search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்தனர்.
    X
    முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்தனர்.

    காரைக்குடி முத்து மாரியம்மன் கோவில் மாசி-பங்குனி திருவிழா

    காரைக்குடி முத்துமாரியம்மன் கோவிலில் நடைபெற்று வரும் மாசி-பங்குனி திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
    காரைக்குடி மீனாட்சிபுரம் பகுதியில் இந்து சமய அற நிலையத்துறைக்குட்பட்ட முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மாசி-பங்குனி திருவிழா 40 நாட்கள் வரை நடைபெறும். இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த 12-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இங்கு திருவிழாவையொட்டி நடைபெறும் பால்குட விழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.

    இதில் தமிழகம் முழுவதும் மட்டுமல்லாமல் வெளிநாடுகளில் வசிக்கும் இந்த பகுதியை சேர்ந்த மக்கள் திருவிழாவில் கலந்துகொண்டு பால்குடம் எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்துவது மற்றொரு தனிச்சிறப்பாகும். இந்த கோவில் பால்குட விழா மற்றும் பூக்குழி திருவிழா நாளை மறுநாள் நடக்கிறது.

    முன்னதாக இந்த கோவிலுக்கு காப்புக் கட்டி விரதம் இருக்க தொடங்கிய பக்தர்கள் தினமும் பால்குடம், அக்னி சட்டி உள்ளிட்ட நேர்த்திக்கடன் எடுத்து வருகின்றனர். நேற்று விடுமுறை தினமாக இருந்ததால் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், அரசு அலுவலர்கள், தனியார் நிறுவன அலுவலர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் அதிகாலை முதலே காரைக்குடி முத்தாலம்மன் கோவிலில் இருந்து ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    அம்மனுக்கு அபிஷேகம் செய்த பால் அந்த பகுதியில் உள்ள கால்வாயில் பெருக்கெடுத்து ஓடுவதை படத்தில் காணலாம்.

    முன்னதாக பால்குடங்களில் உள்ள பாலை கோவில் முன்பு வைக்கப்பட்டிருந்த பெரிய அண்டாவில் நிரப்பி, அதை மின் மோட்டார் மூலம் கோவில் கருவறைக்கு கொண்டு செல்லப்பட்டு, அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. மேலும் பக்தர்கள் கழுத்தில் அணிந்து வந்த மாலைகள் கோவில் பின்புறம் மலைபோல் குவிந்து காணப்பட்டன. இதை நகராட்சி ஊழியர்கள் அவ்வப்போது அகற்றினர்.

    பக்தர்கள் நேர்த்திக்கடனாக சுமந்து வரும் பாலை அம்பாளுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு அந்த பால் கோவிலை சுற்றியுள்ள கால்வாயில் பாலாறு போல் ஓடியது. இதையடுத்து எப்போதும் வறண்டு கிடந்த அந்த கால்வாயில் நேற்று பால் பெருகி ஓடியதை கண்டு பக்தர்கள் பரவசமடைந்தனர்.

    விழாவையொட்டி பல்வேறு சமூகம் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் மண்டகப்படி நிகழ்ச்சியும், கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகின்றன.
    Next Story
    ×