search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சோலைமலை முருகன் கோவிலில் சாமி அன்ன வாகனத்தில் எழுந்தருளிய காட்சி.
    X
    சோலைமலை முருகன் கோவிலில் சாமி அன்ன வாகனத்தில் எழுந்தருளிய காட்சி.

    சோலைமலை முருகன் கோவிலில் அன்ன வாகனத்தில் சாமி எழுந்தருளினார்

    அழகர்மலை உச்சியில் உள்ள சோலைமலை முருகன் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா தொடங்கியது. இதையொட்டி சாமி அன்னவாகனத்தில் எழுந்தருளினார்.
    அழகர்மலை உச்சியில் முருகபெருமானின் ஆறாவது படை வீடான சோலைமலை முருகன் கோவில் உள்ளது. வரலாற்று சிறப்புமிக்க இந்த கோவிலில், அவ்வையாருக்கு சுட்ட பழம் வேண்டுமா, சுடாத பழம் வேண்டுமா என்று கேட்டு நாவல் மரத்திலிருந்து முருகப்பெருமான் காட்சி தந்த புனித ஸ்தலமாக புராண வரலாறு கூறுகிறது. இங்கு வருடந்தோறும் நடைபெறும் கந்தசஷ்டி திருவிழாவின் போது ஸ்தலவிருட்சமான நாவல் மரம் முன்பு சூரசம்ஹாரம் நடைபெறும் என்பது குறிப்பிடதக்கது. இங்கு நடைபெறும் திருவிழாக்களில் கந்தசஷ்டி திருவிழா முக்கியமானது.

    இந்த வருடத்திருவிழா நேற்று காலை பக்தர்களுக்கு காப்பு கட்டுதல், மற்றும் யாகசாலை பூஜைகளுடன் தொடங்கியது. பின்னர் உற்சவ மூர்த்திக்கு மகா அபிஷேகம் பூஜைகள் நடைபெற்றன. பின்னர் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியசாமி அன்னவாகனத்தில் கோவில் பிரகாரத்தில் எழுந்தருளினார். இதில் சுற்றுவட்டார பகுதி, வெளி மாவட்ட பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியையொட்டி அன்னதானம் வழங்கப்பட்டது.

    இன்று (வெள்ளிக்கிழமை) வழக்கமான பூஜைகளும், காமதேனு வாகனத்தில் சாமி புறப்பாடும் நடைபெறுகிறது. நாளை 10-ந் தேதி காலையில் யானை வாகனத்திலும், 11-ந் தேதி ஆட்டு கிடாய் வாகனத்திலும், 12-ந் தேதி சப்பர வாகனத்திலும் சாமி புறப்பாடு நடைபெறுகிறது. 13-ந் தேதி காலையில் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரம்ஹார விழா குதிரை வாகன புறப்பாட்டுடன் நடக்கிறது. மாலை 4.35 மணிக்கு வெள்ளிமயில் வாகனத்தில் சுப்பிரமணியர் புறப்பாடாகி வேல் வாங்குதல் நடைபெற்ற பின்பு, 5.40 மணிக்கு முருகபெருமான் ஈசான திக்கில் கஜமுகாசூரனையும், அக்கினி திக்கில் சிங்கமுகா சூரனையும் சம்ஹாரம் செய்து, ஸ்தலவிருட்சமான நாவல் மரத்தடியில் பத்மாசூரனை சம்ஹாரம் செய்யும் சூரசம்ஹார காட்சி நடைபெறுகிறது.

    தொடர்ந்து சஷ்டிமண்டபத்தில் சாந்த அபிஷேகம் நடைபெற்ற பின்பு மறுநாள் காலை 10.30 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும், மாலை 4.30 மணிக்கு ஊஞ்சல் சேவையும், மஞ்சள் நீர் உற்சவத்துடனும் திருவிழா நிறைவுபெறுகிறது. விழாக்காலங்களில் தினமும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. திருவிழா ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி மாரிமுத்து, திருக்கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
    Next Story
    ×