search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    4 ஆகஸ்ட் 2024: முன்னோர்களின் ஆசியை வழங்கும் `ஆடி அமாவாசை
    X

    4 ஆகஸ்ட் 2024: முன்னோர்களின் ஆசியை வழங்கும் `ஆடி அமாவாசை'

    • ஒவ்வொரு திதிக்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு.
    • பித்ரு கடனை அடைக்காவிட்டால் பித்ரு தோஷம் உண்டாகும்.

    ஒவ்வொரு திதிக்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு. அதிலும் சூரியனும், சந்திரனும் ஒன்று சேரக்கூடிய `அமாவாசை திதி' மிக முக்கியமானதாகும். சூரிய பகவான் `பித்ரு காரகன்' என்றும், சந்திர பகவான் `மாத்ரு காரகன்' என்றும் போற்றப்படுகின்றனர்.

    இவர்கள் இருவரும் சேர்ந்து இருக்கக்கூடிய அமாவாசை நாளில் மரணம் அடைந்த பெற்றோருக்கு தர்ப்பணம் செய்வது மிக விசேஷமானதாக கருதப்படுகிறது. அதிலும் ஆடி அமாவாசை, மகாளய அமாவாசை, தை அமாவாசை போன்றவை கூடுதல் சிறப்புக்குரியவை. மனிதராக பிறந்த ஒவ்வொருவரும், தேவ கடன், பித்ரு கடன் ஆகியவற்றை தவறாது கடைப்பிடிக்க வேண்டும்.

    பித்ரு கடனை அடைக்காவிட்டால் `பித்ரு தோஷம்' உண்டாகும். நம்மில் பலரும் `எனக்கு தர்ப்பணம் செய்ய நேரம் இல்லை. அதனால் அன்னதானம் செய்கிறேன்' என்று சொல்வார்கள். அன்னதானம் செய்வதும் பெரிய புண்ணியம்தான். ஆனால் தர்ப்பணத்தை விட்டு விட்டு செய்யும் அன்னதானத்திற்கு எந்த பலனும் கிடைக்காது. எனவே கட்டாயமாக தர்ப்பணம் செய்ய வேண்டும்.

    எள்ளு சேர்த்த நீரை, பித்ருக்களுக்காக விட வேண்டும். அப்போதுதான் அவர்களின் ஆன்மா சாந்தி அடையும். அவர்களின் ஆசி நமக்கு கிடைக்கும். பித்ரு லோகத்தில் உள்ள தேவர்களின் ஆசியும் சேர்த்து கிடைக்கும்.

    ஒரு சமயம் சிவபெருமானின் திருவடியை கண்டடைவதற்காக வராக (பன்றி) அவதாரம் எடுத்தார், விஷ்ணு பகவான். அவர் வராக தோற்றத்தில் பூமியை குடைந்து சென்றபோது, அவரது உடம்பில் இருந்து வியர்வை துளிகள் அரும்பியது. அந்த வியர்வை துளிகள் பூமியில் விழுந்ததும், கருப்பு எள்ளாக மாறியதாக புராணங்கள் சொல்கின்றன.

    தாய்-தந்தையருக்கு அளிக்கும் தர்ப்பணத்தில் இந்த கருப்பு எள்ளை சேர்த்துக் கொள்வது மிகவும் புண்ணியம் தரக்கூடியது.

    ஒரு மனிதன் இறந்த பின்பு, அவனது ஆன்மாவானது, ஐந்து வகை உடல்களை எடுத்துக் கொள்வதாக சொல்லப்படுகிறது. பார்த்திவம், ஜலியம், ஆக்னேயம், வாயவ்யம், தைஜசம் என்பவை அந்த ஐந்து வகை உடல்கள். இவற்றில் உத்தமம், அதம், மத்திமம் என்று உண்டு.

    இப்படி பிரிவதில் 15 விதமான உடல்கள் இருக்கும். இதில் இறந்த நம் முன்னோர்கள், 'ஜலியம்' என்ற சரீரத்தை எடுத்துக்கொள்கின்றனர். நம் முன்னோர்கள் ஜலிய சரீரம் எடுத்துக் கொள்வதால், அவர்களுக்கு அளிக்கும் உணவானது, ஜல (நீர்) சம்பந்தமாக இருப்பது சிறப்பானதாக சொல்கிறார்கள்.

    எனவே தான், நாம் நம்முடைய பித்ருக்களுக்கு, கங்கை, காவிரி, கோதாவரி, யமுனை உள்ளிட்ட பல புண்ணிய தீர்த்தங்களுக்குச் சென்று, நீர் கொண்டு தர்ப்பணம் செய்வது விசேஷமானதாக கருதப்படுகிறது.

