search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஈரோடு பி.பி.அக்ரஹாரம் மாரியம்மன் கோவிலில் குண்டம் இறங்கிய பக்தர்களை படத்தில் காணலாம்.
    X
    ஈரோடு பி.பி.அக்ரஹாரம் மாரியம்மன் கோவிலில் குண்டம் இறங்கிய பக்தர்களை படத்தில் காணலாம்.

    ஈரோடு மாரியம்மன் கோவில் குண்டம் விழா

    ஈரோடு பி.பி.அக்ரஹாரம் பகுதியில் 123 ஆண்டுகள் பழமையான பிரசித்திபெற்ற மாரியம்மன் மற்றும் காளியம்மன் கோவில் குண்டம் விழாவில் ஏராளமான பக்தர்கள் தீ மிதித்தனர்.
    ஈரோடு பி.பி.அக்ரஹாரம் பகுதியில் 123 ஆண்டுகள் பழமையான பிரசித்திபெற்ற மாரியம்மன் மற்றும் காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் குண்டம் விழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான குண்டம் விழா கடந்த 14-ந் தேதி இரவு 10 மணிக்கு பூச்சாட்டுதலுடன் தொடங்கியது.

    அதைத்தொடர்ந்து கோவில் முன்பு கம்பம் நடப்பட்டது. இந்த கம்பத்துக்கு பெண்கள் தினமும் புனிதநீர் ஊற்றி வருகிறார்கள். 19-ந் தேதி காலை 7 மணிக்கு பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று தீர்த்தம் எடுத்து வந்தனர். அதைத்தொடர்ந்து காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தி அலங்காரம் செய்யப்பட்டது.

    25-ந்தேதி பிற்பகல் 3 மணிக்கு மாரியம்மன் வகையறா கோவிலான வாணியம்மன் கோவிலில் பக்தர்கள் பொங்கல் வைத்து அம்மனுக்கு படைத்து வழிபட்டனர். பின்னர் மாவிளக்கு பூஜை நடந்தது. நேற்று முன்தினம் மாலை 4 மணிக்கு கணபதி ஹோமம், குண்டம் திறப்பு, பிச்சை மாரியம்மன் கோவில் பொங்கல் விழா நடந்தது.

    முக்கிய நிகழ்ச்சியான குண்டம் இறங்குதல் நேற்று நடந்தது. முன்னதாக பக்தர்கள் இறங்குவதற்கு வசதியாக குண்டம் அமைக்கப்பட்டு, சிறப்பு பூஜை நடந்தது. இதைத்தொடர்ந்து கோவில் தலைமை பூசாரி கிருஷ்ணன் முதலில் குண்டம் இறங்கினார். அவரை தொடர்ந்து காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள் குண்டம் இறங்கினார்கள். ஒருசிலர் அலகு குத்தியும், கைக்குழந்தையுடன் குண்டம் இறங்கியும் நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.

    காலை 10 மணிக்கு கோவில் முன்பு பெண்கள் பொங்கல் வைத்து அம்மனுக்கு படைத்தனர். மாலை 4 மணிக்கு மாவிளக்கு பூஜையை தொடர்ந்து, பக்தர்கள் அலகு குத்தியும், அக்கினிசட்டி ஏந்தியும் கோவிலுக்கு ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினார்கள். இரவு 9 மணிக்கு அம்மன் திருவீதி உலா நடந்தது.

    இன்று (வியாழக்கிழமை) பிற்பகல் 3 மணிக்கு கம்பம் பிடுங்கப்பட்டு காவிரி ஆற்றில் விடப்படுகிறது. பின்னர் மஞ்சள் நீராடுதல் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 10 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) இரவு 7 மணிக்கு மறுபூஜையுடன் விழா நிறைவடைகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா சங்கரலிங்கம் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகிறார்கள்.
    Next Story
    ×