search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    தீபாவளி வழிபாடு செய்வது எப்படி?
    X

    தீபாவளி வழிபாடு செய்வது எப்படி?

    ஏழை எளியோர் தீபாவளி கொண்டாட உங்களால் இயன்ற உதவிகளைச் செய்யுங்கள். தீபாவளித்திருநாள் தித்திக்கும் திருநாளாக அமைய ஏழை எளியவர்களுக்கு மறக்காமல் தானம் செய்யுங்கள்.
    தீபாவளிக்கு முதல் நாள் இரவே சுவாமி அறையை சுத்தம் செய்து கோலமிட்டு ஒரு மணைப்பலகையில் சிறிது மஞ்சள் தூள், குங்குமம், மறுநாள் தேய்த்துக் குளிப்பதற்கான எண்ணெய், சிகைக்காய்ப்பொடி ஆகியவற்றை எடுத்து வைத்து விட வேண்டும். வெந்நீர் போட்டுக்குளிப்பதற்கான பாத்திரத்தினையும் நன்கு கழுவி, விபூதி பூசி, குங்குமம் இட்டு வைத்துக்கொள்ளலாம்.

    தீபாவளி அன்று சூரிய உதயத்திற்கு முன்பே எழுந்து விட வேண்டும். சுவாமி முன் வைத்துள்ள எண்ணெயை வீட்டிலுள்ள பெரியவர்கள் எடுத்து, சிறியவர்களுக்கு தலையில் தேய்த்து விட வேண்டும்.

    வெந்நீரை பொறுக்கும் சூட்டில் எடுத்துக்கொண்டு குளிப்பதற்கு முன் கிழக்கு அல்லது வடக்கு முகமாக நின்று கொண்டு, கொஞ்சம் நீரைக்கையில் எடுத்துக்கொண்டு

    கங்கேச யமுனே சைவ கோதாவரி சரஸ்வதி
    நர்மதே சிந்து காவேரி ஜலேஸ்மின் சன்னதிம் குரு!
    என்ற சுலோகத்தை சொல்லிவிட்டு பின் நீராட வேண்டும்.

    தீபாவளி நாளில் எல்லா நீரிலும் கங்கை வாசம் செய்வதாக ஐதீகம். புண்ணிய நதிகளான கங்கை, யமுனா, கோதாவரி, சரஸ்வதி, நர்மதை, சிந்து, காவேரி ஆகிய சப்த தீர்த்தங்களும் நான் குளிக்கும் இந்த நீரில் வாசம் செய்யட்டும் என்ற பொருள் உள்ள இந்த சுலோகத்தினை சொல்லிவிட்டு நீராடுவதால், சாதாரணக் குளியலும் புனித நீராடலாக மாறி விடும். இந்த நீராடல் நற்பலன் தரும்.

    நீராடியபின் புத்தாடை அணிந்து சுவாமி முன் கோலமிட்டு மஞ்சள் தூள், வெற்றிலை,பாக்கு,பழம், தேங்காய், பூ, புத்தாடை, பட்டாசு, பல காரங்கள் போன்றவற்றை வைத்து, தெரிந்த சுலோகங்களைச் சொல்லி( விஷ்ணு லட்சுமி, சிவ பார்வதி, குபேரன் துதிகளைச் சொல்வது சிறப்பு) தூப தீபம் காட்டி வணங்குதல் வேண்டும். அதன் பின்னர் பெற்றோர், பெரியோரை வணங்கி ஆசிபெற வேண்டும். பிறகு அவரவர் வழக்கப்படி முதலில் இனிப்பையோ அல்லது சிறிதளவு தீபாவளி லேகியத்தினையோ உண்ண வேண்டும்.

    இவை அனைத்தையும் விட முக்கியமானது எது தெரியுமா? ஏழை எளியோர் தீபாவளி கொண்டாட உங்களால் இயன்ற உதவிகளைச் செய்யுங்கள். தீபாவளித்திருநாள் தித்திக்கும் திருநாளாக அமைய ஏழை எளியவர்களுக்கு மறக்காமல் தானம் செய்யுங்கள்.
    Next Story
    ×