search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    அன்னூர் மன்னீஸ்வரர் கோவிலில் சுவாமி- அம்மன் திருக்கல்யாணம் நடந்ததை படத்தில் காணலாம்.
    X
    அன்னூர் மன்னீஸ்வரர் கோவிலில் சுவாமி- அம்மன் திருக்கல்யாணம் நடந்ததை படத்தில் காணலாம்.

    அன்னூர் மன்னீஸ்வரர் கோவிலில் திருக்கல்யாணம்

    அன்னூர் மன்னீஸ்வரர் கோவிலில் திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
    கோவை மாவட்டம் அன்னூரில் மன்னீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் தேர்த்திருவிழா சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டு தேர்த்திருவிழா கடந்த 14-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    அதனைத்தொடர்ந்து சூரிய வாகனம், சந்திர வாகனம், பூத வாகனம், புஷ்ப பல்லக்கு ஆகியவற்றில் சுவாமி திருவீதி உலா வந்தார். நேற்று அன்னூர் தாசபளஞ்சிக சங்க தலைவர் முருகேசன் தலைமையில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.

    பெருமாள் கோவிலில் இருந்து மணமகள் அழைப்புக்காக பெண்கள் சீர்வரிசையோடு ஊர்வலமாக மன்னீஸ்வரர் கோவிலை அடைந்தனர். கோவிலில் கும்ப கலசம் ஆவாகனம் செய்யப்பட்டு யாக வேள்வி தொடங்கி நடந்தது. பின்னர் தீர்த்த கலசம் சுவாமிக்கு தெளிக்கப்பட்டது.

    தொடர்ந்து சிவன் கோவில், பெருமாள் கோவில் அர்ச்சகர்கள் உரலில் மஞ்சள் இடிக்கப்பட்டு மஞ்சளை எடுத்து மாங்கல்ய கயிற்றில் பூசி எடுத்து வந்தனர். பின்னர் அம்மனுக்கு மாங்கல்யம் அணிவிக்கப்பட்டது.

    திருக்கல்யாணம் கவுமார மடம் குமரகுருபர சுவாமிகள் தலைமையில் நடந்தது. தொடர்ந்து சுவாமி- அம்மனுக்கு மாலை மாற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அன்னூர் தாசபளஞ்சிக சேவா சங்கம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை யானை வாகன வீதிஉலா நடந்தது.

    இன்று (வியாழக்கிழமை) காலை 7.45 மணிக்கு சுவாமி மன்னீஸ்வரர் தேருக்கு எழுந்தருளுகிறார். காலை 11 மணிக்கு பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள், கூனம்பட்டி ராஜ சரவண மாணிக்கவாசக சுவாமிகள், தென்சேரிமலை ஆதீனம் முத்துசிவராம அடிகளார், அவினாசி காமாட்சிதாச ஏகாம்பரநாத சுவாமிகள், ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள், காரமடை அருணை அருள்முருக அடிகளார், ராமலிங்க சுவாமிகள், சட்டப்பேரவை தலைவர் தனபால் ஆகியோர் தேரோட்டத்தை வடம் பிடித்து தொடங்கி வைக்கிறார்கள்.

    நாளை (வெள்ளிக்கிழமை) மாலை 6.30 மணிக்கு சுவாமி குதிரை வாகனத்தில் எழுந்தருளுகிறார். நாளை மறுநாள்(சனிக்கிழமை) மாலை 6.30 மணிக்கு தெப்ப உற்சவம், 23-ந் தேதி ஆருத்ரா தரிசனம், நடராஜர் அபிஷேகம், அன்னதானம் நடக்கிறது. தொடர்ந்து 24-ந் தேதி மகா அபிஷேகம் நடைபெறுகிறது.
    Next Story
    ×