search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    பழனி தைப்பூச விழா நிறைவு: 4 நாட்களில் 4.50 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம்
    X

    பழனி தைப்பூச விழா நிறைவு: 4 நாட்களில் 4.50 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம்

    • பஞ்சாமிர்தம் விற்பனை 1.50 லட்சம் டப்பாக அதிகரித்துள்ளது.
    • இரவு 11 மணியளவில் கொடி இறக்கம் நடைபெற்றது.

    அறுபடை வீடுகளில் 3ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றம் கடந்த மாதம் 29-ந் தேதி பெரியநாயகி அம்மன் கோவிலில் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து தினந்தோறும் சுவாமி வெவ்வேறு வாகனங்களில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தைப்பூசத் தேரோட்டம் கடந்த 4-ந் தேதி நடைபெற்றது. நிறைவுநாள் நிகழ்ச்சியாக முத்துக்குமாரசுவாமி, தெய்வானை திரு ஊடல் வைபவம் நேற்று நடைபெற்றது.

    புதுச்சேரி சப்பரத்தில் முத்துக்குமார சாமி எழுந்தருளி வடக்கு ரத வீதி அருகே உலா வரும் போது வள்ளியை திருமணம் செய்து கொண்ட செய்தி அறிந்து தெய்வானை கோபித்துக் கொண்டு அவரிடம் இருந்து பிரிந்து கோவிலுக்கு வந்து நடையை பூட்டிக் கொண்டார்.

    இதையடுத்து கோவிலுக்கு திரும்பிய சுவாமி நடை அடைத்திருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து வீரபாகுவை தூது அனுப்பி தெய்வானையை சமாதானம் செய்து கோவில் நடையை திறக்க வைக்கும் திரு ஊடல் வைபவம் தூது பாடல்கள் பாடி நடைபெற்றது.

    அதன் பிறகு முத்துக்குமார சுவாமி வள்ளி-தெய்வானை சமேதரராக பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதனைத் தொடர்ந்து இரவில் தெப்பத்தில் சுவாமி எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவையொட்டி தெப்பத்தின் நடுவில் அமைந்துள்ள கல் மண்டபத்தில் வள்ளி-தெய்வானை சமேதரருடன் முத்துக்குமார சுவாமிக்கு பால், பன்னீர், விபூதி, பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதன் பிறகு வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தேரில் சுவாமி எழுந்தருளினார். அதன் பின் வானவேடிக்கைகள் முழங்க தெப்பத்தேர் உலா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இரவு 11 மணியளவில் கொடி இறக்கம் நடைபெற்று தைப்பூசத் திருவிழா நிறைவு பெற்றது.

    தைப்பூசத்தை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து விரதமிருந்து மாலை அணிந்த பக்தர்கள் ஏராளமானோர் பாதயாத்திரையாக பழனிக்கு வந்தனர். கடந்த 4, 5-ந் தேதி தைப்பூசத்தையொட்டி இங்கு வந்த பக்தர்களால் பழனி நகரமே விழாக்கோலம் பூண்டது. தைப்பூசம் முடிந்த பிறகும் கூட பக்தர்கள் வருகை குறையாமல் உள்ளது. காவடி எடுத்தும், அலகு குத்தியும் வந்து பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.

    கடந்த 4-ந் தேதி முதல் நேற்று வரை 4 நாட்களில் மலைக்கோவிலில் மட்டும் 4.50 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். பழனி கோவில் தேவஸ்தான பஞ்சாமிர்தம் விற்பனையும் 1 லட்சம் டப்பாவில் இருந்து 1.50 லட்சம் டப்பாக அதிகரித்துள்ளது.

    Next Story
    ×