search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    குருவாயூரப்பன்
    X
    குருவாயூரப்பன்

    மூதாட்டிக்கு அருளிய குருவாயூரப்பன்

    கேரள மாநிலத்தில் புகழ்பெற்ற ஆலயங்களுள் குருவாயூரில் உள்ள குருவாயூரப்பன் கோவில் மிகவும் பிரசித்திப்பெற்றது. இந்த ஆலயத்தில் அருளும் குருவாயூரப்பன், பலருக்கும் அருள் செய்தவர்.
    கேரள மாநிலத்தில் புகழ்பெற்ற ஏராளமான ஆலயங்கள் உள்ளன. அவற்றுள் குருவாயூரில் உள்ள குருவாயூரப்பன் கோவில் மிகவும் பிரசித்திப்பெற்றது. இந்த ஆலயத்தில் அருளும் குருவாயூரப்பன், பலருக்கும் அருள் செய்தவர். அந்தக் கதைகள் அனைத்தும் தல வரலாற்றில் உள்ளன. அப்படி ஒன்றை இங்கே பார்ப்போம்.

    குருவாயூரப்பனின் மீது அதிக பக்தி கொண்டவராக இருந்தார் ஒரு மூதாட்டி. அவர் தினந்தோறும் காலையும், மாலையும் குருவாயூரப்பனின் சன்னிதிக்கு வந்து அவரை தரிசனம் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஒரு நாள் மாலை நேர தரிசனம் முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது பெருங்காற்றுடன் கன மழை பெய்தது. அந்த நாட்களில் சாலையோர விளக்குகள் கிடையாது என்பதால், அந்த மூதாட்டி இருளில் வழிதவறிவிட்டார். அதனால் வருத்தம் அடைந்த மூதாட்டி, குருவாயூரப்பனின் நாமங்களைச் சொல்லிக்கொண்டே சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு தென்பட்ட ஒரு சிறுவன், “என்ன பாட்டி வழி தவறி விட்டீா்களா? கவலைப்படாதீர்கள். நான் கொண்டு போய் உங்களை வீட்டில் சேர்த்துவிடுகிறேன்” என்று கூறினான்.

    ஓரமாக ஒதுங்கக்கூட இடம் இல்லாத காரணத்தால் இருவரும் நனைத்தபடியே மூதாட்டியின் வீட்டை அடைந்தனர். வீட்டிற்கு வந்ததம், சிறுவனுக்கு நன்றி கூறிய மூதாட்டி, “உன் பெயர் என்ன?” என்று கேட்டார்.

    அதற்கு அந்தச் சிறுவன் “கோபாலன்” என்று பதிலளித்தான்.

    உடனே மூதாட்டி, அந்தச் சிறுவனின் தலையை துவட்ட துணி கொடுத்ததோடு, “நீ செய்த உதவிக்கு கைமாறாக, நான் ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். உனக்கு என்ன வேண்டுமோ கேள்” என்றார்.

    “எனக்கு எதுவும் தேவையில்லை. மழையில் நனைந்ததால் உடை முழுவதும் நனைந்து விட்டது. ஈரமான இந்தத் துணியால் குளிர் வாட்டுகிறது. எனக்கு ஒரு கவுபீனம் (கோவணம்) மட்டும் தாருங்கள்” என்று கேட்டான் சிறுவன்.

    தன்னிடம் இருந்த சிவப்பு நிற புடவையில் சிறிய பாகத்தைக் கிழித்து அந்தச் சிறுவனிடம் கொடுத்தாள், மூதாட்டி. அதைப் பெற்றுக்கொண்ட சிறுவன், மழை விட்டதும் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றான்.

    அடுத்த நாள் காலையில் குருவாயூரப்பனின் சன்னிதியை திறக்க வந்த அர்ச்சகர், மூலவருக்கு சிவப்பு நிற கோவணம் அணிவிக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். அதற்கு முந்தைய தினம்தான் கண்ணன் அலங்காரம் சிறப்பாக செய்யப்பட்டிருந்தது. இப்போது வெறும் கோவணத்தோடு இறைவன் காட்சியளிப்பது கண்டு அவர் திகைத்துப் போனார்.

    வழக்கம்போல காலை தரிசனத்திற்காக கோவிலுக்கு வந்த மூதாட்டி இந்த நிகழ்வைக் கண்டு ஆனந்தம் அடைந்தாள். நேற்று இரவு தனக்கு வழிகாட்டியாக வந்தது குருவாயூரப்பன் என்பதை நினைத்து மகிழ்ந்தாள். முன்தினம் இரவு நடந்த அனைத்தையும் அர்ச்சகருக்கும், அங்கிருந்த அனைவருக்கும் மூதாட்டி கூறினாள். அதற்குச் சான்றாக, தன்னிடம் இருந்த கிழிக்கப்பட்ட சிவப்பு நிறப் புடவையைக் காட்டினாள்.

    அந்த புடவையில் இருந்து கிழிக்கப்பட்ட சிறிய பகுதியே, குருவாயூரப்பனின் உடலில் கவுபீனமாக இருப்பதைக் கண்டு அனைவரும் வியந்து போயினர். இறைவனின் அருளையும், திருவிளையாடலையும் நினைத்து ஆனந்தப்பட்டனர்.

    அந்த நிகழ்வுக்குப் பிறகு, குருவாயூரப்பனுக்கு இரவு நேர பூஜையில் சிவப்பு நிற கவுபீனம் சாற்றும் வழக்கம் நடை முறைக்கு வந்ததாக தல வரலாறு சொல்கிறது.
    Next Story
    ×