search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    திருவனந்தபுரம் நவராத்திரி விழாவில் பங்கேற்க குமரியில் இருந்து 23-ந்தேதி சாமி சிலைகள் ஊர்வலம்
    X

    திருவனந்தபுரம் நவராத்திரி விழாவில் பங்கேற்க குமரியில் இருந்து 23-ந்தேதி சாமி சிலைகள் ஊர்வலம்

    • இந்த ஆண்டு நவராத்திரி விழா வருகிற 26-ந் தேதி தொடங்குகிறது.
    • சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் புறப்படும் நிகழ்ச்சி 22-ந்தேதி நடக்கிறது.

    திருவிதாங்கூர் மன்னர் ஆட்சி காலத்தில் பத்மநாபபுரம் அரண்மனையில் நவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வந்தது. இந்த விழா 1840-ம் ஆண்டு சுவாதி திருநாள் மகாராஜா காலத்தில் கேரள மாநிலம் திருவனந்தபுரத்திற்கு மாற்றப்பட்டது. அதன்பின்பு இந்த விழாவில் கலந்து கொள்ளும் வகையில் குமரி மாவட்டத்தில் இருந்து சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன், குமாரகோவில் முருகன், பத்மநாபபுரம் தேவாரக்கட்டு சரஸ்வதி அம்மன் ஆகிய சாமி சிலைகள் திருவனந்தபுரத்திற்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்படும். அங்கு நவராத்திரி விழா முடிந்த பின்பு சாமி சிலைகள் மீண்டும் குமரி மாவட்டத்திற்கு கொண்டு வருவது வழக்கம்.

    இந்த ஆண்டு நவராத்திரி விழா வருகிற 26-ந் தேதி தொடங்குகிறது. இதையொட்டி சாமி சிலைகள் குமரி மாவட்டத்தில் இருந்து வருகிற 23-ந் தேதி ஊர்வலமாக புறப்பட்டு செல்கின்றன.

    முன்னதாக சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் புறப்படும் நிகழ்ச்சி 22-ந் தேதி நடக்கிறது. அன்று காலை 7.30 மணிக்கு முன்னுதித்த நங்கை அம்மன் ஊர்வலமாக புறப்பட்டு இரவு பத்மநாபபுரம் நீலகண்ட சாமி கோவிலை சென்றடைகிறது.

    23-ந் தேதி காலை 7 மணிக்கு பத்மநாபபுரம் அரண்மனையில் உப்பரிகை மாளிகை மேல் மாடியில் உள்ள பூஜை அறையில் பாதுகாக்கப்பட்டு வரும் உடைவாளை கேரள தேவசம் மந்திரி குமரி மாவட்ட அதிகாரியிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெறும்.

    பின்னர் சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் மற்றும் முருகன் சிலைகள் பல்லக்கிலும், சரஸ்வதி அம்மன் சிலை யானை மீதும் திருவனந்தபுரம் நோக்கி ஊர்வலமாக புறப்படும். ஊர்வலம் அன்றையதினம் இரவு குழித்துறை மகாதேவர் கோவிலில் தங்கும். 24-ந் தேதி குழித்துறையில் இருந்து புறப்பட்டு நெய்யாற்றங்கரை கிருஷ்ணன் கோவிலை சென்றடையும்.

    25-ந் தேதி காலையில் அங்கிருந்து புறப்பட்டு அன்று இரவு திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலை சென்றடையும். அங்கு தேவாரக்கட்டு சரஸ்வதி அம்மனை கோட்டையில் உள்ள நவராத்திரி கொலு மண்டபத்தில் பூஜைக்காக வைப்பார்கள். சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மனை செந்திட்டை அம்மன் கோவிலிலும், குமாரகோவில் முருகனை ஆரிய சாலையில் உள்ள சிவன் கோவிலில் வைத்தும் சிறப்பு பூஜைகள் நடைபெறும். பத்து நாட்கள் நடைபெறும் விழா முடிந்த பிறகு மீண்டும் சாமி சிலைகள் குமரி மாவட்டத்திற்கு கொண்டுவரப்படும்.

    இதற்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட தேவசம் நிர்வாகமும், கேரள தேவசம் நிர்வாகமும் இணைந்து செய்து வருகின்றன.

    Next Story
    ×