search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருப்பதி ஏழுமலையான் குமரிமுனைக்கு வந்தது எப்படி?
    X

    திருப்பதி ஏழுமலையான் குமரிமுனைக்கு வந்தது எப்படி?

    கன்னியாகுமரியில் கடந்த 2010-ம் ஆண்டு சீனிவாச திருக்கல்யாணம் நடந்தது. இந்த நிகழ்ச்சிதான் கன்னியாகுமரியில் திருப்பதி வெங்கடாஜலபதி ஆலயம் உருவாவதற்கு அடித்தளம் அமைத்து கொடுத்தது.
    திருப்பதியில் நடக்கும் உற்சவங்களில் சீனிவாச கல்யாணம் உற்சவம் மிகவும் தனித்துவம் கொண்டது. இந்த உற்சவம் பக்தர்களுக்கு பலன்களை வாரி வழங்கும் முக்கியத்துவம் கொண்டது. இதனால்தான் சீனிவாச கல்யாண உற்சவத்தில் பங்கேற்க ஒவ்வொரு பக்தரும் ஆசைப்படுவார்கள். ஆனால் அந்த ஆசை அவ்வளவு எளிதில் நிறைவேறுவதில்லை.

    பக்தர்களின் பொருளாதார வசதி, பயண தூரம் மற்றும் பல காரணங்களால் பல லட்சம் பக்தர்கள் சீனிவாச கல்யாணத்தை நேரில் பார்க்க முடியாத நிலையில் உள்ளனர். அத்தகைய பக்தர்களின் மனக்குறையை தீர்க்கும் வகையில் திருப்பதி-திருமலை தேவஸ்தானம் அடிக்கடி வெளியூர்களில் சீனிவாசன் கல்யாணத்தை சிறப்பாக நடத்தி வருகிறது.

    அந்த வகையில் கன்னியாகுமரியில் கடந்த 2010-ம் ஆண்டு சீனிவாச திருக்கல்யாணம் நடந்தது. இந்த நிகழ்ச்சிதான் கன்னியாகுமரியில் திருப்பதி வெங்கடாஜலபதி ஆலயம் உருவாவதற்கு அடித்தளம் அமைத்து கொடுத்தது. இதுபற்றிய விவரங்களை சென்னை திருமலை-திருப்பதி தேவஸ்தான ஆலய சட்ட ஆலோசனைக் குழு உறுப்பினர் மோகன்ராவ் நம்மிடம் பகிர்ந்து கொண்டார். அவர் கூறியதாவது-:-

    கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தா கேந்திரத்தில் கடந்த 2010-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் திருமலை-திருப்பதி தேவஸ்தானம் சார்பில் சீனிவாச கல்யாணம் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் இருந்து சுமார் 5 லட்சம் பேர் கலந்து கொண்டனர். இதை நாங்கள் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. திருமலை-திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளும் இத்தகைய மக்கள் வெள்ளத்தை கண்டு ஆச்சரியப்பட்டனர். அந்த சமயத்தில்தான் திருப்பதி ஆலயம் ஒன்று நாட்டின் மற்ற நகரங்களிலும் கிளை ஆலயங்களை உருவாக்க திட்டமிடப்பட்டு இருந்தது. எனவே கன்னியாகுமரியில் ஒரு ஆலயத்தை உருவாக்க முடிவு செய்யப்பட்டது.

    இதை அறிந்ததும் விவேகானந்தா கேந்திரம் சார்பில் நிலம் தந்து உதவினார்கள். அங்கு கம்பீரமாக குமரிமுனை திருப்பதி ஆலயம் எழுந்துள்ளது. குமரி மாவட்டத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் இந்த கோவிலால் இறையருள் கிடைத்து உள்ளது.

    கலியுக வைகுண்டம்

    திருமலையில் நடைபெற்றுக் கொண்டு இருக்கும் அனைத்து விதமான பூஜைகளும் இந்த ஆலயத்தில் நடைபெறும். ஏழுமலையானுக்கு எத்தனை அலங்காரம், நைவேத்தியம் செய்யப்படுகிறதோ அதேபோன்று இங்கும் நடைபெறும். இந்த திருக்கோவிலானது கன்னியாகுமரியின் கலியுக வைகுண்டமாக கருதப்படும்.  திருமலை தேவஸ்தானம் சார்பில் ஏற்கனவே சென்னை தி.நகரில் ஒரு ஆலயம் செயல்பட்டு வருகிறது.

    தற்போது கன்னியாகுமரியில் மற்றொரு ஆலயம் உருவாகி உள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டில் 2 இடங்களில் திருமலை-திருப்பதி தேவஸ்தானம் ஆலயம் எழுந்துள்ளது. இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இப்படி இரு ஏழுமலையான் ஆலயங்கள் அமையவில்லை. எனவே குமரிமுனை திருப்பதி ஆலயம் ஒட்டுமொத்த தமிழகத்துக்குமே ஒரு வரப்பிரசாதமாக அமையும்.

    இந்த ஆலயம் கடந்த 2013-ம் ஆண்டு ஜூன் மாதம் 4-ந்தேதி அதிகாலை 6.30 மணிஅளவில் பூஜை போடப்பட்டு தொடங்கப்பட்டது ஆகும். 6 ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்டு தற்போது இந்த ஆலயத்தின் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. தென் தமிழக பக்தர்கள் அனைவரும் இந்த கும்பாபிஷேகத்தில் பங்கேற்று திருப்பதி வெங்கடாஜலபதியின் அருளை பெறுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

    இவ்வாறு மோகன்ராவ் கூறினார்.
    Next Story
    ×