search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி விழா
    X

    ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி விழா

    ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசியன்று ஸ்ரீ நம்பெருமாள் ரத்தின அங்கியுடன் பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசல் வழியாக வந்து திருமாமணி மண்டபத்தில் எழுந்தருள்வார்.
    108 வைணவ திவ்ய தேசங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம், பெரியகோவில் என்றும் போற்றபடுகிற ஸ்ரீரங்கம் ரெங்நாத சுவாமி திருக்கோவி லில் நடைபெறும் அனைத்து உற்சவங்களுமே மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். ஒவ்வொரு வருடமும் மார்கழி மாதத்தில் நடைபெறும் திருஅத்யயன உற்சவம் (வைகுண்ட ஏகாதசி திரு மொழி, திருவாய்மொழி திரு நாட்கள்) முக்கிய திருவிழா ஆகும்.

    பகல் பத்து, ராப்பத்து, இயற்பா என்று 21 நாட்கள் நடைபெறும் இந்த உற்சவத்தில் வருகிற 8.12.2018 முதல் 27.12.2018 வரை 20 நாட்கள் பெரிய பெருமாள் மூலவர் முத்தங்கியுடன் சேவை சாதிப்பார். பகல் பத்து திருவிழாவின் போது, ஸ்ரீ நம்பெருமாள் அர்ச்சுன மண்டபத்திலும், ராப்பத்து திருநாட்களில் திருமாமணி மண்டபத்தில் (ஆயிரங்கால் மண்டபம்) அனைத்து ஆழ்வார்கள், ஆச்சாரியார்களுடன் எழுந்தருளி சேவை சாதிப்பது மிகவும் சிறப்பாகும்.

    பகல்பத்து திருநாட்களின் போது திருமொழி பாசுரங்களும், ராப்பத்து திருநாட்களின்போது திருவாய்மொழி பாசுரங்களும் அபிநயம், வியாக்யானங்களுடன் அரையர்களால் சேவிக்கப்படும். பகல்பத்து திருநாளில் பத்தாம் திருநாளன்று ஸ்ரீநம்பெருமாள் மோகினி அலங்காரத்துடன் அர்ச்சுன மண்டபத்தில் சேவை சாதிப்பார்.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான 18.12.2018 வைகுண்ட ஏகாதசியன்று ஸ்ரீ நம்பெருமாள் ரத்தின அங்கியுடன் பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசல் வழியாக வந்து திருமாமணி மண்டபத்தில் எழுந்தருள்வார். ராப்பத்து எட்டாம் திருநாளில் ஸ்ரீநம்பெருமாள் தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளி வேடுபறி கண்டருள்வார்.

    ராப்பத்து சாற்றுமறை அன்று நடைபெறும் நம்மாழ்வார் மோட்சம் சேவிப்பதற்கு கண்கொள்ளா காட்சியாகும். இந்த உற்சவம் நாலாயிர திவ்ய பிரபந்தத்திற்கும், ஆழ்வார்களுக்கும் ஏற்றமிகு உற்சவமாகி திருமங்கையாழ்வார் காலம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    Next Story
    ×