search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    முருகனின் அவதார தத்துவங்கள்
    X

    முருகனின் அவதார தத்துவங்கள்

    திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், திருஆவினன்குடி, திருவேரகம், குன்றுதோராடல், பழமுதிர்சோலை ஆகிய இடங்கள் தான் முருகப்பெருமானின் அறுபடை வீடு என இலக்கியங்கள் குறிப்பிடுகிறது.

    திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், திருஆவினன்குடி, திருவேரகம், குன்றுதோராடல், பழமுதிர்சோலை ஆகிய இடங்கள் தான் முருகப்பெருமானின் அறுபடை வீடு என இலக்கியங்கள் குறிப்பிடுகிறது. முருகப்பெருமான் அசுரன் பதுமனுடன் போர்புரிவதற்கு தங்கிய இடம் திருச்செந்தூர். வெற்றி கொண்டபிறகு தெய்வானையை மணந்துகொண்டு தங்கிய இடம் திருப்பரங்குன்றம்.

    இறைக்கு பிரணவ மந்திரத்தைப்போதித்த இடம் திருவேரகம் என்னும் சுவாமி மலை. அயனை சிறைவிடுக்க அருளிய இடம் திருஆவினன்குடி. முருகன் விரும்பித்தங்கிய இடம் குன்றுதோராடல் என்னும் திருத்தணி தலமாகும். அங்கு தங்கி அருள்பாலிக்கும் முருகப்பெருமான் மனித உள்ளங்களில் இருக்கும் அறியாமை என்னும் இருளை போக்கும் ஒளியுடையவன். அவனுடைய அங்கங்களில் மேன்மையுடையது அடியவர்களை தாங்கும் தாள் (திருப்பாதம்).

    தன்னை சரண் அடைந்தவர்களின் அறியாமை எனும் இருளை அகற்றி துன்பங்களை போக்கும் முருகப்பெருமான் அறுபடை வீடுகளில் அவதார வடிவங்களாக வீற்றிருக்கின்றார். பழனியில் எழுந்தருளியிருக்கும் தண்டாயுதபாணி தவறு செய்யும் அசுரர்களை திருத்தும் அவதாரமாக விளங்குகிறார். முருகன், ஆட்டுகிடாவை (தகர்) அடக்கிய புராண நிகழ்ச்சி, அஞ்ஞானத்தை ஞானத்தால் அடக்கவேண்டும் என்கிற தத்துவத்தை நமக்கு உணர்த்துகின்றது. வள்ளியை மணம் முடிப்பதற்கு முருகப்பெருமான் வேடன், வேதியன், வேங்கைமரம், செட்டி என பல்வேறு வேடங்களில் செல்கின்றார்.

    இந்நிகழ்வு ஆன்மாவை உய்விக்கும் பொருட்டு தாழ்வு கருதாது ஆட்கொண்ட முருகனின் கருணையை குறிக்கின்றது. முருகனின் பன்னிரு விழிகளிலும் அருள்வெள்ளம் பொழிகிறது. அந்த அருட்பார்வைப்பட்டு துன்பங்கள் தொலைந்தோடும். அகத்திய முனிவருக்கு அருள் செய்ததினால் பொதிகையில் எழுந்தருளி உலகை சமன் செய்ய வைத்தவர் முருகன். எல்லா காலத்தும் எவ்விடத்தும் முருகனை நினைத்து அன்புருகி வேண்டும் போது பக்தர்களுக்கு வேண்டிய வரம் கிடைக்கும்.
    Next Story
    ×