search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    குதிரை வாகனத்தில் பொன்னரும், யானை வாகனத்தில் பெரியகாண்டியம்மனும் பக்தர்கள் வெள்ளத்தில் பவனி வந்த காட்சி.
    X
    குதிரை வாகனத்தில் பொன்னரும், யானை வாகனத்தில் பெரியகாண்டியம்மனும் பக்தர்கள் வெள்ளத்தில் பவனி வந்த காட்சி.

    லட்சக்கணக்கானோர் பங்கேற்ற வீரப்பூர் வேடபரி திருவிழா

    வீரப்பூர் கன்னிமாரம்மன் கோவில் மாசிப் பெருந்திருவிழாவின் முக்கிய திருவிழாவான வேடபரி திருவிழாவில் லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டு வழிபட்டனர்.
    திருச்சி மாவட்டம், வீரப்பூர் கன்னிமாரம்மன் கோவில் மாசிப் பெருந்திருவிழாவின் முக்கிய திருவிழாவான வேடபரி திருவிழா நேற்று மாலை நடைபெற்றது. பெரியகாண்டியம்மன் கோவிலில் இருந்து அலங்கரிப்பட்ட குதிரை வாகனத்தில் பொன்னர் அமர்ந்து வர குதிரை பூசாரி மாரியப்பன் குடைபிடித்தபடி குதிரை வாகனத்தில் நின்று வர, வாகனத்தை பட்டியூர் கிராமங்களின் ஊர் முக்கியஸ்தர்கள் தலைமையில் இளைஞர்கள் கூட்டம் குதிரை வாகனத்தை சுமந்து வந்தனர்.

    அலங்கரிக்கப்பட்ட யானை வாகனத்தில் பெரியகாண்டியம்மன் அமர்ந்து வர பெரிய பூசாரி முத்து யானை வாகனத்தில் நின்று வர யானை வாகனத்தை பட்டியூர் கொடிக்கால்காரர்கள் வகை ஊர் முக்கியஸ்தர்கள் தலைமையில் இளைஞர்கள் கூட்டம் யானை வாகனத்தை சுமந்து சென்றனர்.

    வாகனங்களுக்கு முன்பு முரசு கொட்டும் காளை செல்ல அதைத் தொடர்ந்து கன்னிமாரம்மன் கோவில்களின் பரம்பரை அறங்காவலர்களும், வீரப்பூர் ஜமீன்தார்களுமான ஆர்.பொன்னழகேசன், சவுந்தரபாண்டியன், சுதாகர் என்ற சிவசுப்ரமணிய ரெங்கராஜா ஆகியோர் கோவில் வழக்கப்படி செல்ல அவர்களை தொடர்ந்து குதிரை, யானை வாகனங்கள் சென்றது. வாகனங்களை தொடர்ந்து சின்னபூசாரி கிட்டு என்ற கிருஷ்ணசாமி, வேட்டை பூசாரி வீரமலை தங்காள் கரகத்துடன் சென்றனர்.

    மாலை 6.30 மணிக்கு வேடபரி புறப்பட்டு அணியாப்பூர் குதிரை கோவில் சென்று இளைப்பாத்தி மண்டபம் திரும்பியது. அதிகாலை 4 மணிக்கு இளைப்பாற்றி மண்டபத்தில் இருந்து வாகனங்களில் தெய்வங்கள் வீரப்பூர் பெரியகாண்டியம்மன் கோவிலை வந்தடைந்தது. வேடபரி சென்ற வழி நெடுக சுமார் 5 கிலோ மீட்டர் சுற்றளவில் லட்சக்கணக்கான குடிபாட்டுக்காரர்களும், பக்தர்களும் நின்று பூமாலைகளை வீசி பயபக்தியுடன் வழிபட்டனர்.

    இன்று(சனிக்கிழமை) காலை பெரியகாண்டியம்மன் கோவில் முன்பிருந்து பெரியகாண்டியம்மன் பெரிய தேர்பவனி நடைபெறுகின்றது.
    Next Story
    ×