search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    நெல்லை சந்திப்பு வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம் நேற்று நடந்த போது எடுத்த படம்.
    X
    நெல்லை சந்திப்பு வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம் நேற்று நடந்த போது எடுத்த படம்.

    வரதராஜ பெருமாள் கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம்

    நெல்லை சந்திப்பு வரதராஜ பெருமாள் கோவிலில் சித்திரை தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்.
    மிகவும் பழமையான கோவில்களில் நெல்லை சந்திப்பு வரதராஜ பெருமாள் கோவிலும் ஒன்றாகும். இந்த கோவிலில் சித்திரை திருவிழா ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 18-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    தொடர்ந்து விழா நாட்களில் பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம், சிறப்பு பூஜை, தீபாராதனைகள் நடந்து வருகிறது. தினமும் காலையில் சுவாமி வெள்ளி பல்லக்கு வாகனத்திலும் வீதி உலா வருதல் நடந்தது.

    கடந்த 22-ந் தேதி இரவு பெருமாள் கருட வாகனத்திலும், 23-ந் தேதி இரவு யானை வாகனத்திலும், 24-ந் தேதி மாலையில் இந்திர விமான வாகனத்திலும், இரவு புன்னை மர வாகனத்திலும், நேற்று முன்தினம் இரவு குதிரை வாகனத்திலும் வீதி உலா வருதல் நடந்தது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று காலை நடந்தது. இதையொட்டி பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. காலை 7 மணிக்கு சுவாமி தேரில் எழுந்தருளினார்.

    பின்னர் தேர் வடம் பிடித்து இழுக்கும் நிகழ்ச்சி தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். தேர் நான்கு ரத வீதிகளையும் சுற்றி நிலையை அடைந்தது. தேரோட்டத்தை முன்னிட்டு நான்கு ரதவீதிகளிலும் இலவச மோர் மற்றும் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டு இருந்தது. தாமிரபரணி நதியில் உள்ள வீரராகவ தீர்த்தகட்டத்தில் இன்று (சனிக்கிழமை) காலை 8 மணிக்கு தீர்த்தவாரி நடக்கிறது.
    Next Story
    ×