்ளது.

    பிரம்மோற்சவ விழா, வைகுண்ட ஏகாதசி, ரத சப்தமி மற்றும் கோடைக்கால விடுமுறை நாட்கள், வார விடுமுறை நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் இலவச தரிசனத்தில் பக்தர்களை அனுப்ப முன்னேற்பாடு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். புரட்டாசி மாதத்தில் இன்னும் 2 சனிக்கிழமை இருப்பதால் திருமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 10-ந்தேதியில் இருந்து 18-ந்தேதி வரை நவராத்திரி பிரம்மோற்சவ விழா நடைபெற உள்ளது. எனவே வருகிற 6, 7, 13, 14, 20 மற்றும் 21-ந்தேதிகளில் அலிபிரி, ஸ்ரீவாரிமெட்டு ஆகிய இரு மலைப்பாதைகள் வழியாக திருமலைக்கு வரும் திவ்ய தரிசன பக்தர்களுக்கு அனுமதி சீட்டு வழங்கப்பட மாட்டாது. அத்துடன் டைம் ஸ்லாட் முறையிலான இலவச தரிசன டோக்கன்கள் கொடுப்பதும் ரத்து செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் வழக்கம்போல் வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸ் வழியாக சென்று ஏழுமலையானை வழிபடலாம்.

    300 ரூபாய் டிக்கெட் பக்தர்கள், சிபாரிசு கடிதம் மூலம் வரும் வி.ஐ.பி. பக்தர்கள், புரோட்டோக்கால் பக்தர்கள் ஆகியோர் குறைந்த எண்ணிக்கையில் அனுமதிக்கப்படுவார்கள். பக்தர்களுக்கு குடிநீர், மோர், அன்னதானம் ஆகியவை வழங்கப்படும். கழிவறைகளை சுத்தமாக வைத்துக் கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. மேற்கண்ட நாட்களில் 120 உதவி அதிகாரிகள் நியமித்து, பக்தர்களை ஒழுங்குபடுத்தி அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.#tirupati
    Next Story
    ×