search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    அனுமன் செதுக்கிய ராமாயணம்
    X

    அனுமன் செதுக்கிய ராமாயணம்

    ராமாயண காவியத்தை படைத்தவர் வால்மீகி. கவிதை நயமும் கருத்து நயமும் மிக்கவையாக அனுமன் செதுக்கிய ராமாயணத்தை பற்றி அறிந்து கொள்ளலாம்.
    ராமாயண காவியத்தை படைத்த வால்மீகி, அதனை ராமபிரானின் இரண்டு புதல்வர் களாக லவ-குசர்களுக்கு சொல்லிக்கொடுத்தார். அதனை ராமரின் அரண்மனையில் பாடிய அந்தச் சிறுவர்களை ராமபிரானே பாராட்டினார். வால்மீகியின் அந்த ராமாயணத்தையும் தான். லவ-குசன் இருவரும் ராமரிடம் சென்றடைந்த நிம்மதியோடு, ஒருநாள் இமய மலைச் சாரலில் ஒரு சிகரத்தின் மீது ஏறிக்கொண்டிருந்தார் வால்மீகி முனிவர்.

    சிகரத்தின் சரிவுகளில் இருந்த பாறைகளின் மீதும், கற்களின் மீதும் கல்வெட்டுக்களாகச் சில வாசகங்கள் பொறிக்கப்பட்டிருப்பது அவரது பார்வையில் தென்பட்டன. அவற்றைப் படிக்க ஆரம்பித்த வால்மீகி மெய்சிலிர்த்துப் போனார். அதில் செதுக்கியிருந்த வாசகங்கள் ராமபிரானின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை சித்தரிப்பதாக அமைந்திருந்தன.

    அதில் இருந்து ஒவ்வொரு வரிகளும்.. தான் எழுதிய ராமாயண காவியத்தின் வரிகளை விட, கவிதை நயமும் கருத்து நயமும் மிக்கவையாக இருப்பதை உணர்ந்து பிரமித்தார் வால்மீகி.

    இப்போது அவருக்கு ஒரு சந்தேகம் உருவானது. ‘இந்த பாறைகளில் ராமபிரானின் கதையை யார் செதுக்கியிருப்பார்கள்?’ என்று எண்ணினார். பாறைகளில் எழுதப்பட்டிருந்த ராம கதையைப் படித்தபடியே நடந்து சென்றவர் மலையின் சிகரத்தை அடைந்து விட்டார். அங்கே அவருக்கு மற்றுமொரு ஆச்சரியம் காத்திருந்தது.

    ஆம்! அங்கே சிரஞ்சீவியான அனுமன் யோக நிஷ்டையில் அமர்ந்து, ராம நாமத்தை ஜெபித்துக் கொண்டிருந்தார். அவரது தியானத்தைக் கலைக்க விரும்பாத வால்மீகி முனிவர், தானும் அங்கு ஒரு ஓரமாக அமர்ந்து ராம நாமத்தை உச்சரிக்கத் தொடங்கினார்.

    தன்னுடைய ஒலியோடு, இரண்டாவதாக மற்றொரு ஒலி கேட்பதை அறிந்த அனுமன், சட்டென்று கண்விழித்துப் பார்த்தபோது, அங்கு வால்மீகி முனிவர் அமர்ந்திருப்பதைக் கண்டார். பின் எழுந்து வந்து கண்மூடி தியானத்தில் இருந்த வால்மீகியின் முன்பாக வணங்கியபடி நின்றார்.

    திடீரென்று கண்விழித்த வால்மீகி தன் முன் அனுமன் நிற்பதைக் கண்டார். அவர் மனதில் ஓடிய எண்ணத்தை அனுமனிடமே கேட்டார். “அனுமன்.. நான் மலையேறி வரும் பாதையில் பாறைகளில் ராமரின் வரலாறு செதுக்கப்பட்டிருந்தது. அதனை யார் செதுக்கியது?” என்று கேட்டார்.

    உடனே அனுமன் “ராமரின் கல்யாண குணங்களையும், அவரது பெருமைகளையும் இங்கே காணும் கற்களில் நான் தான் எனது நகத்தால் செதுக்கி வைத்தேன். யுகம் யுகமாக ராமரின் கதை பேசப்பட வேண்டும் என்பதற்காக இந்தக் காரியத்தைச் செய்தேன். ராமபிரானை ரிஷ்யமுக பர்வதத்தில் நான் சந்தித்தது முதல், பட்டாபிஷேகம் வரை எனக்குத் தெரிந்த ராம கதையை உருவாக்கினேன். ஆனாலும், தங்களின் ராமாயணத்துக்கு இது ஈடாகாது'' என்று அடக்கத்துடன் கூறினார்.

    வால்மீகி முனிவரின் கண்களில் நீர் கசிந்தது. அதைக் கவனித்த அனுமன், அதற்கான காரணத்தைக் கேட்டார். மேலும், தான் கல்லில் செதுக்கிய ராமாயண காவிய வரிகளில் தவறேதும் இருந்தால், எடுத்துச் சொல்லும்படியும் வேண்டினார். வால்மீகியின் கண்களில் மேலும் நீர் பெருகியது. ‘எத்தகைய சிறப்பான காரியத்தைச் செய்துவிட்டு, எவ்வளவு தன்னடக்கத்துடன் அனுமன் இருக்கிறார்’ என்பதை எண்ணிப் பெருமிதம் அடைந்தார்.

    “அனுமன்! நீ ராமபிரானின் பிரதான பக்தன். உன்னால் கல்லில் பொறிக்கப்பட்ட ராமாயணத்தில் தவறு இருக்க முடியுமா? நீ எழுதிய காவிய வரிகளில் காணும் பக்திப் பரவசம் என்னை நெகிழ வைத்துவிட்டது. அதனால் ஏற்பட்ட ஆனந்தக் கண்ணீர் இது. நான் எழுதிய ராமாயணம் இதற்கு ஈடு இணையாகாது. உன்னுடைய ராமாயணத்தை உலகோர் படிக்கும்போது, என் ராமாயணம் காலப் போக்கில் மறைந்துவிடும்'' என்றார்.

    வால்மீகியின் வார்த்தையைக் கேட்ட அனுமனின் கண்களில் தாரை தாரையாக கண்ணீர் சுரந்தது. பாறைகளில் தான் செதுக்கியிருந்த ராமாயண காவிய வரிகளை எல்லாம் தனது வாலால் துப்புரவாக அழித்தார்.

    பதறிப்போனார் வால்மீகி. “அனுமன் எதற்காக இப்படிச் செய்தாய்?” என்றார்.

    வால்மீகி முனிவரை வணங்கிய அனுமன், “தாங்கள் எழுதிய ராம காவியமே மிகச் சிறப்பானது. காலத்தால் அழியாதது. அதுதான் சிறந்தது என்று என்னுடைய ராமபிரானே பாராட்டியிருக்கிறார். அதற்கு ஈடுஇணை எதுவும் கிடையாது. இருக்கவும் கூடாது என்பதாலேயே அவ்வாறு செய்தேன்” என்றார்.

    அனுமனின் பக்தியைப் பற்றி தெரிந்திருந்த வால்மீகி முனிவருக்கு, அவரது தியாகமும் கூட இப்போது புரிந்து போனது. அனுமனை மனதார வாழ்த்தி விட்டு அங்கிருந்து புறப்பட்டார்.
    Next Story
    ×