    இங்கே பலருக்கும் ஏற்படக்கூடிய ஒரு சந்தேகம் உண்டு. 'நம் முன்னோர்களில் தாயோ, தந்தையோ அல்லது பாட்டியோ, பாட்டனோ மறுபடியும் பிறவி எடுத்திருந்தால், அவர்களது திருப்திக்காக நாம் செய்யக்கூடிய தர்ப்பணம், சிரார்த்தம் போன்றவற்றால் என்ன பலன்?' என்ற கேள்வி எழும்.

    இறந்தவர்கள் பித்ரு லோகத்தில் இருந்தால், நாம் தர்ப்பணம் கொடுப்பதில் பலன் உண்டு. நாம் செய்யக்கூடிய தர்ப்பணம், சிரார்த்தம் போன்றவற்றை பித்ரு தேவதைகள் எடுத்துச் சென்று, நம் முன்னோர்களுக்கு (பித்ருக்களுக்கு) சேர்க்கின்றனர்.

    அதே சமயம் அவர்கள் அவரவர் செய்த கர்ம வினைப்படி மனிதராகவோ அல்லது பறவையாகவோ, மிருகங்களாகவோ பிறந்திருந்தால், பித்ரு தேவதைகள் அவர்களுக்கு அடுத்த ஜென்மாவிலும் பசி இல்லாமல் இருக்க அந்தந்த சிரார்த்தத்திற்கு ஏற்ப உணவை வழங்குகின்றனர். அந்த வகையில் பித்ரு தேவதைகளின் ஆசி எப்போதும் நமக்கு கிடைக்கப்பெறும்.

    ஆயு: புத்ராந் யஸ: ஸ்வர்கம் கீர்த்திம் புஷ்டிம் பலம் ஸ்ரியம்

    பாந் ஸுகம் த நம் தா'ன்யம் ப்ராப்நுயாத் பித்ரு பூஜநாத்

    என்ற வாக்கியபடி பித்துருக்களுக்கு முறையாக தர்ப்பணம், சிராத்தம் செய்பவர்களுக்கு, நீண்ட ஆயுளும், குழந்தை செல்வமும், புகழும், சுகமும் உண்டாகும்.

    அமாவாசை தினத்தன்று செய்யும் தர்ப்பணத்திற்கு `தர்ச சிரார்த்தம்' என்று பெயர். தந்தை இல்லாதவர்கள் மட்டுமே தில தர்ப்பணம் செய்ய வேண்டும். தலைமுறையில் யாராவது உயிருடன் இருந்தால் (தாத்தா), அவர்களை விட்டுவிட்டு மற்ற மூன்று தலைமுறைகளுக்கு திலதர்ப்பணம் செய்ய வேண்டும்.

    தர்ப்பணம் செய்யும் நாளில் தர்ப்பணம் செய்பவர்கள் கட்டாயம் நீராட வேண்டும். பின்னர் ஏற்கனவே துவைத்து வைத்திருந்த வஸ்திரங்களை அணிந்து கொண்டு தர்ப்பணம் செய்ய வேண்டும். தர்ப்பணத்திற்கு கட்டாயம் கருப்பு எள், தர்ப்பை அவசியம்.

    தெற்கு திசை எமனுக்கு உரியதாக கருதப்படுவதால், முன்னோர்கள் சம்பந்தமான கர்மாக்களை தெற்கு திசையை நோக்கிதான் செய்ய வேண்டும். தர்ப்பையின் நுனியும் தெற்கு நோக்கி இருத்தல் வேண்டும்.

    பொதுவாக ஏதாவது ஒரு ஆசனத்தில், மனையில் அமர்ந்து கொண்டு இதனை செய்ய வேண்டும். கோவில் குளக்கரை போன்ற இடங்களுக்கு செல்லும் பொழுது, ஏதாவது துண்டு விரித்து அதன் மீது அமரலாம்.

    சுப காரியங்களுக்கு இரட்டை படையிலும், பித்ரு காரியங்களுக்கு ஒற்றைப் படையிலும் கையில் அணியும் பவித்திரம் செய்வார்கள். இந்த பவித்திரமானது, பெரும்பாலும் தற்போது கடைகளிலேயே விற்பனை செய்யப்படுகிறது.

    அமாவாசை அன்று தர்ப்பணம் கொடுப்பவர்கள் அனைவரும், அன்றைய தினம் மட்டுமாவது கட்டாயம் பூணூல் அணிய வேண்டும். அசைவம் சாப்பிடுபவர்கள், குறைந்த பட்சம் ஆடி அமாவாசை மற்றும் அதற்கு முன் தினம், பின்தினம் என்று மூன்று நாட்களாவது அசைவத்தை தவிர்க்க வேண்டும்.

    Next Story
    ×