search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    தண்டாயுதபாணி கோவிலில் பங்குனி உத்திர பெருவிழா நாளை தொடங்குகிறது
    X

    தண்டாயுதபாணி கோவிலில் பங்குனி உத்திர பெருவிழா நாளை தொடங்குகிறது

    மதுரை நேதாஜி ரோடு தண்டாயுதபாணி சாமி கோவிலில் பங்குனி உத்திர பெருவிழா நாளை தொடங்குகிறது. 20-ந் தேதி பூப்பல்லக்கு உற்சவம் நடக்கிறது.
    மதுரை நேதாஜி ரோட்டில் பிரசித்திபெற்ற தண்டாயுதபாணி சாமி கோவில் உள்ளது. கி.மு. 7-ம் நூற்றாண்டில் வாழ்ந்த திருத்தொண்டர் தொகை பாடி சைவம் தழைக்க வழி செய்த தம்பிரான் தோழராகிய சுந்தரமூர்த்தி சுவாமிகள், இங்குள்ள தண்டாயுதபாணி சாமியை வழிபட்டதால் இந்த தலம் பழங்காலத்தில் சுந்தரர் மடம் என்று அழைக்கப்பட்டு வந்துள்ளது. முருகப்பெருமானுடைய திருவுருவம் முந்தைய காலத்தில் ஆண்டுதோறும் தைப்பூசத்தன்று பழனி மலைக்கு எழுந்தருளி, அங்கே வழிபாடுகள் செய்யப்பட்டு சகல மரியாதையும் பெற்று திரும்பவும் இந்த கோவிலில் எழுந்தருளுவது வழக்கமாக இருந்துள்ளது. இதனால் இக்கோவிலுக்கு பழனியாண்டவர் கோவில் என்ற பெயரும் உண்டு. சிறப்பு வாய்ந்த இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திர பெருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டிற்கான பங்குனி உத்திர பெருவிழா நாளை (வெள்ளிக் கிழமை) தொடங்கி வருகிற 21-ந்தேதி வரை நடைபெறுகிறது. விழாவின் முதல்நாளான நாளை காலை 5 மணிக்கு கந்த ஹோமம், ருத்ர ஜெபம், மகா அபிஷேகம் நடந்து தங்க கவசம் சாத்துப்படி செய்யப்படும். மாலை 4 மணிக்கு மூலவருக்கு பூக்கூடாரம், சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்படும். அதை தொடர்ந்து மாலை 6 மணிக்கு திருவிளக்கு பூஜை நடைபெறுகிறது. இதனை இந்து சமய அறநிலையத்துறை மண்டல இணை கமிஷனர் பச்சையப்பன் தொடங்கி வைக்கிறார்.

    விழா நடைபெறும் 7 நாட்களும் தினமும் காலை 5 மணிக்கு கந்த ஹோமம், ருத்ர ஜெபம், மகா அபிஷேக ஆராதனை நடந்து சுவாமிக்கு தங்கக்கவசம் சாத்துப்படி செய்யப்படும். அதை தொடர்ந்து மாலை 4 மணிக்கு மூலவருக்கு பூக்கூடாரும், சந்தனக்காப்பு அலங்காரமும் நடைபெறும். வருகிற 17-ந் தேதி காலை 6 மணிக்கு மூலவருக்கு பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து வருவார்கள். அதை தொடர்ந்து சாமிக்கு சிறப்பு பூஜை நடைபெறுகிறது. முக்கிய விழாவான பங்குனி உத்திரத்தன்று காலையில் மூலவருக்கு சிறப்பு பூஜை செய்து தங்கக்கவசம் சாத்துப்படி செய்யப்படும். பின்னர் இரவு 7 மணிக்கு பூப்பல்லக்கில் தண்டாயுதபாணி சாமி எழுந்தருளி, 4 மாசி வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி சக்கரையம்மாள் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர். 
    Next Story
    ×